Monday, 2 March 2026

மண்ணின் உண்மையை, மக்களின் தன்மையை உற்று நோக்க வைக்கும் ‘திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் – தொப்புள் கொடி உறவு உறவும் மரபும்’



‘காஷ்மீர் ஃபைல்ஸ்‘, ‘கேரளா ஃபைல்ஸ்’ போன்ற படங்கள் பொய்களைக் கொட்டிக்கொண்டிருக்கும்போது, உண்மைகளைத் தோண்டியெடுத்துக் கொடுக்கிறது இந்த ‘திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’.
சிறு வயதில் திருப்பரங்குன்றத்தில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோபம். ஓராண்டு சரவணப் பொய்கை அருகிலும், பின்னர் மலையின் பின்பக்கம் தென்பரங்குன்றம் பகுதியிலும் குடியிருந்தோம். பள்ளிக்கூடம் முடிந்து திரும்பி வரும்போது மொட்டை மாடியில் மயில்கள் தோகை விரித்து நடமாடிக்கொண்டிருக்கும். அதைப் பார்த்ததும் ஓடியே போய், பைகளை வீட்டுக்குள் வீசிவிட்டு படிக்கட்டுகளில் வேகமாக ஏறுவோம். சத்தம் கேட்டவுடனேயே மயில்கள் பறந்து போயிருக்கும். எப்போதாவது மயில் தோகை கிடைக்கும்.
திருமங்கலத்திற்குக் குடிபோன பின், உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் காலையில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி சாலையில் நடந்து போனேன். மாட்டுவண்டிக்காரர் ஒருவர் என்னை ஏற்றிக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் இறக்கிவிட்டார். கோயில் குளப் படிக்கட்டிலும் மலை மேலிருக்கும் பள்ளிவாசலிலும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தவர்கள் கொடுத்த தேங்காய் பழம் பலகாரத்தால் பசியாறினேன். மாலையில் மனம் ஆறினேன்.
மதுரைக்கு வந்தபின், கல்லூரி நண்பர்களுடன் சைக்கிள் சுற்றுலாவாகச் சுற்றிவந்த இடங்களில் ஒன்று திருப்பரங்குன்றம். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் பெற்றோரிடம், “மலைக்கு மேலே சிக்கந்தர் பள்ளிவாசல் இருக்கே, அது முந்தி ஸ்ரீகந்தர் கோயிலா இருந்துச்சு. அதைத்தான் மாத்திட்டாங்க… என்ன அநியாயம் பார்த்தீங்களா,” என்று சொல்லிக்கொண்டிருந்தார். மெய்ப்பொருள் காணும் அறிவு அப்போது இல்லை என்பதால், அதை நான் பல ஆண்டுகள் நம்பியிருக்கிறேன்.


அறிவுத் தேடல் தொடங்கிய பிறகு, திருப்பரங்குன்றம் இலக்கிய நிகழ்வுகளுக்குச் சென்று வருவேன். அப்போது அது கட்டுக்கதையென்று புரிந்துகொண்டேன். என்னைப் போல எத்தனை பேரிடம் அது போயிருக்கும், எத்தனை பேர் நம்பிக்கொண்டிருப்பார்கள் என்று எண்ணிக்கொள்வேன். அந்த நாளிலேயே தூவப்பட்ட நஞ்சென்பது தெளிவானது.
‘பீப்பிள்ஸ் தியேட்டர்’ நாடகக் குழுவில் இணைந்து நடித்த நாட்களில், நாடகத்துக்கான கதை, மேடைக்கதை பற்றி கலந்தாலோசித்தோம். நான் தெரிவித்த இந்தக் தகவலை வைத்து, “ஸ்ரீகந்தர் ஓடையை சிக்கந்தர் ஓடையாக மாற்றிவிட்டார்கள்,” என்று தோட்டத் தொழிலாளர்களிடையே ஒருவன் தெளித்துவிடுவதாக ஒரு காட்சியை கதையாளர் காஸ்யபன், இயக்குநர் ராஜகுணசேகர் இருவரும் அமைத்தார்கள். குமரி மாவட்டக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்ட, தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் சென்ற அந்த நாடகத்துக்கு, ‘தீக்கதிர்’ ஆசிரியர் கே. முத்தையா கூறிய ஆலோசனைப்படி ‘வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்’ என்று தலைப்பு வைத்தோம். பிளவுபடுத்தப்பட்ட தொழிலாளர்களை, தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததால் மறுபடியும் ஒன்றுபடுத்திய கபூர் என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்தேன்.


பார்க்கிற ஒவ்வொருவருக்கும் இந்த ஆவணப்படம் இப்படிப்பட்ட நினைவுப் பயணத்திற்கு இட்டுச் செல்லும். தகவல்களின் தொகுப்பாக அல்லாமல் உணர்ச்சி ஊற்றாக ஆவணப்படங்கள் இருக்க முடியுமா? முடியும் என்று உணர்த்துகிறது இந்தத் திருப்பரங்குன்ற ஆவணம்.
திருவிழாவையொட்டி ஒரு மெல்லிசை மேடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பெண் பாடகர் “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்,” என்ற அந்தப் புகழ்பெற்ற பாடலைப் பாடுகிறார். மேடையைச் சூழ்ந்து அமர்ந்திருக்கும் மக்களில் வயது முதிர்ந்த ஒரு பெண், தானும் சேர்ந்து அந்தப் பாடலை முணுமுணுக்கிறார். அவர், ஒரு முஸ்லிம்.
இந்த நேரடிக் காட்சிப் பதிவைக் கண்டு நெகிழ்ந்தவனாக, வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற லீ மேஜிக் லேன்ட்டர்ன் திரையரங்கில், “ஆகா ஆகா“ என்று வாய்விட்டுச் சொன்ன நானும், அதே உணர்வு ஏற்பட்டவர்களாக மற்ற அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினோம்.
இந்த ஒற்றுமைக் கூரையில் தீ வைக்கும் சூழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டும் இந்தப் படத்தின் வெற்றி எங்கே இருக்கிறது தெரியுமா? “அடடா, அடடா இப்படியெல்லாம் செய்கிறார்களே” என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக,“அருமை, அருமை… இப்படியெல்லாம் இருக்கிறார்கள்,” என்று நம் மக்கள் மீது நம்பிக்கையையும் மரியாதையையும் ஏற்படுத்துவதில் இருக்கிறது.
முருகன் கோயில் இந்துக்களின் அடையாளம், மறுப்பதற்கில்லை. சிக்கந்தர் தர்கா முஸ்லிம்களின் அடையாளம், மறைப்பதற்கில்லை. சமண, பௌத்த அடையாளங்கள் இருக்கின்றன. மதமற்றோர் அடையாளங்களும் இருக்கின்றன. இத்தனையும் சேர்ந்த திருப்பரங்குன்றம் – இந்தியாவின் அடையாளம்.
இதை மேலும் உரக்கச் சொல்வது போல, தமிழகம் முழுவதும் மக்களின் நல்லிணக்க அடையாள சாட்சிகளாகப் பல தலங்களும் காட்சிகளாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மண்ணின் இந்த மாண்பை மென்மேலும் கட்டிக்காக்க உறுதிபூண்டுள்ள எல்லா இயக்கங்களும் அதற்குத் துணையாக வந்துள்ள இந்த ஆவணப்படத்தை தங்களின் அரங்கங்களில் திரையிட்டு விவாதிக்கச் செய்ய வேண்டும். திரையரங்குகளோடு நில்லாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று மக்களைப் பேச வைக்க வேண்டும்.
உண்மைக் களத்தை ஒளியாகப் பதிவு செய்த பிரபு, அதற்கு உதவிய ஹரிகிருஷ்ணன், கேசவன், இசையாகப் பரிமாறிய ஆனந்த், வரைகலை சேர்த்த தவசிவா, தாள லயம் போலக் கோர்த்துத் தொகுத்த காமாட்சி ராமன், இவர்களின் உழைப்பை ஒருங்கிணைத்து இயக்கிய தவம், தமிழ்தாசன், தொப்புள் கொடி உறவுகளைக் காட்டுவதை ஒரு கடமையாக மேற்கொண்டு தயாரித்த அறக்கலகம் குழுவினர் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். இல்லையில்லை நன்றிக்கு உரியவர்கள். [0]
வெளியீட்டு நிகழ்வில் பேசியதன் செழுமையாக்கம்