Wednesday, 11 December 2024

குழந்தையைத் தூக்கி நிற்கும் குழந்தைத்தாய்!


 


பதினேழு வயது – பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கத் தயாராகிற வயது. விளையாட்டு, கலை என்று தன்னை முன்னிறுத்திக் காட்டுகிற வயது. ஆனால் அவளுடைய கையில் ஒரு இரண்டு வயதுக் குழந்தை. அது அவள் பெற்ற குழந்தை. அப்படியானால் பதினைந்து வயதிலேயே குழந்தை பிறந்திருக்கிறது. எப்போது திருமணம் நடைபெற்றிருக்கும்?

 நமது நாட்டில் குழந்தைத் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும், அவ்வப்போது எங்காவது குழந்தைத் திருமணம் பற்றிய தகவலறிந்து, சமூக நலத்துறை அலுவலர்கள் காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்திய செய்திகள் வருகின்றன. தகவல் தெரியாமல் எத்தனை குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன?

 2030ம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக ஒழிப்பது என்று ஐக்கிய நாடுகள் பன்னாட்டுக் குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளே இருக்கும் நிலையில், அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்றாலும், வேகம் குறைந்து வருவது நம்பிக்கை தருவதாக இல்லை.

 குழந்தைத் திருமணம் என்று இரு பாலருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் மணமேடையில் அமர வைக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் பெண் குழந்தைகள்தான். தாங்களும் குழந்தையாக இருக்கிற ஆண்களுடன் சேர்த்து வைக்கப்படுகிறவர்களை விட, வயதான ஆண்களுக்குக் கட்டிவைக்கப்படும் பெண் குழந்தைகள்தான் மிக அதிகம். (“கட்டி வைக்கப்படும்” என்ற வார்த்தைகள் எவ்வளவு பொருத்தம்!).

 குழந்தைக்குக் குழந்தை

 உலகில் குழந்தைப் பருவத்திலேயே மணமகளாகிறவர்களில் மூன்று பேர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்தான். இந்திய இளம் பெண்களில் 4 பேருக்கு ஒருவர் (23 சதவீதம்) சட்டம் அனுமதிக்கிற 18 வயதை அடைவதற்கு முன்பாகவே மணமுடிக்கப்பட்டவர்கள்தான். மிக அதிகமாகக் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேச மாநிலம். அதைத் தொடந்து பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம்  ஆகிய மாநிலங்கள் வரிசை கட்டுகின்றன. இந்த மாநிலங்களில் சராசரியாக 40 சதவீத இளம்பெண்கள் 18வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன் திருமணநாளைச் சந்தித்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர், தங்களின் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் கொண்டாடுகிறவர்கள்.

 குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு இயக்கங்களைச் சந்தித்துள்ள தமிழ்நாடு குறைந்த அளவிலேயே குழந்தைத் திருமணங்களைக் கண்டிருக்கிறது. இந்தக் குறைந்த அளவே கூட, இளம் பெண்களில் 16.3 சதவீதமாக இருக்கிறது. 12.8 சதவீதத்தினர் 18 வயதுக்கு முனபே கர்ப்பம் அடைந்தவர்களாவர் (2019–2021 தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வறிக்கை). 2019ம் ஆண்டில் தமிழகத்தில் 46 குழந்தைகளுக்குத் திருமணம் நடந்திருக்கிறது,  2021ல் அந்த எண்ணிக்கை 169 ஆக அதிகரித்திருக்கிறது.

 இதர தெற்காசிய நாடுகளை விட இந்தியாவில் இதைத் தடுப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. ஆயினும், தெரிந்தும் தெரியாமலும் குழந்தைத் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. 15 வயதுக்குக் கீழ் திருமணம் செய்து வைக்கப்படுகிற குழந்தைகள் 5 சதவீதம். 18 வயதுக்குள் மணமாகிற குழந்தைகள் 23 சதவீதம். ஒன்றிய அரசும், மாநில அரசுகளும், இயக்கங்களும் நிறையச் செய்தாக வேண்டியிருக்கிறது.

 இது உலகளாவிய பிரச்சினை. குழந்தைகளின் உலகம் குழந்தைகளுக்கானதாக இல்லை என்கிற பிரச்சினை. குழந்தைப் பருவத் திருமணம், கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் விளையாட்டுகளோடு, கல்வி, உடல் நலம், எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றையும் கலைத்துப் போட்டிருக்கிறது.

 கொலம்பியா, இராக் செய்திகள்

 இந்த நவம்பரில், லத்தீன் அமெரிக்காவின் கொலம்பியா குடியரசு நாட்டில் சட்ட வேலியில் இருந்துவந்த ஓட்டை அடைக்கப்பட்டு,  குழந்தைத் திருமணத்திற்குத் தடைவிதிக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. 17 ஆண்டுகளாக அங்கே நடந்து  வந்த இயக்கங்களின் வெற்றி இது. இந்தச் செய்தி எல்லா நாடுகளும் இதைப் பின்பற்றட்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதே வேளையில் வேறொரு செய்தி, எத்தனை நாடுகள் இதைப் பின்பற்றுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.

 இராக் நாட்டின் அரசு தயாரித்துள்ள புதிய சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டு சட்டமாக அறிவிக்கப்படுமானால், 9 வயதுப் பெண் குழந்தைக்குத் திருமணம் செய்துவைக்கலாம். ஆம், 9 வயது! தற்போதுள்ள சட்டப்படி 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாது. அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று 15 வயதுக்குக் குறைந்தவர்களுக்குத் திருமணம் செய்யலாம்.

 “இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் திருமணங்கள் தொடர்பான அதிகாரம் அரசுத் தலைமையிடமிருந்து மதத் தலைமைக்கு மாற்றப்பட்டுவிடும். தற்போதுள்ள சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம உரிமைகள் மறுக்கப்படும். பெண்களின் மண முறிவு உரிமையும் வாரிசுரிமையும் பறிக்கப்பட்டுவிடும்,” என்று அங்கே இதை எதிர்த்துக் களம் காண்கிற மனித உரிமைப் போராளிகள் கூறுகிறார்கள். பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்கு எளிதில் இரையாக்கப்படுவார்கள், உடல் சார்ந்த பிற துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுவார்கள், அவர்களது கல்வியும் வேலைவாய்ப்பும் புறக்கணிக்கப்படும் என்ற கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.

 சட்டம் செல்லுபடியாகாத நாடுகளில்

 சட்டத்தின் ஆட்சி நடைபெறாத, அதாவது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் உள்ள நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் மிகுதியாக நடைபெறுகின்றன என்று ‘சேவ் தி சில்ரன்’ (குழந்தைகளைக் காப்போம்) என்ற அமைப்பின் “உலக சிறுமிப் பருவ அறிக்கை – 2024” தெரிவிக்கிறது. இத்தகைய நாடுகளில் சுமார் 3 கோடியே 20 லட்சம் சிறுமிகள் “கட்டுப்பாடற்ற–குழந்தைத் திருமணக் கொதிநிலையில் வாழும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்கிறது அந்த அறிக்கை.

 ஈரான் நாட்டின் திருமணச் சட்டத்தின்படி பெண்களுக்கான மண வயது 13, ஆண்களுக்கு 15. ஆயினும், தந்தையின் அனுமதியோடு இதற்கும் குறைந்த வயதில் மண உறவை ஏற்படுத்தலாம்.

 ஆப்பிரிக்கக் கண்டத்தில், சட்டத்தின் கட்டுப்பாடு இல்லாத 10 நாடுகளில், 8 நாடுகள் மோசமான நிலையில் இருக்கின்றன என்கிறது ‘குழந்தைகளைக் காப்போம்’ அறிக்கை. இவற்றில்  மைய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பெண் குழந்தைகள் நிலைமை மிக மோசம். இப்படிப்பட்ட நாடுகளில் ஒவ்வொரு 30 நொடிக்கும் ஒரு பெண் குழந்தைக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

 நான்கு ஆண்டுகளுக்கு முன் உலகில் 57 நாடுகளில் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலைமை இருந்தது. அப்படிப்பட்ட நாடுகளின்  எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துவிட்டது என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு அமைப்பு (ஓஇசிடீ) தனது 2022ம் ஆண்டறிக்கையில் தெரிவிக்கிறது. இவ்வாறு அதிகரித்ததால் 17 கோடி பெண் குழந்தைகளுக்குப் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கட்டாயத் திருமண வீதமும் அதிகரித்திருக்கிறது. இந்த நாடுகளின் பெண்களில் 4 பேருக்கு ஒருவர், 18 வயதுக்கு முன்பே தாயாகிவிடுகிறார்.

 பொந்துகளில் மணமாலை

 அரசுக் கட்டுப்பாடு இருக்கிற பல நாடுகளில் திருமணச் சட்டங்களில் விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்தப் பொந்துகளில் நுழைந்து, குழந்தைகளுக்கு, ஆகப் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு, மணமாலை சூட்டப்படுகிறது. 

 ஆப்பிரிக்காவுக்கு அப்பால், இந்தியாவைப் போலவே பங்களாதேஷ் உள்ளிட்ட சில தெற்காசிய நாடுகளிலும், யேமன் உள்ளிட்ட மையக் கிழக்கு நாடுகளிலும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. தெற்காசிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தை மணமகள்கள் இருக்கிறார்கள். சுமார் 29 கோடிப் பேருக்கு, 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. உலகில், அதிகமான எண்ணிக்கையில்  18 வயதுக்குக் குறைந்த பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கப்படுகிற நாடுகளில் பாகிஸ்தான் 6வது இடத்தில் இருக்கிறது என ‘ஐக்கிய நாடுகள் – பெண்கள்’ அமைப்பு தெரிவிக்கிறது. இலங்கையில் 10 சதவீதப் பெண் குழந்தைகள் 18 வயதைத் தொடுவதற்கு முன் மணமகன் கையைப் பிடிக்கிறார்கள்.

 சீனாவில், சட்ட நடவடிக்கைகள், கல்வி, பெரியவர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைத் திருமணம் வெகுவாகக் குறைந்துள்ளது. 20–24 வயதுப் பெண்களில் 15 வயதுக்குக் கீழ் திருமணமானவர்கள் 10 லட்சம் (கிட்டத்தட்ட 0 சதவீதம்). இதே வயதுப் பிரிவுப் பெண்களில்  18 வயதுக்குக் கீழ் மணம் முடிக்கப்பட்டவர்கள் 3 கோடியே 67 லட்சம் (3 சதவீதம்). இதை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

 கியூபாவின் பெண்களில் 29 சதவீதம் பேர் 18 வயதுக்குள்ளாகவும், 5 சதவீதம் பேர் 15 வயதுக்குள்ளாகவும் திருமணம் முடிந்தவர்களாக இருக்கிறார்கள். 2021ல் கியூப அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் திருமணம் நடந்த நிகழ்வுகள் 918 என தெரிவிக்கப்பட்டிருககிறது. “மக்களிடையே இன்னமும் நீடிக்கிற ஆணாதிக்கக் கலாச்சார நடைமுறைகளை மாற்றுவதற்கும், விதிவிலக்கே இல்லாமல் 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்வதைத் தடுப்பதற்குமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும், பண்பாட்டுத் தள அணுகுமுறைகளும் மிகவும் தேவைப்படுகின்றன,” என்று உயர்மட்ட அரசியல் அமைப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 அமெரிக்காவில் 2000–2018 ஆண்டுகளுக்கிடையே 18 வயதை அடையாத சுமார் 3 லட்சம் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாகவே திருமணம் நடந்திருக்கிறது. 50 மாநிலங்களாக உள்ள இந்த நாட்டின் 13 மாநிலங்களில்தான் 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மைய அரசின் சட்டத்திலேயே கூட இதை அனுமதிக்கும் பிரிவுகள் இருக்கின்றன.

 போர்களும் மோதல்களும்

 போர்களாலும் கலவரங்களாலும்  பாதிக்கப்படுகிற நாடுகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதியும், குடும்ப இயலாமையின் காரணமாகவும் அவர்களுக்குத் திருமணம் முடித்து அனுப்பிவைக்கிற வழக்கம் முன்னுக்கு வந்துவிடுகிறது. வறுமை, குழந்தைகளின் உடல்நலம் குறித்த அறிவின்மை, குறிப்பாகப் பெண் குழந்தைகளின் உடல் சார்ந்த வளர்ச்சிகள் பற்றிய புரிதலின்மை, கல்வி உரிமையைப் பெறுவதற்குக்கூட கையைவிட்டுப் பெரும் தொகையைச் செலவிட்டாக வேண்டிய நிலைமை ஆகிய பின்னணிகள் குழந்தைத் திருமணத்திற்கான காரணங்களாகத் தொடர்கின்றன. பல சமூகங்களில் நிலவுகிற பழைய நம்பிக்கைகளும் குழந்தைப் பருவத்தை மறுக்கும் திருமண உறவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. “எங்கள் குடும்பங்களில் சின்ன  வயதிலேயே கல்யாணத்தை முடித்துவிடுவோம்,” என்று பெருமையோடும், இப்போது நாட்டின் சட்டப்படி அது முடியவில்லையே என்ற பொருமலோடும் பேசுகிறவர்களைப் பார்க்க முடியும்.

 ஆளுநர் அருளுரை

 அரசமைப்பு சாசனத்தையும் அதன் சட்டங்களையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. ஆனால் அவரே, சென்னை கிண்டியில் சென்ற ஆண்டு நடந்த பீகார் மாநில மாணவர்களுடனான உரையாடல் நிகழ்வில், “நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் குழந்தைத் திருமணம். அப்போது எனது மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை எனக்கு அவர் அளித்தார். நான் எப்போது வீடு திரும்பினாலும் எனக்கு பக்கபலமாக இருந்தார். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்,” என்று பேசினார்.

 தனக்குக் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடைபெற்றதை விமர்சனப்பூர்வமாகச் சொல்லி இன்று அப்படியெல்லாம் யாருக்கும் நடக்கக்கூடாது என்று பேசியிருந்தால் வரவேற்கலாம். ஆனால் அவரோ, “குடும்பத்தினர் நம் பக்கம இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்,” என்று அதை நியாயப்படுத்தியது கண்டனத்திற்கு உள்ளானது.  குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்ததாகச் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அதே கடலூர் மாவட்டத்தில் இதே போல் குழந்தைத் திருமணம் செய்து வைத்ததற்காக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 2 வழக்குகள் மட்டுமே தீட்சிதர் குடும்பங்கள் தொடர்பானவை. ஆனால் ஆளுநர், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது ஏன் என்று கேட்டார், ஏதோ குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பிரச்சினையைத் திசைதிருப்பவும் முயன்றார். இதற்கும் தமிழகத்தில் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது.

 வரலாற்றுத் தடம்

 உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்படிப் பேசுகிறபோது, பொதுச் சமூகத்தில் இதை ஆதரிக்கிறவர்கள் ஊக்கம் பெறுவார்கள். குழந்தைத் திருமணத்திற்குத் தடை விதிக்கும் சட்டம், நாட்டின் விடுதலைக்கு முன்பே, 1929ம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டுவிட்டது.  அப்போது கூட, மதத்தில் தலையிடுகிறது பிரிட்டிஷ் ஆட்சி என்று முகம் சுளித்த தலைவர்கள் இருந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகள் சட்டத்தை வரவேற்றார்கள். ராஜஸ்தானின் ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா முன்மொழிந்த இந்தச் சட்டம், அப்போது சார்தா சட்டம் என்று சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டு, பேச்சு வழக்கில் சாரதா சட்டம் என்று பெயர் பெற்றது வரலாறு. பெண்களுக்கான திருமண வயது 14 என்றும், ஆண்களுக்கான வயது 18 என்றும் அந்தச் சட்டத்தில் இருந்தது, அதைக்கூட ஏற்க முடியாமல், “பெண்கள் பூப்படைவதற்கு முன் திருமணம் முடிக்க வேண்டும் என்று எங்கள் மதம் சொல்கிறது,” என்று அன்றைய சில தேசிய இயக்கத் தலைவர்களே வாதிட்டதும், அதையெல்லாம் மீறி சட்டம் நடைமுறைக்கு வந்ததும், விடுதலைக்குப் பிறகு 1978ல் பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் வயது 21 என்றும் உயர்த்தப்பட்டதும், பெரும்பாலான இந்திய மக்கள் அதை ஏற்றுக்கொண்டதும் அந்த வரலாற்றின் தொடர்ச்சி.

 அறியாப் பருவம், திருமணச் சடங்குகள் ஏற்படுத்துகிற ஒரு கவர்ச்சி, திருமண வாழ்வு பற்றிய கற்பனை, பரிசுப் பொருள்கள் மீதான ஆசை, மனைவி என்றாகிறபோது கிடைக்கிற வேறு சில மரியாதைகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு பெண் குழந்தைகள் திருமணத்திற்கு உடன்படுகிறார்கள். “இப்போது திருமணம் வேண்டாம், படிக்கிறேன்,” என்று சொல்லக்கூடிய பல பெண் குழந்தைகள் மிரட்டலுக்கும் கெடுபிடிகளுக்கும் உட்படுத்தப்பட்டு கல்யாணச் சடங்கிற்கு இழுத்துவரப்படுகிறார்கள். திருமணத்தால் புகுத்தப்படும் வலுக்கட்டாய உடலுறவும், வீட்டு வேலைகளும் அவர்களின் உடல்நிலை சீர்குலைவதற்கு இட்டுச் செல்கிறது.

 குழந்தைப் பருவத்தில் திருமணமாகி வளர்கிற பெண்கள் தங்கள் உடல் மீதான தங்கள் உரிமையை இழக்கிறார்கள். அவமதிப்பு உள்ளிட்ட ஆயுட்காலத்திற்கும் தொடர்கிற துயரங்களை எதிர்கொள்கிறார்கள். அந்த வயதிலேயே அவர்களும் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுக்கொள்கிறபோது மிச்சமிருக்கிற கனவுகளையும் தொலைக்கிறார்கள். இவர்களின் உடல்நலத்தை மீட்பதற்காகச் செய்கிற மருத்துவச் செலவுகள் குடும்பங்களுக்கும்  நாட்டிற்கும் பொருளாதாரச் சுமையாகின்றன. எதிர்காலத் தலைவர்களும் கலைஞர்களும் அறிவியலாளர்களும் துளிரிலேயே பட்டுப்போகிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு!

 இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் பெண்ணையே குற்றவாளியாக்குகிறது சமூகம். வேறு சடங்குகளைச் செய்து துன்பங்களைத் துரத்திவிடலாம் என்று நம்புகிறது குடும்பம். துரத்தப்பட வேண்டியது தொற்று நோயாகத் தொடர்கிற குழந்தைத் திருமணமும், அதைப் போற்றுகிற கண்மூடிப் பழக்கங்களுமே அல்லவா?


[‘மகளிர் சிந்தனை’ டிசம்பர், 2024 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை]

No comments: