Saturday, 21 December 2024

வரலாறு, அரசியல், வாழ்க்கையோடு ஒரு திரைப்படம்


 

தி சில்ரன்ஸ் ட்ரெய்ன்



டத்தை ஒரு காட்சியிலிருந்து தொடங்கி விரித்துச் சென்று ஒரு காட்சியோடு முடித்துவிட்டார்கள். ஆனால் அதைப் பற்றி எழுதுவதை எங்கிருந்து தொடங்குவதென்று தோன்றவில்லை. அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்திய படம்தான் “தி சில்ரன்ஸ் ட்ரெய்ன்”.

‘இல் ட்ரெனோ டெய் பாம்பினி’ என்ற இந்த இத்தாலியப் படத்தை அதே பெயரில் வயோலா ஆர்டோன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்டினா கோமேசினி இயக்கியிருக்கிறார். இவ்வாண்டின் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம் ஆங்கிலக் குரல் பதிவோடும் துணையுரையோடும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் அந்த ரயில் குழந்தைகளை வட இத்தாலியின் மோடேனா நகரத்திற்குக் கொண்டு செல்கிறது. படம் நம்மை 1940களின் இரண்டாம் உலகக் போர் முடிவுக்குப் பிந்தைய ஒரு சூழலுக்குக் கொண்டு செல்கிறது.

போர் முடிந்த பிறகும் சில நாட்களுக்கு இத்தாலியில் நேசப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தது. 1946ல் அப்படியொரு தாக்குதலின்போது, நேப்பிள்ஸ் நகரில், பாசிச ஆட்சியின் பரிசான வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிற ஒற்றைத் தாய் அன்டோனீட்டா. விளையாட்டுத்தனமாக ஒளிந்துகொண்டிருக்கும் மகனைத் தேடுகிறபோது, தெருவின் மறுபுறம் குண்டு வெடிக்கிறது. புகை மண்டலத்திற்கு ஊடாகவும் சிதறியோடும் மக்களுக்கு இடையேயும் மகனைக் கண்டுபிடிக்கிறாள். தகர்ந்த கட்டடச் சுவர்களோடு அந்தத் தெரு அன்றைய நிலைமையை உணர வைக்கிறது.

ஏழைக் குழந்தைகளை, நிலைமை சீரடைகிற வரையில், வட இத்தாலியில் பாதுகாப்பாக உள்ள குடும்பங்களின் பொறுப்பில் ஒப்படைத்துப் பேணுவதற்கு ஏற்பாடு செய்கிறது இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி. அதற்காக ‘ட்ரேனி டெல்லா ஃபெலிசிட்டா’ (மகிழ்ச்சி ரயில்கள்) என்ற திட்டம் உருவாக்கப்படுகிறது.அன்டோனீட்டாவின் மகன் அமேரிகோ அம்மாவை விட்டுப் போக மறுக்கிறான்.

ஊரில் சமைத்துச் சாப்பிடுவதற்கு எலிகளைத் தவிர வேறு விலங்குகள் இல்லாத நிலையில், அவனும் நண்பனுமாக பெருச்சாளிகளைப் பிடித்து வண்ணம் பூசி வெள்ளையெலி என்று விற்கிறார்கள். மழையில் அந்த வண்ணம் கரைந்துவிட மாட்டிக்கொள்கிறார்கள். வேறு வழியின்றி பயணத்திற்குச் சம்மதிக்கிறான்.

அன்டோனீட்டா, ஏற்கெனவே மணமானவனான காதலனுடன் நெருங்கிப் பழகுவதைப் பார்த்ததும் கூட அமேரிகோவின் சம்மதத்திற்கு ஒரு காரணம்தான். போரும் சர்வாதிகாரமும் எப்படியெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகின்றன! இன்றைய போர்களோடும் நவீன பாசிசத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ரயில் நிலையத்தில் ஒரு முதிய பெண், “குழந்தைகளே போகாதீர்கள். பெற்றோர்களே குழநதைகளை அனுப்பாதீர்கள். கம்யூனிஸ்ட்டுகளின் திட்டம் குழந்தைகளை சைபீரியாவுக்குக் கடத்துவதுதான். அங்கே மனிதக் கறி உண்பவர்கள் அவர்களைக் கொன்று சுட்டுச் சாப்பிடுவார்கள்,” என்று கு அச்சுறுத்துகிறாள். எல்லோரும் அதைக் கேட்டுத் திரும்பிச் செல்ல முயல்கிறபோது கம்யூனிஸ்ட் தோழர்கள் தடுக்கிறார்கள். போரின் விளைவாகக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதை எடுத்துக்கூறுகிறார்கள். வடக்கில் அவர்கள் அன்போடு பராமரிக்கப்படுவதற்கும், குறிப்பிட்ட காலத்தில் நலமுடன் திரும்பி அழைத்து வருவதற்கும் உறுதியளிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அவதூறுகளாலும், அச்சுறுத்தல்களாலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அப்புறப்படுத்தச் சுரண்டல் சக்திகள் அன்றிலிருந்து இன்று வரையில் முயன்றுகொண்டே இருக்கிறார்களே! அதை அப்பாவிகள் உண்மையென்று நம்புகிறார்களே! இதனை நம் நினைவு ரயில் சட்டெனக் கடக்கச் செய்கிற காட்சி இது.



மோடேனா நகரில் வந்திறங்கும் குழந்தைகள் தத்துப் பெற்றோர்களுடன் செல்கிறார்கள். கடைசியில் அமேரிகோவை அழைத்துச் செல்கிறாள், போரில் காதலனை இழந்து வாழ்பவளான டேர்னா. அவள் இத்தாலியில் ஜெர்மன் ஆக்கிரமிப்பையும் முசோலினியின் பாசிச ஆட்சியையும் எதிர்த்து நடந்த இயக்கத்தில் பங்கேற்றவள்.

அமேரிகோவை அவள் தன் அண்ணன் அல்சைட் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துகிறாள். வயலின் இசைக்கத் தெரிந்தவனான அல்சைட், அமேரிகோவுக்கு அதைக் கற்றுத் தருகிறான். இதைக் கண்டு அவனது மகன் லூசியோ பொறாமைப்படுகிறான். ஆயினும், பள்ளியில் சக மாணவர்கள் அமேரிகோவைத் தெற்கிலிருந்து வந்தவன் என்று அவமதிக்கிறபோது அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஆனால், “நீ தெற்கிலிருந்து வந்தவன்தானே,” என்று சொல்லிக்காட்டவும் செய்கிறான். இன்னொரு நாள், அமேரிகோவின் அம்மாவைப் பற்றி அவன் கேலியாகப் பேச அவர்களுக்குள் சண்டை மூள்கிறது.

அடுப்பில் ரொட்டிகளைச் சுட்டு எடுத்து வைக்கிற வேலைக்காக அமேரிகோவை வீட்டுக்குள் அழைக்கிறார்கள். அவனுக்கு அந்தக் கிழவி சொன்னது நினைவுக்கு வர வெளியே ஓடி மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறான். தேடி வரும் டேர்னா, வயலில் விதைத்திருக்கிற கோதுமை தங்க வண்ணத்தில் விளைந்ததும் அவன் தனது ஊருக்குப் போகலாம் என்கிறாள்.

ஒருவன் திமிரோடு டேர்னாவை இழிவுபடுத்துவதைக் காண்கிறான் அமேரிகோ. அன்று இரவு, தனது அம்மாவாக இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருக்க மாட்டார் என்று சொல்கிறான். டேர்னா கண்ணீர் விடுகிறாள்.

அவனைப் போலவே மோடேனாவுக்கு வந்தவளான ரோசானா ஊருக்குத் திரும்ப வேண்டுமென்று ஏங்கி யாருடனும் பேசாமல் இருக்கிறாள். தண்டவாளத்தின் வழியாகக் போனால் ஊரை அடையலாம் என்று லூசியோ கூற அவளும் போய்விடுகிறாள். லூசியோ பதறிப்போய் அமேரிகோவோடு சேர்ந்து அவளைத் தேடிப் போகிறான். தண்டவாளத்துக்கு அருகில் அவள், எலும்புக்கூடு ஒன்றின் அருகில் உட்கார்ந்திருக்கிறாள். யாருடைய எலும்புக்கூடு அது? ரயிலில் அடிபட்டு இறந்தவரா, போரில் சுடப்பட்டு மாண்டவரா? விடை கிடைக்காத வினா நமக்குள் முளைக்கிறது. அவ்வப்போது சண்டையும் சமாதானமுமாகக் குழந்தைகளின் உலகம் அழகாக இருக்கிறது.

கோதுமை விளைந்து அறுவடைக் காலம் வருகிறது. டேர்னா தன் வாக்குறுதிப்படி அமேரிகோவை ரயிலில் ஊருக்குத் திருப்பி அனுப்புகிறான். அல்சைட் தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த வயலினையும் அவன் எடுத்துச் செல்கிறான். நேப்பிள்ஸ் வீட்டில் அன்டோனீட்டா அவனை முன்போல நடத்தவில்லை.

வடக்கிலுள்ள தத்துப் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்குக் கடிதங்கள் வருகின்றன. டேர்னாவிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் தனக்குக் கடிதம் எதுவும் வராத நிலையில் அவன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று விசாரிக்கிறான். அங்கே அவன் பெயருக்குக் கடிதங்கள் வந்திருப்பதையும், அம்மா அவற்றை எடுத்துவந்து தராமல் இருந்துவிட்டதையும் தெரிந்துகொள்கிறான்.

வீட்டிற்கு வந்து வயலினைத் தேடுகிறான். குடும்பச் செலவுகளுக்காக அதை அடகு வைத்துவிட்டதைக் கூறுகிறாள் அம்மா. வெறுத்துப் போனவனாக அவன் யாரிடமும் சொல்லாமல் ரயிலேறி மோடேனாவுக்கே போகிறான். அவனைப் பிரிந்த வாட்டத்தோடு இருக்கும் டேர்னாவின் குடும்பத்தோடு இணைகிறான்.

கால ரயில் 48 ஆண்டுகளைக் கடக்கிறது. இப்போது அமேரிகோ ஒரு புகழ்பெற்ற வயலின் கலைஞர். இசைக்குழு இயக்குநர். நிகழ்ச்சிக்காக மேடையில் சக கலைஞர்கள் காத்திருக்கிறார்கள், அமேரிகோ தயாராகிறபோது ஒரு தகவல் வருகிறது. நேப்பிள்ஸ் நகரில் அம்மா இறந்துவிட்டார் என்று. அந்தச் சோகத்துடனேயே நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்துவிட்டு, ரயிலில் ஊருக்கு வருகிறார். வெறுமையாக இருக்கும் வீட்டிற்குள் சுற்றி வருகிறபோது அவருக்கோர் அதிர்ச்சி. அந்த நொடியில் அவரது துயரமும் அம்மாவைப் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்ட குற்றவுணர்வும் நம்மையும் தொற்றிக்கொள்வது உண்மையான அனுபவம். அப்போது ஒலிக்கிற பின்னணிக்குரல் முக்கியமானதொரு முன்கதையைச் சொல்கிறது.


இரு வேறு கால ரயில்களில் பயணிக்கிறோம். சிறுவன் அமேரிகோவாக கிறிஸ்டியன் செர்வோன், வளர்ந்த கலைஞராக ஸ்டெஃபானா அக்கோர்ஸி, பெற்ற அம்மாவாக செரீனா ரோஸி, வளர்த்த அம்மாவாக பார்பரா ரோஞ்சி உள்ளிட்ட நடிப்புக் கலைஞ்ர்கள் நம்மோடு பயணிக்கிறார்கள். இயக்குநரோடு இணைந்து ஒளிப்பதிவாளர் இட்டாலோ பெட்ரிக்கியோன், இசையமைப்பாளர் நிக்கோலா பயோவனி, தொகுப்பாளர்கள் பாட்ரிசியோ மாரோன், எஸ்மெரால்டா காலாப்ரீயா ஆகியோர் ரயிலைச் செலுத்துகிறார்கள்.



போர், அடக்குமுறை ஆட்சி, வறுமை, மீறியெழும் முனைப்பு, அதிலே இணையும் மனிதம் என்று எத்தனை பின்னணிகள்! எத்தனை செய்திகள்! எத்தனை உணர்வுகள்! அத்தனையும் சேர்ந்து சிறந்ததொரு சினிமாவாக மனத் தண்டவாளத்தில் தடதடக்கின்றன!

===============

‘மின்னம்பலம்’ இணைய ஏட்டில் எனது கட்டுரை (20 டிசம்பர் 2024).

படங்களில் இயக்குநரும், நாவலாசியரும்.

No comments: