‘விடுதலை–2’ படத்தில் சில வசனங்கள் மௌனமாக்கப்பட்டிருக்கின்றன. அதன் பிறகும் கூட “ஏ” சான்றிதழ் அளித்திருப்பது பரவலாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் கை விரல் நகங்கள் இக்காலத்தில் இப்படிக் கிழிக்கும் என்றால், பெருமாள் வாத்தியார் காலத்தில் அவரை மௌனமாக்குவதற்கு என்னவெல்லாம் செய்திருக்கும்? அவர் கைது செய்யப்பட்ட செய்திகளை வெளியிடுவது தொடர்பாகப் பத்திரிகை நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க உயர்மட்டத்தில் முடிவு செய்யும் காட்சிகள் அந்த நகங்களின் கூர்மையைக் காட்டுகின்றன.
இன்றைய அரசியல், சமூக, சந்தை நிலைமைகளில் சினிமாவில் கம்யூனிசக் கருத்துகளைப் பேசுவதற்கே ஒரு கலைத்துணிவு வேண்டும். அதிலேயும், புரட்சி என்ற இலக்குத் திட்டத்தை நோக்கிச் செல்வதில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இடையே நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கிற, எந்தப் பாதை சரியான பாதை என்ற நடைமுறைத் திட்டம் தொடர்பான மோதலைப் பேசுவதற்கு ஒரு கொள்கைத்தெளிவு வேண்டும். அந்தத் துணிவு, தெளிவு இரண்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். ஒரு சினிமாவுக்குள் அரசியல் விவாதம் வருவது வழக்கமானதுதான். அரசியல் விவாதத்திற்குள்ளேயே ஒரு சினிமா நகர்வது அரிதானது.
படத்தின் முதல் பாகம் குறிப்பிட்ட இடமும் காலமும் சார்ந்த கதையைக் கொண்டிருந்தது (பொன்பரப்பி, சதிவேலை, பழங்குடி மக்கள்). இரண்டாம் பாகம் வேறு காலப் பகுதிகளுக்கும் இடச் சூழல்களுக்கும் விரிவடைகிறது (கீழத்தஞ்சை, சாதிய வன்மம், கூலி மறுப்பு, நில ஆக்கிரமிப்பு). படைப்பாளியின் புனைவுச் சுதந்திரம் அவ்வாறு விரிவுபடுத்த வழி செய்திருக்கிறது. இதன் காரணமாக, இது அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்துக் காலகட்டத்திற்குமான படமாகிறது.
மக்களுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட்டுகள் நாட்கணக்கில், மாதக்கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டபோதெல்லாம் அங்கே ஒரு மார்க்சிய அரசியல் பள்ளியைத் தொடங்கிவிடுவார்கள். அவர்களின் கட்டுப்பாடு, வேலைப் பிரிவினை, மரியாதை, நெஞ்சுரம், மற்றவர்களுடன் இணக்கம ஆகியவற்றைப் பார்த்துச் சிறையதிகாரிகளும் காவலர்களும் ஈர்க்கப்பட்டு மதிப்பளித்த அத்தியாயங்கள் உண்டு. மறியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டு ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டிருக்கும்போது கூட, போராட்டக் கோரிக்கையையே தலைப்பாக்கி அணி பிரிந்து பட்டிமன்றம் நடத்துவார்கள். “ஏதாவது அத்து மீறினால்தான் எதிர்ப்பார்கள், உள்ளேயே போராடுவார்கள். நாங்கள் சரியாக நடந்துகொண்டால் ஒத்துழைப்புத் தருவதில் இவர்களைப் போல யாரும் வர மாட்டார்கள்,” என்று காவல்துறையினர் கூறுவதைக் கேட்கலாம்.
படத்தில், கைது செய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்படும் வாத்தியார் காட்டுக்குள் பாதை காட்டுவதோடு, காவலர்களுக்குத் தனது பாதை பற்றி வகுப்பு எடுப்பது போலப் பேசுகிறார், வர்க்கப் பாகுபாட்டை விளக்குகிறார். இது கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு வியப்பளிக்கும் சித்தரிப்பல்ல.
கட்சி அலுவலகத்தில் இருதரப்பு உரிமைகளை மதிக்கிற உறுதியேற்போடு நடைபெறும் இணையேற்பு நிகழ்வு உள்ளிட்ட சித்தரிப்புகள் வளரும் தலைமுறைகளின் மனதில் பதியமாகும்.
மிகப் பெரும்பாலான காட்சிகளில் வருவதால் அல்ல, வாத்தியாரின் இயல்புகளை உள்வாங்கிக்கொண்ட நடிப்பால் விஜய் சேதுபதி படத்தைத் தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். காவல் அதிகாரியின் முன் தரையில் உட்கார வைக்கப்பட்டிருப்பவரின் அந்த அம்மண அரியாசனம் அரங்கம் நிறைந்த கைத்தட்டல் பெறுகிறது. அது அந்தச் சுயமரியாதைக்கான அங்கீகாரம்.
இளைய ராஜா பின்னணி இசையும், வேல்ராஜ் ஒளிப்பதிவும் இயக்குநர் கற்பனையை உயிர்ப்புறச் செய்திருக்கின்றன. சூரி, கௌதம் வாசுதேவன் மேனன், ராஜீவ் மேனன், மஞ்சு வாரியர், கிஷோர், பாலாஜி சக்தி வேல், (மறைந்த) மனோ பாலா உள்ளிட்டோர் பங்களிப்பு வலுச் சேர்த்திருக்கிறது.
இதையெல்லாம் நேர்த்தியாகச் செய்திருக்கலாமே என்று எண்ண வைக்கிற இடங்கள் இருக்கின்றன, அல்லது இல்லாமல் போயிருக்கின்றன. சர்க்கரை ஆலை முதலாளியின் மகள் மகாலட்சுமி தோழர்களோடு சேர்ந்துகொள்வது, இப்படிப்பட்ட செல்வச் செழிப்பான, மேல்தட்டுக் குடும்பங்களில் பிறந்து இயக்கத்திற்கு வந்தவர்களை அடையாளப்படுத்துகிறது என்றாலும், கதையோட்டத்தில் அது என்ன பங்களிக்கிறது? தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரம் பிறகு நாயகனின் காதல்மிகு இணையராக, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்கிறவராகச் சுருக்கப்பட்டுவிட்டது ஏன்?
முதல் பாகத்தில் காவலர் குமரேசனைக் காதலித்து, காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, வாத்தியாரை அவன் கைது செய்யும் நடவடிக்கைக்குத் தூண்டுதலாகும் தமிழரசி என்ன ஆனார்? ஒரு காட்சியில் வருகிறார் என்றாலும் அது முன்கதைப் பகுதியாக அல்லவா இருக்கிறது?
முந்தைய பாகத்தில் எளிய மக்கள் மீதான காவல்துறையின் சித்திரவதை தருகிற வலியுணர்வை, இதில் பண்ணையின் ஒடுக்குமுறை வன்மம் தரத் தவறுகிறது, ஒட்ட வைத்தது போல இருக்கிறது – இந்த எண்ணம் எனக்கு மட்டும்தான் ஏற்பட்டதா? தற்போதைய நிகழ்வுகளும் முன்பு நடந்தவைகளுமான மாறி மாறி வருகிற காட்சிகளின் வேகம், ஊன்றிக் கவனித்து ஒன்றுவதைத் தடுக்கிறதா?
அரசியல் பாதை என்ற தளத்தில் படம் பதிவு செய்திருக்கிற செய்திகளும் கருத்துகளும் (எனது கண்ணோட்டப்படி) முற்றிலும் சரியாக இருக்கின்றன. ஆனால் திரைப்பட அனுபவம் என்ற தளத்தில் (எனது கண்ணோட்டப்படி) தாக்கம் ஏற்படுத்துவதில் முதல் பாகத்தோடு இணையாமல் பின்தங்குகிறது. வெகு மக்கள் இயக்கத்திலிருந்து விலகி ஆயுதம் ஏந்திய குழுவாக மாறியது, தங்களுக்குத்தான் பேரிழப்புகளை ஏற்படுத்தியது என்ற வேதனையுடன் அதிலிருந்து மாற முடிவெடுக்கிறார் வாத்தியார். தியாகங்களில் தோய்ந்திருந்த போதிலும் கூட, அது மக்களுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது, இலட்சியத்தை அடைவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற புரிதலுக்கும் அவர் வந்திருப்பார் – அதை இன்னும் வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும்.
நாசி நரம்புகளை வதைக்கும் வணிக மசாலாக்களுக்கு இடையே அவ்வப்போது நல்ல காற்று போல மாற்றுச் சிந்தனைகளோடு வருகிற சில படங்கள், மக்களை நெருங்கும் கலையாக்கத்தில் அடையாளம் பெறுவதில்லை. ஆயினும் புதியவர்களை ஊக்குவிப்பதற்காகக் குறைபாடுகள் சுட்டிக்காட்டாமல் விடப்படுவதுண்டு. ஆனால், முதிர்ச்சியுள்ள ஒரு முன்னோடிக் கலைஞரான வெற்றிமாறனிடம் உரிமையோடு முன்வைக்கலாம். இத்தகைய ஆக்கங்கள் பெரும் வெற்றியடைய வேண்டுமென்ற பெருவிருப்பமே இந்தப் பகிர்வு.
ஓடிடி மேடைக்கு வருகிறபோது, நீக்கப்பட்ட பல காட்சிகளை இணைத்து வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. அப்போது மேற்படி கேள்விகளுக்கு விடையும், படத்திற்கொரு முழுமையும் கிடைக்கின்றனவா என்று பார்க்கலாம். தொலைக்காட்சியின் பெரிய திரையில் படத்தைப் பார்க்க விரும்பி வீட்டுக்கு வரக்கூடிய நண்பர்களோடு அமர்ந்து திரும்பத் திரும்பப் படத்தைப் பார்ப்பேன். எப்படியானாலும், அவர்களுடன், கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுப் பருவத்தில் வந்திருக்கிற ‘விடுதலை–2’ இயக்கப் பாதைகள் குறித்து நான் பேசுவதை எளிதாக்கியிருப்பது உண்மை.
No comments:
Post a Comment