Wednesday, 30 July 2025

கட்டை விரல்

 


 



 

லூன் கண்ணாடிக் கதவைத் திறந்து வெளியே வந்து சிறிது நேரம் காத்திருந்தேன். உயரமான மேடையில் இருந்த வாசலிலிருந்து நான்கு படிகள் கீழே இறங்க வேண்டும். அகலமான தெருவில் வண்டிகள் இப்படியும் அப்படியுமாகப் போய்க்கொண்டிருந்தன. இடைவெளி கிடைத்ததும் எதிர்ப்பக்கம் போக நினைத்தேன். அந்தப் பக்கத்தில் நான்கு கடைகளுக்கு முன்னால் இருக்கும் காலியிடத்தில்தான் என்னுடைய பைக்கை நிறுத்தியிருந்தேன்.

 

அந்தப் பக்கத்தில் இடதுபுறத்திலிருந்து வலதுமுனை நோக்கி நடந்துகொண்டிருந்த கறுப்பு – பச்சை கட்டம் போட்ட ஷர்ட், வெள்ளைப் பேண்ட்  அணிந்திருந்த நடுத்தர வயதுக்காரர் சட்டென்று நின்றார். கொஞ்சம் குனிந்து சில நொடிகள் தொடைகளில் கைகளை ஊன்றிக்கொண்டார்.

 

பிறகு நிமிர்ந்தவர், பின்னாலிருந்து வந்துகொண்டிருந்த டூ–வீலர்களையே நோக்கினார். பின் சீட்டில் யாரும் இல்லாமல் ஒற்றை ஆளாக வந்தவரின் முன்பாக ஒரு கையை நீட்டிக் கட்டை விரலைக் காட்டினார். இன்னொரு கையால் மெயின் ரோடைக் காட்டினார்.

 

அந்த பைக்  வேகத்தைக் குறைக்காமல் விரைந்தது. முயற்சியைக் கைவிடாதவராக அடுத்தடுத்த வண்டிகளைக்  கவனித்தார். பொறுமையாக நிற்பதன் பலனை அடிக்கடி அனுபவித்திருப்பவர் என்று தெரிந்தது.

 

சில  வண்டிகள் ஓடிக் கடந்த பிறகு மற்றொரு வண்டி பின் சீட் காலியாக வந்தது. அது ஒரு ஸ்கூட்டி. ஹெல்மெட் தலைக்கு நேராகக் கட்டை விரலை உயர்த்தி, சாலையைக் காட்டினார். அதுவும் நிற்கவில்லை, ஆனால் வண்டியோட்டி ‘சாரி’ என்பது போலத் தலையை ஆட்டியபடி சென்றார்.

 

அதற்கடுத்து சிங்கிள் ரைடருடன் வந்ததும் ஒரு ஸ்கூட்டிதான். இவர் கட்டை விரல் காட்டாமல் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு நின்றார். எல்லா ஆண்களையும் போல பெண்களிடம் லிஃப்ட் கேட்பதில்லை என்ற யாரும் விதிக்காத கட்டுப்பாடு.

 

மூன்று நான்கு வண்டிகள் கடந்தபின் வந்த சிங்கிள் பைக் ரைடருக்குக் கட்டை விரலால் கோரிக்கை விடுத்தார். அவர்  மீது இடித்துவிடாதபடி வண்டியைக் கொஞ்சம் வளைத்து  ஒதுங்கி நேராகப் போனார் பைக்கர்.

 

இப்படியாகச் சில வண்டிகள் கடந்ததும், எனக்கு வேண்டிய இடைவெளி கிடைத்தது. வேகமாக இறங்கி நடந்து எதிர்ப்புறம் போனேன். பைக் அருகில் போய் நின்று நிமிர்த்திக்கொண்டு வலது காலைப் பின்னால் தூக்கி வீசி சீட்டில் உட்கார்ந்தேன். ஸ்டார்ட் செய்து மெதுவான வேகத்தில் நேராக வந்தேன். எனக்கு அவர் கட்டை விரல் காட்டவில்லை. அவரருகில் வண்டியை நிறுத்தினேன். “வாங்க, உங்களை டிராப் பண்றேன்.”

 

“பரவாயில்லை… நான் வேற வண்டி பார்த்துக்கிடுறேன். நீங்க போங்க மேடம்.”

 

இப்போதும் இப்படி வித்தியாசம் பார்க்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன். ஆனாலும் என்னையும் மேடம் என்று சொன்னதில் ஒரு திருப்தியோடு அந்த யூனி செக்ஸ் சலூன் பக்கம் பார்த்தபடி வேகம் எடுத்தேன்.

[0]

-குமுதம் இதழில் (ஜூலை 30) வந்துள்ள எனது சிறுகதை


 

Tuesday, 29 July 2025

இன்னொரு சோமாலியாவாக மாறும் காஸா - அதிகரிக்கும் பட்டினி சாவுகள்! உலகம் தன் மனசாட்சியைத் திறக்குமா?


காஸாவில் பட்டினிச் சாவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. உணவு கிடைக்காமல் பல நாட்கள் பட்டினியாக இருப்பதால், எலும்பும் தோலுமாகப் படுக்கையில் மக்கள் படுத்துக்கிடப்பதைக் காணொளிகளில் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. உணவு வாங்குவதற்குச் சட்டிகளை ஏந்திக்கொண்டு வரும் மக்கள், முண்டியடித்துக்கொண்டு உணவை வாங்க முயலும் காட்சிகள் நெஞ்சை அறுக்கின்றன. இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுவரை கொல்லப்பட்ட நிலையில், தற்போது உணவுப்பஞ்சத்தாலும் குழந்தைகள் செத்துமடிகிறார்கள். இன்னொரு சோமாலியாவாக காஸா மாறியிருக்கிறது.

ஆகவேதான், “எங்களுக்குத் தேவைப்படுவது  உங்களின் ஆறுதல் வார்த்தைகள் அல்ல. நடவடிக்கைகள்தான்,” என்கிறார் நூர்–அல்–ஷானா. இவர் சக்திவாய்ந்த குண்டுகளால் உருக்குலைந்து கிடக்கும் காஸா பகுதியில் உயிருக்கு அஞ்சாமல் செய்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் பத்திரிகையாளர். “சுற்றி வளைக்கப்பட்டுள்ள மக்கள் உலக சமுதாயத்திடமிருந்து வருகிற வெறுமையான ஒருமைப்பாட்டு வெளிப்பாடுகளால் சோர்வடைந்திருக்கிறார்கள். உங்கள் எல்லைகளைத் திறந்துவிட விரும்புகிறோம். படுகொலைகளை நீங்கள் தடுக்க விரும்புகிறோம்,” என்று சர்வதேச சமூகத்திற்கு அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

கண் முன்னால் (மிச்சமுள்ள) கட்டடங்கள் தகர்வதையும், (எஞ்சியுள்ள) மக்கள் படுகாயமடைவதையும் (வற்றிப்போன) குழந்தைகள் சாவதையும் பார்க்கிற ஷானா போன்ற செய்தியாளர்கள் மட்டுமல்ல, ஊடகங்களில் அந்தச் செய்திகளைப் பார்க்கிற எவருமே இப்படித்தான் சொல்வார்கள்.

காஸாவில் உணவுப் பஞ்சம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை ஊடகங்களில் பார்க்கும்போது, செய்தித்தாள்களில் படிக்கும்போது ஏற்படும் வேதனையை விவரிக்க முடியவில்லை.  பாலஸ்தீனர் ஒருவர், “என்னால் கோர்வையாகச் சிந்திக்கவோ செயல்படவோ முடியவில்லை,” என்று வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாகப் பகிர்ந்திருக்கிறார். அவருடை ய நிலைமைக்குக் காரணம் பட்டினி. குறிப்பிட்ட நேரத்தில் காஃபி பருக முடியாமல் போனாலே சோர்ந்து சுருள்கிறோம். ஆனால், காஸாவில் நாள் கணக்கில் பட்டினிக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் கோர்வையாகச் சிந்திக்கவும் முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

வற்றி உலர்ந்த குழந்தைகள்

அதை விட குழந்தைகளின் நிலைமைதான் பெரும் துயரம். “குழந்தைகளின் உடல்கள் வற்றி உலர்ந்துவிட்டன. அவர்களின் கைகளைப் பிடித்து உயர்த்த முடியாத அளவுக்கு மணிக்கட்டும் தோள்பட்டையும் துவண்டுவிட்டன. அவர்களுடைய உடலைத் தொடும்போது நேரடியாக எலும்புகளைத் தொடுகிறேன், எலும்புக்கும் தோலுக்கும் இடையே சதையே இல்லை,” என்று. பிரிட்டனிலிருந்து காஸாவுக்கு வந்து மருத்துவமனையில் ஒரு தாயாகத் தொண்டாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர் ஒருவர், நண்பர்களுக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்.


ஊட்டச் சத்து கிடைக்காததால் எலும்பும் தோலுமாக  இருக்கும் குழந்தைகளை அவ்வப்போது செய்திப் படங்களில் பார்த்திருக்கிறோம். நம் நாட்டிலேயே கூட அப்படிப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். காஸா குழந்தைகளின் உடல் நலிவோ இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், உணவுக்கு வழியில்லாத வறுமையல்ல. உணவு சென்று சேர்வதற்கான வழி தடுக்கப்படுகிற கொடுமைதான் காரணம். காஸாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் அதைச் செய்துகொண்டிருக்கிறது.

“இந்த மாதம் 25ஆம் தேதி அதிகாலையிலிருந்து இஸ்ரேல் தாக்குதல்களால் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். காஸா மருத்துவமனைகள்  24 மணி நேரத்தில் பட்டினியால் 9 பேர் மாண்டதாகப் பதிவு செய்துள்ளன.  பட்டினியால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.”  இதளை, கத்தார் நாட்டிலிருந்து செயல்படும் பன்னாட்டுச் செய்தி முகமையான அல் ஜசீரா  அன்றைய இரவின் தனது கடைசித் தொகுப்பில் தெரிவிக்கிறது. 

“மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உயிரைத் தக்கவைப்பதற்குத் தேவையான, சிறப்பு ஊட்டமிட்ட உணவு இருப்பு குறைந்து வருகிறது.  ஆகஸ்ட் நடுவில் முற்றிலுமாகக் காலியாகிவிடும்,” என்று ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்திருக்கிறது.

உணவைத் தடுக்கும் இஸ்ரேல் ராணுவம்


ஐ,நா.  உலக உணவுத் திட்ட  அலுவலகம்  வெளியிட்டுள்ள தகவலில், “காஸாவில் பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களுக்கு மே 21 முதல் 22,000 மெட்ரிக் டன் உணவு விநியோகித்துள்ளோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 4,200 டன் உணவை ஏற்றிச் சென்ற 349 சரக்கு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளோம்.  காஸா மக்களின் உயிரைக் காக்கத் தேவையான உணவில் இது மிகச் சொற்பமான அளவுதான்,” என்று கூறியுள்ளது.

இந்தச் சொற்ப உணவையும் அந்த மக்களுக்குச் செல்லவிடாமல் ராணுவத்தின் மூலம் தடுத்து வைத்திருக்கிறது இஸ்ரேல் அரசு. செஞ்சிலுவைச் சங்கம், அதன் துணை அமைப்பான பாலஸ்தீன பிறைச் சங்கம், எல்லைகள் இல்லா மருத்துவர்கள், எல்லைகள் இல்லா மருந்து உதவிகள், ஆக்ஸ்ஃபாம்,   குழந்தைளைக் காப்போம், நார்வே அகதிகள் அவை, உலக பொதுமன்னிப்பு, அமெரிக்க அருகமை கீழை அகதிகள் உதவியகம், நேரடி நிவாரணம், மத்திய கிழக்கு குழந்தைகள் கூட்டமைப்பு, உலக இஸ்லாமிய நிவாரணம், கத்தோலிக்க நிவாரண சேவைகள், உலகப் பார்வை, காஸா மனிதநேய அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகள் இவ்வாறு உதவிகளை அனுப்புகின்றன. யாரிடமிருந்து வந்தாலும் அவை போய்ச்சேர்வது காஸா மக்களுக்கு என்பதால் இரக்கமின்றித் தடுக்கிறது இஸ்ரேல்.

செய்தியாளர்கள் கேட்டபோது, “உதவிகள் வழங்கலில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுக்குக் காரணம்  அந்த அமைப்புகளின் விநியோகத் திறமையின்மைதான். எங்களைப் பொறுத்தவரையில் தேவையான அளவுக்கு உணவுகளையும் மருந்துகளையும் உதவிகளையும் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கிறோம்,” என்று இஸ்ரேல் அரசு கூறியிருக்கிறது. அந்த “தேவையான அளவுக்கு” என்ற வரம்பை அதிகபட்சமாகச் சுருக்குகிற திட்டத்தோடு இஸ்ரேல் ராணுவம் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவே தொடரும் கொலைகள்  கருத வைக்கின்றன. உணவு தடுக்கப்பட்டதால் சாவதும் கொலைதானே?

உணவையும் மருந்தையும் அழிக்கிறார்கள்

ஏனென்றால்,  காத்திருக்கும் உணவு–மருந்து வண்டிகளை காஸாவுக்குள் நுழைய விடாமல் நிறுத்தி வைத்திருப்பதோடு ராணுவத்தினர் நிறுத்திக்கொள்ளவில்லை. நீண்ட வாகன வரிசையின் முன்னால் உள்ள வண்டிகளில் உள்ள பொருள்களை வெளியே எடுத்துக் கொட்டி அழிக்கிற வேலையிலும் இறங்கியிருக்கின்றனர். நாட்கணக்காக அந்தப் பொருள்கள் தேங்கி நிற்கின்றன என்று காரணம் கூறுகின்றனர். அப்படித் தேங்குவதால் உணவும் மருந்தும் கெட்டுப்போகின்றன, அவற்றை அந்த மக்களுக்கு வழங்கக் கூடாது என்ற நல்லெண்ணம் போலும்! 

இஸ்ரேலின் அனைத்து அராஜகங்களுக்கும் அமெரிக்க அரசு அப்பட்டமாக ஆதரவளிக்கிறது.. இப்போது கூட, பேச்சுவார்த்தை என்ற ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட முடிவுகளை முன்வைத்தது.  அதற்கு காஸாவின்  ஹமாஸ் ஆட்சியாளர்கள் உடன்படவில்லை.  உடனே டொனால்டு டிரம்ப், “அவர்கள் சாக விரும்புகிறார்கள்,” என்று அறிவித்தார் (ஜூலை 26). இதன் பொருள் காஸாவில் போர்க் கொடுமைகள் மேலும் தீவிரமாகும் என்பதே என எவரும் ஊகிக்க முடியும்.

இஸ்ரேலின் மிக வலுவான ஆதரவாளர்களில் ஜெர்மனியும் ஒன்று.  இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது ஜெர்மனியின் வெளியுறவுக் கொள்கை.  அவ்வப்போது இஸ்ரேலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டறிக்கைகளில் ஜெர்மன் அரசு   பெரும்பாலும் கையெழுத்திடுவதில்லை.

பிரிட்டன் அரசு இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளி. இருப்பினும் காஸாவில் மனிதநேயம் கடும் நெருக்கடிக்கு உள்ளானதாலும், உள்நாட்டு மக்களின் கண்டனங்களாலும் அண்மைக் காலமாக இஸ்ரேல் நடவடிக்கைகளை விமர்சிக்கிறது. ஆனாலும், அதன் அடிப்படை ஆதரவு தொடர்கிறது.

கனடாவும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருகிறது. ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்குத் தற்காப்பு உரிமை இருக்கிறது என்று அறிவித்தது. இருப்பினும், மனிதநேய நெருக்கடி குறித்து கவலைகளையும் வெளிப்படுத்தியது. செக்,  ஹங்கேரி, ஆஸ்திரேலியா அரசுகளும் இஸ்ரேலுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன. ஐ.நா. சபையில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது இந்நாடுகளின் தூதர்கள்  இஸ்ரேலுக்கு ஆதரவாகவே வாக்களிக்கிறார்கள்.

சீன அரசு ஐ.நா. சபையில் சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே நிலையெடுத்து வந்திருக்கிறது. தற்போதைய சூழலில், ஹமாஸ் செயல்களை வெளிப்படையாகக் கண்டிக்கவுமில்லை, ஒவ்வொரு நாட்டுக்கும் தற்காப்பு உரிமை இருக்கிறது என்று இஸ்ரேலுக்கு ஆதரவான தொனியாக இருக்கிறதே என்று நினைக்க வைப்பது போலவும் கூறியிருக்கிறது. அதே வேளையில்  அந்த உரிமையை உலகச் சட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறது.  இருப்பினும் இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு  இன்னும் திட்டவட்டமான வடிவில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தக்க வகையிலேயே சீனா நடந்துகொள்கிறது. 

உணர்வலைகளின் பிரதிபலிப்பு

மனிதநேய நெருக்கடி என்ற நிலையில், முன்பு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த பல நாடுகள்  இப்போது உடனடிப் போர்நிறுத்தத்தை வலியுறுத்துகின்றன. உதவிப் பொருட்கள்  தடையின்றிச் செல்வதை அனுமதிக்க  வலியுறுத்துகின்றன.  பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே, ஜப்பான், நியூசிலாந்து உட்பட 28 நாடுகள் அண்மையில் இஸ்ரேலைக் கண்டிக்கும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

வரும் செப்டம்பரில் கூடவுள்ள ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை முறைப்படி அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ் அரசுத் தலைவர் எமானுவேல் மாக்ரோன் அறிவித்திருக்கிறார். பிரிட்டனில் 220 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதே போன்ற நிலைப்பாட்டை தங்களது அரசும் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர். இவையெல்லாம் உலக அளவில் அலையாக எழும் மக்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பேயாகும். 

இத்தகைய உணர்வுகளுக்கு முன்பு ஆதரவாக இருந்து வந்த சோவியத் யூனியன் 1990களில் தகர்ந்து போனது. அது, சோவியத்தோடு இணைந்திருந்த மக்களின் இழப்பாக மட்டும் போய்விடவில்லை. உலக அரங்கில், அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு அநீதிகளைத் தடுக்க விரும்பும் மனிதநேய சக்திகளின் பேரிழப்பாகவும் உணரப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அரசின் மௌனத்தை அந்த சக்திகள் ஒரு அடியாகவே உணர்கின்றன. மௌனம் என்று கூட சொல்லமுடியாது, ஐ.நா. சபையில் இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரியும், மனிதநேய உதவிகளை அனுமதிக்க வலியுறுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்புகளைப் புறக்கணித்திருக்கிறது. ஒன்றியத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், நாட்டின் பெருமைக்குரிய வெளியுறவுக் கொள்கையிலும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதை,  பாலஸ்தீன மக்களோடு உணர்வார்ந்த ஒருமைப்பாடு கொண்டிருப்போர்  சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த அளவுக்கு இஸ்ரேல் அரசு வன்மத்தைக் கொட்டுவது ஏன்? அதற்கு அமெரிக்கா தன் ஆதரவைக் கொட்டுவது ஏன்? 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் படையினர் திடீர்த் தாக்குதல் நடத்தியது உண்மை.  அதில் இஸ்ரேல் 1,200 பேர் கொல்லப்பட்டதும்,   251 பேர் பிணைக் கைதிகளாகக் செல்லப்பட்டார்கள் என்பதும் உண்மை.

அன்று இரவே இஸ்ரேல் அரசு போர் அறிவிப்பை வெளியிட்டு வான்வழி தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் தரைவழி ராணுவ நடவடிக்கையாகவும் மாற்றியது. அதன் நோக்கம் அந்த நியாயமற்ற சாவுகளுக்குப் பழி வாங்குவதுதானா? பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பதுதானா?

போர் தொடங்கிய 655 நாட்களில் (ஜூலை 27 வரையில்) நேரடித் தாக்குதல்களால்,  இடிபாடுகளில் சிக்கியதால், சிகிச்சை கிடைக்காததால் என கிட்டத்தட்ட 1,86,000 பேர் மரணமடைந்தார்கள்.  காஸா மக்கள்தொகையில் 100 பேருக்கு ஒருவர் எனக் கொல்லப்பட்டுவிட்டார்கள். காஸாவில் 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உலகக்கொடுமை. 

காஸா நகர அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் இந்த ஜூலை 25 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அதுவரையிலான 72 மணி நேரத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்தனர். பட்டினியால் இறந்தவர்கள் 111 பேர், அவர்களில் 80 பேர் குழந்தைகள். ஊட்டமின்மையால் மேலும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியவர்களில் 85,500 பேர் குழந்தைகளில் 33,000 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவையன்றி, துல்லியமான கணக்குகள் தர இயலாத அளவுக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்தம் 22 லட்சம் குடிமக்களில் 80 சதவீதத்தினர்  இடம் பெயர்ந்துவிட்டார்கள்.  வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், மின்சார விநியோகம், நீர் விநியோகம் என கட்டமைப்புகள்  தகர்க்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களும் தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் அழிந்துவிட்டதால் பொருளாதார உற்பத்தியும் சுழற்சியும் முழுமையாக முடங்கியிருக்கிறது. 100 சதவீத வேலையின்மை ஏற்பட்டிருக்கிறது.

உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள், காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப நூறு பில்லியன் டாலர்கள் வரை தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளன. தற்போதைய போரினால் ஏற்பட்டுள்ள இழப்புகளின் அளவு முந்தைய சண்டைகளால் ஏற்பட்டதை விடப் பல மடங்கு அதிகம். பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்களில் 200 பேர் நாடு திரும்பிவிட்டனர்.

ஆக, இஸ்ரேலின் வேறு நோக்கத்திற்கு ஹமாஸ் தாக்குதல் ஒரு சாக்காக அமைந்துவிட்டது. அமெரிக்காவும் ஆதரிக்கிற அந்த  நோக்கம் என்ன? 1948இல் மேற்கத்திய அரசுகள் ஐ.நா. மூலமாக, பாலஸ்தீன மக்களோடு பேசாமலே அவர்களுடைய நிலப்பரப்பில் பெரும் பகுதிக்கு வேலி போட்டு அதுதான் புதிய இஸ்ரேல் என்று அறிவித்தன. ஐரோப்பாவில் வாழ முடியாமல் வெளியேற்றப்பட்ட யூத மக்கள் அங்கே குடியேற்றப்பட்டார்கள். அங்கே ஏற்கெனவே குடியிருந்த பாலஸ்தீன மக்கள் வேலிக்கு வெளியே தள்ளப்பட்டார்கள். 

உலகக் கட்டப் பஞ்சாயத்து!

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், அதுவரையில் இருந்த மொத்த நிலப்பரப்பில் 56 சதவீதம் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பாலஸ்தீனர்களின் மொத்த மக்கள் தொகை 13 லட்சம் – யூதர்களின் மக்கள்தொகையோ 6 லட்சம்தான். அதாவது மொத்த மக்கள்தொகையில் 33 சதவீதமாக இருந்தவர்களின் நாட்டிற்கென  56 சதவீத நிலப்பரப்பு ஒப்படைக்கப்பட்டது.

அப்போதே போர்களும் மூண்டன. சில அரேபிய நாடுகளுக்கும் அதில் பங்கிருந்தது என்றாலும், அந்த 56 சதவீத நிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்துகிற சண்டைகளை இஸ்ரேல் அப்போதிருந்தே நடத்திவருகிறது. அதனோடு இணைந்ததுதான் இப்போதைய காஸா முற்றுகை. இஸ்ரேலின் இந்தப் போர் வெறிக்கும், அதை  அமெரிக்க அரசு ஆதரிப்பதற்கும் வேறு இலக்குகளும் இருக்கின்றன.

“மத்திய கிழக்கு வரலாற்றில் மேலெழுந்த அரேபிய தேசிய எழுச்சிகளை அடையாளமின்றி ஒடுக்குவது, அந்த வட்டாரத்தின் பெட்ரேலிய வளத்தைக் கைப்பற்றுவது ஆகிய திட்டங்கள் மறைந்திருக்கின்றன. அத்துடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூவும், அவருடைய லிகுட்  கட்சியும் எதிர்கொண்டுள்ள  நெருக்கடியும் இதற்கொரு காரணம்,” என்கிறார் உலக அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் விஜய் பிரசாத். 


லிகுட் என்றால் ஹீப்ரு மொழியில் ஒருங்கிணைப்பு என்று பொருள். ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க முடியாத தோல்வியைத் திசைதிருப்ப, மக்களிடையே தேசிய உணர்வைக் கிளறிவிடுகிற உத்தி.  

இந்த நோக்கங்களையும் உத்திகளையும் தடுத்து முறியடிக்கிற, தடுக்கப்பட்ட ஊட்ட உணவுகளையும் உயிர்காப்பு மருந்துகளையும் காஸாவுக்குள் அனுப்ப வைக்கிற பெருவலிமை உலக சமுதாயத்தின் குரலுக்கு இருக்கிறது. அந்தக் குரலை எழுப்பத் தனது மனசாட்சியைத் திறக்குமா உலகம்?

[0]

விகடன் டிஜிட்டல் (ஜூலை 28)


Sunday, 27 July 2025

சோசலிசமும் செக்யூலரிசமும் அரசமைப்பு சாசனத்தின் உயிர்நாடி - ‘ஆறாத புண்கள்’ என்று அவற்றைச் சொல்லலாமா?




அ. குமரேசன்


“இந்திய அரசமைப்பு சாசனத்தின் முன்னுரையிலிருந்து ‘சமூகவுடைமைத்துவ’, ‘மதச்சார்பற்ற’ என்ற இரண்டு சொற்களையும் மறு ஆய்வு செய்கிற அல்லது நீக்குகிற திட்டமோ நோக்கமோ அரசாங்கத்திற்குத் தற்போது இல்லை.” இவ்வாறு நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழனன்று (ஜுலை 24)  சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.


சமாஜ்வாதி கட்சியின் ராம்ஜி லால் சர்மா, சாசன முன்னுரையிலிருந்து “சோசலிசம்”, “செக்யூலரிசம்” என்ற இரண்டு சொற்களையும் நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா என்று கேட்டிருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர்,  உச்சநீதிமன்றம் 2024 நவம்பரில் அளித்த தீர்ப்பில், அரசமைப்பு சாசனத்தில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரம் சாசனத்தின் முன்னுரை வரையில் விரிகிறது என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், 1976இல் செய்யப்பட்ட 42ஆவது சட்டத்திருத்தத்தை நீக்கக் கோரும் மனுக்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது என்று விளக்கமளித்தார்.


“இந்தியச் சூழலில் சமூகவுடைமைத்துவம் என்பது மக்கள் நல அரசு என்பதையே குறிக்கிறது, தனியார் துறை வளர்ச்சியை அது தடுக்கவில்லை என்றும், மதச்சார்பின்மை என்பது அரசமைப்பு சாசன அடிப்படைக் கட்டமைப்பின் உள்ளார்ந்த கூறு என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது,” என்று அமைச்சரின் பதிலில் கூறப்பட்டிருக்கிறது.


காரணம் இருக்கிறது


சமாஜ்வாதி எம்.பி. இவ்வாறு கேட்டதற்குக் காரணம் இல்லாமல் போகவில்லை. பாஜக தலைவர்களில் சிலரும், அவர்களது வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களும் அடிக்கடி, இந்த இரண்டு சொற்கள் மீதான தங்களுடைய அசூயையை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். கடந்த மாதம் கூட ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தரேயா ஹோசாபேல், “இந்த இரண்டு சொற்களும் பாபாசாஹேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனத்தின் முன்னுரையில் இல்லை. இன்றைய நிலைமைகளில் இந்தச் சொற்களின் பொருத்தப்பாடு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” என்று பேசினார். 


தத்தரேயா இப்படிப் பேசிய சில நாட்களில், அன்றைய (தற்போது பதவி விலகியுள்ள) குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், அவசரநிலை ஆட்சியின்போது சேர்க்கப்பட்ட இந்த இரண்டு சொற்களும்  ஆறாத புண்களாக இருக்கின்றன என்று பேசினார். சனாதன உணர்வுக்கு இந்தச் சொற்கள் ஒரு அவமானம் என்றும் அவர் கூறினார். 42வது சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான அஜய் பிரதாப் சிங். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி, வழக்குரைஞர்கள் விஷ்ணு சங்கர் ஜெயின், அஸ்வினி குமார் உபாத்யாய்,  டாக்டர் பல்ராம் சிங் உள்ளிட்டோரும் வழக்குத் தொடுத்திருந்தனர்.


அந்த வழக்குகள் மீதான தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு கூறியிருக்கிறது. முன்பு மூத்த பாஜக தலைவர்கள் பலர்  இந்தச் சொற்களை நீக்க வேண்டுமென்று நேரடியாகக் கூறாவிட்டாலும்,  இந்த சட்டத் திருத்தத்தால்  சாசனத்தின் புனிதம் குலைந்துவிட்டது என்ற தொனியில் பேசி வந்திருக்கிறார்கள்.


இதைச் சுட்டிக்காட்டிய சமாஜ்வாதி உறுப்பினர்,  “சில சமூக அமைப்புகளின் நிர்வாகிகளால் அப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாக்கப்படுகிறதா” என்றும் கேட்டிருந்தார். அதற்கு அமைச்சர் மேக்வால், "சில குழுக்கள் இந்தக் கருத்துகளை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிப்பதோ வாதாடுவதோ சாத்தியமே. அத்தகைய செயல்பாடுகள் இந்த விவகாரம் குறித்து ஒரு பொது விவாதத்தை உருவாக்கலாம், ஆனால் அவை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையோ, நடவடிக்கைகளையோ பிரதிபலிக்க வேண்டிய தேவையில்லை,” என்று பதிலளித்தார்.


வலதுசாரி நண்பர்களின் பதில்கள்


வலதுசாரி நண்பர்கள் சிலர் விவாதங்களின்போது இதே கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் எல்லோருக்கும் சம வாய்ப்புகளை நாடு உருவாக்க வேண்டும் என்ற  சமூகவுடைமைத்துவ லட்சியம் வேண்டாம் என்றால் வேறு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்? ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கட்டும் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா  என்று கேட்டிருக்கிறோம். அதே போல், மதச்சார்பின்மை என்ற சொல் வேண்டாம் என்றால், இன்று அனைத்து மக்களுக்குமான நாடாக இருக்கிற இந்தியா ஒரு  மதத்தை மட்டுமே அதிகாரப்பூர்வமானதாக ஏற்றுக்கொண்டதாக  இருக்க வேண்டும் என்று சொல்வதாகப் புரிந்துகொள்ளலாமா என்றும் கேட்டிருக்கிறோம்.


அவர்களிடமிருந்து இரண்டு விதமான பதில்கள் வந்திருக்கின்றன. “இது விதண்டாவாதம்,” என்பது ஒரு பதில். “இந்தச் சொற்கள் 42ஆவது திருத்தத்தின் மூலம் பிற்சேர்க்கையாகவே செருகப்பட்டன.” என்பது அடுத்த பதில். அப்படிச் சேர்த்ததில் என்ன தவறு என்று கேட்டால்,  “மூல சாசனத்திலேயே அந்த உட்பொருள்கள் இருக்கின்றன, ஆகவே இப்படிச் சேர்க்க வேண்டிய தேவையில்லை,” என்று
கூறுவார்கள். தேவையின்றி சேர்த்ததன் மூலம் சாசனத்தின் புனிதம் தாக்கப்பட்டிருக்கிறது என்பார்கள். கடவுளால் போதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மதங்களின் வழிமுறைகளிலேயே காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யப்படுகிறபோது மனிதர்களால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு சாசனத்தில் மாற்றம் செய்யக்கூடாதா?


இந்த விவாதத்திற்குள் செல்வதற்கு முன் வரலாற்றின் அந்தச் சட்டத் திருத்த அத்தியாயத்தைப்  பார்த்துவிடுவோம். சுதந்திர இந்திய நாட்டின் தன்மையை வகுத்துக் கொடுக்கிறது அரசமைப்பு சாசனம் (அரசியல் சட்டம்). நாட்டின் அரசு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், அதன் பொறுப்புகள் எவை, குடிமக்களின  கடமைகள் யாவை என்றெல்லாம், விடுதலைக்கு முன்பே 1946இல்  ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட அரசமைப்பு சாசன சபை விவாதித்தது. டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு சாசன முன்வரைவைத் தயாரித்தது. புதிய சுதந்திர நாட்டிற்கான அடையாளத்தை நிறுவும் பணிகளை ஒருங்கிணைத்ததிலும் இராப்பகலாக உழைத்துத் தொகுத்ததிலும், குழுவின் விவாதங்களில் இலக்குகளைக் காட்டியதிலும் அம்பேத்கர் அளப்பரிய பங்காற்றினார். ஆகவேதான் அம்பேத்கர் உருவாக்கிய சாசனம் என்று இன்றளவும் கூறப்படுகிறது.


மூல சாசனம்


மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களும் சாசன சபையில் இருந்தார்கள். முன்வரைவு ஆவணம் அன்றைய இடைக்கால அரசிடம் அளிக்கப்பட்டது. 1949 நவம்பர் 26இல் அரசமைப்பு சாசன சபை (அரசியல் நிர்ணய சபை) அதை அங்கீகரித்தது. 1950 ஜனவரி 26 அன்று சாசனம் நடைமுறைக்கு வந்தது. எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லாமல் இந்தியா தன்னை உயர் தன்னாளுமையுள்ள (இறையாண்மையுள்ள) ஒரு  ஜனநாயகக் குடியரசாக ஊன்றிக்கொண்டது.


மூல சாசனத்தின் முன்னுரையில், “இந்தியா உயர்தன்னாளுமையுள்ள ஜனநாயகக் குடியரசு” என்றுதான் இருந்தது. அதே வேளையில் முன்னுரையிலோ, தொடரும் சட்ட உரைகளிலோ எங்குமே இது குறிப்பிட்ட மதத்திற்கான நாடு என்றோ, மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றோ இல்லை.  ஒற்றை மதம் சார்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற கனவுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்போதிருந்தே அதை எதிர்த்து வந்தார்கள், அவர்களின் வழி வந்தோர் இப்போதும் எதிர்க்கிறார்கள்.


“அவர்களின்” மதத்திற்கு என்று நாடு இருக்கிறது, “இவர்களின்” மதத்திற்கு என்று நாடு இருக்கிறது, நம் மதத்திற்கு என்று நாடு வேண்டாமா” என்று பேசிப் பேசி ஒரு பகுதி மக்களின் மனங்களுக்குள் பிற மதத்தினருக்கும், அரசமைப்பு விழுமியத்திற்கும் எதிரான சிந்தனைகளைப் புகுத்தி வந்திருக்கிறார்கள்.


அவசர நிலையும் சட்டத் திருத்தமும்


1975 ஜூன் 25இல், சாசனத்தில் இருக்கும் ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி, அவசரநிலை ஆட்சியை அறிவித்தார் பிரதமர் இந்திராகாந்தி. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஏற்படும் நிலைமைகளில் பயன்படுத்த வேண்டிய 352ஆவது சட்ட உரையை, தனது ஆட்சிக்கு அச்சுறுத்தல் என்ற நிலைமையில் அவர் பயன்படுத்தினார். தேசிய அவசர நிலை ஆட்சியை அன்றைய குடியரசுத் தலைவர்  ஃபக்ருதீன் அலி அகமது  மூலம் அறிவிக்க வைத்தார்.


அவசரநிலை ஆட்சியின் அத்துமீறல்கள் ஒருபுறம் நடந்தேறிக்கொண்டிருக்க, இன்னொரு புறம், 1976 நவம்பர் 2 அன்று மக்களவையிலும், 11ஆம் தேதி மாநிலங்களவையிலும் (பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல்) 42ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 18இல் குடியரசுத் தலைவைர் ஒப்புதல் அளிக்க அந்தப் புதிய சட்டம் 1977 ஜனவரி 3இல் நடைமுறைக்கு வந்தது. (மார்ச் 21இல் அவசர நிலை ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. அதற்கு முன் மார்ச் 16 முதல் 20 வரை நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காந்திக்கும் அவருடைய கட்சி  வேட்பாளர்களுக்கும் ஜனநாயகப் பற்றுள்ள நாட்டு மக்கள் படுதோல்வி அளித்தார்கள். அந்த வரலாறு தனி.)


அந்த 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலமாகத்தான் சாசன முன்னுரையில் அந்த முதல் வாக்கியத்தில் ‘சோசலிச’, ‘மதச்சார்பற்ற’ என்ற இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டன. மூன்றாவதாக, “ஒருமைப்பாடு” என்ற சொல்லும் சேர்க்கப்பட்டது. முன்னுரையின் மற்றொரு வாசகம் அதற்கு முன் "தனிமனிதர் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் சகோதரத்துவம்" என இருந்தது. அந்தத் திருத்தத்தின் மூலம் "தனிமனிதர் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும் சகோதரத்துவம்," என அந்த வாக்கியம் மாறியது.


ஆக, அவசரநிலை ஆட்சியை இந்திரா காந்தி அறிவித்ததில் கலப்படமற்ற அதிகார மோகச் சுயநலம் இருந்தது. கருத்துச் சுதந்திரம் வெகுவாக முடக்கப்பட்டது. ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள் சிறையிடப்பட்டார்கள். இதெல்லாம் உண்மை. இவற்றை நியாயப்படுத்தும் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. உணவு வகைகள் உட்பட பல பொருள்களின் அளவு, தரம், விலை, அரசு அலுவலகப் பணி நேரம் ஆகியவற்றில் கறாரான கட்டுப்பாடுகள் மக்கள் அதுவரையில் அனுபவித்திராத வகையில் செயல்படுத்தப்பட்டன. இதுவும் உண்மை.


குடிமக்களின் நம்பிக்கை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அதே வேளையில் நாடும் அரசும் மதம் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள், கல்வி–மருத்துவம் உள்ளிட்ட மக்கள் நலச் செயல்பாடுகளை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை உயர்த்திப் பிடித்தவர்கள் சாசனத்தில் இந்தச் சொற்கள் சேர்க்கப்பட்டதை வரவேற்றார்கள். சர்வாதிகாரத்திற்கு உறுதியான எதிர்ப்பையும், இப்படிப்பட்ட சில மாற்றங்களுக்கு ஆதரவையும் வெளிப்படுத்தினார்கள்.


மதங்களின் சுதந்திரம்


விடுதலை பெற்ற நாட்டின் கால்களில் மத விலங்கு மாட்ட  எண்ணி, அது நடக்காமல் போன ஏமாற்றத்தில் இருந்தவர்கள் இவ்விரு சொற்கள்  சேர்க்கப்பட்டதை ஏற்கவியலாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், “மதச்சார்பு அரசின் ஆதரவாளர்கள் மதச்சார்பின்மையின் கீழ்தான் மதங்கள் சுதந்திரமாகவும் தன்னாளுமையோடும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்,” என்கிறார் கல்வியாளரும் அரசமைப்பு சாசன வல்லுநருமான ஃபைசான் முஸ்தஃபா. ‘(சாசனம் நடைமுறைக்கு வந்த) முதல் நாளிலிருந்தே உள்ளுறைவானதாக இருந்து வந்த மதச்சார்பின்மை 1976இல் வெளிப்படையானதாக மாறியது’ என்ற கட்டுரையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது கச்சிதமாக இருக்கிறது (தி ஹிண்டு, 14 ஜூலை). 


“செக்யூலரிசம்” என்ற சொல் இந்தியக் கள நிலைமைகளின் காரணமாக “மதச்சார்பின்மை” என்று பொருள்கொள்ளப்படுகிறது. ஆயினும் அது மதத்தை மட்டுமே குறிப்பதல்ல. பல்வேறு நாடுகளின் அவர்களுடைய சமுதாய நிலைமைகளுக்கு ஏற்ப இந்தச் சொல் கையாளப்படுகிறது. பல நாடுகளில் இந்தச் சொல்லின் பொருள் இனச்சார்பின்மை. நம் நாட்டில் சாதிச்சார்பின்மை, மொழிச்சார்பின்மை என்றும் ஆக்கப்பூர்வமாக விரிவுபடுத்தலாம்.


சமூகவுடைமைத்துவமும் மதச்சார்பின்மையும் அரசமைப்பு சாசனத்தின் உயிர்நாடி என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி. “அரசமைப்பு சாசனத்திலிருந்து சோசலிசம், மதச்சார்பின்மை என்ற சொற்களை  நீக்க வலியுறுத்துவது ஒரு ஒடுக்குமுறைப் பெரும்பான்மைவாத அரசை நிறுவும் நோக்கத்துடனான திட்டமிட்ட முயற்சியே. இந்திய அரசமைப்பு சாசனம் வெறும் சட்ட ஆவணமல்ல. காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்ட நெருப்பில் புடம்போடப்பட்ட தேசத்தின் லட்சியங்களையும், எதிர்பார்ப்புகளையும் உருக்கொண்டதாகும். இதன் மிக அடிப்படையான கோட்பாடுகளில் சமூகவுடைமையும் மதச்சார்பின்மையும் இருக்கின்றன. இந்தக் கொள்கைகள் முன்னுரையோடு முடங்கிவிடவில்லை,  அரசுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள், அடிப்படைக் கடமைகள், அடிப்படை உரிமைகள் என அதன் உள்ளடக்கம் முழுவதிலும் பின்னிப் பிணைந்துள்ளன," என்று அவர் எடுத்துரைக்கிறார் (தி ஹிண்டு, 4 ஜூலை).


பலநாடுகளிலும் இதே பாதை


இவ்வாறு போராட்டத்தில் புடம்போட்டு மத/இன/மொழிச் சார்பின்மையையும், மக்கள் நல வாழ்வையும் தங்களின் லட்சியங்களாகத் தங்களின் அரசமைப்பு சாசனங்களில் பொறித்துள்ள நாடுகள்  பல. உலக அரங்கில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், பிரேசில், சீனா, வியட்நாம், கியூபா, கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு,  கொரிய குடியரசு உள்ளிட்ட நாடுகள் இந்த அணியில் சேர்கின்றன. நேபாளம் வெகுகாலமாக இந்து மத நாடாக இருந்தது. 2007ல் மதச்சார்பற்ற அரசாக அறிவிக்கப்பட்டது.


இத்தகைய பல நாடுகளில் ஆட்சியாளர்கள் முழு நேர்மையோடு மத/இனச் சார்பின்மையைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால் அடிப்படையான அரசமைப்பு சாசன ஏற்பாடாக இருப்பதால், அவர்கள் ஒருவேளை சட்டத்திற்குப் புறம்பாக மத/இனச் சார்போடு நடவடிக்கைகள் எடுப்பார்களானால், அதை எதிர்த்து மக்கள் களங்களிலும் நீதிமன்றங்களிலும் போராட முடியும், தடுத்து நிறுத்த முடியும்.


நம் நாட்டில் மதச்சார்பின்மை என்றால் எல்லா மதங்களுக்கும் இடமளிப்பது என்று தவறாகச் சித்தரித்து, அரசு அலுவலகங்களுக்கு உள்ளேயும் வளாகங்களிலும் அனைத்து மதங்களின் வழிபாட்டு அடையாளங்கள் இருக்க அனுமதிக்கப்பட்டது. மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளும் மதச் சார்புகளும் மதிக்கப்பட வேண்டியவை. ஆனால் அரசு என்ற அமைப்பின் எந்த அங்கத்திலும் இப்படிப்பட்ட சமரசங்கள் கூடாது என்ற கூர்மையான விமர்சனங்களும் எழுந்தன.


அத்தகைய போராட்டச் சுதந்திரத்தை, உரிமையை இந்திய அரசமைப்பு சாசனத்தின் முன்னுரை உறுதிப்படுத்துகிறது. எத்தனை முற்போக்கான முன்னுரை! அதில் உள்ள இந்த இரண்டு சொற்களையும் நீக்குகிற திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், அமைச்சரின் பதிலில் “தற்போது” இல்லை என்று இருப்பது, வேறு   எப்போதாவது அந்தத் திட்டம் வருமோ என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. சமூக நல்வாழ்வுக்கும் மதச்சார்பின்மைக்கும் நிற்கிற இயக்கங்கள் மட்டுமல்லாமல் மக்களும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கவனமாக இருக்க வேண்டும்.

[0]

-விகடன் டிஜிட்டல் பதிப்பில் (ஜூலை 26) எனது கட்டுரை


Sunday, 20 July 2025

கோவில் நிதியில் கல்விக் கூடங்கள் கட்டினால் கடவுள் என்ன சொல்லப் போகிறார்?

 





விகடன் டிஜிட்டல் பதிப்பில் எனது கட்டுரை - வலைப்பூ பதிவாக


நாக்கில் சனி என்பார்கள். அதை நம்பாதவர்கள் கூட அவருடைய அன்றைய பேச்சை அப்படித்தான் சித்தரித்திருப்பார்கள். “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்று தேர்தல் வியூக சுற்றுப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூலை 8 அன்று கோவையில் திமுக ஆட்சியைத் தாக்கிப் பேசியபோது, “கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன் அரசாங்கத்திடம் பணம் இல்லையா,” என்று கேள்வி எழுப்பினார்.


கடந்த காலத்தில் அதிமுக  ஆட்சியிலும் அறநிநிலையத் துறை நிதியில் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்த அவரது கட்சிக்காரர்களே கூட, ஆட்சியைத் தாக்குவதற்கு வேறு பிரச்சினை கிடைக்கவில்லையா என்று யோசித்திருப்பார்கள். மற்றவர்கள் விடுவார்களா? அவர் முதலமைச்சராக இருந்தபோது கோவில் நிதியில் கட்டப்பட்ட பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியை அவரே திறந்து வைத்ததற்கான கல்வெட்டைப் பகிர்ந்து, இந்தக் கேள்வியை அவர் அப்போது எழுப்பினாரா என்று கேட்டார்கள். 


அறநிலையத் துறை சட்டத்தில் கோயில் நிதியில் கல்விக்கூடங்கள் கட்ட வழிசெய்யும் விதிகள் இருப்பதை துறை அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டினார்  கோவில்களை அரசாங்கத்திடமிருந்து மீட்டு முன்போல்  தனியார் தர்மகர்த்தா நிர்வாகங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று பாஜக–வினர் உள்ளிட்ட ஒரு பகுதியினர் ஏற்கெனவே வலியுறுத்தி வருகின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டதன் உடனடித் தாக்கமாக எடப்பாடியார் இப்படி எதிரொலிக்கிறார் என்ற விமர்சனங்களும்  சுழலத் தொடங்கின. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இப்போது அவர் பாஜக–வின் ஒரிஜினல் வாய்ஸ்சாக மாறிவிட்டார்,” என்றார்.


தனது பேச்சு பூமராங்காகத் தன் மீதே பாய்வதைக் கண்ட எடப்பாடியார் பின்னர் விழுப்புரத்தில் பேசியபோது, “கல்வி அவசியம்தான், ஆனால் கோயில் நிதியில் கட்டப்படும் கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு முழுமையான வசதிகள் கிடைக்க வாய்ப்பில்லை,” என்ற பொருளிலேயே அப்படிப் பேசியதாகத் தெரிவித்தார்.  இப்போது பத்திரிகை பேட்டியிலும் அதைக் கூறியிருக்கிறார் (‘டைம்ஸ் ஆஃப்  இந்தியா’ – ஜூலை 18)


அறநிலையத் துறை நிதியை இதற்குப் பயன்படுத்தக்கூடாது என்ற அடிப்படைக் கருத்தை அவர் மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை. அவருடைய பயணத்தில் ஆங்காங்கே சேர்ந்துகொள்ளும் பாஜக தலைவர்கள், கோவில்களை அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்பது பற்றிப் பேசினால் அதற்கு அவர் மறுமொழி அளிப்பாரா என்றும் ஊகிக்க முடியவில்லை.

இரு கோணங்கள்

கோவில் நிதியில் பள்ளி, கல்லூரிகளைக் கட்டுவதும் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பை விரிவுபடுத்துவதும் கடவுள் மனங்குளிரச் செய்யும்  தொண்டு என்ற கோணத்திலும்,  இல்லை, கோவில் சூழல்களை மேம்படுத்துவதற்கு மட்டுமே அந்த நிதியைப் பயன்படுத்துவதுதான் ஆன்மீக சேவை என்ற கோணத்திலும் விவாதங்கள் தொடர்கின்றன. பொதுவாகவே மதம் சார்ந்த அமைப்புகள் கல்வி நிறுவனங்களை நடத்தத்தான் வேண்டுமா? நாட்டின் மற்ற மாநிலங்களிலும் உலகின் பிற நாடுகளிலும் என்ன நிலைமை?


தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கீழ் 5 கலை–அறிவியல் கல்லூரிகள், 15 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 54  கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. கிறிஸ்துவ நிறுவனங்களும் முஸ்லிம் அமைப்புகளும் நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாகக் கல்விச் சாலைகளை நடத்தி வருகின்றன. 


18ஆம் நூற்றாண்டு இறுதியில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவ ஊழியர்கள்  (மிஷனரிகள்) வங்காளத்தின் செராம்பூர் நகரத்தில்  கல்விக்கூடங்களைத் தொடங்கின. அடுத்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில்,  திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் பகுதிகளில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கினர். 1852 வாக்கில் தமிழ்நாட்டில் மட்டுமே மிஷனரிகளின் 1,885 கல்வி நிலையங்களில் 38,000 மாணவர்கள் பயின்றார்கள்.  சமூகப் பின்னணியிலும் பொருளாதார அடிப்படையிலும் ஆகப் பெரும்பாலோருக்குக் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த சமுதாயத்தில் இது எப்பேர்ப்பட்ட வளர்ச்சிப் போக்கெனப் புரிந்துகொள்ளலாம். பிற்காலத்தில் கிறிஸ்துவ அமைப்புகளின் கல்விக் கூடங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட்டன.

பெற்றோர் மகிழ்வு

மதம் மாற்றுவதற்காகத்தான் கல்வி வலை விரிக்கப்படுகிறது என்ற விமர்சனங்கள் அப்போதே எழுந்தன. மக்கள் அதைப் புறந்தள்ளிவிட்டுப் பிள்ளைகளைத் தயங்காமல் அனுப்பினார்கள். ஒரு பகுதியினர் தங்கள் கடவுள்களை மாற்றிக்கொண்டார்கள் என்றாலும் (அதற்கு வேறு காரணங்களும் இருந்தன), ஆகப் பெரும்பாலோர் தங்களுடைய தெய்வங்களின் கருணையுடனேயே வாரிசுகள் மிஷனரி கல்வி நிலையங்களுக்குப் போய், படித்தவர்களாகத் திரும்புவதைக் கண்டு  களிப்பும் பெருமிதமும் கொண்டார்கள்.


முஸ்லிம் சமூகத்தினர் மதரஸா (பள்ளி) அமைப்புகளை ஏற்படுத்தி கல்வி வழங்குகின்றனர். தொடக்கத்தில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி அளிப்பதுதான் மதரஸாக்களின் நோக்கமாக இருந்தது. அக்பர் ஆணைகளைத் தொடர்ந்து முகலாயர் ஆட்சியில் மதரஸாக்களில் மற்றவர்களுக்குமான, கணிதம், வானவியல், மருத்துவம் உள்ளிட்ட பொதுப் பாடங்களும் கற்பிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்தபின் மதரஸாக்கள் மறுபடி மதக் கல்விக்கே தடம் புரண்டன. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பொதுக்கல்வி வழங்குவதைத் தொடர்ந்தன. 1857இல் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்த பிரிட்டிஷ அதிகாரி அரசுக்கு அளித்த அறிக்கையில், முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் எண்ணற்ற இந்துக்கள் கல்வி பயில்கின்றனர் என்று குறிப்பிட்டதுடன், வியப்பும் தெரிவித்திருந்தாராம்.


மதரஸாக்களில் முறையான பாடத்திட்டம் இல்லை என்றும், அரசு நிதியுதவியைப் பெறுவதற்கான தகுதியோடு செயல்படவில்லை என்றும் தேசிய குழந்தைகள் ஆணையம் விமர்சித்திருக்கிறது. மதரஸா அல்லாத பல பள்ளிகளையும் கல்லூரிகளையும்,, இத்தகைய விமர்சனங்களுக்குள் சிக்காமல், கல்வி உரிமைச் சட்டம் உள்பட பொதுப்பாடத் திட்டத்துக்கு இணக்கமாக, அனைத்துப் பிரிவு மாணவர்களுக்காகவும்  முஸ்லிம் சமூகத்தினர் நடத்தி வருகின்றனர்.


சீக்கியம், புத்தம், சமணம் ஆகிய சமய அமைப்புகளால் இயக்கப்படும் கல்வி நிறுவனங்களும் உள்ளன.  சமயம் சார்ந்த வகுப்புகளை மட்டும் நடத்துகிற, அனைவருக்குமான பொதுக் கல்வியை வழங்குகிற இரு வகையான பள்ளிகளும் கல்லூரிகளும் அந்த அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. 

நீதிமன்ற வழிகாட்டல்

நெல்லை சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், சிறுபான்மை சமயங்கள் சார்ந்த, அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணி நியமனங்களும் மாணவர் சேர்க்கைகளும் மத அடிப்படையில் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2023 அக்டோபர் 2இல்  தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு முன்னோடியாக, மதரஸா சேவைகள் சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமும் 2020 ஜனவரி 7இல் அளித்த தீர்ப்பில் இதே வழிகாட்டலை வகுத்திருக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனத்தின் 28ஆவது சட்ட உரை, அரசு நிதியுதவியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மத போதனைகள் கூடாது என்று கறார்ப்படுத்தியுள்ளது.  


இவை கவனத்தில் கொள்ளத்தக்கவை. அதாவது, அரசாங்கத்தின் கல்வித் துறை, குடிமக்கள் சமுதாயம், சம்பந்தப்பட்ட சிறுபான்மை நிறுவனங்கள் மூன்றுமே கவனத்தில் கொள்ள  வேண்டியவை.


இத்தோடு இணைந்ததாக, மற்றவர்களின் வழிபாட்டுத் தலங்கள் அந்தந்த சமய அமைப்புகளால்  நிர்வகிக்கப்படுகிற நிலையில், இந்துக் கோவில்களின் மேலாண்மையை இந்து அறநிலையத் துறை மூலமாக தமிழ்நாடு அரசு நடத்துவது பற்றிய கேள்வி முன்னுக்கு வருகிறது. இது இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு என்ற மதம் தோய்ந்த அரசியல் வாதங்களுக்கும் மத அடிப்படையில் மக்களைத் திரட்டுவதற்கும் அந்தக் கேள்வி பயன்படுத்தப்படுகிறது.

எப்போது, ஏன் வந்தது?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், இந்துக் கோவில்களின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கன இந்தத் துறையை ஏற்படுத்தியது திமுக அரசு அல்ல. 1967இல் அந்தக் கட்சி ஆட்சிக் வருவதற்கும் முன்பே இந்தத் துறை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நாடு விடுதலையடைவதற்கு முன்பே, பிரிட்டிஷ் ஆட்சியிலேயே இந்த ஏற்பாடு வந்துவிட்டது.


கோவில் சொத்துகளிலும் நிர்வாகங்களிலும் நிறைய முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. பக்தியோடு கோவில்களுக்குச் சென்ற இந்து மக்களிடமிருந்தே அந்தப் புகார்கள் சென்றன. பரம்பரை தர்மகர்த்தாக்களும் மடாதிபதிகளும் வாரிசுமுறை அர்ச்சகர்களுமே கோவில்களை நிர்வகித்து வந்தனர். அந்த நிலையில் பக்தர்களின் புகார்கள் என்ன கதியாகியிருக்கும் என்று விளக்க வேண்டியதில்லை.


1817ஆம் ஆண்டில், அப்போது இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனி  “சமய அறக்கட்டளைகள் சட்டம்” கொண்டுவந்தது. முதல் சுதந்திர எழுச்சி என்று இந்தியர்களாலும், சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் கூறப்பட்ட 1857 கிளர்ச்சியைத் தொடர்ந்து 1858இல் பிரிட்டன் அரசு, ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவைத் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அதன் பிறகும் சமய அறக்கட்டளைகள் சட்டம் தொடர்ந்தது. 1925இல் பனகல் அரசர் தலைமையில், கோவில்களின் நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக “இந்து அறநிலைய வாரியம்” ஏற்படுத்தப்பட்டது.

கர்மவீரர் ஆட்சியில்

நாட்டின் விடுதலைக்குப் பின் 1951இல் அந்த வாரியம் கலைக்கப்பட்டு, ‘மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம்’ இயற்றப்பட்டது.  1959இல் மாநில முதலமைச்சராக இருந்த காமராஜர், “மெட்ராஸ் இந்து சமய அறநிலையத் துறை சட்டம்” என்று கொண்டுவந்தார். அப்போது துறையின்  அமைச்சராக இருந்தவர் பக்தவச்சலம் –பின்னாள் முதலமைச்சர். 1960ஆம் ஆண்டிலிருந்து சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. 1967இல் முதலமைச்சர் அண்ணாதுரை முன்மொழிந்த தீர்மானம், 1969இல் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று ஆனது. அதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகங்களுக்கான சட்டமும் “தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம்” என்று மாறியது.


இன்று இந்தத் துறையின் பொறுப்பில் 46,000+  கோவில்களும், 4.78 லட்சம் ஏக்கர் பரப்பு நிலங்களும் உள்ளன. தொடக்கத்தில் பார்த்தது போல் பள்ளிகளும் கல்லூரிகளுமாக 54 கல்வி நிறுவனங்கள் இத்துறையின் பொறுப்பில் இயங்குகின்றன.  ஆம், அரசியல் முடிவுகள், மத தலையீடுகள், கல்வி உரிமைகள் ஆகிய மூன்று கூறுகளுடனும் தொடர்புள்ள வரலாறுதான் இது.

பிற மாநிலங்களில்

பிற மாநிலங்களில் இது போல் இருக்கிறதா? கேரளத்தில் தேவஸ்வம் வாரியம் இருக்கிறது. அதன் ஆலயங்களில் நியமனங்களை அரசாங்கம்தான் செய்கிறது. கர்நாடகத்தில் முஸ்ராய் துறை என்ற அரசு நிர்வாகத்தில் கோவில்கள் செயல்படுகின்றன. ஆந்திராவில் அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் மாநில அரசால் கண்காணிக்கப்படுகின்றன. மஹாராஷ்டிராவில் அறநிலைய ஆணையம் கோவில்களைக் கண்காணிக்கிறது. தமிழ்நாட்டைப் போலவே இந்த மாநிலங்களில் அரசுக் கண்காணிப்பிலோ கட்டுப்பாட்டிலோ வராத கோவில்களும் இருக்கின்றன.



அரசுத் துறையின் பொறுப்பில் இருப்பதால்தான் தமிழகத்திலும் கேரளத்திலும் ஆலயங்களில் (பயிற்சி பெற்ற) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடிந்தது. தர்மகர்த்தாக்களாகிய அறங்காவலர்களின் நிர்வாகத்திலேயே இருக்கிற கோவில்களின் கருவறைகளுக்குள் மற்ற சாதியினரை நுழைய விடுவதில்லை, அவர்கள் அர்ச்சகராவதற்கான சட்டத்தையும் நுழைய விடுவதில்லை. அறநிலையைத் துறையை மூடிவிடத் துடிப்பவர்கள்  அனைத்துச் சாதி அர்ச்சகர் சட்டம் நீர்த்துப்போக விரும்புகிறவர்களாகவும் இருப்பது தற்செயலானதல்ல. 



இப்படிப்பட்ட துறைகளும் அவற்றின் கண்காணிப்பும் தலையீடும் இல்லாத மாநிலங்களில், ஒதுக்கப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர் வருகை தந்து வழிபாடு முடித்துச் சென்ற பின் அந்த இடம் கழுவிவிடப்பட்டுத் தீட்டுக் கழிக்கப்பட்ட செய்திகள் அவ்வப்போது வருகின்றன. வழிபட்டவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவரானாலும், தீட்டு தீட்டுதான்.



அறநிலையக் கோவில்களில் இப்படி நடக்க முடியுமா? தப்பித் தவறி யாராவது அப்படி அத்துமீறினால் சட்டம் பாயாமல் இருக்குமா?



இவையன்றி, கோவில்களின் அவ்வளவு பரந்த நிலங்களையும், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயையும் கையாள்வதில் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுமானால். அறநிலையத் துறையால் உடனே தலையிட முடியும் – அவ்வாறு தலையிட்டாக வேண்டிய கட்டாயத்தை மக்களால் ஏற்படுத்த முடியும். தர்மகர்த்தாக்கள்–அர்ச்சகர்கள்–ஊர்ப்பெரிய மனிதர்கள் கூட்டு என்ற தனியார் ஆளுகையில் உள்ள ஆலயங்களானால்  இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை எங்கே போய் சொல்வது?



முஸ்லிம்களின் வக்ஃப் வாரியங்களை மாநில அரசுதான் அமைக்கிறது. அவற்றின் உறுப்பினர்களை அரசுதான் நியமிக்கிறது. மத்திய வக்ஃப் சபையின் மூலம் வாரியங்களுக்கு நிதியும் வழங்கப்படுகிறது. ஆனால், பள்ளிவாசல்களின் தொழுகை நடைமுறைகளில், போதனைகளில் அரசு தலையிடாது. கிறிஸ்துவர்களின் தேவாலயங்களும் அவற்றின் சொத்துகளும் தனியார் அமைப்புகளின் கீழ்தான் இருக்கின்றன என்பது உண்மையே. பேராயர்கள், பாதிரிகள் நியமனங்களிலோ,ஜெபக் கூட்டங்களிலோ அரசு தலையிடுவதில்லை.


உறுதியளிக்கத் தயாரா?


அவற்றைப் போல இந்துக் கோவில்களும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்போர், முதலில் குறிப்பிட்ட அந்த சொத்து முறைகேடுகள், சமூக ஒதுக்கல்கள் முதலியவை நடக்காது என்று உறுதியளிக்கத் தயாரா?  பிற மதங்களைப் போலவே, அறநிலையத்துறை என இருக்கக்கூடாது என்போர், அந்த மத அமைப்புகள் ஊரெங்கும் ஏற்படுத்திய அனைவருக்குமான கல்வி நிறுவனங்களைப் போல இந்து சமய அமைபபுகளும ஏற்படுத்த வலியுறுத்துவார்களா? அப்படி வலியுறத்தினால் கல்வித் தெய்வமாக அவர்கள் வணங்கும் சரஸ்வதி மனம் கனியும்.


கடந்த காலங்களில், சிறுபான்மை மத நிறுவனங்களின் பள்ளிகளையும் கல்லூரிகளையும் விமர்சித்தபோது, “உங்கள் கோவில்களின் கோடிக்கணக்கான வருமானத்திலிருந்து அதே போல் எல்லா ஊர்களிலும் உருவாக்கினால் கல்விக்கூடங்களைத் தேடிக் குழந்தைகளும் வளர்ந்த மாணவர்களும் ஊர்  எல்லைகளைத் தாண்டும் நிலைமை வெகுவாகக் குறையுமே,” என்று கேட்கப்பட்டதுண்டு. பதில் வந்தததில்லை.



புகழ்பெற்ற பெரிய கோவில்களுக்குப் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள், வயல்களின் பயிர் விளைச்சல் வருவாய்கள், கட்டடங்களுக்கான வாடகை வசூல்கள் மூலம் பெருந்தொகை கிடைப்பது எல்லோருக்கும் தெரியும். அந்தத் தொகையிலிருந்து ஒரு பகுதி, சிறிய கோவில்களின் விளக்கேற்றுதல், பூசைகள் போன்ற நோக்கங்களுக்குச் செல்கிறது. எஞ்சிய பெரும்பகுதியில் கல்விக் கோவில்களைக் கட்டினால், எடப்பாடியார் சமாளிப்பாகச் சொன்னது போல, நிதியிழப்பு எற்படாது. அந்தப் பள்ளி–கல்லூரிகளின் மேம்பாட்டுக்காகவும், உரிய வசதிகளை உறுதிப்படுத்துவதற்காகவும், நவீன தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் செலவிட்டால், எதிர்காலத் தலைமுறைகள் கல்வி வளத்தோடு வளர்வார்களே!  ஆம், அது வீண் செலவல்ல, தலைமுறைகளுக்கான முதலீடு. அந்தந்தக் கோவில்களின் நாயகக் கடவுளர்களே கூட, தங்கள் பெயர்களில் அந்த முதலீடு செய்யப்படுவதை மெச்சி மெய்யான பக்தியென்று அருள்பாலிக்க மாட்டார்களா என்ன?


மற்ற நாடுகளில் இப்படி இல்லையே என்றும் கேட்கலாம்தான். ஏன், எப்போதும் மற்ற நாடுகளைத்தான் பின்பற்ற வேண்டுமா? நவீன இந்தியாவின் பெருமையாக இது மற்ற நாடுகளால் பின்பற்றப்படும் முன்னுதாரணப் பண்பாடாகப் பரிமளிக்கட்டுமே!