Wednesday, 30 July 2025

கட்டை விரல்

 


 



 

லூன் கண்ணாடிக் கதவைத் திறந்து வெளியே வந்து சிறிது நேரம் காத்திருந்தேன். உயரமான மேடையில் இருந்த வாசலிலிருந்து நான்கு படிகள் கீழே இறங்க வேண்டும். அகலமான தெருவில் வண்டிகள் இப்படியும் அப்படியுமாகப் போய்க்கொண்டிருந்தன. இடைவெளி கிடைத்ததும் எதிர்ப்பக்கம் போக நினைத்தேன். அந்தப் பக்கத்தில் நான்கு கடைகளுக்கு முன்னால் இருக்கும் காலியிடத்தில்தான் என்னுடைய பைக்கை நிறுத்தியிருந்தேன்.

 

அந்தப் பக்கத்தில் இடதுபுறத்திலிருந்து வலதுமுனை நோக்கி நடந்துகொண்டிருந்த கறுப்பு – பச்சை கட்டம் போட்ட ஷர்ட், வெள்ளைப் பேண்ட்  அணிந்திருந்த நடுத்தர வயதுக்காரர் சட்டென்று நின்றார். கொஞ்சம் குனிந்து சில நொடிகள் தொடைகளில் கைகளை ஊன்றிக்கொண்டார்.

 

பிறகு நிமிர்ந்தவர், பின்னாலிருந்து வந்துகொண்டிருந்த டூ–வீலர்களையே நோக்கினார். பின் சீட்டில் யாரும் இல்லாமல் ஒற்றை ஆளாக வந்தவரின் முன்பாக ஒரு கையை நீட்டிக் கட்டை விரலைக் காட்டினார். இன்னொரு கையால் மெயின் ரோடைக் காட்டினார்.

 

அந்த பைக்  வேகத்தைக் குறைக்காமல் விரைந்தது. முயற்சியைக் கைவிடாதவராக அடுத்தடுத்த வண்டிகளைக்  கவனித்தார். பொறுமையாக நிற்பதன் பலனை அடிக்கடி அனுபவித்திருப்பவர் என்று தெரிந்தது.

 

சில  வண்டிகள் ஓடிக் கடந்த பிறகு மற்றொரு வண்டி பின் சீட் காலியாக வந்தது. அது ஒரு ஸ்கூட்டி. ஹெல்மெட் தலைக்கு நேராகக் கட்டை விரலை உயர்த்தி, சாலையைக் காட்டினார். அதுவும் நிற்கவில்லை, ஆனால் வண்டியோட்டி ‘சாரி’ என்பது போலத் தலையை ஆட்டியபடி சென்றார்.

 

அதற்கடுத்து சிங்கிள் ரைடருடன் வந்ததும் ஒரு ஸ்கூட்டிதான். இவர் கட்டை விரல் காட்டாமல் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு நின்றார். எல்லா ஆண்களையும் போல பெண்களிடம் லிஃப்ட் கேட்பதில்லை என்ற யாரும் விதிக்காத கட்டுப்பாடு.

 

மூன்று நான்கு வண்டிகள் கடந்தபின் வந்த சிங்கிள் பைக் ரைடருக்குக் கட்டை விரலால் கோரிக்கை விடுத்தார். அவர்  மீது இடித்துவிடாதபடி வண்டியைக் கொஞ்சம் வளைத்து  ஒதுங்கி நேராகப் போனார் பைக்கர்.

 

இப்படியாகச் சில வண்டிகள் கடந்ததும், எனக்கு வேண்டிய இடைவெளி கிடைத்தது. வேகமாக இறங்கி நடந்து எதிர்ப்புறம் போனேன். பைக் அருகில் போய் நின்று நிமிர்த்திக்கொண்டு வலது காலைப் பின்னால் தூக்கி வீசி சீட்டில் உட்கார்ந்தேன். ஸ்டார்ட் செய்து மெதுவான வேகத்தில் நேராக வந்தேன். எனக்கு அவர் கட்டை விரல் காட்டவில்லை. அவரருகில் வண்டியை நிறுத்தினேன். “வாங்க, உங்களை டிராப் பண்றேன்.”

 

“பரவாயில்லை… நான் வேற வண்டி பார்த்துக்கிடுறேன். நீங்க போங்க மேடம்.”

 

இப்போதும் இப்படி வித்தியாசம் பார்க்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன். ஆனாலும் என்னையும் மேடம் என்று சொன்னதில் ஒரு திருப்தியோடு அந்த யூனி செக்ஸ் சலூன் பக்கம் பார்த்தபடி வேகம் எடுத்தேன்.

[0]

-குமுதம் இதழில் (ஜூலை 30) வந்துள்ள எனது சிறுகதை


 

No comments: