Sunday, 13 July 2025

`வடிகட்டப்படும் வாக்காளர்கள்' - இன்று பீகார்... நாளை தமிழ்நாடு?


 


இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்பதைத்         தாண்டி, நடைமுறைக் காரணங்களால் பட்டியலில்                             இடம்பெறாதவர்கள் நாளை இந்த நாட்டின் குடிமக்களே அல்ல என்று ஒதுக்கப்படும் நிலையும் வருமோ என்ற அச்சம் பலரையும் கவ்வியிருக்கிறது.

 பீகாரிலிருந்து வந்துகொண்டிருக்கும் செய்தி, ஜனநாயகத்தை    நேசிக்கும் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைக்                    கொடுத்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில், அங்கு வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்வதற்கு ‘சிறப்பு தீவிரத் திருத்தம்’ (Special Intensive Revision) மேற்கொள்ளப்போவதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்புதான் அதிர்ச்சிக்கு காரணம். பீகாரிலுள்ள எட்டு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சி நடைபெறுவதாக பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டுகிறார்

ந்திய நாட்டின் குடிமக்கள் தங்களின் அடிப்படை அரசியல் கடமையாக, தேர்தல்களில் பங்கேற்று வாக்களிக்கிறார்கள். சராசரியாக 65 - 70 சதவிகித வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்துவிடுகிறார்கள். இது, ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் பதிவாகும் மரியாதைக்குரிய வாக்கு சதவிகிதம். அந்த மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மக்களை, ‘இனிமேல் நீங்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது’ என்று தடுத்தால் எப்படி இருக்கும்? அதுவும், நீங்கள் இந்த நாட்டுக்காரர்தானா என்பது சந்தேகமாக இருக்கிறது... ஆகவே, வாக்குரிமை இல்லை என்று அறிவித்தால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது பீகாரில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள், முன்னாள் தேர்தல் ஆணைய அதிகாரிகள், சமூக அக்கறையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று பல தரப்பினரிடமிருந்து ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தம் செய்ய கடந்த ஜூன் 24-ல் உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், ‘பட்டியலின் துல்லியத் தன்மையைப் பெருக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை’ என்று விளக்கம் அளிக்கிறது. ஆனால், தேர்தல் நெருங்கும் சூழலில், இத்தகைய விரிவான திருத்தப் பணிக்கு ஆணையிட்டிருப்பது ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம். இந்த நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்து முன்னாள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், திருத்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்திருக்கிறது என்றாலும், “இந்த நடவடிக்கையில் பிரச்னை இல்லை... ஆனால், எந்த நேரத்தில் இது செய்யப்படுகிறது என்பது பிரச்னைதான். இதற்கு என்ன தேவை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

மேலும், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த ஆண்டில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரியில்தான் நிறைவடைந்தது. ஐந்தே மாதங்களில் அந்தப் பணி சரியாக நடைபெறவில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்தது ஏன், முதல் அடியிலிருந்து ஆரம்பிக்கும் புதிய முழுத் திருத்தத்திற்கு ஆணையிட்டது ஏன், இன்று பீகாரில் ஒரு பரிசோதனை முயற்சியாகத் தொடங்கி, நாளை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் வேலை இதுவல்ல!

’உண்மையான வாக்காளர்களையும், முறையான தேர்தலையும் உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை தேவை’ என்று பா.ஜ.க மட்டுமே கூறுகிறது. பலருக்கும் இந்தியக் குடியுரிமையை மறுக்க வழிவகை செய்வதற்கான சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க வரவேற்றிருப்பதாலேயே ஆணைய நடவடிக்கையின் நோக்கம் குறித்த சந்தேகம் வலுப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 'வாக்குரிமை உள்ளவர்கள் தடையின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவது மட்டுமே ஆணையத்தின் வேலை. குடியுரிமையைத் தீர்மானிப்பது அவர்களின் வேலை அல்ல’ என்பது ஒரு முக்கியமான விமர்சனம்.

ஒருமுறை தயாராகிவிட்ட வாக்காளர் பட்டியல் இறுதியானதல்ல, அதில் திருத்தமே செய்யக்கூடாது என்பதுமல்ல. புதியவர்கள் இணைகிறார்கள். பலர் இடம் மாறுகிறார்கள். சில வட்டாரங்கள் நகரமயமாக்கப்படுகிறபோது பதிவு நிலை மாறுவதைப் பலர் எதிர்கொள்கிறார்கள். வயது மூப்பு, நோய், விபத்து உள்ளிட்ட காரணங்களால் பலர் காலமாகிறார்கள். இவையெல்லாம் தொடர்ச்சியாக நடப்பதால், வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதும் தொடர்ச்சியாக நடக்க வேண்டிய பணிதான். 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகள், பட்டியல்களைத் திருத்துவதற்குப் பின்வரும் மூன்று வழிமுறைகளை வரையறுக்கின்றன:

1) தீவிரத் திருத்தம்: இது ஏற்கனவே உள்ள எந்தப் பட்டியலையும் குறிப்பிடாமல், புதியதாக ஒரு வாக்காளர் பட்டியலை உருவாக்கும் செயல்முறை. இதில் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடைபெறும்.

2) சுருக்கத் திருத்தம்: இது ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவது. இதில் வாக்குச்சாவடி அதிகாரிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து உரிமை கோரல்களையும் மறுப்புகளையும் கேட்டுப் பெற்று, அவற்றைச் சரிபார்த்து இறுதிப் பட்டியலை வெளியிடுவார்கள்.

3) பகுதியளவு சுருக்கம் மற்றும் பகுதியளவு தீவிரத் திருத்தம்: இது மேற்கண்ட இரண்டும் கலந்த செயல்முறை. இவையன்றி, திருத்த விதிகளில் நேரடியாக வரையறுக்கப்படாத நான்காவதாக வழிமுறை ஒன்றும் இருக்கிறது. அது, ஆணையத்தின் வழிகாட்டல் கையேட்டில் ‘சிறப்பு சுருக்கத் திருத்தம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் மூன்று வழிகளில் செய்யப்பட்ட திருத்தங்களில் குறைபாடுகள் இருப்பதாக ஆணையம் கண்டறியுமானால், நான்காவது திருத்தத்தை மேற்கொள்ள ஆணையிடும்.

ஆதாரம் என்ன?

கடந்த ஜூன் மாதத்திற்குள், சட்டபூர்வமான, அண்மையில்தான் நிறைவடைந்த பீகார் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் நடவடிக்கை தேவை என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வந்தது? இது தொடர்பான விசாரணைகளில் கிடைத்துள்ள தகவல்கள், மாநில அளவில் பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை என்றே காட்டுகின்றன என்று, ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பின் நிதின் சேத்தி, ஆயுஷி கர் இருவரும் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் (ஜூலை 7) தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கான விதிகளில் இல்லாத, புத்தம் புதிய நடவடிக்கைதான் தற்போது பீகாரில் ஆணையம் செயல்படுத்துகிற ‘சிறப்பு தீவிரத் திருத்தம்’. இதன் கீழ் பின்வரும் ஐந்து பணிகள் நடைபெற வேண்டும்:

1) 2003-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள், அந்த ஆண்டுக்கான பட்டியலில் தாங்கள் இருந்ததற்கான ஆதாரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

2) 2003 வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள, 40 வயதுக்கு மேற்பட்ட, வாக்காளர்கள் தங்கள் குடியுரிமைச் சான்று, அடையாளம், வசிப்பிடத்திற்கான ஆவண ஆதாரம் ஆகியவற்றைத் தர வேண்டும்.

3) 21 முதல் 40 வயது வரையிலான வாக்காளர்கள், தங்கள் பெற்றோர்கள் 2003-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்ததற்கான ஆதாரம் அல்லது அடையாளச் சான்று. குடியுரிமைச் சான்று ஆகியவற்றுடன், தங்கள் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரின் அடையாளச் சான்றையும், குடியுரிமை ஆதாரத்தையும் காட்ட வேண்டும். (2003-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் அடிப்படையாகக் கொள்ளப்படுவதால், இவர்களின் பெற்றோர்கள் அப்போது இளைஞர்களாக இருந்திருப்பார்கள்.)

4) 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த, 21 வயதுக்குக் குறைவான வாக்காளர்கள், தங்கள் பெற்றோர்கள் 2003-ம் ஆண்டுப் பட்டியலில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததற்கான ஆதாரம், தங்களுடைய அடையாளம், குடியுரிமைச் சான்று ஆகியவற்றையும், தங்களின் தாய்–தந்தை இருவரின் குடியுரிமைச் சான்றையும் அடையாள ஆவணத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

5) வாக்காளர்கள் இந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். திருத்தப்பட்ட பட்டியலில் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தாலோ, தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலோ முறையீடு செய்ய மேலும் 30 நாட்கள் அவகாசம் தரப்படும் (என்னே பெருந்தன்மை!). அப்போது பாகுபாடு இல்லை.

தேர்தல் வரலாற்றில் முதன்முறை!

இந்தியாவின் தேர்தல் வரலாற்றிலேயே இத்தகைய அவசரத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை என்று தேர்தல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன், 2002-2003-ல் எஸ்.ஐ.ஆர் என்ற ஒரு நடைமுறையை ஆணையம் செயல்படுத்தியது உண்டு.


ஆனால், அது இப்படி மூன்று மாத அவசர அடிப்பாக அல்லாமல், ஓராண்டுக் காலம் நீடித்த விரிவான செயல்முறையாக இருந்தது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். கவனத்தில் கொள்ள ஒரு தகவல் – 2003-ம் ஆண்டின் திருத்த நடவடிக்கையில், இரு வேறு காலக்கட்டங்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படவில்லை. தற்போதைய திருத்தத்தின் முலம், குடிமக்களைப் பாகுபடுத்தும் ஒரு புதிய நடைமுறையை ஆணையம் உரசிப் பார்க்கிறது.


மக்களிடமிருந்து பட்டியலில் இடம் பெறுவதற்கான வெவ்வேறு வகையான ஆதாரங்களை ஆணையம் கட்டாயப்படுத்துகிறது. “கடந்த 20 ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கைகள், நீக்கல்கள் பெருமளவுக்கு நடந்திருப்பதை ஆணையம் கவனத்தில் கொண்டது. வேகமான நகரமயமாக்கலும், மக்கள் அடிக்கடி புலம் பெயர்வதும் தொடர்ச்சியான போக்காக மாறியுள்ளது,” என்று ஆணையம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய காரணங்களால், ஆணையத்திற்காக பீகார் மாநில அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் செய்து முடித்த ஒரு பணி தானாகவே செல்லாது என்றாகிவிட்டது.

இந்தத் திருத்த ஆணையைப் பிறப்பிப்பதற்கு முந்தைய நாள் வரையில், ஆணையம் எந்தப் பட்டியல்களைச் சார்ந்திருந்ததோ அந்தப் பட்டியல்களில் பெரிய ஓட்டைகள் இருக்கின்றன என்பதற்கான ஆதாரத் தரவுகள் எதையும் ஆணையம் முன்வைக்கவில்லை என்று முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகிறார். அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய ஆணையம் இப்படியோர் அதிரடி நடவடிக்கை தேவைப்படுகிறது என்று விரிவாக விளக்கமளிக்கவில்லை. வாக்காளர்களுக்கும் அறிவிக்கவில்லை.

இதனால் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகும் என்பதைத் தாண்டி, நடைமுறைக் காரணங்களால் பட்டியலில் இடம்பெறாதவர்கள் நாளை இந்த நாட்டின் குடிமக்களே அல்ல என்று ஒதுக்கப்படும் நிலை வருமோ என்ற அச்சம் பலரையும் கவ்வியிருக்கிறது. “அஸ்ஸாமில் இது போன்ற நிலைமை ஏற்பட்டது. பல வாக்காளர்கள் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டார்கள். வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இருபதாண்டுகள் ஓடிவிட்டன, அந்த மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளுக்கும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நாடு முழுவதும் இப்படிப்பட்ட சந்தேகப் பட்டியல் தயாரிக்கப்படுவதில் போய் இது முடியுமோ என்ற கவலை ஏற்படுகிறது” என்று ஓய்வுபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரி தன் அச்சத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஆதார் அதிர்ச்சி!

மோடி ஆட்சியில் திடீரென் ‘ஆதார்’ கொண்டுவந்தார்கள். வங்கிக் கணக்கு, குடும்ப அட்டை உட்பட எல்லாவற்றிலும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். தொட்டதற்கெல்லாம் ஆதார் அட்டை கேட்கப்படும் நிலை உருவாக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாகத் தன்னை இணைக்க விரும்புகிற, அல்லது தவறுதலாக நீக்கப்பட்ட பெயரை மறுபடி சேர்க்கக் கோருகிற ஒருவர் தனது அடையாளத்தை நிறுவுவதற்கான ஆவண அடையாளங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருந்து வந்திருக்கிறது. 2023-ம் ஆண்டில் ஆணையம் வெளியிட்ட கையேட்டில் கூட அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது, வாக்களிப்பதற்கு ஆதார் அட்டை பொருந்தாது என்று சொல்லி பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது ஆணையம். ‘ஏனிந்த விசித்திரம்’ என்று உச்சநீதிமன்றமே கேட்டிருக்கிறது!

அத்துடன், இப்படியொரு ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ மேற்கொள்வதற்கு ஆணையத்திற்கு உள்ள அதிகாரம், பரிசீலனை நடைமுறையின் செல்லுபடித் தன்மை, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நேரம் (அதாவது தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கிறபோது) ஆகியவற்றை பற்றி ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

இந்தச் செய்திகளைப் பின்தொடர்கிற தேநீர்க்கடை அரசியல் விமர்சகர் ஒருவர், “அதுசரி, நாளைக்கு நாடு முழுவதுமாக இதை அறிவித்து, எனக்கோ என்னைப் போல மற்றர்களுக்கோ வாக்குரிமை இல்லையென்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இதுவரைக்கும் நான் ஓட்டுப் போட்டது என்னாகும்? பதிவான மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையிலிருந்து எங்களின் ஓட்டுகளைக் கழித்துவிடுவார்களோ” என்று கேட்டுச் சிரிக்கிறார்.

இவரது சிரிப்பை எதிரொலிப்பது போல, “இந்த ஆணையின் மூலம் 2003-க்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது தவறாகச் சேர்க்கப்பட்டவர்கள் என்கிறார்கள். அப்படித்தானா...” என்று ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” பேட்டியில் ஒரு முன்னாள் தேர்தல் அதிகாரி கேட்டிருக்கிறார்.

இந்தச் செய்திகளைப் பின்தொடர்கிற தேநீர்க்கடை அரசியல் விமர்சகர் ஒருவர், “அதுசரி, நாளைக்கு நாடு முழுவதுமாக இதை அறிவித்து, எனக்கோ என்னைப் போல மற்றர்களுக்கோ வாக்குரிமை இல்லையென்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இதுவரைக்கும் நான் ஓட்டுப் போட்டது என்னாகும்? பதிவான மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையிலிருந்து எங்களின் ஓட்டுகளைக் கழித்துவிடுவார்களோ” என்று கேட்டுச் சிரிக்கிறார்.

இவரது சிரிப்பை எதிரொலிப்பது போல, “இந்த ஆணையின் மூலம் 2003-க்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது தவறாகச் சேர்க்கப்பட்டவர்கள் என்கிறார்கள். அப்படித்தானா...” என்று ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” பேட்டியில் ஒரு முன்னாள் தேர்தல் அதிகாரி கேட்டிருக்கிறார்.

அப்படித்தான் என்றால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களது பெயர்களைப் பட்டியல்களில் சேர்த்த, அவர்கள் வாக்குப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகளைச் செய்த ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையில் மோசடிக்காரர்கள் என்று ஆகிவிடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். இந்தப் பின்னணியோடு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஜூலை 3-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்துத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வாக்குரிமையும் குடியுரிமையும்!

ஆணையம் இத்தகைய ஒரு பெரும் பணியைத் தொடங்குவதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் கருத்துக்களைக் கேட்டிருக்க வேண்டும். மாறாக, திட்டத்தைப் பற்றி அறிவிப்பதற்காக மட்டும் கூட்டத்தைக் கூட்டியது ஏற்கத்தக்கதல்ல என்று அவர்கள் கூறியுள்ளனர். பீகாரில் தற்போது ஆட்சியிலுள்ள, பா.ஜ.க-வின் கூட்டாளியுமான நிதிஷ் குமாரின் (ஜே.டி.யு) கட்சிக்குள்ளேயும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது.

மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இத்தகைய விரிவான பணியை மேற்கொள்வதால், தேர்தலுக்கான சூழ்நிலை சீர்குலையும். அபாயகரமான நிலைமைகள் ஏற்படலாம். இந்த முழுப் பணியையும் முடிப்பதற்கு வெறும் ஒரு மாத கால அவகாசமே தரப்பட்டிருப்பது முறையல்ல. தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது உரிய வட்டார அலுவலர்களின் பொறுப்பாகும். குறிப்பிட்ட இடத்தில் வாக்காளர் என்ற நியாயமான உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொறுப்பை எளிய வாக்காளர்கள் மீது சுமத்துவது அநீதி.

பதிவுப் படிவத்தை அதிகாரி வழங்கத் தவறினால், ஒரு வாக்காளர் அதைப் பெறுவதற்கான வழிமுறைகளை என்றால் அவருடைய பெயர் நீக்கப்பட்டுவிடு என்று தனது கடிதத்தில் கூறியுள்ள சி.பி.ஐ(எம்), எளிய மக்கள் படிவங்களை இணையவழியில் தரவிறக்கம் செய்து விண்ணப்பிப்பார்கள் என்று ஆணையம் எப்படி எதிர்பார்க்கிறது என்று கேட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள வாக்காளர்களும் வசிப்பிடச் சான்றை அளிக்க வற்புறுத்துவதால் தேவையான ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களுக்குத் தேவையற்ற தொல்லையே ஏற்படும். பெற்றோர் குறித்த ஆதாரத்தைத் தாக்கல் செய்யக் கூறுவது சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். இறுதியில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கு இட்டுச்செல்லும். இந்த நடைமுறை மொத்தமும், முன்மொழியப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) போன்றதாக இருக்கிறது.

குறிப்பிட்ட பிரிவு மக்களின் வாக்குரிமை மறுக்கப்படுவதற்கு இது இட்டுச்செல்லும் என்ற அச்சங்களும் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை, மதச்சார்பற்ற தேசத்தில் குடியுரிமை என்ற இரு அடிப்படைகளோடு தொடர்புள்ள இந்தப் பிரச்னையை தலைமை ஆணையர் ராஜீவ் குமார், ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து பொறுப்பில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் உரிய அக்கறையுடன் மறுபரிசீலனைக்கு உட்படுத்துமா? அல்லது, எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டுவதைப் போல, பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்கு செலுத்தக்கூடிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து வடிகட்டப்படுவார்களா?

[0]

=விகடன் டிஜிட்டல் (ஜூலை 12) எனது கட்டுரை





No comments: