அ. குமரேசன்
“இந்திய அரசமைப்பு சாசனத்தின் முன்னுரையிலிருந்து ‘சமூகவுடைமைத்துவ’, ‘மதச்சார்பற்ற’ என்ற இரண்டு சொற்களையும் மறு ஆய்வு செய்கிற அல்லது நீக்குகிற திட்டமோ நோக்கமோ அரசாங்கத்திற்குத் தற்போது இல்லை.” இவ்வாறு நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழனன்று (ஜுலை 24) சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் ராம்ஜி லால் சர்மா, சாசன முன்னுரையிலிருந்து “சோசலிசம்”, “செக்யூலரிசம்” என்ற இரண்டு சொற்களையும் நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா என்று கேட்டிருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர், உச்சநீதிமன்றம் 2024 நவம்பரில் அளித்த தீர்ப்பில், அரசமைப்பு சாசனத்தில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரம் சாசனத்தின் முன்னுரை வரையில் விரிகிறது என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், 1976இல் செய்யப்பட்ட 42ஆவது சட்டத்திருத்தத்தை நீக்கக் கோரும் மனுக்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது என்று விளக்கமளித்தார்.
“இந்தியச் சூழலில் சமூகவுடைமைத்துவம் என்பது மக்கள் நல அரசு என்பதையே குறிக்கிறது, தனியார் துறை வளர்ச்சியை அது தடுக்கவில்லை என்றும், மதச்சார்பின்மை என்பது அரசமைப்பு சாசன அடிப்படைக் கட்டமைப்பின் உள்ளார்ந்த கூறு என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது,” என்று அமைச்சரின் பதிலில் கூறப்பட்டிருக்கிறது.
காரணம் இருக்கிறது
சமாஜ்வாதி எம்.பி. இவ்வாறு கேட்டதற்குக் காரணம் இல்லாமல் போகவில்லை. பாஜக தலைவர்களில் சிலரும், அவர்களது வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களும் அடிக்கடி, இந்த இரண்டு சொற்கள் மீதான தங்களுடைய அசூயையை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். கடந்த மாதம் கூட ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தரேயா ஹோசாபேல், “இந்த இரண்டு சொற்களும் பாபாசாஹேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனத்தின் முன்னுரையில் இல்லை. இன்றைய நிலைமைகளில் இந்தச் சொற்களின் பொருத்தப்பாடு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” என்று பேசினார்.
தத்தரேயா இப்படிப் பேசிய சில நாட்களில், அன்றைய (தற்போது பதவி விலகியுள்ள) குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், அவசரநிலை ஆட்சியின்போது சேர்க்கப்பட்ட இந்த இரண்டு சொற்களும் ஆறாத புண்களாக இருக்கின்றன என்று பேசினார். சனாதன உணர்வுக்கு இந்தச் சொற்கள் ஒரு அவமானம் என்றும் அவர் கூறினார். 42வது சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான அஜய் பிரதாப் சிங். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி, வழக்குரைஞர்கள் விஷ்ணு சங்கர் ஜெயின், அஸ்வினி குமார் உபாத்யாய், டாக்டர் பல்ராம் சிங் உள்ளிட்டோரும் வழக்குத் தொடுத்திருந்தனர்.
அந்த வழக்குகள் மீதான தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு கூறியிருக்கிறது. முன்பு மூத்த பாஜக தலைவர்கள் பலர் இந்தச் சொற்களை நீக்க வேண்டுமென்று நேரடியாகக் கூறாவிட்டாலும், இந்த சட்டத் திருத்தத்தால் சாசனத்தின் புனிதம் குலைந்துவிட்டது என்ற தொனியில் பேசி வந்திருக்கிறார்கள்.
இதைச் சுட்டிக்காட்டிய சமாஜ்வாதி உறுப்பினர், “சில சமூக அமைப்புகளின் நிர்வாகிகளால் அப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாக்கப்படுகிறதா” என்றும் கேட்டிருந்தார். அதற்கு அமைச்சர் மேக்வால், "சில குழுக்கள் இந்தக் கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிப்பதோ வாதாடுவதோ சாத்தியமே. அத்தகைய செயல்பாடுகள் இந்த விவகாரம் குறித்து ஒரு பொது விவாதத்தை உருவாக்கலாம், ஆனால் அவை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையோ, நடவடிக்கைகளையோ பிரதிபலிக்க வேண்டிய தேவையில்லை,” என்று பதிலளித்தார்.
வலதுசாரி நண்பர்களின் பதில்கள்
வலதுசாரி நண்பர்கள் சிலர் விவாதங்களின்போது இதே கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் எல்லோருக்கும் சம வாய்ப்புகளை நாடு உருவாக்க வேண்டும் என்ற சமூகவுடைமைத்துவ லட்சியம் வேண்டாம் என்றால் வேறு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்? ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கட்டும் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறோம். அதே போல், மதச்சார்பின்மை என்ற சொல் வேண்டாம் என்றால், இன்று அனைத்து மக்களுக்குமான நாடாக இருக்கிற இந்தியா ஒரு மதத்தை மட்டுமே அதிகாரப்பூர்வமானதாக ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வதாகப் புரிந்துகொள்ளலாமா என்றும் கேட்டிருக்கிறோம்.
அவர்களிடமிருந்து இரண்டு விதமான பதில்கள் வந்திருக்கின்றன. “இது விதண்டாவாதம்,” என்பது ஒரு பதில். “இந்தச் சொற்கள் 42ஆவது திருத்தத்தின் மூலம் பிற்சேர்க்கையாகவே செருகப்பட்டன.” என்பது அடுத்த பதில். அப்படிச் சேர்த்ததில் என்ன தவறு என்று கேட்டால், “மூல சாசனத்திலேயே அந்த உட்பொருள்கள் இருக்கின்றன, ஆகவே இப்படிச் சேர்க்க வேண்டிய தேவையில்லை,” என்று
கூறுவார்கள். தேவையின்றி சேர்த்ததன் மூலம் சாசனத்தின் புனிதம் தாக்கப்பட்டிருக்கிறது என்பார்கள். கடவுளால் போதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மதங்களின் வழிமுறைகளிலேயே காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யப்படுகிறபோது மனிதர்களால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு சாசனத்தில் மாற்றம் செய்யக்கூடாதா?
இந்த விவாதத்திற்குள் செல்வதற்கு முன் வரலாற்றின் அந்தச் சட்டத் திருத்த அத்தியாயத்தைப் பார்த்துவிடுவோம். சுதந்திர இந்திய நாட்டின் தன்மையை வகுத்துக் கொடுக்கிறது அரசமைப்பு சாசனம் (அரசியல் சட்டம்). நாட்டின் அரசு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், அதன் பொறுப்புகள் எவை, குடிமக்களின கடமைகள் யாவை என்றெல்லாம், விடுதலைக்கு முன்பே 1946இல் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட அரசமைப்பு சாசன சபை விவாதித்தது. டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு சாசன முன்வரைவைத் தயாரித்தது. புதிய சுதந்திர நாட்டிற்கான அடையாளத்தை நிறுவும் பணிகளை ஒருங்கிணைத்ததிலும் இராப்பகலாக உழைத்துத் தொகுத்ததிலும், குழுவின் விவாதங்களில் இலக்குகளைக் காட்டியதிலும் அம்பேத்கர் அளப்பரிய பங்காற்றினார். ஆகவேதான் அம்பேத்கர் உருவாக்கிய சாசனம் என்று இன்றளவும் கூறப்படுகிறது.
மூல சாசனம்
மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களும் சாசன சபையில் இருந்தார்கள். முன்வரைவு ஆவணம் அன்றைய இடைக்கால அரசிடம் அளிக்கப்பட்டது. 1949 நவம்பர் 26இல் அரசமைப்பு சாசன சபை (அரசியல் நிர்ணய சபை) அதை அங்கீகரித்தது. 1950 ஜனவரி 26 அன்று சாசனம் நடைமுறைக்கு வந்தது. எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லாமல் இந்தியா தன்னை உயர் தன்னாளுமையுள்ள (இறையாண்மையுள்ள) ஒரு ஜனநாயகக் குடியரசாக ஊன்றிக்கொண்டது.
மூல சாசனத்தின் முன்னுரையில், “இந்தியா உயர்தன்னாளுமையுள்ள ஜனநாயகக் குடியரசு” என்றுதான் இருந்தது. அதே வேளையில் முன்னுரையிலோ, தொடரும் சட்ட உரைகளிலோ எங்குமே இது குறிப்பிட்ட மதத்திற்கான நாடு என்றோ, மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றோ இல்லை. ஒற்றை மதம் சார்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற கனவுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்போதிருந்தே அதை எதிர்த்து வந்தார்கள், அவர்களின் வழி வந்தோர் இப்போதும் எதிர்க்கிறார்கள்.
“அவர்களின்” மதத்திற்கு என்று நாடு இருக்கிறது, “இவர்களின்” மதத்திற்கு என்று நாடு இருக்கிறது, நம் மதத்திற்கு என்று நாடு வேண்டாமா” என்று பேசிப் பேசி ஒரு பகுதி மக்களின் மனங்களுக்குள் பிற மதத்தினருக்கும், அரசமைப்பு விழுமியத்திற்கும் எதிரான சிந்தனைகளைப் புகுத்தி வந்திருக்கிறார்கள்.
அவசர நிலையும் சட்டத் திருத்தமும்
1975 ஜூன் 25இல், சாசனத்தில் இருக்கும் ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி, அவசரநிலை ஆட்சியை அறிவித்தார் பிரதமர் இந்திராகாந்தி. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஏற்படும் நிலைமைகளில் பயன்படுத்த வேண்டிய 352ஆவது சட்ட உரையை, தனது ஆட்சிக்கு அச்சுறுத்தல் என்ற நிலைமையில் அவர் பயன்படுத்தினார். தேசிய அவசர நிலை ஆட்சியை அன்றைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது மூலம் அறிவிக்க வைத்தார்.
அவசரநிலை ஆட்சியின் அத்துமீறல்கள் ஒருபுறம் நடந்தேறிக்கொண்டிருக்க, இன்னொரு புறம், 1976 நவம்பர் 2 அன்று மக்களவையிலும், 11ஆம் தேதி மாநிலங்களவையிலும் (பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல்) 42ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 18இல் குடியரசுத் தலைவைர் ஒப்புதல் அளிக்க அந்தப் புதிய சட்டம் 1977 ஜனவரி 3இல் நடைமுறைக்கு வந்தது. (மார்ச் 21இல் அவசர நிலை ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. அதற்கு முன் மார்ச் 16 முதல் 20 வரை நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காந்திக்கும் அவருடைய கட்சி வேட்பாளர்களுக்கும் ஜனநாயகப் பற்றுள்ள நாட்டு மக்கள் படுதோல்வி அளித்தார்கள். அந்த வரலாறு தனி.)
அந்த 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலமாகத்தான் சாசன முன்னுரையில் அந்த முதல் வாக்கியத்தில் ‘சோசலிச’, ‘மதச்சார்பற்ற’ என்ற இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டன. மூன்றாவதாக, “ஒருமைப்பாடு” என்ற சொல்லும் சேர்க்கப்பட்டது. முன்னுரையின் மற்றொரு வாசகம் அதற்கு முன் "தனிமனிதர் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் சகோதரத்துவம்" என இருந்தது. அந்தத் திருத்தத்தின் மூலம் "தனிமனிதர் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும் சகோதரத்துவம்," என அந்த வாக்கியம் மாறியது.
ஆக, அவசரநிலை ஆட்சியை இந்திரா காந்தி அறிவித்ததில் கலப்படமற்ற அதிகார மோகச் சுயநலம் இருந்தது. கருத்துச் சுதந்திரம் வெகுவாக முடக்கப்பட்டது. ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள் சிறையிடப்பட்டார்கள். இதெல்லாம் உண்மை. இவற்றை நியாயப்படுத்தும் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. உணவு வகைகள் உட்பட பல பொருள்களின் அளவு, தரம், விலை, அரசு அலுவலகப் பணி நேரம் ஆகியவற்றில் கறாரான கட்டுப்பாடுகள் மக்கள் அதுவரையில் அனுபவித்திராத வகையில் செயல்படுத்தப்பட்டன. இதுவும் உண்மை.
குடிமக்களின் நம்பிக்கை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அதே வேளையில் நாடும் அரசும் மதம் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள், கல்வி–மருத்துவம் உள்ளிட்ட மக்கள் நலச் செயல்பாடுகளை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை உயர்த்திப் பிடித்தவர்கள் சாசனத்தில் இந்தச் சொற்கள் சேர்க்கப்பட்டதை வரவேற்றார்கள். சர்வாதிகாரத்திற்கு உறுதியான எதிர்ப்பையும், இப்படிப்பட்ட சில மாற்றங்களுக்கு ஆதரவையும் வெளிப்படுத்தினார்கள்.
மதங்களின் சுதந்திரம்
விடுதலை பெற்ற நாட்டின் கால்களில் மத விலங்கு மாட்ட எண்ணி, அது நடக்காமல் போன ஏமாற்றத்தில் இருந்தவர்கள் இவ்விரு சொற்கள் சேர்க்கப்பட்டதை ஏற்கவியலாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், “மதச்சார்பு அரசின் ஆதரவாளர்கள் மதச்சார்பின்மையின் கீழ்தான் மதங்கள் சுதந்திரமாகவும் தன்னாளுமையோடும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்,” என்கிறார் கல்வியாளரும் அரசமைப்பு சாசன வல்லுநருமான ஃபைசான் முஸ்தஃபா. ‘(சாசனம் நடைமுறைக்கு வந்த) முதல் நாளிலிருந்தே உள்ளுறைவானதாக இருந்து வந்த மதச்சார்பின்மை 1976இல் வெளிப்படையானதாக மாறியது’ என்ற கட்டுரையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது கச்சிதமாக இருக்கிறது (தி ஹிண்டு, 14 ஜூலை).
“செக்யூலரிசம்” என்ற சொல் இந்தியக் கள நிலைமைகளின் காரணமாக “மதச்சார்பின்மை” என்று பொருள்கொள்ளப்படுகிறது. ஆயினும் அது மதத்தை மட்டுமே குறிப்பதல்ல. பல்வேறு நாடுகளின் அவர்களுடைய சமுதாய நிலைமைகளுக்கு ஏற்ப இந்தச் சொல் கையாளப்படுகிறது. பல நாடுகளில் இந்தச் சொல்லின் பொருள் இனச்சார்பின்மை. நம் நாட்டில் சாதிச்சார்பின்மை, மொழிச்சார்பின்மை என்றும் ஆக்கப்பூர்வமாக விரிவுபடுத்தலாம்.
சமூகவுடைமைத்துவமும் மதச்சார்பின்மையும் அரசமைப்பு சாசனத்தின் உயிர்நாடி என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி. “அரசமைப்பு சாசனத்திலிருந்து சோசலிசம், மதச்சார்பின்மை என்ற சொற்களை நீக்க வலியுறுத்துவது ஒரு ஒடுக்குமுறைப் பெரும்பான்மைவாத அரசை நிறுவும் நோக்கத்துடனான திட்டமிட்ட முயற்சியே. இந்திய அரசமைப்பு சாசனம் வெறும் சட்ட ஆவணமல்ல. காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்ட நெருப்பில் புடம்போடப்பட்ட தேசத்தின் லட்சியங்களையும், எதிர்பார்ப்புகளையும் உருக்கொண்டதாகும். இதன் மிக அடிப்படையான கோட்பாடுகளில் சமூகவுடைமையும் மதச்சார்பின்மையும் இருக்கின்றன. இந்தக் கொள்கைகள் முன்னுரையோடு முடங்கிவிடவில்லை, அரசுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள், அடிப்படைக் கடமைகள், அடிப்படை உரிமைகள் என அதன் உள்ளடக்கம் முழுவதிலும் பின்னிப் பிணைந்துள்ளன," என்று அவர் எடுத்துரைக்கிறார் (தி ஹிண்டு, 4 ஜூலை).
பலநாடுகளிலும் இதே பாதை
இவ்வாறு போராட்டத்தில் புடம்போட்டு மத/இன/மொழிச் சார்பின்மையையும், மக்கள் நல வாழ்வையும் தங்களின் லட்சியங்களாகத் தங்களின் அரசமைப்பு சாசனங்களில் பொறித்துள்ள நாடுகள் பல. உலக அரங்கில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், பிரேசில், சீனா, வியட்நாம், கியூபா, கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு, கொரிய குடியரசு உள்ளிட்ட நாடுகள் இந்த அணியில் சேர்கின்றன. நேபாளம் வெகுகாலமாக இந்து மத நாடாக இருந்தது. 2007ல் மதச்சார்பற்ற அரசாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய பல நாடுகளில் ஆட்சியாளர்கள் முழு நேர்மையோடு மத/இனச் சார்பின்மையைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால் அடிப்படையான அரசமைப்பு சாசன ஏற்பாடாக இருப்பதால், அவர்கள் ஒருவேளை சட்டத்திற்குப் புறம்பாக மத/இனச் சார்போடு நடவடிக்கைகள் எடுப்பார்களானால், அதை எதிர்த்து மக்கள் களங்களிலும் நீதிமன்றங்களிலும் போராட முடியும், தடுத்து நிறுத்த முடியும்.
நம் நாட்டில் மதச்சார்பின்மை என்றால் எல்லா மதங்களுக்கும் இடமளிப்பது என்று தவறாகச் சித்தரித்து, அரசு அலுவலகங்களுக்கு உள்ளேயும் வளாகங்களிலும் அனைத்து மதங்களின் வழிபாட்டு அடையாளங்கள் இருக்க அனுமதிக்கப்பட்டது. மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளும் மதச் சார்புகளும் மதிக்கப்பட வேண்டியவை. ஆனால் அரசு என்ற அமைப்பின் எந்த அங்கத்திலும் இப்படிப்பட்ட சமரசங்கள் கூடாது என்ற கூர்மையான விமர்சனங்களும் எழுந்தன.
அத்தகைய போராட்டச் சுதந்திரத்தை, உரிமையை இந்திய அரசமைப்பு சாசனத்தின் முன்னுரை உறுதிப்படுத்துகிறது. எத்தனை முற்போக்கான முன்னுரை! அதில் உள்ள இந்த இரண்டு சொற்களையும் நீக்குகிற திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், அமைச்சரின் பதிலில் “தற்போது” இல்லை என்று இருப்பது, வேறு எப்போதாவது அந்தத் திட்டம் வருமோ என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. சமூக நல்வாழ்வுக்கும் மதச்சார்பின்மைக்கும் நிற்கிற இயக்கங்கள் மட்டுமல்லாமல் மக்களும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கவனமாக இருக்க வேண்டும்.
[0]
-விகடன் டிஜிட்டல் பதிப்பில் (ஜூலை 26) எனது கட்டுரை
No comments:
Post a Comment