Sunday, 20 July 2025

கோவில் நிதியில் கல்விக் கூடங்கள் கட்டினால் கடவுள் என்ன சொல்லப் போகிறார்?

 





விகடன் டிஜிட்டல் பதிப்பில் எனது கட்டுரை - வலைப்பூ பதிவாக


நாக்கில் சனி என்பார்கள். அதை நம்பாதவர்கள் கூட அவருடைய அன்றைய பேச்சை அப்படித்தான் சித்தரித்திருப்பார்கள். “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்று தேர்தல் வியூக சுற்றுப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூலை 8 அன்று கோவையில் திமுக ஆட்சியைத் தாக்கிப் பேசியபோது, “கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன் அரசாங்கத்திடம் பணம் இல்லையா,” என்று கேள்வி எழுப்பினார்.


கடந்த காலத்தில் அதிமுக  ஆட்சியிலும் அறநிநிலையத் துறை நிதியில் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்த அவரது கட்சிக்காரர்களே கூட, ஆட்சியைத் தாக்குவதற்கு வேறு பிரச்சினை கிடைக்கவில்லையா என்று யோசித்திருப்பார்கள். மற்றவர்கள் விடுவார்களா? அவர் முதலமைச்சராக இருந்தபோது கோவில் நிதியில் கட்டப்பட்ட பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியை அவரே திறந்து வைத்ததற்கான கல்வெட்டைப் பகிர்ந்து, இந்தக் கேள்வியை அவர் அப்போது எழுப்பினாரா என்று கேட்டார்கள். 


அறநிலையத் துறை சட்டத்தில் கோயில் நிதியில் கல்விக்கூடங்கள் கட்ட வழிசெய்யும் விதிகள் இருப்பதை துறை அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டினார்  கோவில்களை அரசாங்கத்திடமிருந்து மீட்டு முன்போல்  தனியார் தர்மகர்த்தா நிர்வாகங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று பாஜக–வினர் உள்ளிட்ட ஒரு பகுதியினர் ஏற்கெனவே வலியுறுத்தி வருகின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டதன் உடனடித் தாக்கமாக எடப்பாடியார் இப்படி எதிரொலிக்கிறார் என்ற விமர்சனங்களும்  சுழலத் தொடங்கின. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இப்போது அவர் பாஜக–வின் ஒரிஜினல் வாய்ஸ்சாக மாறிவிட்டார்,” என்றார்.


தனது பேச்சு பூமராங்காகத் தன் மீதே பாய்வதைக் கண்ட எடப்பாடியார் பின்னர் விழுப்புரத்தில் பேசியபோது, “கல்வி அவசியம்தான், ஆனால் கோயில் நிதியில் கட்டப்படும் கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு முழுமையான வசதிகள் கிடைக்க வாய்ப்பில்லை,” என்ற பொருளிலேயே அப்படிப் பேசியதாகத் தெரிவித்தார்.  இப்போது பத்திரிகை பேட்டியிலும் அதைக் கூறியிருக்கிறார் (‘டைம்ஸ் ஆஃப்  இந்தியா’ – ஜூலை 18)


அறநிலையத் துறை நிதியை இதற்குப் பயன்படுத்தக்கூடாது என்ற அடிப்படைக் கருத்தை அவர் மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை. அவருடைய பயணத்தில் ஆங்காங்கே சேர்ந்துகொள்ளும் பாஜக தலைவர்கள், கோவில்களை அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்பது பற்றிப் பேசினால் அதற்கு அவர் மறுமொழி அளிப்பாரா என்றும் ஊகிக்க முடியவில்லை.

இரு கோணங்கள்

கோவில் நிதியில் பள்ளி, கல்லூரிகளைக் கட்டுவதும் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பை விரிவுபடுத்துவதும் கடவுள் மனங்குளிரச் செய்யும்  தொண்டு என்ற கோணத்திலும்,  இல்லை, கோவில் சூழல்களை மேம்படுத்துவதற்கு மட்டுமே அந்த நிதியைப் பயன்படுத்துவதுதான் ஆன்மீக சேவை என்ற கோணத்திலும் விவாதங்கள் தொடர்கின்றன. பொதுவாகவே மதம் சார்ந்த அமைப்புகள் கல்வி நிறுவனங்களை நடத்தத்தான் வேண்டுமா? நாட்டின் மற்ற மாநிலங்களிலும் உலகின் பிற நாடுகளிலும் என்ன நிலைமை?


தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கீழ் 5 கலை–அறிவியல் கல்லூரிகள், 15 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 54  கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. கிறிஸ்துவ நிறுவனங்களும் முஸ்லிம் அமைப்புகளும் நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாகக் கல்விச் சாலைகளை நடத்தி வருகின்றன. 


18ஆம் நூற்றாண்டு இறுதியில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவ ஊழியர்கள்  (மிஷனரிகள்) வங்காளத்தின் செராம்பூர் நகரத்தில்  கல்விக்கூடங்களைத் தொடங்கின. அடுத்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில்,  திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் பகுதிகளில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கினர். 1852 வாக்கில் தமிழ்நாட்டில் மட்டுமே மிஷனரிகளின் 1,885 கல்வி நிலையங்களில் 38,000 மாணவர்கள் பயின்றார்கள்.  சமூகப் பின்னணியிலும் பொருளாதார அடிப்படையிலும் ஆகப் பெரும்பாலோருக்குக் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த சமுதாயத்தில் இது எப்பேர்ப்பட்ட வளர்ச்சிப் போக்கெனப் புரிந்துகொள்ளலாம். பிற்காலத்தில் கிறிஸ்துவ அமைப்புகளின் கல்விக் கூடங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட்டன.

பெற்றோர் மகிழ்வு

மதம் மாற்றுவதற்காகத்தான் கல்வி வலை விரிக்கப்படுகிறது என்ற விமர்சனங்கள் அப்போதே எழுந்தன. மக்கள் அதைப் புறந்தள்ளிவிட்டுப் பிள்ளைகளைத் தயங்காமல் அனுப்பினார்கள். ஒரு பகுதியினர் தங்கள் கடவுள்களை மாற்றிக்கொண்டார்கள் என்றாலும் (அதற்கு வேறு காரணங்களும் இருந்தன), ஆகப் பெரும்பாலோர் தங்களுடைய தெய்வங்களின் கருணையுடனேயே வாரிசுகள் மிஷனரி கல்வி நிலையங்களுக்குப் போய், படித்தவர்களாகத் திரும்புவதைக் கண்டு  களிப்பும் பெருமிதமும் கொண்டார்கள்.


முஸ்லிம் சமூகத்தினர் மதரஸா (பள்ளி) அமைப்புகளை ஏற்படுத்தி கல்வி வழங்குகின்றனர். தொடக்கத்தில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி அளிப்பதுதான் மதரஸாக்களின் நோக்கமாக இருந்தது. அக்பர் ஆணைகளைத் தொடர்ந்து முகலாயர் ஆட்சியில் மதரஸாக்களில் மற்றவர்களுக்குமான, கணிதம், வானவியல், மருத்துவம் உள்ளிட்ட பொதுப் பாடங்களும் கற்பிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்தபின் மதரஸாக்கள் மறுபடி மதக் கல்விக்கே தடம் புரண்டன. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பொதுக்கல்வி வழங்குவதைத் தொடர்ந்தன. 1857இல் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்த பிரிட்டிஷ அதிகாரி அரசுக்கு அளித்த அறிக்கையில், முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் எண்ணற்ற இந்துக்கள் கல்வி பயில்கின்றனர் என்று குறிப்பிட்டதுடன், வியப்பும் தெரிவித்திருந்தாராம்.


மதரஸாக்களில் முறையான பாடத்திட்டம் இல்லை என்றும், அரசு நிதியுதவியைப் பெறுவதற்கான தகுதியோடு செயல்படவில்லை என்றும் தேசிய குழந்தைகள் ஆணையம் விமர்சித்திருக்கிறது. மதரஸா அல்லாத பல பள்ளிகளையும் கல்லூரிகளையும்,, இத்தகைய விமர்சனங்களுக்குள் சிக்காமல், கல்வி உரிமைச் சட்டம் உள்பட பொதுப்பாடத் திட்டத்துக்கு இணக்கமாக, அனைத்துப் பிரிவு மாணவர்களுக்காகவும்  முஸ்லிம் சமூகத்தினர் நடத்தி வருகின்றனர்.


சீக்கியம், புத்தம், சமணம் ஆகிய சமய அமைப்புகளால் இயக்கப்படும் கல்வி நிறுவனங்களும் உள்ளன.  சமயம் சார்ந்த வகுப்புகளை மட்டும் நடத்துகிற, அனைவருக்குமான பொதுக் கல்வியை வழங்குகிற இரு வகையான பள்ளிகளும் கல்லூரிகளும் அந்த அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. 

நீதிமன்ற வழிகாட்டல்

நெல்லை சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், சிறுபான்மை சமயங்கள் சார்ந்த, அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணி நியமனங்களும் மாணவர் சேர்க்கைகளும் மத அடிப்படையில் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2023 அக்டோபர் 2இல்  தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு முன்னோடியாக, மதரஸா சேவைகள் சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமும் 2020 ஜனவரி 7இல் அளித்த தீர்ப்பில் இதே வழிகாட்டலை வகுத்திருக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனத்தின் 28ஆவது சட்ட உரை, அரசு நிதியுதவியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மத போதனைகள் கூடாது என்று கறார்ப்படுத்தியுள்ளது.  


இவை கவனத்தில் கொள்ளத்தக்கவை. அதாவது, அரசாங்கத்தின் கல்வித் துறை, குடிமக்கள் சமுதாயம், சம்பந்தப்பட்ட சிறுபான்மை நிறுவனங்கள் மூன்றுமே கவனத்தில் கொள்ள  வேண்டியவை.


இத்தோடு இணைந்ததாக, மற்றவர்களின் வழிபாட்டுத் தலங்கள் அந்தந்த சமய அமைப்புகளால்  நிர்வகிக்கப்படுகிற நிலையில், இந்துக் கோவில்களின் மேலாண்மையை இந்து அறநிலையத் துறை மூலமாக தமிழ்நாடு அரசு நடத்துவது பற்றிய கேள்வி முன்னுக்கு வருகிறது. இது இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு என்ற மதம் தோய்ந்த அரசியல் வாதங்களுக்கும் மத அடிப்படையில் மக்களைத் திரட்டுவதற்கும் அந்தக் கேள்வி பயன்படுத்தப்படுகிறது.

எப்போது, ஏன் வந்தது?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், இந்துக் கோவில்களின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கன இந்தத் துறையை ஏற்படுத்தியது திமுக அரசு அல்ல. 1967இல் அந்தக் கட்சி ஆட்சிக் வருவதற்கும் முன்பே இந்தத் துறை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நாடு விடுதலையடைவதற்கு முன்பே, பிரிட்டிஷ் ஆட்சியிலேயே இந்த ஏற்பாடு வந்துவிட்டது.


கோவில் சொத்துகளிலும் நிர்வாகங்களிலும் நிறைய முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. பக்தியோடு கோவில்களுக்குச் சென்ற இந்து மக்களிடமிருந்தே அந்தப் புகார்கள் சென்றன. பரம்பரை தர்மகர்த்தாக்களும் மடாதிபதிகளும் வாரிசுமுறை அர்ச்சகர்களுமே கோவில்களை நிர்வகித்து வந்தனர். அந்த நிலையில் பக்தர்களின் புகார்கள் என்ன கதியாகியிருக்கும் என்று விளக்க வேண்டியதில்லை.


1817ஆம் ஆண்டில், அப்போது இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனி  “சமய அறக்கட்டளைகள் சட்டம்” கொண்டுவந்தது. முதல் சுதந்திர எழுச்சி என்று இந்தியர்களாலும், சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் கூறப்பட்ட 1857 கிளர்ச்சியைத் தொடர்ந்து 1858இல் பிரிட்டன் அரசு, ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவைத் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அதன் பிறகும் சமய அறக்கட்டளைகள் சட்டம் தொடர்ந்தது. 1925இல் பனகல் அரசர் தலைமையில், கோவில்களின் நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக “இந்து அறநிலைய வாரியம்” ஏற்படுத்தப்பட்டது.

கர்மவீரர் ஆட்சியில்

நாட்டின் விடுதலைக்குப் பின் 1951இல் அந்த வாரியம் கலைக்கப்பட்டு, ‘மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம்’ இயற்றப்பட்டது.  1959இல் மாநில முதலமைச்சராக இருந்த காமராஜர், “மெட்ராஸ் இந்து சமய அறநிலையத் துறை சட்டம்” என்று கொண்டுவந்தார். அப்போது துறையின்  அமைச்சராக இருந்தவர் பக்தவச்சலம் –பின்னாள் முதலமைச்சர். 1960ஆம் ஆண்டிலிருந்து சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. 1967இல் முதலமைச்சர் அண்ணாதுரை முன்மொழிந்த தீர்மானம், 1969இல் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று ஆனது. அதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகங்களுக்கான சட்டமும் “தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம்” என்று மாறியது.


இன்று இந்தத் துறையின் பொறுப்பில் 46,000+  கோவில்களும், 4.78 லட்சம் ஏக்கர் பரப்பு நிலங்களும் உள்ளன. தொடக்கத்தில் பார்த்தது போல் பள்ளிகளும் கல்லூரிகளுமாக 54 கல்வி நிறுவனங்கள் இத்துறையின் பொறுப்பில் இயங்குகின்றன.  ஆம், அரசியல் முடிவுகள், மத தலையீடுகள், கல்வி உரிமைகள் ஆகிய மூன்று கூறுகளுடனும் தொடர்புள்ள வரலாறுதான் இது.

பிற மாநிலங்களில்

பிற மாநிலங்களில் இது போல் இருக்கிறதா? கேரளத்தில் தேவஸ்வம் வாரியம் இருக்கிறது. அதன் ஆலயங்களில் நியமனங்களை அரசாங்கம்தான் செய்கிறது. கர்நாடகத்தில் முஸ்ராய் துறை என்ற அரசு நிர்வாகத்தில் கோவில்கள் செயல்படுகின்றன. ஆந்திராவில் அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் மாநில அரசால் கண்காணிக்கப்படுகின்றன. மஹாராஷ்டிராவில் அறநிலைய ஆணையம் கோவில்களைக் கண்காணிக்கிறது. தமிழ்நாட்டைப் போலவே இந்த மாநிலங்களில் அரசுக் கண்காணிப்பிலோ கட்டுப்பாட்டிலோ வராத கோவில்களும் இருக்கின்றன.



அரசுத் துறையின் பொறுப்பில் இருப்பதால்தான் தமிழகத்திலும் கேரளத்திலும் ஆலயங்களில் (பயிற்சி பெற்ற) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடிந்தது. தர்மகர்த்தாக்களாகிய அறங்காவலர்களின் நிர்வாகத்திலேயே இருக்கிற கோவில்களின் கருவறைகளுக்குள் மற்ற சாதியினரை நுழைய விடுவதில்லை, அவர்கள் அர்ச்சகராவதற்கான சட்டத்தையும் நுழைய விடுவதில்லை. அறநிலையைத் துறையை மூடிவிடத் துடிப்பவர்கள்  அனைத்துச் சாதி அர்ச்சகர் சட்டம் நீர்த்துப்போக விரும்புகிறவர்களாகவும் இருப்பது தற்செயலானதல்ல. 



இப்படிப்பட்ட துறைகளும் அவற்றின் கண்காணிப்பும் தலையீடும் இல்லாத மாநிலங்களில், ஒதுக்கப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர் வருகை தந்து வழிபாடு முடித்துச் சென்ற பின் அந்த இடம் கழுவிவிடப்பட்டுத் தீட்டுக் கழிக்கப்பட்ட செய்திகள் அவ்வப்போது வருகின்றன. வழிபட்டவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவரானாலும், தீட்டு தீட்டுதான்.



அறநிலையக் கோவில்களில் இப்படி நடக்க முடியுமா? தப்பித் தவறி யாராவது அப்படி அத்துமீறினால் சட்டம் பாயாமல் இருக்குமா?



இவையன்றி, கோவில்களின் அவ்வளவு பரந்த நிலங்களையும், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயையும் கையாள்வதில் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுமானால். அறநிலையத் துறையால் உடனே தலையிட முடியும் – அவ்வாறு தலையிட்டாக வேண்டிய கட்டாயத்தை மக்களால் ஏற்படுத்த முடியும். தர்மகர்த்தாக்கள்–அர்ச்சகர்கள்–ஊர்ப்பெரிய மனிதர்கள் கூட்டு என்ற தனியார் ஆளுகையில் உள்ள ஆலயங்களானால்  இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை எங்கே போய் சொல்வது?



முஸ்லிம்களின் வக்ஃப் வாரியங்களை மாநில அரசுதான் அமைக்கிறது. அவற்றின் உறுப்பினர்களை அரசுதான் நியமிக்கிறது. மத்திய வக்ஃப் சபையின் மூலம் வாரியங்களுக்கு நிதியும் வழங்கப்படுகிறது. ஆனால், பள்ளிவாசல்களின் தொழுகை நடைமுறைகளில், போதனைகளில் அரசு தலையிடாது. கிறிஸ்துவர்களின் தேவாலயங்களும் அவற்றின் சொத்துகளும் தனியார் அமைப்புகளின் கீழ்தான் இருக்கின்றன என்பது உண்மையே. பேராயர்கள், பாதிரிகள் நியமனங்களிலோ,ஜெபக் கூட்டங்களிலோ அரசு தலையிடுவதில்லை.


உறுதியளிக்கத் தயாரா?


அவற்றைப் போல இந்துக் கோவில்களும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்போர், முதலில் குறிப்பிட்ட அந்த சொத்து முறைகேடுகள், சமூக ஒதுக்கல்கள் முதலியவை நடக்காது என்று உறுதியளிக்கத் தயாரா?  பிற மதங்களைப் போலவே, அறநிலையத்துறை என இருக்கக்கூடாது என்போர், அந்த மத அமைப்புகள் ஊரெங்கும் ஏற்படுத்திய அனைவருக்குமான கல்வி நிறுவனங்களைப் போல இந்து சமய அமைபபுகளும ஏற்படுத்த வலியுறுத்துவார்களா? அப்படி வலியுறத்தினால் கல்வித் தெய்வமாக அவர்கள் வணங்கும் சரஸ்வதி மனம் கனியும்.


கடந்த காலங்களில், சிறுபான்மை மத நிறுவனங்களின் பள்ளிகளையும் கல்லூரிகளையும் விமர்சித்தபோது, “உங்கள் கோவில்களின் கோடிக்கணக்கான வருமானத்திலிருந்து அதே போல் எல்லா ஊர்களிலும் உருவாக்கினால் கல்விக்கூடங்களைத் தேடிக் குழந்தைகளும் வளர்ந்த மாணவர்களும் ஊர்  எல்லைகளைத் தாண்டும் நிலைமை வெகுவாகக் குறையுமே,” என்று கேட்கப்பட்டதுண்டு. பதில் வந்தததில்லை.



புகழ்பெற்ற பெரிய கோவில்களுக்குப் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள், வயல்களின் பயிர் விளைச்சல் வருவாய்கள், கட்டடங்களுக்கான வாடகை வசூல்கள் மூலம் பெருந்தொகை கிடைப்பது எல்லோருக்கும் தெரியும். அந்தத் தொகையிலிருந்து ஒரு பகுதி, சிறிய கோவில்களின் விளக்கேற்றுதல், பூசைகள் போன்ற நோக்கங்களுக்குச் செல்கிறது. எஞ்சிய பெரும்பகுதியில் கல்விக் கோவில்களைக் கட்டினால், எடப்பாடியார் சமாளிப்பாகச் சொன்னது போல, நிதியிழப்பு எற்படாது. அந்தப் பள்ளி–கல்லூரிகளின் மேம்பாட்டுக்காகவும், உரிய வசதிகளை உறுதிப்படுத்துவதற்காகவும், நவீன தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் செலவிட்டால், எதிர்காலத் தலைமுறைகள் கல்வி வளத்தோடு வளர்வார்களே!  ஆம், அது வீண் செலவல்ல, தலைமுறைகளுக்கான முதலீடு. அந்தந்தக் கோவில்களின் நாயகக் கடவுளர்களே கூட, தங்கள் பெயர்களில் அந்த முதலீடு செய்யப்படுவதை மெச்சி மெய்யான பக்தியென்று அருள்பாலிக்க மாட்டார்களா என்ன?


மற்ற நாடுகளில் இப்படி இல்லையே என்றும் கேட்கலாம்தான். ஏன், எப்போதும் மற்ற நாடுகளைத்தான் பின்பற்ற வேண்டுமா? நவீன இந்தியாவின் பெருமையாக இது மற்ற நாடுகளால் பின்பற்றப்படும் முன்னுதாரணப் பண்பாடாகப் பரிமளிக்கட்டுமே!


No comments: