Monday, 11 August 2025

நாஜிக்களின் வழியில்... நல்ல புத்தகங்கள் என்றால் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அலர்ஜி?


‘மீண்டும் மாநில அந்தஸ்து தர வேண்டும்’ என்ற ஜம்மு காஷ்மீரின் குரலுக்கெல்லாம் செவிசாய்க்காத ஒன்றிய ஆட்சியாளர்கள், ஏ.ஜி,.நூரணி, அருந்ததி ராய் உள்ளிட்டோர் எழுதிய 25 புத்தகங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் அதிரடியாகத் தடைவிதித்திருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்துக்கு நீண்டகால விடுப்பு கொடுத்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘கருத்து சுதந்திரம் என்றால் கிலோ என்ன விலை’ என்று கேட்கும் நபர்களின் அதிகாரமும், ஆதிக்கமும்தான் அங்கு கோலோச்சுகின்றன. அவர்கள்தான் 25 புத்தகங்களுக்கு அதிரடியாகத் தடை விதித்து, பறிமுதல் செய்ய ஆணையிட்டிருக்கிறார்கள்.

உமர் அப்துல்லா தலைமையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசு இருந்தாலும், அதிகாரங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இந்தச் சூழலில்தான், இந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவில் மாநில உள்துறை 25 நூல்களுக்கான பறிமுதல் ஆணையைப் பிறப்பித்தது.

பறிமுதல் பட்டியல்!

மூத்த வழக்குரைஞரும், ஆய்வறிஞரும், அரசமைப்புச் சட்ட வல்லுநருமான ஏ.ஜி. நூரணி, புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் உட்பட மதிப்புக்குரிய வரலாற்றாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆகியோர் எழுதிய புத்தகங்களை, ‘பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட’த்தின் பிரிவு 98, ‘பாரதிய நீதிச் சட்ட’த்தின் பிரிவுகள் 152, 196, 197 ஆகியவற்றின் கீழ் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது


தடை என்று அறிவிக்காமலே, ஒரு பத்திரிகைக்கோ, புத்தகத்திற்கோ, ஆவணத்திற்கோ “பறிமுதல்” ஆணை வெளியிடப்படுகிறபோது, காவல்துறையினர் அவற்றின் படிகளைக் கைப்பற்றலாம். அவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனை நடத்த ஒரு நீதிபதி ஆணையிடலாம். நடைமுறையில் இது தடை ஆணைதான் என்று யுஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்திற்குள் இருக்கும் அச்சுப் படிகளை அவர்களால் கைப்பற்றிவிட முடியும். ஆனால், ஜம்மு காஷ்மீருக்கு வெளியே நாட்டின் பிற பகுதிகளில் அந்த நூல்கள் கிடைக்குமே. அதைவிட, இணையத்தில் அவை எளிதாகக் கிடைக்குமே... அவற்றை என்ன செய்வார்கள்?

கைப்பற்றப்படும் புத்தகங்கள்

ஏ.ஜி. நூரணி எழுதிய “தி காஷ்மீர் டிஸ்பியூட் 1947–2012” (காஷ்மீர் சிக்கல் 1947–2012), எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் எழுதிய “ஆஸாதி – ஃபிரீடம், ஃபாசிசம், ஃபிக்ஸன்” (விடுதலை – சுதந்திரம் பாசிசம் புனைவு), அரசியல் ஆய்வாளரும் காஷ்மீர் நிலவர வல்லுநருமான சுமந்திரா போஸ் எழுதிய “காஷ்மீர் அட் தி கிராஸ்ரோட்ஸ்” (சாலைச்சந்திப்பில் காஷ்மீர்), பிரிட்டனைச் சேர்ந்த வாழ்க்கை வரலாறு எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான விக்டோரியா ஸ்கோஃபீல்ட்  எழுதிய “காஷ்மீர் இன் கான்ஃபிளிக்ட் –இந்தியா பாகிஸ்தான் அன் தி அன்எண்டிங் வார்” (மோதலில் காஷ்மீர் – இந்தியா பாகிஸ்தான் மற்றும் முடிவிலா யுத்தம்) ஆகிய புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

எஸ்ஸார் பட்டூல், இர்ஃபான் பட், முனாஸா ரஷீத், நடாஷா ராதர், சம்ரீனா முஸ்தாக் ஆகியோர் இணைந்து எழுதிய “டூ யு ரிமெம்பர் குனான் போஸ்போரா?” (குனான் போஸ்போராவை நினைவிருக்கிறதா?), ஏதெர் ஜியா, ஹேலி டஸ்சின்ஸ்கி, மோனா பான், சிந்தியா கெப்ளே முஹமது ஆகியோரின் “ரெசிஸ்ட்டிங் ஆக்குபேஷன் இன் காஷ்மீர்” (காஷ்மீரில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு), ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆராய்ச்சியாளரும் ஆசிய பசிபிக் பகுதி வல்லுநருமான கிறிஸ்டோபர் ஸ்னேடன் எழுதிய “இண்டிபெண்டன்ட் காஷ்மீர்” (சுதந்திர காஷ்மீர்), காஷ்மீரி அமெரிக்கப் பத்திரிகையாளரான பஷாரத் பீர் எழுதிய “கர்ஃபியூடு நைட்ஸ்” (ஊரடங்கு இரவுகள்)  ஆகியவையும் ஆகியவையும் பறிமுதல் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் லாஃபாயெட் கல்லூரி வரலாற்றுத் துறைப்  பேராசிரியர் ஹஃஸா கஞ்ஜ்வால் எழுதிய “காலனைஸிங் காஷ்மீர் – ஸ்டேட் பில்டிங் அண்டர் இண்டியன் ஆக்குபேஷன்” (காஷ்மீர் காலனியாக்கம் – இந்திய ஆக்கிரமிப்பின் கீழ் அரசுக் கட்டுமானம்), பத்திரிகையாளர் அனுராதா பாசின் எழுதிய “தி டிஸ்மேன்டில்டு ஸ்டேட் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் காஷ்மீர் ஆஃப்டர் ஆர்ட்டிகிள் 370“ (கலைக்கப்பட்ட மாநிலம் – 370 சட்டஉரைக்குப் பிந்தைய காஷ்மீரின் சொல்லப்படாத கதை),  தத்துவ அறிஞரும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை நிறுவியவருமான அபுல் அலா அல் மௌதூதி எழுதிய “அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்” (இஸ்லாத்தில் அறப்போர்). பத்திரிகையாளர் டேவிட் தேவதாஸ் எழுதிய “இன் ஸெர்ச் ஆஃப் எ ஃபியூச்சர் – தி ஸ்டோரி ஆஃப் காஷ்மீர்” (எதிர்காலத்தைத் தேடி – காஷ்மீரின் கதை)  ஆகிய நூல்களும் கைப்பற்றப்படுகின்றன. இதர புத்தகங்களும் அடங்கிய முழுப் பட்டியல் உடனடியாகக் கிடைக்கவில்லை.

பிரிவினைவாத இலக்கியங்களா?!

                                                ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர்


இந்தப் புத்தகங்கள் "(காஷ்மீர் பற்றி) தவறாகச் சித்தரிப்பதாகவும், பிரிவினைவாதத்தைப் பரப்புவதாகவும், இந்தியாவின் உயர்தன்னாளுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன,” என்று பறிமுதல் ஆணைக்கான காரணம் கூறப்பட்டிருக்கிறது.
அந்த ஆணையில்,


-வன்முறையிலும் பயங்கரவாதத்திலும் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு ஒரு முக்கியமான காரணம், பொய்யான கதையாடல்களும் பிரிவினைவாத இலக்கியங்களும் திட்டமிட்ட முறையில் பரப்பப்படுவதுதான்;

-பெரும்பாலும் வரலாற்று விமர்சனம் அல்லது அரசியல் விமர்சனம் போல வேடமிட்டு, உள்நாட்டில் தொடர்ந்து சுற்றிவருவதன் மூலம், இளைஞர்களைத் தவறாக வழி நடத்துவதிலும், பயங்கரவாதத்தைப் பெருமைப்படுத்துவதிலும், இந்திய அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதிலும் இவை ஒரு முக்கியப் பங்காற்றி வருவது விசாரணைகள் மற்றும் நம்பகமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றிச் சுட்டிக்காட்டுகின்றன;

-இவ்வகை எழுத்துகள் மனக்குறை, பாதிக்கப்பட்டதான  மனப்பான்மை,  பயங்கரவாத நாயகத்துவம் என்ற கலாச்சாரத்தை ஊக்குவித்து இளைஞர்களின் உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன;

-வரலாற்று உண்மைகளைத் திரித்தல், பயங்கரவாதிகளைப் பெருமைப்படுத்துதல், பாதுகாப்புப் படையினரை அவதூறு செய்தல், மதத் தீவிரவாதத்தைத் தூண்டுதல், அந்நியப்படுவதை ஊக்குவித்தல், வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் வழியமைத்தல் உள்பட, ஜம்மு–காஷ்மீர் இளைஞர்களிடையே தீவிரவாத மனப்பான்மையை வளர்ப்பதில் இந்நூல்கள் பங்களித்துள்ளன;

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நாஜிக்களின் வழியில்..!’

ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கைக்கு, ‘புத்தகங்களை எரித்த நாஜிகளின் பாதையில் இவர்கள் பயணிக்கிறார்கள்’ என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

“எதிர்காலத்தைத் தேடி –காஷ்மீரின் கதை” புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் தேவதாஸ், “புத்தகங்களைத் தடை செய்வது பண்பாட்டிற்கும் ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்திற்கும் முரணானது,” என்கிறார். முன்பு பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி சமாதானத்திற்கும் தீர்வுகளுக்கும் மேற்கொண்ட முயற்சிகளைத் தனது புத்தகம் வலுவாக ஆதரிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் பிறந்து, பின்னர் பாகிஸ்தானில் வாழ்ந்தவரான அல் அபுல் அலா மௌதூதி 1979-ல் காலமானார். அவருடைய புத்தகம், போர் குறித்து மற்ற சில மதங்களும் இஸ்லாமும் என்ன கூறுகின்றன என்று ஒப்பிடுகிறது. ஏ.ஜி. நூரணி சமீபத்தில் காலமானார். அவரது புத்தகம், காஷ்மீர் பிரச்னைகளின் வரலாற்றுப் பின்னணியையும், தாக்கங்களையும் ஆராய்கிறது என்கிறார்கள் திறனாய்வாளர்கள்.

                                                        முதலமைச்சர் உமர் அப்துல்லா

மாநிலத்தை ஆளும்  தேசிய மாநாடு கட்சி, ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் பற்றிய கவலைகளை இந்தத் தடை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருக்கிறது. “இந்தப் புத்தகங்கள் வன்முறையைத் தூண்டியதற்கோ பயங்கரவாதத்தைப் பெருமைப்படுத்தியதற்கோ ஆதாரம் இருக்குனால் அரசின் தடை நடவடிக்கை நியாயமானதே. ஆனால் ஏ.ஜி. நூரணி போன்ற மரியாதைக்குரிய எழுத்தாளர்கள் நன்கு ஆராய்ந்து, விமர்சனப்பூர்வமாக உருவாக்கிய புத்தகங்களைத் தடை செய்வது ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்துகிறது,” என்று தெரிவித்திருக்கிறது.

சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு தனது அறிக்கையில், “இந்தத் தணிக்கை எதேச்சாதிகாரத்தின் மற்றுமொரு வெளிப்பாடும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான ஆணவமிக்க  தாக்குதலுமேயாகும். ஒன்றிய பாஜக அரசின் பிரதிநிதியாக துணைநிலை ஆளுநர், இந்திய அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளை வலிந்து கட்டுப்படுத்துகிறார். புத்தகங்கள் மீதான தடையை உடனடியாக விலக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரின் மாநிலத் தகுதியை முழு ஜனநாயக உரிமைகளுடன் இக்கணமே  ஒப்படைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு முழு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே ஜம்மு காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும்," என்று  கூறியுள்ளது.

உரிமையைப் பறிக்கலாமா?

ஆணை பிறப்பிக்கப்பட்ட மறுநாளே சுமார் 400 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஒரு புத்தகம் பறிமுதலாகிறது என்றால்,  எழுத்தாளரின் கருத்து வெளிப்பாட்டு உரிமையும் பதிப்பாளரின் வெளியீட்டு உரிமையையும், மக்களின் கருத்தறியும் உரிமையும் பறிக்கப்படுகின்றன என்று பொருள்.


உண்மையாகவே ஒரு புத்தகம் இளைஞர்களைத் திசை திருப்பக்கூடியதாக இருக்கிறதென்றால் நடவடிக்கை எடுக்கக்கூடாதா? எடுக்கலாம், தடை செய்வதன் மூலமாக அல்ல, உண்மைகள் என்ன என்று மக்களிடையே வெளிப்படையாகப் பேசுவதன் மூலம். குறிப்பிட்ட புத்தகத்தை அம்பலப்படுத்தும் வகையிலும் பேசலாம். அதைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். முடிவெடுப்பதை மக்களிடம் விட்டுவிட வேண்டும். மக்கள் தாங்களாக முடிவெடுக்கும் உரிமையை  ஒருபோதும்  தட்டிப்பறிக்கக்கூடாது.

                                                                       ஆதவன் தீட்சண்யா

“காஷ்மீர் பிரச்சினையை உணர்ச்சிவசப்படாமல் அரசியல்ரீதியாக அணுக வேண்டும் என்பதற்கு அம்பேத்கர் எழுதிய நூல்தான் மூலப் பாடம்,” என்று கூறுகிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா.மேலும் அவர், “இந்த 25 நூல்களை அதன் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு மாறாகப் பழிபோட்டுத் தடை செய்யப்பட்டுள்ளன. அறிவுப் பரப்பல் நோக்கத்துடனும், அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிற கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஆதாரமாகக் கொண்டும் எழுதப்பட்ட புத்தகங்களைக் கண்டு ஒன்றிய அரசு அஞ்சுகிறது. ஒரு புத்தகமோ ஓவியமோ திரைப்படமோ வெளிப்படுத்தும் கருத்தில் உடன்பாடு இல்லையென்றால் அதை விமர்சிக்கலாம் அல்லது புறக்கணிக்கலாமே தவிர தடை செய்யக்கூடாது என்று நாட்டின் பல்வேறு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன. அதை ஒன்றிய அரசு மதிக்கவில்லை,” என்கிறார்.

அனல்வாதம் புனல்வாதம்!

எதிர்வாதம் செய்யும் நூல்கள், அனல்வாதம் புனல்வாதத்தில் போக்கடிக்கப்பட்ட கதைகள் உண்டு. வரலாறு நெடுகிலும், சர்வாதிகாரிகள் புத்தகங்களை எரித்திருக்கிறார்கள். நாடு பிடிக்கும் போர்களில், ஊர்களுக்குள் நுழையும் படைகள் முதலில் அழித்தது நூலகங்களைத்தான். ஜெர்மனியின் ஹிட்லர் படைகள் நூலகங்களை எரித்தன. இலங்கையில் தமிழ் மக்களின் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இப்படியான அத்தியாயங்கள் பல நாடுகளிலும் உண்டு.

                                                               எரிக்கப்பட்ட யாழ் நூலகம்

வரலாற்றுப் பாடம் என்னவென்றால்,  ஒடுக்குமுறைகளால் புத்தகங்கள் மறைந்து ஒழிந்துபோகவில்லை என்பதே. சொல்லப்போனால் அரசுகளின் ஆணைகள் தடை செய்யப்பட்ட புத்தகங்களைத் தேடவே வைத்துள்ளன. பறிமுதல் ஆணைச் செய்தியைத் தொடர்ந்து இணையத்தின் தரவுத் தளங்களில் அந்தப் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் அதிகமாகத் தேடப்பட்டிருக்கின்றன என்று கூகுள் ஜெமினி தெரிவிக்கிறது.

புத்தகத்தை எரிக்கும் ஒரு எதிர்கால அரசாங்கத்தையும், அதன் தீயெரிப்புப் பணியாளரையும் வைத்து அமெரிக்க எழுத்தாளர் ரே பிராட்பரி எழுதிய ‘ஃபாரன்ஹீட்–451’ புத்தகம் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றது. (புத்தகத் தலைப்பு  காகிதம் எரிந்து சாம்பலாகிற வெப்ப அளவைக் குறிப்பதாகும்). ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ என்ற நாவலும் அரசாங்கங்களின் புத்தக பீதியைப்  பேசியது. மார்க்கஸ் ஜூஸாக் எழுத்தில் வந்த ‘தி புக் தீஃப்’ என்ற நாவல், நாஜி ஜெர்மனியில் புத்தகங்களை மீட்கும் சிறுமியை நாயகியாக்கியிருக்கிறது.

ஆதிக்க சக்திகளின் அச்சம்!

வரலாறையும் பகுத்தறிவையும் சமத்துவத்தையும் பேசுகிற புத்தகங்கள் எப்போதுமே ஆதிக்க சக்திகளுக்கு, தங்களுக்கு எதிராக மக்கள் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.  வளர்ந்துவிட்டால் தனக்கு ஆபத்து என்று அஞ்சி பாலகன் கண்ணனை மன்னன் கம்ஸன் கொல்ல முயன்றான், குழந்தை இயேசுவை அரசன் ஏரோது கொல்லத் திட்டமிட்டான். அது போல இப்படிப் புத்தகங்களை முடக்கி மக்கள் படிக்கவிடாமல் தடுக்கிற திருக்காரியம் உலகமெலாம், காலமெலாம் தொடர்கிறது. 

இளம் மனங்கள் தவறான திசைவழியில் திருப்பப்படுவதைத் தடுத்தாக வேண்டும். பயங்கரவாதம் வளர்க்கப்படுவதை முறியடித்தாக வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான வன்முறை தூண்டப்படுவதை நிறுத்தியாக வேண்டும். இளைஞர்களைச் சரியான பாதைக்கு மீட்டாக வேண்டும். ஆனால், அறிவைத் தேடும் உரிமையை மறுத்து இவை எவற்றையும் எந்த நாடும் சாதித்ததில்லை. சுதந்திரச் சூழல்களை, சம வாய்ப்புகளை நல்லிணக்கக் களங்களை உறுதிப்படுத்துவதே நிச்சய வழி. இந்த உண்மை, அதிகார மமதையில் ஆட்டம்போடும் ஆட்சியாளர்களின் மூளையில் உரைக்க வேண்டும்!

[0]

விகடன் டிஜிட்டல் பதிப்பில் எனது கட்டுரை


No comments: