Thursday, 21 August 2025

பிரதமர் மோடியின் `சுதேசி' அழைப்பு, டொனால்டு ட்ரம்ப்பின் `வரி' அதிகாரத்துக்குப் பதிலடியா?


சுதந்திர தினக் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்ந்தது சர்ச்சைக்கு உரியதாகியிருக்கிறது. அதே உரையில் அவர் விடுத்த ஒரு வேண்டுகோள், விவாதத்துக்கு உரியதாக இருக்கிறது. அதாவது, ‘இந்தியாவில் தயாராகும் பொருள்களையே குடிமக்கள் வாங்க வேண்டும்’ என்பதுதான் அந்த வேண்டுகோள். இதே வேண்டுகோளை, இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைத் திறந்துவைத்த நிகழ்ச்சியிலும் அவர் விடுத்திருக்கிறார்.

"இந்தியாவில் தயாராகும் பொருள்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு குடிமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இந்தியர்கள் என்றால் இந்தியாவில் தயாராகும் பொருள்களையே வாங்குவீர்" என்றார் பிரதமர். மேலும், "கடைக்காரர்களுக்கும், வணிகர்களுக்கும்கூட ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு காலகட்டத்தில் நீங்கள் வேறு நாடுகளில் தயாரான பொருள்களை விற்பனை செய்துவந்தீர்கள். அதில் அதிக லாபம் கிடைத்தது ஒரு காரணமாக இருக்கலாம். இப்போது நீங்களும் எனது இந்த முன்முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ட்ரம்ப் டாரிஃபிசம்!

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் இவ்வாறு சொந்தத் தயாரிப்புகளுக்கு ஊக்கமளிப்பது வரவேற்கத்தக்கது. விடுதலை இயக்கத்தின்போது காந்தி இதை ஒரு போராட்ட அறைகூவலாகவே விடுத்தார். அவர் பிரிட்டிஷ் தயாரிப்புகளைப் புறக்கணிக்கச் சொன்னதும், அந்நியத் துணிகள் குவிக்கப்பட்டு தீயிடப்பட்டதும் வரலாறு.

அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு ட்ரம்ப் தனது நாட்டுப் பொருளாதாரத்தை மீட்கும் வழி என்று, மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரி விதித்து வருகிறார் – அல்லது அறிவித்து வருகிறார். அந்த அறிவிப்பில் உள்நாட்டுப் பொருளாதாரம், உலக அரசியல் ஆகிய இரண்டும் இருக்கின்றன.

 

ட்ரம்ப் கருத்துப்படி, கடந்த காலங்களில் அமெரிக்கா பிற நாடுகளுடன் செய்துகொண்ட பல வர்த்தக ஒப்பந்தங்கள் நியாயமற்றவை. அவை அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்து, வேலைகளை வெளிநாடுகளுக்கு நகர்த்திவிட்டன. சமநிலையற்ற இந்த நிலைமையை மாற்ற அதிகமான இறக்குமதி வரி ஒரு கட்டாயத் தேவை. ஏற்றுமதிகளை விட இறக்குமதிகளின் மதிப்பு அதிகமாக இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறை நிலைமையை பலவீனம் என்று கருதுகிறார் ட்ரம்ப்.

அதிக வரிகளை விதிப்பதன் மூலம், இறக்குமதிகளைக் குறைக்கலாம், அல்லது அந்தப் பொருள்களின் விலைகள் உயரச் செய்யலாம், அவற்றின் நுகர்வைக் குறைக்கலாம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கலாம் – இதுவே அவருடைய திட்டம். இதைத் தனது அரசியலோடும் சேர்த்துக்கொள்கிறார். இதுவே ட்ரம்ப் டாரிஃபிசம்.

ட்ரம்புக்குப் பதிலடியா?

அமெரிக்காவிலேயே சிலர், ட்ரம்ப் எதிர்பார்க்கிற பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது என்கிறார்கள். இந்த வரிகள் அமெரிக்க நுகர்வோர் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் பொருட்களின் விலை அதிகரிக்கவே இட்டுச் செல்லும். ட்ரம்ப்பின் தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் பதிலடியாக, தங்கள் மண்ணில் இறக்குமதியாகும் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரிகளை விதிக்கும். இது அமெரிக்காவின் ஏற்றுமதிகள் மேலும் பாதிக்கப்படுவதற்கே வழி செய்யும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். வேறு சிலர் ட்ரம்ப் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.



இந்த நிலையில், இங்கே "உள்நாட்டுப் பொருள்களையே வாங்குவீர்" என்ற ‘சுதேசி’ அழைப்பு ட்ரம்ப்புக்குப் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், உணர்ச்சிகர கோஷத்தால் மட்டும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை நிலைப்படுத்திவிட முடியுமா? உலகச் சந்தை நிலவரங்களையும் நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையையும் புறக்கணித்துவிட முடியாது. அதையெல்லாம் விட மிக முக்கியம், எளிய இந்தியக் குடிமக்களின் வருவாய் நிலையில் இந்த கோஷம் எதிரொலிப்பின்றிக் கடந்துவிடக்கூடும்.

எந்தவொரு நாடும் முழுக்க முழுக்கத் தன்னிறைவு அடைவது நடைமுறையில் சாத்தியமில்லை. ஒரு நாடு சில பொருட்களின் உற்பத்தியில் சிறந்த பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்கும். இன்னொரு நாடு வேறு சில பொருள்களைத் தயாரிப்பதில் வல்லுநராக இருக்கும்.


அந்த நாடுகளின் புவியியல் தன்மை, வணிகம் சார்ந்த வரலாறு உள்ளிட்டவை இந்தத் தனித்துவத்தின் பின்னணியில் இருக்கும். இந்தியா வாகனங்கள், மின்னணுக் கருவிகள், மருந்துகள், பொறியியல் பொருள்கள் ஆகியவற்றையும் மற்ற நாடுகளுக்கு அனுப்புகிறது. ஆயினும் தொன்றுதொட்டு வரும் வழக்கமாக, தானியங்கள், இறைச்சி உள்ளிட்ட வேளாண் உற்பத்திகளும், துணிகள், ஆடைகள் உள்ளிட்ட நெசவுத் தயாரிப்புகளும் மிக அதிகமாக ஏற்றுமதியாகின்றன.

அதே போல, கச்சா எண்ணை, மின்னணுப் பொருள்கள், மருத்துவ சோதனைக் கருவிகள் உள்ளிட்ட பலவகை எந்திரங்கள், தங்கம், நிலக்கரி, வேதிப் பொருள்கள், இரும்பு வகைகள் ஆகியவற்றையும், அவற்றுக்கான மூலப் பொருட்களையும் இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டியிருக்கிறது. தன் தேவைகளுக்காக முழுக்க முழுக்கத் தனது சொந்த உற்பத்திகளையும் தயாரிப்புகளையும் மட்டுமே சார்ந்திருக்கிற நாடு என உலகில் எதுவும் இல்லை.

கனவு விற்பனை

இப்போது ட்ரம்ப் டாரிஃபிச மிரட்டலைத் தொடர்ந்து பிரதமர் மோடி மேற்படி வேண்டுகோளை விடுத்திருக்கிறார். மக்கள் அதை நடைமுறைப்படுத்தினால் எதிர்காலத்தில் விரிவானதொரு பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடலாம் என்ற கனவு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலத்திலும் இந்தக் கனவுக்காகப் பல்வேறு கட்டங்களிலும் கடைவிரிக்கப்பட்டதுண்டு, ஆனால் கொள்வாரில்லாமல் கலைந்துபோனதே நாட்டின் அனுபவம்.



முதலிலேயே கூறியது போல, விடுதலைப் போராட்ட வடிவங்களாக வெளிநாட்டுப் பொருள்கள் புறக்கணிப்பையும் சுதேசி இயக்கத்தையும் ஏற்றுக்கொண்ட மக்கள், சுதந்திர இந்தியாவில் அதைப் பொருட்படுத்தவில்லை –இன்று வரையில். அதை வெறும் அந்நியப் பொருள் மோகம் என்று மேலோட்டமாக விமர்சித்துவிட முடியாது.

ஒன்றிய ஆட்சிக்கு பா.ஜ.க வந்த ஆண்டிலேயே, 2014 செப்டம்பர் 25-ல் ‘இந்தியாவில் தயாரிப்பீர்’ (மேக் இன் இந்தியா) என்ற கோஷத்தை பிரதமர் மோடி எழுப்பினார். அதற்காக முதலீட்டு உதவி, ஊக்கத் தொகை முதலியவற்றை அரசு வழங்கியது. தொடக்கத்தில் சில துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு ‘மேக் இன் இந்தியா’ என்ன ஆனது? திட்டத்தின் இலக்குகளை அது அடைந்ததா?

அரசுத் தரப்பில், சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தன என்று கூறப்படுகிறது. ஆனால், நேரடியான தொழில் முதலீடுகளாக அல்லாமல், நிதி முதலீடுகளாகவே (பங்கு முதலீடுகளாக) அவை வந்தன. அத்தகைய முதலீடுகளை எந்த நேரத்திலும் உருவிக்கொள்வார்கள் என்று அப்போதே வல்லுநர்கள் எச்சரித்தார்கள். பெருமளவுக்கு அப்படித்தான் நடந்தது.

வேலைவாய்ப்பு பெருகியதா?

இது குறித்துப் பேசும் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, “பொருள்களுக்கான தேவைப்பாடுதான் (டிமாண்ட்) அவற்றின் சந்தை நிலவரத்தைத் தீர்மானிக்கிறது. அந்தத் தேவைப்பாடு ஒருவரது வருமானத்தையும் வாங்கும் சக்தியையும் சார்ந்திருக்கிறது. நுகர்வை விரிவுபடுத்த இன்று குறிப்பாக, ஜி.எஸ்.டி வரி விதிப்புகளைக் குறைப்பது ஒரு முக்கியமான தேவை. பிரதமர் தனது உரையில் அது பற்றிக் கூறியிருக்கிறார். உண்மையாகவே குறைக்கப்படுமா, எந்த அளவுக்குக் குறைக்கப்படும் என்று அறிவிப்பை நடைமுறைப்படுத்தும்போதுதான் தெரிய வரும்” என்கிறார்.


மேலும், "அமெரிக்க நிறுவனங்கள் உள்பட பல வெளிநாட்டுக் குழுமங்கள் இங்கே கால்பரப்புவதற்கு இடமளித்துவிட்டார்கள். அவர்களோ தங்கள் தயாரிப்புகளை இந்த நாட்டு மக்களுக்கு விநியோகிப்பதை விட, இங்கே மலிவான கூலியில் தயாரித்து, தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்வதில்தான் முனைப்புக் காட்டினார்கள். அது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரிதாக உதவவில்லை. ஆகவே, நுகர்வோராகிய உழைப்பாளி மக்கள் பொருள்களை வாங்குவது அதிகரிக்க வேண்டும் என்றால், வேலைவாய்ப்புகளைப் பெருக்கினால்தான் அது நடக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

"நிலவிநியோகம் போன்ற அடிப்படையான, உற்பத்திக் கருவிகளை மக்களுக்குப் பரவலாக்குகிற நடவடிக்கைகள் இங்கே அக்கறையோடு செயல்படுத்தப்படவில்லை. வாங்கும் சக்தி குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். அரசாங்கத்தின் நிதிநிலையில் பற்றாக்குறை என்பது இருக்கக்கூடாது என்ற ஒரு மேம்போக்கான, எதார்த்தமற்ற கொள்கையை வைத்திருக்கிறார்கள். பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு, கார்ப்பரேட்டுகள், பெருமுதலாளிகள், செல்வந்தர்களுக்கு வரி விதிப்பதுதான் உறுதியான வழி. அதைச் செய்வதற்கு மாறாக, மக்கள் புழங்குகிற பொருள்களுக்குத்தான் பல முனைகளிலும் வரி விதிக்கிறார்கள்.

மக்கள் வாழ்க்கைத் தேவைக்கான தவிர்க்கவியலாத பொருள்களைத் தவிர மற்ற நுகர்வுகளையும் செலவுகளையும் குறைக்கத்தானே செய்வார்கள்?" என்ற ஆத்ரேயாவின் இந்தக் கேள்வி மிக அடிப்படையானது. இதற்கு ஆட்சியாளர்களும், அரசின் பொருளாதாரக் கொள்கைப் பரப்புரையாளர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?மாத வருமானம் ரூ.23,000 போதுமா?

உற்பத்தி விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசுக் கொள்கைகள், வேலை வாய்ப்புகளையோ வேலைப் பாதுகாப்புகளையோ விரிவுபடுத்துவதாக இல்லை. கடந்த ஆட்சிகளிலும் நிலவிய இந்தக் காட்சியை மாற்ற இன்றைய ஆட்சியாளர்கள் எவ்விதக் கொள்கை மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆகவே, பெரும்பகுதி மக்களின் நுகர்வு சார்ந்த உள்நாட்டுச் சந்தை சுருங்கியே இருக்கிறது. "முந்தியெல்லாம் பண்டிகைக்கு எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு செட் புது டிரஸ் எடுப்போம். இந்த வருசம் ஒரு செட் போதும்னு முடிவு செஞ்சுட்டோம்" - என்று அங்கலாய்க்கிற குடும்பங்களை எங்கும் காணலாம்.

"லீவு கிடைக்கிறப்ப எல்லாம் குடும்பத்தோட சொந்த ஊருக்குப் போயிடுவோம். இப்ப முக்கியமான விசேஷங்களுக்கு மட்டும்தான் போறோம்." இந்த ஏக்கக் குரலை எங்கும் கேட்கலாம். "வீட்டு வாடகைக்கும் ஸ்கூல் ஃபீஸ் கட்டுறதுக்குமே சம்பளத்திலே முக்கால்வாசி போயிடுது. வசதியான வாழ்க்கைக்கான பொருள்களை டிவி விளம்பரத்திலே பார்க்கிறதோட சரி!" இந்தப் பெருமூச்சை எங்கும் உணரலாம்.

இன்றைய நிலவரப்படி நாடு தழுவிய அளவில் சராசரி தனிமனித வருமானம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,14,710 என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது. அதாவது, மாதத்திற்கு சுமார் ரூ.9,559. இந்தியக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.23,000 என்று ‘மணி 9’ என்ற ஆய்வு நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் மக்கள்தொகை அடிப்படையில் ஒரு குடும்பத்தில் சராசரியாக 4.2 பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரி தனிமனித வருமானம் 5,500 ரூபாய்க்கும் குறைவு. தேசிய தனிமனித வருமானத்தை விட கிட்டத்தட்ட பாதியளவு குறைவு.

வாங்கும் சக்தி இல்லையே..!

பிரதமர் அவர்களே, இந்த நிலைமைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிற மக்கள் எப்படி உள்நாட்டுப் பொருள்களை வாங்குவார்கள்? அவர்கள் பெரிதாக வாங்காதபோது வணிகர்களும் கடைக்காரர்களும் எந்த அளவுக்குப் பொருள்களை வாங்கிவைப்பார்கள்? நியாயமானதே என்றாலும், உங்கள் கோஷத்தின் உணர்வு யாரைச் சென்றடையும் – சுதேசி அரசியல் பேசுகிறவர்களைத் தவிர?


இப்படிப்பட்ட பொருளாதார நிலையில் உள்ளவர்கள், எந்த நாட்டுப் பொருள்களானாலும் அவற்றின் விலையைப் பற்றியே பெரிதும் கவலைப்படுவார்கள். வாங்கும் சக்தி குறைவாக இருக்கும்போது, உள்நாட்டுத் தயாரிப்புகளின் விலை அதிகமாக இருந்தால், அவர்கள் தயங்குவார்கள், தவிர்ப்பார்கள்.. இதன் விளைவாக, உள்நாட்டுப் பொருட்களுக்கான தேவை குறைந்து, உள்நாட்டுச் சந்தை வலுவிழக்கும்.

இதுதானே பொருளாதாரத்தில் ஒரு அடிப்படைப் பாடம்? ட்ரம்ப் டாரிஃபிசக் கட்டாயங்களால், பல நாடுகளிலும் இதே போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகளையே விற்கிற, வாங்குகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். அப்போது, இந்திய உள்நாட்டுத் தயாரிப்புகள் தேங்கிப் போகுமானால், அதை மக்களின் வருவாய் நிலை ஈடுகட்டுமா?


ட்ரம்ப் கெடுபிடியால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்கள் (2.5 லட்சம் கோடி ரூபாய் முதல் 4.2 லட்சம் கோடி ரூபாய் வரையில்) தேக்கமடையலாம் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வரிகள் இந்தியாவில், குறிப்பாக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடுத்தர, சிறு, குறு தொழில்கள் மீதுதான் வலுத்த அடியாக விழும். ஏற்கெனவே கார்ப்பரேட் ஆலிங்கணங்களால் திணறிக்கொண்டிருக்கும் இத்தகைய தொழில்களைப் பாதுகாக்க அடிப்படையான, ஆக்கப்பூர்வமான, திட்டவட்டமான திட்டங்கள் தேவை. அவற்றை உருவாக்காத வரையில், கடந்த காலத்தின் பல கோஷங்கள் போல இதுவும் கடந்துவிடும், பிரதமர் அவர்களே..!


[0][0][0]

விகடன் பிளஸ் டிஜிட்டல் பதிப்பில் (ஆகஸ்ட் 21) எனது கட்டுரை 

No comments: