Sunday, 17 August 2025

‘சோசலிச’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகளுடன் ‘கூட்டாட்சி’ - அரசமைப்பு சாசனம் தொடர்பாக ஒரு புதிய விவாதம்!


 

இந்திய அரசமைப்பு சாசனத்தின் முகவுரையிலிருந்து ‘சோசலிச’, ‘மதச்சார்பற்ற’ என்ற சொற்களை நீக்க வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் வலியுறுத்தும் நிலையில், இந்த இரு சொற்களுடன் கூடுதலாக ‘கூட்டாட்சி’ என்ற சொல்லை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் எழுந்திருக்கிறது.

‘மதச்சார்பற்ற’ (Secularism), ‘சமூகவுடைமைத்துவ’ (Socialism) ஆகிய இரண்டு சொற்களையும் இந்திய அரசமைப்பு சாசனத்தின் முகவுரையிலிருந்து நீக்குவதற்கு ஒரு பகுதியினர் தொடர்ச்சியாக முயன்று வருகிறார்கள். இந்த நிலையில், ‘அந்த இரண்டு சொற்களையும் நீக்க வேண்டியதில்லை.. மாறாக, ஒரு சொல்லைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டும்’ என்ற, கவனத்தைக் கவரும் புதிய கருத்து ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கிறது.  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் சுகதா போஸ், ‘கூட்டாட்சி’ (Federal) என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும் என்ற விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார்.


அரசமைப்பு சாசன முகவுரையிலிருந்து மதச்சார்பின்மை, சமூகவுடைமை ஆகிய சொற்களை நீக்குவது பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள். 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம் அந்த இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்ட நாளிலிருந்தே இதைச் சொல்லிவரும் அவர்கள், கடந்த ஜூன் மாதத்திலும் சொன்னார்கள். அது நிறைவேறுமா என்பதை விட, அதை ஒரு விவாதப்பொருளாகத் தக்கவைத்திருக்கும் நோக்கத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அரசமைப்பு சாசனம், குடிமக்களுக்கு எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. நுட்பமாகப் பார்த்தால் எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருக்கும் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. அதே வேளையில், நாட்டின் அரசு எந்த மதத்தையும் சார்ந்ததாக இருக்காது, அனைவருக்கும் உரியதாகவே இருக்கும் என்றும் தெளிவுபடுத்துகிறது.


சேர்க்கப்பட்டதன் பின்னணி!


சாசனத்தின் அந்த உள்ளார்ந்த கொள்கையைத் ஏற்க மறுப்பவர்களால் எதிர்காலத்தில் அது சிதைக்கப்படலாம், ஒற்றை மதம் சார்ந்த அரசாக மாற்றப்படலாம் என்ற கவலையோடு, அதைத் தடுப்பதற்காக முகவுரையில் “மதச்சார்பற்ற” என்ற அடையாளத்தைச் சேர்த்தார் பிரதமர் இந்திரா காந்தி. 1976-ல் நாடு முழுவதும் அவசரநிலை ஆட்சி நடந்து கொண்டிருந்த சூழலில் இதைச் செய்தார். ஆயினும், அவசரநிலை ஆட்சி விலக்கப்படுவதற்காகப் போராடிய ஜனநாயக சக்திகள், அந்த அடையாளம் விலக்கப்பட வேண்டும் என்று கோரவில்லை.

அதே போலத்தான், ‘கார்ப்பரேட் பேரரசர்’களின் போர்க்களமாக இந்த நாடு கைப்பற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் ‘சமூகவுடைமைத்துவ’ என்ற அடையாளம் சேர்க்கப்பட்டது. ‘அப்படிச் சேர்த்ததால் இந்தியா சோசலிச நாடாகிவிட்டதா?’ என்று கேட்டால், இல்லைதான். ஆனாலும், நாட்டின் பொருளாதாரத்திலும், சமூகநீதியிலும், ஒரு மையமாக செயலாற்றி வருகிற அரசுத்துறை சேவைகளையும், பொதுத்துறை நிறுவனங்களையும் காப்பாற்றி வைத்திருப்பதில் அந்த அடையாளத்திற்குப் பங்கு இருக்கிறது.

அனைத்து மக்களுக்குமான நாடாகத் திகழ்வதையும், அரசுத்துறை சேவைகள் தொடர்வதையும் பாதுகாக்கப் போராடுகிறவர்களுக்கு முகவுரையின் இவ்விரு சொற்களும் முக்கியத் துணையாக இருக்கின்றன. இந்தச் சொற்களை நீக்க வற்புறுத்துவோரிடம், ‘எல்லா மக்களுக்கும் சொந்தமான நாடாக இருப்பதை நிராகரிக்கிறீர்களா?’, ‘கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கும் மக்கள் தனியாருக்கு விலை கொடுக்கக் கூறுகிறீர்களா?’ என்ற கேள்விகளைக் கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு, ‘1950-ல் நிறைவேற்றப்பட்ட மூலசாசனத்தில் இவ்விரு வார்த்தைகளும் இல்லை. இடையில் சேர்க்கப்பட்டதால் நீக்கக்கோருகிறோம்’ என்று அவர்கள் சொல்வார்கள்.

வரலாற்றுப் பின்னணி!

இந்த இரு சொற்களையும் நீக்க வேண்டும் என்று அவ்வப்போது அவர்கள் கிளம்புவதும், அரசின் மதச்சார்பின்மை, சமூகவுடைமைத்துவ இலக்கு ஆகியவற்றை வலுவாக ஆதரிப்பவர்கள் அதை எதிர்ப்பதும் தொடர்கின்றன. இந்த நிலையில்தான், புதிதாக ஒரு சொல்லை சேர்க்க வேண்டும் என்ற கருத்தை பேராசிரியர் சுகதா போஸ் முன்வைத்திருக்கிறார். செக்யூலர், சோசலிஸ்ட் என்ற இரண்டு சொற்களை நீக்க வேண்டாம்... மாறாக, “கூட்டாட்சி” (ஃபெடரல்) என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். (முகவுரையில் ஒரு சொல்லைச் சேருங்கள், இரண்டு சொற்களை நீக்காதீர்கள்” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் ஆகஸ்ட் 14 இதழில் வெளியாகியுள்ளது)


வரலாற்றுப் பின்னணியோடு இந்தக் கருத்தைப் பொதுவெளிக்கு அவர் கொண்டுவந்திருக்கிறார். ‘1947-ல், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காலனி எதிர்ப்புச் சிந்தனைகளிலிருந்து உருவெடுத்திருந்த மிகச் சிறந்த, தொலைநோக்குள்ள கருத்தாக்கங்கள், காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுக்கான அதிகாரப் போட்டியில் அடிபட்டுப் போயின. அவற்றுள் முக்கியமான ஒன்று கூட்டாட்சி அடிப்படையிலான மையத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையேயான இன்றியமையாத அதிகாரப் பகிர்வாகும்’ என்று அந்தக் கட்டுரை தொடங்குகிறது.


இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை மத அடிப்படையில் நடந்ததால் ஏற்பட்ட கசப்பும் கலக்கமும், தலைவர்களுக்குக் கூட்டாட்சிக் கோட்பாடு சார்ந்த ஆக்கப்பூர்வமான கருத்துகள் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன என்கிறார் அவர். மேலும் பிரிவினைகளுக்கு இட்டுச் செல்லுமோ என்ற கவலையும், அச்சமும், சம அதிகாரங்கள் உள்ள மாநிலங்களின் கூட்டாட்சி பற்றிய கருத்தாக்கத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள விடாமல் தடுத்துவிட்டன போலும்.

அன்றே வந்த கோரிக்கை!

அரசமைப்பு சாசன சபையின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பொருளாதார வல்லுநருமான கே.டி. ஷா, 1948 நவம்பர் 15 அன்று நடந்த கூட்டத்தில், முதலாவது சட்ட உரைக்கான ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். “இந்தியா மாநிலங்களின் மதச்சார்பற்ற, கூட்டாட்சி முறையிலான, சோசலிச ஒன்றியமாக இருக்கும்” என்று அந்த முன்மொழிவு கூறியது.

அந்தக் கட்டத்தில், அரசமைப்பு சாசனத்தின் முகவுரை விவாதத்திற்கு வந்திருக்கவில்லை. ஆகவே, அந்தத் திருத்தத்தின் மூலம் ஒன்றைத் உறுதிப்படுத்த அவர் விரும்பினார். ‘ஒன்றியம் (யூனியன்) என்ற சொல், ஓர் ஒற்றையாட்சி முறை என்ற எண்ணத்தை யாருக்கும் ஏற்படுத்திவிடக்கூடாது. ஆகவே, முதல் சட்ட உரையிலேயே, அதன் முதல் பிரிவிலேயே இது ஒரு கூட்டாட்சி ஒன்றியம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ என்று அவர் கூறினார்.

அதற்கு, தனது இரண்டு மறுப்புக் கருத்துகளை சாசன வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தெரிவித்தார். ‘அரசமைப்பு சாசனம் என்பது அரசின் பல்வேறு அங்கங்களை முறைப்படுத்தும் நோக்கத்திற்கான ஒரு கருவி மட்டுமே. அரசின் கொள்கை என்னவாக இருக்க வேண்டும், சமுதாயம் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்று சாசனத்திலேயே கூறிவிட முடியாது’ என அவர் கூறியதாக சுகதா போஸ் தெரிவிக்கிறார். “மதச்சார்பற்ற”, “கூட்டாட்சி முறை” என்ற சொற்களைச் சேர்ப்பது பற்றி அம்பேத்கர் எதுவும் கூறவில்லை. ஆனால், “சோசலிச” என்ற சொல்லாடலைப் பொறுத்தவரையில், ஷாவின் கருத்து மிகையாக இருக்கிறது என்று கூறினாராம்.


அவர்கள் கருதியது!

“சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளின் திசைவழியும் உள்ளடக்கமும் சோசலிசமாக இல்லையென்றால், அதற்கு மேல் சோசலிசம் என்பது என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்றாராம் அம்பேத்கர். அதாவது. அரசமைப்பு சாசன வழிகாட்டு நெறிகளின் உயிர்நாடியாக மதச்சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், சமூகவுடைமைத்துவம் ஆகிய மாண்புகள் எல்லாமே உள்ளடங்கியிருக்கின்றன, தனிச் சொற்களாகச் சேர்க்கத் தேவையில்லை என்று அவரும் குழுவின் வேறு பல உறுப்பினர்களும் கருதியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஷா முன்மொழிந்த திருத்தம் ஏற்கப்படாததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து (அன்றைய மதராஸ் மாகாணம்) சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதல் பொதுச்செயலாளருமான மஹ்பூப் அலி பெய்க், “சாசனத்தை உருவாக்குகிறவர்களின் மனதில் ஒற்றையாட்சி முறைதான் இருக்கிறதோ, ஆனாலும் கூட்டாட்சி என்று அதைச் சொல்கிறார்களோ,” என வியப்புத் தெரிவித்தார்.
“அரசு (மாநிலங்களின்) கூட்டாட்சியாகவே இருக்க வேண்டும், ஒற்றையாட்சியாக இருக்கக்கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், எதிர்காலத்தில் எந்த ஓர் அதிகார நாட்டமுள்ள கட்சியும் இதை ஓர் ஒற்றையாட்சி முறை அரசாங்கமாக மாற்றுவதையும், அது பாசிச, சர்வாதிகார ஆட்சியாக மாறுவதையும் தடுக்க விரும்புகிறீர்கள் என்றால், சரியான சொல்லைப் பயன்படுத்துவது இன்று நம் பொறுப்பாகிறது. அந்தச் சரியான சொல்தான் கூட்டாட்சி,” என்றார் பெய்க்.
முதல் திருத்தம் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஷா பின்வாங்கிவிடவில்லை. அதே சட்ட உரைக்கு இன்னொரு திருத்தத்தையும் முன்மொழிந்தார். மாநிலங்கள் என்ற சொல்லுக்குப் பின்னால் “தமக்குள் சமமானவை” என்ற சொற்களைச் சேர்ப்பதற்கான முன்மொழிவு அது. அதன் மீது நடந்த விவாதத்தை, அம்பேத்கர் முந்தைய விளக்கத்திற்கான தனது பதிலைத் தெரிவிக்கப் பயன்படுத்திக்கொண்டார். அரசமைப்பு சாசனம் அரசாங்கத்தின் பல்வேறு அங்கங்களை முறைப்படுத்துவதற்கான கருவிதான் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளைச் சேர்ப்பது பொருத்ததமற்றது என்றும் கேள்விப்படுவது புதிதாக இருக்கிறது என்று விமர்சித்தார்.

“உறுதியளிக்கப்பட்டுள்ளபடி இந்திய ஒன்றியம் உண்மையிலேயே கூட்டாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்றால், ஒன்றியத்தின் அங்கங்களாகிய மாநிலங்கள் தங்களுக்குள் சமமாக இருப்பதும், சமமாகவே இருந்தாக வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம்,“ என்றும் பெய்க் வலியுறுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கியிருந்த ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சபை உறுப்பினருமான எச்.வி. காமத் இந்த முன்மாழிவுக்கு ஆதரவளித்தார். ஆயினும், சபை வாக்கெடுப்பில் முந்தைய திருத்தத்தைப் போலவே இதுவும் ஏற்கப்படாமல் போனது.


அரசியல் பண்பு!

நாட்டின் முதல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ஷா, குடியரசுத் தலைவர் தேர்தலில் ராஜேந்திர பிரசாத்தை எதிர்த்து நின்றார். இரண்டிலுமே அவர் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல என்ற போதிலும், அரசமைப்பு சாசன வரைவுக் குழுவின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்ட அம்பேத்கர், முதல் மக்களவைத் தேர்தலில் களமிறங்கினார். அவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த விவரங்களும் சுகதா போஸ் கட்டுரையிலிருந்து தெரியவருகின்றன.


தேர்தலில் தோல்வியடைந்தாலும், அம்பேத்கரின் சட்ட அறிவும் சாசன வரைவுக்குழு தலைவராகச் செயல்பட்ட அனுபவமும் நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்க அழைத்தார் ஜவஹர்லால் நேரு. கொள்கை வேறுபாடுகள் இருந்த நிலையிலும், குடிமக்கள் நலனுக்காக பிரதமரின் அழைப்பை ஏற்றார் அம்பேத்கர்.


காங்கிரஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பகுதி மக்களைத் திரட்டிய பெரிய கட்சி, ஆட்சியமைக்கப் போகிற கட்சி. ஆயினும், காங்கிரஸ்காரர் அல்லாத ஒருவர் சாசன வரைவுக் குழுவின் தலைவர்! வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களானாலும் சாசன சபை உறுப்பினர்கள்! இவ்வாறு பொறுப்புகள் அளிக்கப்பட்டதில் எத்தனை ஆரோக்கியமான அரசியல்! பல முன்மொழிவுகள் ஏற்கப்பட்டிருக்கலாம், பல தள்ளப்பட்டிருக்கலாம், ஆயினும் அந்தச் சபையில் எத்தனை வளமான, பக்குவமான விவாதங்கள்!


பின்னொரு சூழலில் ஷா பின்வருமாறு கூறியிருக்கிறார்: “இந்தியாவில் நாம் உண்மை ஜனநாயகம் பற்றிப் பேசுகிறோம். ஆனால், உண்மை அதிகாரங்களையும், நிர்வாகப் பொறுப்புகளையும், அரசாங்கத்தின் நிதி வளங்களையும் மத்தியில் குவிக்கிறோம்; அதன் மூலம் மாநிலங்களின் சுயாட்சி, நகரங்கள் மற்றும் கிராமங்களின் தன்னாட்சியை ஒரு துன்பியல் நாடகமாக்குகிறோம்.”

அன்றைய வாசகம்!

கருத்துச் செழிப்பான விவாதங்கள், அன்றைய அரசியல் நிலைமைகள், சமுதாயச் சூழல்கள் என்ற பின்னணிகளில்தான், 1949 நவம்பர் 26-ல் சாசன சபையால் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரியில் நடைமுறைக்கு வந்த அரசமைப்பு சாசனத்தின் முகவுரையில், இந்திய அரசின் தன்மை பற்றிய அறிமுக வாசகம், ‘உயர்தன்னாளுமையுள்ள, ஜனநாயகக் குடியரசு’ (Sovereign Democratic Republic) என இருந்தது.

அந்த வாசகத்தில் சேர்க்க வேண்டும் என்று சபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினரால் கோரப்பட்ட மதச்சார்பற்ற, சோசலிச, கூட்டாட்சி முறை என்ற சொற்கள் ஏற்கப்படவில்லை. அதேபோல, இன்னொரு பகுதியினர் கோரிய “கடவுளின் பெயரால்”, “இந்து” என்ற சொற்களும், ஆன்மீகம் சார்ந்த சொற்களும் சேர்க்கப்படவில்லை. கூட்டாட்சி என்ற சொல்லைச் சேர்க்க ஆதரவளித்த காமத், மதம் சார்ந்த சொற்களைச் சேர்க்கக் கோரினார் என்ற வரலாற்று முரண்களும் நிகழ்ந்தன.

இந்த நிலையில்தான், மதச்சார்பற்ற, சோசலிச என்ற சொற்களை நீக்க வேண்டும் என்பது, இந்தியாவை இந்துத்துவா அடிப்படையிலான கார்ப்பரேட் ஆதிக்க நாடாக மாற்றும் வியூகத் திட்டத்துடன் இணைந்ததாக ஒலிக்கிறது. “ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம்” என்ற பன்மைத்துவப் பண்பாட்டு மாண்புகளுக்குப் பகையான கோஷம் எழுப்பப்படுகிறது.

மதவெறி எதிர்ப்பு போராட்டம்!

மொழி, கல்வி உள்ளிட்ட மாநில உரிமைகளில் தலையீடுகள், அரசியல் பாகுபாட்டுடன் மாநிலங்கள் மீது ஏற்றப்படும் நிதிச் சுமைகள், பாடத்திட்டங்களில் மதவாத போதனைகள், பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்துமீறல்கள் என பல வகைகளிலும் அந்த வியூகத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் நடக்கின்றன.

மாநில அதிகாரங்களில் நுழைவது முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளிலும் நடந்திருக்கிறது என்றாலும், இன்றைக்கு பா.ஜ.க ஆட்சியில் நடப்பது குணாம்சத்திலேயே மாறுபடுகிறது என்கிறார் சி.பி.ஐ(எம்) மூத்த தலைவர் பிரகாஷ் காரத்.


திரைப்படத்துறையில் கூட, இந்துத்துவா கருத்தியலைப் போற்றும் படங்களை ஊக்குவிக்க வெளிப்படையான முயற்சிகள் நடப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள காரத்,. “ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க ஆட்சியாளர்களுக்கு, அனைத்து கலாசார நடவடிக்கைகளையும் தயாரிப்புகளையும் மையப்படுத்தி ஒரே மாதிரியானவையாக மாற்றுவது முக்கியமாகும். மாநிலங்களின் உரிமைகளுக்கும் கூட்டாட்சிக்கும் பகைமையான மையப்படுத்தல் முயற்சி இந்துத்துவா எதேச்சதிகாரத்திற்குத் தேவைப்படுகிறது. ஆகவே, கூட்டாட்சியையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதை, எதேச்சதிகார எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது முக்கியமாகும்,” என்கிறார் (“ஒற்றைத்துவ அரசை நிறுவுவதற்காகத் தகர்க்கப்படும் கூட்டாட்சி” – ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’, ஆக. 4).

இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு நடைபெறவுள்ளது. அது தென் மாநிலங்களின் அரசியல் வலிமையைக் கீழிறக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இந்த நிலையில், கூட்டாட்சி குறித்த வினா தவிர்க்கப்பட்டுவிடாமல், விடை காணப்பட வேண்டும், வலுவான இந்திய ஒன்றியம் கூட்டாட்சி முறையாக மட்டுமே இருக்க முடியும் என்று சுகதா போஸ் உரத்துச் சொல்கிறார்.

அதை சட்டப்பூர்வமாக அசைக்க முடியாததாக நிறுவுவதற்கு, அவர் விரும்புவது போல அரசமைப்பு சாசன முகவுரை வரியில் “கூட்டாட்சி” என்ற சொல்லை இன்று சேர்க்க முடியாமல் போகலாம். ஆனால், கூட்டாட்சி பற்றிய சிந்தனை பொது விவாதமாக மாறுவது நிச்சயம் நிகழும், நிகழ வேண்டும்.

[0]

விகடன் டிஜிட்டல் பதிப்பு (ஆகஸ்ட் 16)

No comments: