புத்தக அறிமுகம்
ஒரு கதையில் அறிவியல் செய்தி இருக்கலாம். ஆனால் கதையைப் படைப்பதிலேயே அறிவியல் இருக்குமா? வாழ்க்கையை அறிவியலாக அணுகுவது போன்று கதைகளையும் நெருங்கலாம் என்று காட்டுகிற புத்தகம் ‘தி சயின்ஸ் ஆஃப் ஸ்டோரிடெல்லிங்’ (கதைசொல்லலின் அறிவியல்).
வாசகர்களைக் கதையோடு கட்டிப்போடுவதன் உளவியல், மூளை நரம்பியல் தொடர்பான ஆய்வுகளின் அடிப்படையில் பல நூல்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் பிரிட்டன் பத்திரிகையாளர், அறிவியல் எழுத்தாளர் வில் ஸ்டார். உடலின் உயிரணுக் கட்டமைப்பு, மேற்குலகத்தின் சுயமோகம், மனிதர்களின் வேடிக்கையான நம்பிக்கைகள் பற்றிய ஆய்வு நூல்களையும், ‘தி ஹங்கர் அண்ட் தி ஹௌலிங் ஆஃப் கில்லியன் லோன்’ (கில்லியன் லோன் பசியும் ஓலமும்) என்ற நாவலையும் எழுதியிருக்கிறார்.
வெற்றிகரமான படைப்புகள் எப்படி சிறப்பான தொடக்கத்தோடு, துடிப்பான தொடர் நிகழ்வுகளோடு, அருமையான முடிவுகளோடு மூளைச் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுததுகின்றன. அதை இந்த நூல் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறது.
ஒரு உலகத்தைப் படைத்தல், பிழையான சுயம், நிகழ்வோட்டக் கேள்வி, கதைக்கருக்கள்–முடிவுகள்–பொருள்கள் என்ற நான்கு அத்தியாயங்களில், அறிவியல் ஆய்வுகளையும் படைப்பு வரிகளையும் மேற்கோள் காட்டி விளக்குகிறார் நூலாசிரியர். “பல தலைமுறைகளாக அருமையான கதைக் கோட்பாட்டாளர்களின் கண்டுபிடிப்புகளையும், அதற்குச் சமமாக அறிவியல் துறை பெண்கள் ஆண்களின் ஆராய்ச்சிகயும் பொருத்திப் பார்க்கும் ஒரு முயற்சியே இது," என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
ஒரு கதை எங்கே தொடங்குகிறது? அது தொடங்குகிற இடத்தில்தான்! அதாவது, ஒருவர் எந்த ஆண்டில், எந்த ஊரில் பிறந்தார், அவருடைய அம்மாவும் அப்பாவும் என்ன தொழில் செய்தார்கள் என்று சொல்வதில் கதை தொடங்குவதில்லை. பிறப்பு அவருடைய வாழ்க்கையின் தொடக்கம்தான், ஆனால் கதையின் தொடக்கமாகாது.
“அம்மா இன்னிக்கு செத்துப்போயிட்டாங்க. இல்லன்னா நேத்திக்கு செத்துட்டாங்க. எனக்குத் தெரியலையே…” என்று ஒருவர் சொல்வதாக ஒரு கதையின் தொடக்கப் பத்தி இருக்கிறது. ஏன் அவர் இப்படிச் சொல்கிறார் என்று வாசகர் கவனத்தை ஈர்க்கிறது (‘தி அவுட்சைடர்’, ஆல்பர்ட் கேமஸ்).
ஈர்ப்புக்குக் காரணம் மாறுபட்ட தன்மைதான். புகழ்பெற்ற படைப்புகளின் தொடக்க வரிகள் இவ்வாறு மாறுபட்டதாக இருப்பதே. இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அரசியல் எழுத்தாக்கங்களுக்கும் இது பொருந்துகிறது.. இதற்கு வில் ஸ்டார் காட்டுகிற சான்று: “ஐரோப்பாவை ஒரு பேய் பிடித்திருக்கிறது, கம்யூனிசம் என்ற பேய்” (‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ –கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்).
வாழ்க்கையில் மாறுபட்டதாக ஏதேனும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெரும்பாலான மாற்றங்கள் முக்கியமற்றதாகக் கடக்கலாம். தெருவிலிருந்து திடீரெனக் கேட்கிற “டம்” என்ற ஓசை, ஒரு லாரி ஓட்டுநர் வண்டிக் கதவை வேகமாக மூடியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பிப் பார்த்தால் அது யாரோ ஒரு அம்மா தன் பிள்ளையைக் கூப்பிட்டதாக இருக்கலாம். ஆனாலும் மாற்றங்கள் பொருட்படுத்த வேண்டியவையாகவே இருக்கின்றன. இங்கேதான் கதை தொடங்குகிறது.
உலகத்தைப் புரிந்துகொள்ள முயலும் மனித மூளை மாற்றங்களைத்தான் கவனிக்கிறது. 9 மாதக் குழந்தை சுற்றுமுற்றும் கவனிக்கிறபோது அதுவரையில் பார்த்திராத மாறுபட்ட தோற்றங்களின் பால் ஈர்க்கப்படுகிறது. 2 முதல் 4 வயதுக்குள் குழந்தைகள் எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கிட்டத்தட்ட 40,000 விசாரணைகளை நடத்துகிறார்கள். மனிதர்களின் இந்தத் தெரிந்துகொள்ளும் தாகத்தைப் பயன்படுத்தித்தான் கதைஞர்கள் புதுப்புது உலகங்களை உருவாக்குகிறார்கள்.
மற்றவர்களின் மனங்களைப் புரிந்துகொள்ளும் முயற்சி 4 வயதிலிலேயே தொடங்கிவிடுகிறது. குழந்தைகள் எதிலும் மனதைப் பார்க்கிறார்கள். ஆகவேதான் முகம் பார்க்கும் கண்ணாடி பேசும், விலங்குகள் ஆடிப் பாடும், பொம்மைகள் உற்ற நண்பர்களாக மாறும். சிறார் கதைகள் இதையெல்லாம் செய்கின்றன.
வளர வளர, பிற மனங்களைக் கண்டுபிடிப்பதற்குக் கதைகள் உதவுகின்றன. அறிமுகமில்லாதவர்கள் மற்றவர்களை 20 சதவீதம் அளவுக்கும், காதலர்கள் உள்பட நெருங்கியவர்களே கூட 35 சதவீதம் அளவுக்குமே சரியாகப் புரிந்துகொள்கிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். புரிந்துகொள்ள முடியாத எஞ்சிய 80 அல்லது 65 சதவீத இடைவெளியை நிரப்ப கதைகள் முயல்கின்றன.
படைக்கப்படும் கதை மனிதர்கள் வெளியுலகத்தைப் போலவே தங்களின் உள்ளுலகத்திலும் போராடுகிறார்கள். வாழும் தனி மனிதர்களது போராட்டங்களின் அடிப்படையே “நான் யார்” என்ற தேடல்தான். இறுதி வரையில் தொடரும் அந்தத் தேடலுக்குக் கதைகள் கைகொடுக்கின்றன.
ஒரு செல் உயிரியாகப் புறப்பட்டதிலிருந்தே உயிரினப் பரிணாமப் பயணத்திற்கு அடுத்த முன்னேற்றத்திற்கான இலக்கு இருந்து வருகிறது. மனிதர்களும் இலக்குகளை நோக்கிச் செல்வதிலும் படைப்பு பங்காற்றுகிறது. வெறும் சொல்லடுக்குகளாக இல்லாமல், நிகழ்வுகளாகக் காட்டுகிற கதையாக்கம் வெற்றி பெறுகிறது.
அந்த வெற்றிக்கு, தேவையற்ற செயப்பாட்டு வினையை விட, நேரடியான செய்வினை வாக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன. “அப்பா ஜேனால் முத்தமிடப்பட்டார்” என்பதை விட “ஜேன் அப்பாவுக்கு முத்தமிட்டாள்” எனும்போது வாசகர் மனதில் அந்த அசைவு அழகாகப் பதிவாகும் என்கிறார் ஸ்டார்.
30 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த கிறிஸ்டோபர் புக்கர் ஏழு வகையான கதைக்கருக்கள் சுழன்று வருகின்றன என்கிறார். நாசகர எதிர் சக்தியை முறியடித்தல், வறுமையிலிருந்து வளம், வினாவும் தேடலும், பயணமும் வீடு திரும்பலும், முந்தைய நிலைகளிலிருந்து மாறும் மறுபிறவி, இன்பியல், துன்பியல் ஆகியவையே அந்த ஏழு. ஒவ்வொரு கருவிலும் அறைகூவல், கனவு, ஏமாற்றம், முரண், தீர்வு ஆகிய ஐந்து செயல்கள் இருக்கின்றன.
சிறப்பான கதையின் மாற்றங்கள், உறக்கத்தை மறக்கடிக்கின்றன. உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புகின்றன. “கடத்துகை” என்று இதை உளவியாலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கடத்துகை மக்களை மாற்றுகிறது. மக்கள் உலகத்தை மாற்றுகிறார்கள்.
நூல்: தி சயின்ஸ் ஆஃப் ஸ்டோரிடெல்லிங்
ஆசிரியர்: வில் ஸ்டார்
வெளியீடு: வில்லியம் காலின்ஸ் பதிப்பகம்
விலை: ரூ.599 (விற்பனைக் கூடங்களிலும் இணையவழியிலும் கிடைக்கிறது)
[0]
புத்தகம் பேசுது, ஆகஸ்ட் 2025 இதழில் எனது கட்டுரை
No comments:
Post a Comment