‘இன்றைக்குள் முடித்துவிட வேண்டும்’ என்று நேற்று ஓய்வின்றிச் செய்துகொண்டிருந்த வேலையின்போது மகன், “இந்தப் படம் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, வர்றீங்களா,” என்று கேட்க, சரிதான் என்று கணினியை மூடிவிட்டுப் புறப்பட்டேன். அது எவ்வளவு சரியான முடிவு என்று காட்சிக்குக் காட்சி உணர வைத்தது ‘சிறை’.
பாராட்டுகளை வரிசைப்படுத்தும்போது முதலில் வந்து நிற்பது, படத்தில் ஹீரோத்தனம் என்று மருந்துக்கும் இல்லை. தொடக்கத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் காவலர்கள் முகங்களில் மிளகாய்ப்பொடி வீசி உள்ளேயிருந்த குற்றவாளியுடன் தப்பித்து ஓடும்போது தலைமைக் காவலர் கதிரவன் அவர்களோடு மோதுகிற, அக்கணத்தில் செய்கிற ஒரு செயலை வணிகப் படத்துக்கான நாயக சாகசம் எனலாமா? அதற்கும் வாய்ப்பில்லை, ஏனென்றால் அந்த சாகசம்தான் அவனுக்கான நிர்வாகத் தண்டனையாக, சிறைக்கு அனுப்ப வைக்கிறது – கைதிகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் வழிக்காவலராக. அதில் வெளிப்படும் உண்மைத்தன்மை கடைசி வரையில் காப்பாற்றப்படுகிறது.
வேலூர் சிறையிலிருந்து சிவகங்கை நிதிமன்றத்திற்கு அப்துல் என்ற கைதியைக் கொண்டு செல்ல வேண்டும். கூட இரண்டு காவலர்களோடு அந்த ‘லாங் எஸ்கார்ட்டில்’ பயணிக்கிறபோது அவன், “ஐயா, கோர்ட்டு வாசல்லயிருந்து உள்ளே போறப்ப மட்டும் கையில விலங்கு மாட்டாம கூட்டிட்டுப் போங்கய்யா,” என்று வேண்டுகோள் விடுக்கிறான். அவனுடைய பெயரும் அந்த வேண்டுகோளும் ஏதோதோ ஊகங்களுக்கு இட்டுச் செல்கின்றன. அதையெல்லாம் தாண்டிக் குதித்து, விலங்கில்லாமல் அவனை நீதிமன்றத்திற்குள் கதிரவன் கூட்டிச் செல்ல, முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்துக்குள் கூட்டிச் செல்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரி.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டவனான அப்துல் ஏன் அந்த வேண்டுகோளை முன்வைக்கிறான்? மத வரப்புகளை மீறிய ஒரு கிராமத்துக் காதல் கதை விரிகிறது. அதை விவரிக்கிற, ஒரு நல்ல படத்துக்கு எதிரான, அநீதியை நான் செய்ய மாட்டேன்.
சிறை என்று பெயரிருந்தாலும், பேருந்திலும் லாரியிலும் ஆட்டோவிலுமாக அப்துலை கதிரவன் குழுவினர் இட்டுச் செல்லும் நீண்ட பயணம்தான் திரைக்கதை. காவலர்களின் கடமையுணர்வற்ற செயல்கள், வழியில் ஒரு காவல்நிலையத்தில் ஒரு குறுகிய விசாரணை, நீதிமன்றத்தில் விரைவாக உள்ளே அழைக்கப்படுவதற்கு தலைமைக்காவலராகவே இருந்தாலும் ரகசியமாகக் கையில் பணத்தை ஊட்டுகிற அவலம் (இதனால்தான் கையூட்டு என்ற சொல்லாடல் வந்ததோ?), காவல்துறைக்குள் நேர்மையானவர்களும் அதைத் துறந்தவர்களுமாக இரு பிரிவினர் இருப்பது போலவே நீதித்துறையிலும் பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்கிறவர்களும், “எனக்கே சட்டம் சொல்லித் தர்றீங்களா,” என்று தன்னகங்காரம் கொள்கிறவர்களுமாக இரு பிரிவினர் இருப்பது… இப்படி அந்த நீண்ட காவல் பயணத்தில் காட்சிப்படுகின்றன.
‘டாணாக்காரன்’ படத்துக்குப் பிறகு காவல்துறையின் இன்னொரு பிரிவு பற்றிய இவ்வளவு துல்லியமான சித்தரிப்புகளோடு வந்திருக்கிறதே என்று யோசித்தபோது, அதனை உருவாக்கியவர்தான் இதன் கதையை எழுதியவர் என்ற தகவல் கிடைத்தது. இன்னும் பல அத்தியாயங்கள் உங்களிடமிருந்து வரட்டும் தமிழ்.
ஐந்து ஆண்டுகளாக ஒருவன் விசாரணைக் கைதியாகவே இருக்கிறான். இயல்பாக அவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறைவாசத்துக்கு அதிகமான காலம். அதன் பின்னணி, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள், போதுமான நீதிமன்றங்கள் இல்லாமை, துறைகள் சார்ந்த மெத்தனம் போன்றவை மட்டுமல்ல – அவன் பெயர் அப்துல் என்பதும்தான். கூர்மையாகவும், கச்சிதமான அளவோடும் மதமாச்சரியப் பார்வையை விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். இடைவழியில் அவர்கள் எதிர்கொள்ளும் காவல் நிலைய அதிகாரி கேட்கிறார். கைதியை அழைத்துச்செல்கிறபோது, விதிமீறலாகத் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரம்பியிருப்பது ஏன்?
“அய்யா, அக்யூஸ்டு ஒரு முஸ்லிம்.. அதனாலதான்…” என்று இவர்கள் பதிலளிக்கிறார்கள். “அதுக்கு?,” என்று கேட்கிறார் அதிகாரி. ‘அயோத்தி’ படத்தில் கதாநாயகன் தன் பெயர் என்ன என்று கடைசியில் சொல்வானே, அதே போல் அந்த அதிகாரி தன்னை வெளிப்படுத்துகிறார். அரங்கம் கரவொலிகளால் நிரம்புகிற மற்றுமொரு தருணம் அது.
இன்றைய திட்டமிட்ட தூண்டல் சூழலில் கலையாக்கத்தின் இப்படிப்பட்ட தருணங்கள் முக்கியமானவை.
நீதிபதியின் தனியறை விசாரணைக்குப் பிறகு வெளியே வரும் அப்துலும் கலையரசியும் கதிரவன் காலில் விழுந்து கதறுகிறபோது கண்கள் துளிர்த்ததைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை நான். அக்‘ஷய் குமார், அனுஷமா அனில்குமார் இருவரும் முதல்படமென்றே தோன்றாத அளவுக்குச் சிறப்பான ஒத்திகைகளை மேற்கொண்டு நடித்திருப்பது தெரிகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையாலும், மாதேஷ் மாணிக்கம் படப்பதிவாலும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாலும் இயக்குநரின் நோக்கத்திற்குப் பங்களிக்க, இவ்வாண்டின் முக்கியமான ஒரு சினிமாவை ஆண்டிறுதியில் வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் எஸ். எஸ். லலித் குமார்.
உண்மையான ஹீரோத்தனம் என்பது எதிலே இருக்கிறதென்றால் என்ற விளக்கமளிக்காமல், கடைசியில் பயிற்சிநிலைக் காவலர்களுக்கும், திரையுலக நட்சத்திரங்களுக்கும், பொதுச் சமூகத்துக்குமே கூட வகுப்பெடுக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி – கதிரவனாகிய விக்ரம் பிரபு மூலமாக.
உண்மையான ஹீரோத்தனம் என்பது எதிலே இருக்கிறதென்றால் என்ற விளக்கமளிக்காமல், கடைசியில் பயிற்சிநிலைக் காவலர்களுக்கும், திரையுலக நட்சத்திரங்களுக்கும், பொதுச் சமூகத்துக்குமே கூட வகுப்பெடுக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி – கதிரவனாகிய விக்ரம் பிரபு மூலமாக.
No comments:
Post a Comment