மூலதனம் சார்ந்த உற்பத்தி முறை வேரூன்றிய பிறகு, முதலாளிகளைப் பொறுத்த மட்டில் தொழிற்சாலையின் எந்திரங்கள் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தாக வேண்டும் – நின்றுவிட்டால் உலோகங்கள் துருப்பிடித்துவிடுமே! அதற்காகத் தொழிலாளர்களைக் குழுக்களாகப் பிரித்து நிற்க வைத்தார்கள். ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நேரம் வரையில் வேலை செய்தபின் அவர்களை வெளியே அனுப்பிவிடடு, அடுத்த குழுவினரை எந்திரங்கள் முன் நிறுத்துவார்கள். மறுபடி அடுத்த குழுவை ஈடுபடுத்துவார்கள்.
“அஞ்சல் தொடர் ஓட்ட முறை” (ரிலே சிஸ்டம்) என்றே இது அடையாளப்படுத்தப்பட்டது. இதுதான் பிற்காலத்தில் காலைப் பணி, பகல் பணி, இரவுப் பணி என சுழல் முறை (ஷிப்ட் சிஸ்டம்) என்றாக்கப்பட்டது. தொழிலாளர்களுக்குத்தான் இரவுப் பணி. முதலாளிகளோ, எந்த நேரத்தில் உறங்குவது உடலுக்கு ஆரோக்கியமோ அந்த இரவு நேரத்தில் நன்றாக உறங்குவார்கள். நிறுவனத்தில் விபத்து போன்ற ஏதாவது நெருக்கடியில் மட்டும் ஆலைக்கு வருவார்கள். முதலாளிகள் அல்லாத பல்வேறு மட்டங்களிலான மேலாளர்கள் தொடங்கி தொழிலாளர்கள் வரையில் சுழல் முறையில் வேலைக்கு வர வேண்டியவர்கள்தான்.
இரவுத் தூக்கத்தை இழந்தால் என்ன, அவர்கள் பகலில் நன்றாக உறங்கி எழலாமே என்று முதலாளிகளும், இந்த ஏற்பாட்டிற்காக வக்காலத்து வாங்கிய அரசியலாரும் அறிஞர்களும் அதிகாரிகளும் நியாயப்படுத்தினார்கள். இந்த ஏற்பாட்டில், உறக்கத்திற்கென்றே இயற்கையாய் அமைந்ததாகிய இராப் பொழுது, இரவுப் பணித் தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது அவர்களின் உடல் நலத்தை வெகுவாகச் சீர்குலைக்கிறது. காலப் போக்கில் அவர்கள் நலிவடைகிறார்கள்.
பகலில்தான் உறங்கியாக வேண்டுமென்ற நிலையில் தொழிலாளர்கள் இழப்பது உடல் நலத்தை மட்டுமல்ல. தங்களின் சமூக உறவுகள் சார்ந்த வாழ்க்கையையும் இழக்கிறார்கள். உழைப்பதும் ஊதியம் பெறுவதும் உயிரோடு இருப்பதற்காக மட்டுமில்லையே, அந்த சமூக வாழ்க்கைக்காகவும்தானே? இந்த வேலை நேர ஏற்பாடு அதையும் சீர்குலைக்கிறது. காலப்போக்கில் அவர்கள் தனிமைப்படுகிறார்கள். தான், தன் குடும்பம் என்று சுருக்கப்படுகிறார்கள்.
உழைப்புச் சுரண்டலோடு இணைந்த இந்தப் பணி நிலைமைக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே தயார்ப்படுத்தப்படுகிறார்கள். சிறார் வயதுக்கே உரிய ஆட்ட பாட்டத்தோடு அயர்ந்து தூங்குகிறவர்கள் எழுப்பிவிடப்படுவார்கள். “இப்படித் தூங்கிப் பழகிவிட்டால் நாளைக்கு எங்கேயாவது வேலைக்குப் போகிற இடத்திலும் இப்படித்தான் இருப்பாய். கெட்ட பெயர் எடுத்துவிடுவாய். முன்னேற மாட்டாய்,” என்று கண்டிப்புக் காட்டப்படும். அதிலும், நம் ஊரில் பெண் குழந்தைகள் என்றால், “இப்படித் தூங்கினால் நாளை கல்யாணமாகிப் போகிற இடத்திலும் இப்படித்தான் இருப்பாய். புகுந்த வீட்டில் கெட்ட பெயர் வாங்குவாய்,” என்று வசைப்பாடு கொட்டப்படும்.
இது ஒரு குறிப்பிட்ட முதலாளி கெட்டவரா, நல்லவரா என்பதைப் பொறுத்ததல்ல. சந்தைப் போட்டியில் எந்த முதலாளியும் இதைச் செய்தாக வேண்டும். இல்லையென்றால் அவர் இந்த அமைப்பிலிருந்தே பிதுக்கித் தள்ளப்பட்டுடவிடுவார். விசுவாச வேலைக்கான மனநிலையைத் தயார்ப்படுத்துவதை பெற்றோர்கள் செய்கிறார்கள், மற்ற பெரியவர்கள் செய்கிறார்கள். இப்படித் தயார்ப்படுத்துகிற உரையாடல் பொறுப்பை சமூகமயமாக்கியதில்தான் முதலாளியத்தின், மூலதனத்தின் வெற்றி இருக்கிறது.
சுரண்டலுக்கு எதிரான சிந்தனைகளை, தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிகளை, அடிப்படை மாற்றங்களுக்கான முனைப்புகளை இதே போன்ற சமூக உரையாடலாக்குவதில்தான் வர்க்கப் போராட்டத்தின் வெற்றி இருக்கிறது. அந்த உரையாடலை உருவாக்குவதில் உழைக்கும் வர்க்க இயக்கம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கருதுகிறேன், வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
[0][0][0]
இன்று (ஏப்ரல் 25) காலையில் நடைபெற்ற இணையவழி கூடுகையில், கார்ல் மார்க்ஸ் படைத்தளித்த ‘மூலதனம்’ நூலின், முதல் பாகம், பத்தாவது அத்தியாயம் வாசிப்பும் கலந்துரையாடலும் மேற்கொண்டோம். அப்போது நான் கூறியதை சீர்மையான பதிவுதான் இது. இயக்கத்தை அடையாளங்கண்டு அறிமுகமான நாட்களில் படித்தபோது கிடைத்த புரிதல்களுக்கும், அனுபவங்களின் துணையோடு இன்று மறுவாசிப்பில் ஈடுபடுகிறபோது கிடைக்கிற நெருக்கமான தெளிவுகளுக்கும் எவ்வளவு வேறுபாடு! அப்போது முதல் இப்போது வரையில் தொடர்கிறது மார்க்சியத்தின் பால் உறுதிப்பாடு. (சித்தரித்தபடி சித்திரம்: ஜெமினி ஏஐ)

No comments:
Post a Comment