Thursday, 14 May 2026

பஞ்ச், நாக் விளையாட்டு


 


“சேஞ்ச் இருக்கும்னு சொன்னாங்க, எக்ஸ்சேஞ்ச் இருக்குமோன்னு மக்கள் சந்தேகப்படுறாங்க.”

“இது குதிரை வேகத்தில் ஓடுற அரசு,  குதிரை பேரத்தில் ஈடுபடுற அரசு அல்ல.”

நம்பிக்கை வாக்கெடுப்பு உரைகளில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பஞ்ச் (டயலாக் அல்ல), முதலமைச்சர் விஜய் நாக் (அவுட் அல்ல) இரண்டும் இந்தச் சட்டமன்றத்தில் விறுவிறுப்புச் சுவைகளுக்குப் பஞ்சமிருக்காது என்று காட்டுகின்றன. நம் கவலை இப்படி அதிரடியும் எதிரடியுமாகப் போய்விடக் கூடாது என்பதே.

மக்கள் மொத்தமாகத் தூக்கி ஆட்சிப் பொறுப்பை தவெக–விடம் தந்துவிடவில்லைதான். ஆனால் மக்களுக்காக வாதாடும் எதிர்க்கட்சிப் பொறுப்பை திமுக–விடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அரசு என்ன செய்தாலும் எதிர்ப்பதே கொள்கையென முந்தைய ஆட்சியின் எதிரணி செயல்பட்டது போல அல்லாமல், மக்களின் வலியுணர்ந்து, ஆள்வோரின் அத்துமீறல்களைத் தோலுரித்துக் காட்டும் பொறுப்பு அது.

கம்யூனிஸ்ட்டுகளும் விசிக, இயூமுலீ கட்சியினரும், அரசு அமைப்பதற்காக அளித்த நெருக்கடி நேர ஆதரவு, அரசின் தவறுகளுக்கான ஏற்பாக இருக்காது என்று அறிவித்திருக்கிறார்கள். போராடுவது அவர்களுக்குப் புதிதல்ல.

அதிமுக–விடம் இதைச் சொல்லிப் பயனில்லை.  அவர்கள் மக்கள் நலனுக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதற்குமில்லை. அவர்களுக்குள்ளான அடிதடியில் ஏற்படும் சட்டைக் கிழிசல்களைத் தைப்பதற்கே நேரம் போதாது.

இது சிறுபான்மை அரசுதான் என்று ஒப்புக்கொண்டு அறிவித்த நேர்மை, சிறுபான்மை மக்களுக்கான அரசு என்ற  சொல் விளையாட்டாக மட்டும் கடந்துவிடுவதற்கு விஜய் அமைச்சரவை இடமளிக்கக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக நிற்பதை நிறுவிக்காட்டுவது, அவர்களைத் தாக்குகிற பெரும்பான்மை மதவாத அரசியல் நடவடிக்கைகளை உறுதியாகக் கை மறித்துத் தடுப்பதில் இருக்கிறது. பெரும்பான்மைச் சமயம் சார்ந்த மக்களுக்கும் பாதகமான ஆணைகளையும் சட்டங்களையும் அதே போல் தடுப்பதில் இருக்கிறது.

சின்ன விமர்சனம் கூடச் செய்ய மாட்டோம் என்ற, பதவியேற்புக்கு முந்தைய நாட்களின் உத்தி தற்காலிகமானதாகவே இருக்கட்டும். இல்லையேல், முதலமைச்சரைச் சுற்றியுள்ளவர்கள் யாருக்கோ பிரதிநிதிகள்தான் என்று சமூகவியலாளர்கள் விடுத்த எச்சரிக்கை உண்மையாகிவிடும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியது நன்று. நாடு முழுவதுமே முன்பிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை மீட்டமைக்க வலியுறுத்தும் குரலும் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ஒலிக்க வேண்டும். அதுதான், அனிதாவுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்தியதற்கு நியாயம் செய்வதாக இருக்கும்.

மறுபடி சொல்கிறேன், கூட இருக்கிற பொருளாதாரப் புலிகள் சொல்வதைக் கேட்டு அரசாங்கம் கடன் வாங்குவது பற்றிய குழப்பங்களில் மூழ்காதீர்கள். வாங்கிய கடன்கள் மாநிலத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு உதவின என்று புரிந்துகொள்ளுங்கள். முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டு வருவதால்தான் தமிழ்நாட்டுக்குத்  தொடர்ந்து கடன்கள் கிடைத்தன என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

35 சதவீத வாக்குகள் பெற்ற எங்களை, 75 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் விமர்சிப்பதா என்ற சொத்தை வாதம் கைதட்டல் பெற்றுத் தரலாம், கைகொடுக்காது. ஒரே ஒரு சதவீத வாக்குகள் பெற்றவர்கள் கூட அரசை விமர்சிக்க முழு உரிமையும் தகுதியும் பெற்றவர்கள்தான்.

அத்தகைய விமர்சன உரிமையோடுதான், உங்கள் ஆட்சி அமைவதற்கு ஆதரவளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசுப் பதவியில் ஜோதிடர் நியமிக்கப்பட்டதற்கு உடனடியாகக் கண்டனம் வெளியிட்டது. சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் ராஜகுருவை வீட்டோடு நிறுத்திக்கொள்ளச் சொன்னார். மற்ற சிலரும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான இந்தச் செயலைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார்கள். வெளியே சமூக ஊடகங்களிலும் மீம்ஸ்கள் வைரலாகின.

அதற்கெல்லாம் மதிப்பளித்து, நியமித்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் அவரை அனுப்பி வைத்தது பாராட்டுக்கு உரியது. இது எதிர்க்கட்சிகளுக்கு முதல் வெற்றிதான் என்றாலும் உங்களுக்குத் தோல்வி என்று நினைத்து மனம் மருள வேண்டாம். நியமனத்தை விலக்க மறுத்திருந்தால்தான் தோல்வியாகியிருக்கும். பகுத்தறிந்து முடிவெடுப்பவராகக் கட்ட முயலும் பிம்பத்தைக் கலைப்பதாகியிருக்கும்.


உங்களுக்குக் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையிலும், தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய கேட்டினைத் தடுக்கும் வகையிலும் ஆதரவளிக்க முன் வந்த இயக்கங்கள் சுயநலமின்றி முன்வைக்கும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வாருங்கள். அவர்களின் ஆதரவால் உங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

திமுக எதிர்ப்பு என்பதை ஏதோ புனிதமான கொள்கை போலக் காட்டிக்கொண்டு அப்பட்டமான ஆசைகளோடு “ஆதரிப்போர்” வரிசையில் எழுந்துநின்றவர்களுடனான சகவாசத்தை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.

அரசியல் அக்கறை இல்லாதவர்கள் என்று கருதப்பட்ட கணிசமான மக்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரை உங்களின் பக்கம் ஈர்த்ததன் மூலம் அரசியல் களத்திற்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் எதிர்கால சமூக–அரசியல் வளர்ச்சிக்கு அது தளம் அமைத்துத் தரக்கூடும். இடதுசாரிகளும் மற்ற மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் சரியான வழிமுறைகளோடு அவர்களை அணுகும்போது அது புதிய நம்பிக்கை வெளிச்சங்களைப் பாய்ச்சும்.



No comments: