Wednesday, 11 November 2026

இடஒதுக்கீடு வெறும் காலக்கெடு ஏற்பாடா?



இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிற சமூகநீதிக்கான இடஒதுக்கீடுக் கொள்கைக்கு, அது கொண்டுவரப்பட்ட நாள் முதலே எதிர்ப்பும் மாற்றுக் கருத்துகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கெல்லாம் தாக்குப்பிடித்து இடஒதுக்கீடு கொள்கை தொடர்கிறது. அதை முற்றாக விலக்கிவிட முடியாது என்ற நிலையில் இப்போது, சில சிந்தனையாளர்கள் அக்கொள்கையில் ‘சீர்திருத்தங்கள்’ செய்யப் பரிந்துரைக்கிறார்கள். 

அண்மையில் எழுத்தாளரும் ஊடகக்களக் கருத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் அத்தகைய சீர்திருத்த முன்மொழிவுகளைக் கட்டுரையாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் முன்வைத்துள்ள ஆலோசனைகள் சமூகநீதி மேடையில் மறுபடியும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அவரும், வேறு சில கருத்தாளர்களும் முன்வைக்கிற அந்தச் சீர்திருத்தங்கள் வருமாறு:

பயன் பெறுவோருக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடஒதுக்கீடு; குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்ட செயலாக்கம்; குடும்பத்தில் ஒரு தலைமுறையினருக்கு மட்டும் வாய்ப்பளித்தல்; பொதுப்பிரிவினருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இடங்களை அதிகரித்தல்; மதம் மாறியவர்களுக்கு இந்தச் சலுகையை மறுத்தல் –ஆகியவையே அந்த ஐந்து சீர்திருத்தங்கள்.

வறுமை ஒழிப்புத் திட்டமா?

அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டியது –சில சமூகங்களைச் சேர்ந்த நலிந்தோருக்குக் கல்வியும் வேலையும் அளிக்கிற வறுமை ஒழிப்புத் திட்டமல்ல இது. இந்த மக்களுக்குக் கல்வியும் வேலை வாய்ப்புகளும் காலங்காலமாக மறுக்கப்பட்டதற்குக் காரணமே சமுதாயத்தில் புரையோடியிருக்கிற சாதியக் கட்டமைப்புதான்.

அதை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் விரிவான சமூகநீதிச் செயல்முனைப்புகளின் ஒரு பகுதியே இடஒதுக்கீடு. சாதிப் படிநிலையில் அடித்தட்டுகளுக்குத் தள்ளப்பட்ட சமூகங்களுக்கு அரசியல், பொருளாதாரம், சமுதாயம் சார்ந்த அதிகாரக் களங்களில் சமநிலை கிடைக்கச் செய்வதே இதன் இலக்கு.

தனியொரு குடும்பம் வாழ்க்கை வசதிகளைப் பெற்றுவிட்டது என்ற நிலையைக் கொண்டு இடஒதுக்கீட்டு வாய்ப்பை முடிவு செய்வது மிக மேலோட்டமான புரிதல். அந்த இலக்கை அடைய இது உதவாது.

கால வரம்பு

இடஒதுக்கீடு நிலையானதாக இருக்கக் கூடாதெனக் கூறி, காலக்கெடு நிர்ணயிக்க வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக அடுத்த பத்தாண்டு காலத்துக்கு மட்டும் செயல்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

சாதியத்தின் வேர்களின் வயது சுமார் 3,000 ஆண்டுகள். உயர்வு–தாழ்வு கற்பிக்கப்பட்ட சாதிப் படிநிலை அமைப்பு கடந்த 2,000 ஆண்டுகளாக இறுகிப் போயிருக்கிறது.

இத்தகைய நிலையில், அடுத்தொரு பத்தாண்டுக் கால ஒதுக்கீட்டால் இருபது நூற்றாண்டு கால ஒதுக்கல் கறை கரைந்துவிடுமா? இன்றைக்கும் உயர் பதவியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஏதாவது வழிபாட்டுத் தலத்துக்கு வந்து சென்றால், அந்த இடம் கழுவிவிடப்பட்டுப் பூஜை நடத்திப் “புனிதப்படுத்தப்பட்ட” (?) செய்திகள் வருகின்றன. பொதுப் புத்தியிலும் தனி மூளையிலும் புரையோடிப் படிந்திருக்கும் சாதிப் பெருமிதம் பெயர்த்தெடுக்கப்படும் வரையில் உடனடிக் காலவரம்பு இல்லாமல் சமூகநீதிச் சட்டம் தொழிற்பட்டாக வேண்டும்.

அம்பேத்கர் சொன்னாரா?

இந்த வாதங்களிலெல்லாம் தவறாமல் “அம்பேத்கரே சொன்னதுபோல” என்று சேர்த்துக்கொள்ளப்படுகிறது. அரசமைப்புச் சட்ட உரை 334இல், நாடாளுமன்ற – சட்டமன்றப் பிரதிநிதித்துவத்துக்கான தொகுதிகளுக்குத்தான் பத்தாண்டுகள் என வரையறுக்கப்பட்டது. இந்த அரசியல் இடஒதுக்கீட்டுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டுக்கும் தொடர்பில்லை. அகமண முறையால் தொடர்கிற சாதியக் கட்டமைப்பு இருக்கும் வரை சமூக இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதே அம்பேத்கர் வலியுறுத்திய தெளிவான நிலைப்பாடு.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் என்ற முறையில் அவர், பெரும்பான்மைக் கருத்தான கால வரம்புக்கு, அதுவும் தொகுதிகளுக்கான கால வரம்புக்கு மட்டுமே, ஏற்புக் கையெழுத்திட வேண்டியிருந்தது. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை அதை ஏற்றது.

1951–52இல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் தொடங்கிய தொகுதிகள் சார்ந்த இடஒதுக்கீடு பத்து ஆண்டுளுக்குப் பின் 1960இல் முடிவுக்கு வந்தது. அந்தப் பத்தாண்டுகளில் சமூக நிலைமைகள் மாறிவிட்டதா என்று ஆராய்ந்த நாடாளுமன்றம் மாறிவிடவில்லை என்ற முடிவுக்கு வந்தது. ஆகவே, அதை மேலும் ஒரு பத்தாண்டு காலத்துக்கு நீட்டித்தது.

இப்படி ஒவ்வொரு பத்தாண்டிலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நோக்கம் நிறைவேறிவிட்டதாக எதிர்கால நாடாளுமன்றம் கணிக்கிறது என்றால் (அதாவது போலியான விவரங்கள் இல்லாமல்) அப்போது தொகுதி இடஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்படும். யாரும் அதைத் தடுக்கப் போவதில்லை.

வேலையில், கல்வியில்…

அரசாங்க அலுவலகங்களிலும் கல்வி வளாகங்களிலும் இடஒதுக்கீடு கொள்கையின் செயலாக்கத்தையும் பலன்களையும் ஆராய்வதன் அடிப்படையில் தொடர்வது பற்றி முடிவு செய்ய வேண்டுமென்றார் அம்பேத்கர். அந்த ஆய்வின்படிதான், தொடக்கத்தில் பழங்குடிகளுக்கும் பட்டியல் சாதிகளுக்குமாக இருந்த இட ஒதுக்கீடு பின்னர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தோருக்கும் கொண்டுவரப்பட்டது. ஒன்றிய அரசாங்க வேலைகளிலும் வேறு சில மாநிலங்களிலும் சிறுபான்மை மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து அந்த அடிப்படையில் இடஒதுக்கீட்டு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஒரு குடும்பம் ஒரு தலைமுறை?

இடஒதுக்கீட்டின் நன்மைகளை ஒரே குடும்பம் தலைமுறை தலைமுறையாகப் பெறுவதைத் தடுத்து, ஒரு குடும்பத்தில் ஒரு தலைமுறைக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. சாதியம் தனியொரு குடும்பத்தைச் சார்ந்ததல்ல. அது சமூக அளவில் நாட்டாமை செலுத்தும் ஓர் அநீதி.

ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் கல்வி கற்று அரசுப் பணிக்கு வந்துவிடுவதால் ஈராயிரமாண்டு சாதி வன்மங்கள் உதிர்ந்துவிடுவதில்லை. ஒரு தலைமுறைக்கு (அதாவது பிள்ளைகளுக்கு) வாய்ப்பளித்துவிட்டு, அடுத்தடுத்த தலைமுறைகள் (அதாவது பேரப்பிள்ளைகள்) பாகுபாட்டுச் சுமைகளைச் சுமக்கட்டும் என்று விட்டுவிடலாமா? எத்தனை தலைமுறைகளானாலும் சமுதாயக் களத்தில் பிரதிநிதித்துவ சமத்துவம் நிலைபெறும் வரை இடஒதுக்கீடு கட்டாயத் தேவையாகிறது.

இடங்களும் இருக்கைகளும்

பொதுப்பிரிவினருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், அதற்கென்றே கூடுதல் இடங்களை உருவாக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக, எல்லோருக்குமான அரசாங்க வேலைகளும் கல்வி வளாக இடங்களும் அதிகரிப்பது நல்லதுதான்.

ஆனால், இன்றைய யுகத்தின் தாராளமய ஆக்கிரமிப்பில், இருக்கிற அரசுப் பணியிடங்களும் சுருக்கப்படுகின்றன. எங்கும் “அவுட்சோர்சிங்” மந்திரம் ஒலிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுகின்றன அல்லது தனியாரிடம் பிடித்துக் கொடுக்கப்படுகின்றன. அங்கெல்லாம் எப்படி வேலை இடங்களையும் கல்வி இருக்கைகளையும் அதிகரிக்க முடியும்?

ஒருவேளை, வேலைத்தளத்திலும் கல்விக்களத்திலும் இடங்கள் அதிகரிக்கப்பட்டாலுமே கூட, அதனால் உருவாகும் மொத்த எண்ணிக்கையில், அரசமைப்புச் சட்டப்படி, தற்போதைய இடஒதுக்கீடு விகிதங்கள் கடைப்பிடிக்கப்பட்டாக வேண்டும். அதாவது ஆயிரம் இடங்கள் இரண்டாயிரமாக அதிகரிக்கப்படுமானால் அதில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டுக்குக் கொண்டுவரப்பட்டாக வேண்டும். அதைச் சொல்ல மறுக்கும் இந்த யோசனை இடஒதுக்கீட்டின் மொத்த விகிதத்தைக் குறைக்கும் தந்திரமாகவே இருக்கும்.

மதம் மாறினாலும்

ஒருவர் மதம் மாறுவது அவருடைய நம்பிக்கை சார்ந்த முடிவு. எந்தக் கடவுளையும் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். எந்த மதத்தையும் பின்பற்றலாம், பின்பற்றாமலும் இருக்கலாம். இந்த நம்பிக்கைச் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது இந்தியாவின் பெருமைக்குரிய அரசமைப்பு சாசனம். 

ஆனால், மதம் மாறினாலும் சாதிய ஒதுக்குதல்கள் தொடர்கின்றன. இதைப் பல ஆய்வுக் குழுக்கள் (எடுத்துக்காட்டாக, ரங்கநாத் மிஸ்ரா ஆணையம்) சுட்டிக்காட்டியுள்ளன. ஆகவே, மதமாற்றத்தைக் காரணம் காட்டி உரிமைகளைப் பறிப்பது சமூக நீதிப் பயணத்தை வழிமறிப்பதேயாகும்.

எதுவரையில் என்றால்

எதுவரையில்தான் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்றும் அடிக்கடி கேட்கப்படுகிறது. இடஒதுக்கீடே தேவையில்லை எனும் இயற்கையான சமத்துவ அரண் கட்டப்படும் காலம் வரையில், அதற்கான வாய்ப்புப் பாதை திறந்தே வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டால் எந்தெந்த சமூகங்கள் எவ்வளவு பலனடைந்திருக்கின்றன? அரசியல்–சமுதாய–பொருளாதாரக் களங்களில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? இவற்றைத் துல்லியமாக மதிப்பிடுவதற்காகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வலியுறுத்தப்பட்டது. தற்போது தொடங்கியுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின் இறுதி அறிக்கை வரட்டும். 

அதற்காகக் காத்திருக்க மனமில்லாமல் சமூகநீதி எல்லையைச் சுருக்குவதற்கான திட்டங்களை முன்வைக்கும் வாதங்களும், அதற்கு அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தும் உத்திகளும் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நாடுகிற அனைவராலும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியவையே.

[0][0][0]

சிந்தை தளத்தில் எனது கட்டுரை


https://www.sindhai.com/essays/caste-based-reservation-article-by-akumaresan-1389874

No comments: