“மூலைக்கு மூலை உன் அக்கறையும் உழைப்பும் தெரியுது, அதனால்தான் வீடு இவ்வளவு அழகா இருக்குது ஜெயந்தி.”
உறவினர் இல்லத்திற்கு சென்றிருந்தபோது அவர்களின் மருமகளைப் பாராட்டினேன். அப்போது அவளுடைய முகம் வெளிப்படுத்திய உணர்வு பெருமிதமா, சலிப்பா? தனியாகப் பேசக் கிடைத்த வாய்ப்பில் ஜெயந்தி சொன்ன தகவல் மனதை அழுத்தியது.
“எதையும் பெர்ஃபெக்டா செய்யுறது என் பழக்கம் மாமா. வேலைக்குப் போனா அங்கேயும் நல்லா நல்லா உழைச்சுப் பெயர் வாங்கலாமே, நிறைய ஃபிரண்ட்ஸ் கூடப் பழகலாமேன்னு ஆசையா இருக்கு. ஆனா, வீட்டுல இவ்வளவு வேலை இருக்கிறப்ப வெளியில எதுக்குப் போகணும்னு சொல்லிட்டாங்க.”
அண்மையில் படித்த, பொருளாதார ஆய்வாளர் பால் அலாபட் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டில் எழுதியுள்ள “டு மேக் இந்தியா’ஸ் டெமாக்ரஃபி எ டிவிடெண்ட்” (இந்தியாவின் மக்கள்தொகுப்பை ஓர் ஆதாயப்பங்காக ஆக்கிட) என்ற தலைப்பிலான கட்டுரை ஜெயந்தி போன்றோரை நினைவுக்குக் கொண்டுவந்தது.
தொகையும் தொகுப்பும்
நாட்டின் குடிமக்கள் எண்ணிக்கையை “மக்கள்தொகை” (பாப்புலேசன்) என்கிறோம். பல்வேறு பாலினங்கள், வயதுப் பிரிவுகள், சமூக அடையாளங்கள், பேசும் மொழிகள், பொருளாதாரப் படிகள், கல்வி நிலைகள், குடும்பமாகச் சேர்ந்திருப்போர், தனித்து வாழ்வோர் என்றெல்லாம் வகைப்படுத்துவது மக்கள்தொகுப்பு (டெமாக்ரஃபி).
நாட்டில் 15 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களான, உழைக்கக்கூடியவர்களின் தொகை அதிகரிப்பதை “மக்கள்தொகுப்பு ஆதாயப்பங்கு” என்கிறார்கள். பல நாடுகள் உழைக்கவியலாதவர்கள் எண்ணிக்கையால் முதுமையடைகிறபோது, உழைக்கத் தகுதியுள்ள மக்கள் மிகுந்திருப்பதால் இளமையோடு இருக்கின்றன. அவ்வகையில் இந்தியா ஓர் இளமையான நாடு. இந்தியாவில் உழைப்பதற்கேற்ற வயதுப் பிரிவினர் கிட்டத்தட்ட 100 கோடிப் பேர் (68 விழுக்காடு) உள்ளனர். இது மிகப்பெரிய வலிமை.
இவர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகளையும் பொருளாதார உற்பத்திப் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு தளமாக அமையும். அந்த வாய்ப்புகளை உருவாக்கத் தவறினால், இந்த வலிமையே பெரும் சுமையாக, மாறிவிடக் கூடும் என்று பால் அலாபட் எச்சரிக்கிறார்.
வேலையின்மை வெப்பத்தில் தவிப்போரையும், படிப்புக்குப் பொருத்தமின்றிக் கிடைத்த வேலைகளில் உழல்வோரையும் பார்க்கிறோம். அவர்களில் பலர் சுயநலப் பேர்வழிகளின் பிடியில் சிக்குவதையும், பலர் மக்களிடையே பகைமையை வளர்க்கும் சாதிவெறி, மதவெறிக் கும்பல்களோடு கலந்துவிடுவதையும் கவனிக்கிறோம்.
முன்னுரிமையும் உண்மையும்
இதற்கான தீர்வு மனித உழைப்பைப் பெரிதும் சார்ந்திருக்கிற தொழில்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகிற தொழில்களைப் பின்னுக்குத் தள்ளுவதில் இருக்கிறது.
பிரதமர், முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணங்களின்போது இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளில் தொழில்களைத் தொடங்குவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகச் செய்திகள் வரும். அந்தத் தொழில்களால் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொல்லப்படும்.
ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் அப்படியொரு தொழிலகம் திறக்கப்படுவதாகவும், அதனால் பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்குமென்று சொல்லப்படுவதாகவும் வைத்துக்கொள்வோம். ஆனால், உண்மையில் அந்த வளாகத்திற்குள் சென்று வரக்கூடிய தொழிலாளர்கள், அலுவலர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் அடங்கிவிடும்.
மீதி ஒன்பதாயிரம் பேர்? அந்தத் தொழிலகத்திற்கான மூலப்பொருள்களைத் தயாரிக்கிற பட்டறைகளின் உழைப்பாளிகள், பக்கத்தில் ஒரு தேநீர்க்கடை போடப்படுமானால் அதன் டீ மாஸ்டர், அதற்கெதிரே இருசக்கர வண்டிகள் பழுதுபார்ப்புக்கென சிறிய பணிமனை அமைக்கப்படுமானால் அதன் மெக்கானிக்… இப்படியானவர்கள் அந்த ஒன்பதாயிரத்துக்குள் வருவார்கள்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், பணிகளில் இருப்போருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்தல் என்ற ஆலோசனைகளைக் கட்டுரையாளரும் கூறியிருக்கிறார். அவை அரசாங்கம் செயல்படுத்தக்கூடிய ஆலோசனைகள்தான். ஆனால், மூன்றாவதாக அவர் முன்வைக்கும் ஆலோசனையை அப்படிச் சொல்லிவிட முடியாது. கால மாறுதல்களுக்கு ஏற்ப உள்நாட்டுத் தொழிலாளர் சட்டங்களைச் “சீரமைக்க வேண்டும்” என்கிறார்.
ஏற்கெனவே முதலீடுகளை ஈர்ப்பது, தொழில்களை ஊக்குவிப்பது என்ற லேபிள்களோடுதான் தொழிலாளர் சட்டங்களில் கை வைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைக்கிற உரிமை கூட மறுக்கப்படுகிறது. பணி நேரம், வேலைப் பாதுகாப்பு, நிரந்தர நியமனம் உள்ளிட்டவற்றில் மோசமான சமரசங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இன்னும் எந்த விதமான “சீரமைப்புகள்” தேவையென்று அலாபட் போன்றோர் பரிந்துரைக்கிறார்களோ?
பெண்களுக்கான இடம்
இவை ஒருபுறமிருக்க, மக்கள்தொகுப்பில் தலையாய பிரிவினராகிய பெண்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது பற்றிய அலாபட்டின் முன்மொழிவுகள் முக்கியமானவை. உழைக்கும் தகுதி வாய்ந்தவர்களில் சரிபாதிப் பேர் பெண்கள். ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘காலமுறை தொழிலாளர் சக்தி ஆய்வு’ (பிஎல்எஃப்எஸ் 2023–24) எனும் அறிக்கையின்படி, எஃப்எல்பிஆர் எனப்படும் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், அதாவது வேலையில் சேரும் வயதுத் தகுதி வாய்ந்த பெண்களின் விகிதம், 41.7 விழுக்காடு.
வேலைகளில் பெண்கள்
வேலைத் தகுதியுள்ள பெண்கள் 41.7 விழுக்காட்டினர் என்றால், உண்மையாகவே பலவகையான வேலைகளிலும் ஈடுபடும் பெண்கள், 30 முதல் 32 விழுக்காடுதான். விவசாயம், பொருளுற்பத்தி, சேவைத் துறை, முறைசாராத் துறை, சுயதொழில் என பெண் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 15 கோடிப் பேர்.
இவர்களில் 64.3 விழுக்காட்டினர் கிராமங்களின் வயல்வெளிகளில் உழைப்பவர்கள்தான். 67.4 விழுக்காட்டினர் சொந்தத் தொழில்களிலும் குடும்பத் தொழில்களிலும் ஈடுபட்டிருப்பவர்கள். நிலையான மாத ஊதியம் கிடைக்கிற வேலைகளுக்குச் செல்கிற பெண்களோ 18.4 விழுக்காடு, உறுதியற்ற கூலி வேலைகளுக்குச் செல்கிறவர்கள் 14.3 விழுக்காடு என்று பிஎல்எஃப்எஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஏஐ திணிப்புகளால், குறிப்பாகப் பெண்கள் அதிகம் பங்கேற்கும் தொடக்க நிலை அலுவலகப் பணிகள் பெருமளவு அரிமானத்துக்கு உள்ளாகின்றன.
தானாய் வராது ஆதாயம்
பால் அலாபட் ஒரு கருத்தைத் திட்டவட்டமாகக் கூறுகிறார். இளையவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதாலேயே நாட்டிற்கு மக்கள்தொகுப்பு அடிப்படையிலான ஆதாயப் பங்கீடு தானாகக் கிடைத்துவிடாது. ஒட்டுமொத்தத்தில் உழைப்புத் தகுதி பெற்றுள்ளவர்களுக்கும், அவர்களில் பெண்களுக்கும் உரிய வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதன் மூலமே அதைப் பெற முடியும் என்கிறார்.
உரிய வாய்ப்புகள் என்றால் சொந்தத் தொழில்களுக்கு முதலீட்டு உதவிகள், மானிய வசதிகள், சந்தை உறுதிப்பாடுகள், வேலையில் இருப்பவர்களுக்கும் வேலையில் சேரத் துடிப்பவர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான அமைப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன்மைகளின் தடை
இந்த வழிமுறைகள் நடைமுறைகளாவதற்கு என்ன தடை? கல்வி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிய அவசர உணர்வின்மை, திட்டங்கங்களில் ஒருங்கிணைப்பின்மை, தொடர்ச்சியான செயல்பாடுகளில் வறுமை… இவையனைத்தும் பெருந்தடையாக இருக்கின்றன. அந்தத் தடையை அகற்ற மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை அரசியல் தெளிவோடு வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.
இவரைப் போன்ற கருத்தாளர்கள் இவற்றைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இவற்றோடு உழைப்பாளர் உரிமைகள், சட்டப் பாதுகாப்புகள், தொழிற்சங்கத் தொடர்புகள் ஆகியவையும் இணைந்திட வேண்டும். அப்போதுதான் முழுமையான வளர்ச்சியை எந்த நாடும் பார்க்க முடியும்.
ஆதாய விரிவு
மக்கள்தொகுப்பு ஆதாயம் என்பதைப் பொருளாதாரப் பங்கீடாக மட்டும் பார்த்துவிடக் கூடாது. அது சமூக மனமாற்றம், பாலின சமத்துவம், பகுத்தறிவுக் கண்ணோட்டம், சமுதாய முன்னேற்றம் என்றெல்லாம் விரிவடைவதாகும்.
அவ்வாறு விரிவடைவதை முதலாளித்துவம் விரும்பாது. ஏனென்றால், முதலாளித்துவத்தைப் பொறுத்த வரையில், வேலைக்காக ஏங்குவோரை ஒரு பெரும்படையாக வைத்திருப்பது, வேலையில் இருப்போரைக் கட்டுப்படுத்தி வைக்கிற ஓர் உத்தி.
அவ்வாறு விரிவடைவதை பழமைத்துவம் அனுமதிக்காது. ஏனென்றால், அதைப் பொறுத்த வரையில், பெண்களையும் உழைப்பாளிகளையும் கீழ்த்தட்டுகளில் வைத்திருப்பது உயர் பீடங்களைக் கைப்பற்றியர்களைப் பாதுகாக்கிற கவசம்.
ஆம், சமத்துவத்துக்கான பாதையில் சமூக, பாலின வேலிகள் தகர்த்துத் தோள்சேர்ந்து நடப்பதே மக்கள்தொகுப்பு ஆதாயத்தை நிலைப்படுத்தும் நம்பகமான பயணம்.
[0][0][0]
மகளிர் சிந்தனை நவம்பர் 2026 இதழில் எனது கட்டுரை







