Wednesday, 17 October 2007


வெண் திரையில் ஒரு சிவப்பு வரலாறு:

ஏ.கே.ஜி.


ஏ.கே.ஜி. -இந்தியாவின் வர்க்கப் போரில், ஜனநாயகப் போராட்டக் களத்தில், மக்களின் உரிமை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் நரம்புகளில் முறுக்கேற்றுகிற பெயர். பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, தன்னல மறுப்பு, தாக்குதல்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட வீரம், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத நெஞ்சுரம், சொந்தத் துயரங்களைப் பொருட்படுத்தாத தியாகம், அனைத்திற்கும் அடித்தளமாக சமுதாய விடுதலை லட்சியம் ... இவையெல்லாம் அந்த மூன்று எழுத்துக்களின் விரிவாக்கம். காக்கி அரைக்கால் சட்டை, மேல்சட்டை, தொப்பி - ஆகிய சீருடையுடன் செவ்வணக்கம் செலுத்தும் ஏ.கே. கோபாலன் திருவுருவப் படத்தை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் கண்டிருக்கக் கூடிய புதிய தலைமுறை செங்கொடி இயக்கத் தோழர்களுக்கு அவரைப் பற்றி மூத்தவர்கள் சொல்கிறபோது அவரை நேரில் காண முடியாமல் போனது பற்றிய ஏக்கம் மிஞ்சும். மூத்த தோழர்களுக்கு அந்த கடந்த கால நினைவுகளில் மனம் நிறைந்த விஞ்சும்.இளையவர்களுக்கு அவரைச் சந்திக்கவும், மூத்தவர்களுக்கு அன்றைய அனுபவங்களுக்குச் சென்றுவரவும் ஒரு வாய்ப்பாக ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.


திரையையும் அரங்கையும் பார்வையாளர் சிந்தையையும் செம்மயமாக்கும் “ஏ.கே.ஜி.” படத்தை கேரள முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் காசர்கோடு மாவட்டக் குழுவும் அபுதாபி சக்தி இலக்கியக் குழுவும் இணைந்து உருவாக்கி வழங்கியுள்ளன. இயக்குநர்: தேசிய விருது பெற்ற “பிறவி” படத்தை இயக்கிய ஷாஜி என். கருண். சுதந்திர இந்தியாவின் இருண்ட அத்தியாயமான அவசர நிலை ஆட்சிக்காலத்தில் ஒரு மாணவனுக்கு நேர்ந்த கொடுமையை உலகறியச் செய்த படம் அது என்பதை நினைவு கூர்ந்தால், ஷாஜியின் கலை ஈடுபாடு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


ஏ.கே.ஜி.யின் கதையைப் படமாக்குகையில், காலமெல்லாம் மக்களுக்காகவே உழைத்த அவரது போராட்ட வாழ்க்கையையே அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இடுக்கி அணை கட்டுமானத்தின்போது முன்யோசனையோ மாற்று வழிகளோ இல்லாமல் வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து துவங்குகிறது படம்.அவசர நிலை ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்க அவர் நடத்திய போராட்டம் வரையில் முக்கியமான நிகழ்வுகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.அந்தப் போராட்டங்களில் அவர் வாங்கிய அடிகள், தாங்கிய வலிகள் ஆகியவையும் நமக்கு உணர்த்தப்படுகின்றன.


குருவாயூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான போராட்டத்தை நடத்துகையில், ஆதிக்கச் சாதியினரின் திட்டமிட்ட தாக்குதலுக்கு இலக்காகிறார். விடுதலைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது கைதிகளை மனிதர்களாக நடத்த வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் போதும் சிறையதிகாரிகளால் தாக்கப்படுகிறார். கடலூர் சிறையில் அவரை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கித் தோட்டாவை சக தோழர் நெஞ்சில் ஏற்று மடிய, கண்ணீர் வடிக்கும் ஏ.கே.ஜி.யின் போர்க்குணம் மேலும் கூர்மையாகிறது... இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஏற்பட்ட காயங்களும், முழுக்க முழுக்க மக்களுக்காகவே வாழ்ந்ததில் தன்னைக் கவனித்துக் கொள்ள முடியாமல் போனதுமாகச் சேர்ந்துதானே பிற்காலத்தில் அவரது உடலில் நோய்கள் சிறைபுகக் காரணமாக இருந்தன என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.


விவசாயத் தொழிலாளர்களுக்காக நில மீட்புப் போராட்டத்தை நடத்திய போது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக அவர் மீது பாயும் காவல் துறையினரிடம் உபரி நிலம் பற்றிய காங்கிரஸ் அரசின் மோசடியான அறிவிப்பைக்காட்டி, “சட்டப்படி இது நோ-மேன்ஸ் லேண்ட் (யாருக்கும் உரிiயைற்ற நிலம்), இங்கே நாங்கள் வருவதை நீங்கள் எப்படித் தடுக்க முடியும்,” என்று வாதிட்டு அவர்களை அசர வைக்கிறார். அவரது இந்த வாதத் திறமைதான் கேரள சட்ட மன்றத்திலும், பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு வரலாறு படைத்தவராக அவருக்குப் புகழ் சேர்த்தது.


அவசர நிலை ஆட்சியை விலக்கிக் கொள்ளுமாறு பிரதமர் இந்திரா காந்தியிடம் அவர் வலியுறுத்துகிற காட்சி ஒரு அரசியல் பாடம்.


போராட்ட இயக்கத்தில் அவரோடு தோள் சேரும் தோழர் சுசிலா பின்பு அவரது இல்லற வாழ்விலும் இணை சேர்கிறார். ஒரு நாள், அவர்களது அன்பு மகள் ஒரு தங்கச் சங்கிலியை அணிந்து கொண்டு வந்து காட்ட, “உனக்கும் தங்க நகை ஆசை வந்து விட்டதா,” என்று கேட்டு, கோபாலன் அடித்து விடுகிறார். பின்னர் அது கவரிங் நகைதான் என்பதை சுசிலா எடுத்துக் கூற, மகளை அரவணைத்துக் கொள்கிறார். அந்த மாமனிதர் தமது சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடின்றி வாழ நடத்திய மனப் போராட்டத்தை வெளிப்படுத்துகிற காட்சி இது.


தோழர்கள் வழியனுப்ப கோபாலன் சுசிலாவுடன் ஒரு ரயிலில் புறப்படுகிறார். ரயில் நிலையத்திற்குள் வயது முதிர்ந்த ஒரு ஏழைத் தம்பதி கையில் ஒரு கோரிக்கை மனுவுடன் நிற்பதைப்பார்த்து, ஓடத்துவங்கிய ரயிலிலிருந்து கீழே குதித்து, அவர்களது பிரச்சனையை விசாரித்தறிகிறார். அவர்களது மனுவோடு அவர்களையும் அந்தத் தோழர்களின் பொறுப்பில் ஒப்படைத்து ஏ.கே.ஜி. விடை பெறும் காட்சியில் எவ்வளவு ஆழமான அர்த்தம்!


வழக்கமான கதைப்படமாக இல்லாமல், அவரது சுயசரிதையின் பக்கங்களிலிருந்து சில பக்கங்களை நிகழ்வாக்கி, மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய தலைவர்கள் அவரைப் பற்றிக் கூறியிருப்பதைப் பதிவாக்கி, “ஆவணக் கதைப்படம்” என்ற புதிய வடிவில் இந்த 75 நிமிடப்படம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவம் உண்மை வாழ்க்கை அனுபவத்தோடு நம்மை நெருக்கமாக்குகிறது.


முகத் தோற்றம், உடல் அமைப்பு, நடமாட்டம், அந்த கம்பீரம் என ஏ.கே.ஜி.யாகவே நம் இதயத்தில் குடியேறுகிறார், நாடக - திரைப்பட இயக்குனரும் நடிகருமான பி. ஸ்ரீகுமார். சுசிலாவை நேரில் காணும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார் அர்ச்சனா. எம். ஆர். சசிதரன் ஒளிஓவியம், பென்னி மாத்யூ-பால முரளி கலை இயக்கம், மகேஷ் நரயா படத் தொகுப்பு என அனைத்துக் கலைஞர்களின் பங்களிப்புமாகச் சேர்ந்து படத்தை உயிரோட்டமாக்கியுள்ளன. மலையாளம் பேசினாலும் மொழி கடந்து மக்களின் மனச் சிகரத்தில் கொடி நாட்டுகிறது அந்த உயிரோட்டம்.


“புதிய வசந்தம் வரும், அப்போது நான் இல்லாவிட்டாலும் எனது தோழர்கள் இருப்பார்கள்,” என்று ஏ.கே.ஜி. கூறுகிற வரிகளோடு படம் முடிகிறது. அந்த நம்பிக்கையில் ஒரு தோழமைக் கட்டளையும் ஒலிப்பதை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது நம்மால்.

-அ. குமரேசன்

No comments: