இணைப்பதற்கா,உடைப்பதற்கா பாலம்?
அ.குமரேசன்
அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் ஒரு அடிப்படை உண்டு. அதுதான் உண்மை. அதே போல் இரண்டுக்கும் ஒரு தேவையும் உண்டு. அதுதான் கற்பனை. உண்மையைத் தேடுகிற அறிவியலில் கற்பனைக்கு என்ன வேலை? கற்பனையான இலக்கியத்தில் உண்மைக்கு என்ன இடம்? பறக்க வேண்டும் என்ற கற்பனைதான் அறிவியல் ஆய்வு முனைப்புகளைத் தூண்டிவிட்டு ஆகாய விமானங்களைக் கொண்டுவந்தது. வாழ்க்கையின் உண்மைகள்தான் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுவந்தன. கற்பனை கை கொடுக்காமல் அறிவியல் வளர்ச்சி இல்லை. உண்மையின் சாறு இல்லாமல் இலக்கிய வளர்ச்சியும் இல்லை.
அறிவியல், இலக்கியம் ஆகிய இரண்டுக்குமே மிக அடிப்படையான ஒரு இலக்கு உண்டு: சமுதாயம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே அது.இப்போது ஒரு இலக்கியம் அறிவியலுக்கு எதிராக நிறுத்தப்படுகிறது - ராமாயணம் என்ற இலக்கியம்.
ஒரு இலக்கியம் என்ற அடிப்படையில் ராமாயணத்தில் அள்ளியள்ளிப் பருகுவதற்கு எவ்வளவோ வாழ்க்கை உண்மைகளும் கற்பனைகளும் இருக்கின்றன. ஆனால் இன்று ராமாயணத்தின் ஒரு கற்பனை வாழ்க்கை உண்மைக்கு எதிராக, சமுதாயத்தின் தேவைக்கு முட்டுக்கட்டையாக வைக்கப்படுகிறது. ஆமாம், ராமர் பாலம் என்ற கற்பனைதான்.
முதலில் எது உண்மையான மூல ராமாயணம் என்பதிலேயே நிறைய சிக்கல் இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் அந்தந்த மொழியில் ராமாயண மூலக்கதை எடுத்துக் கொள்ளப்பட்ட போது அந்தந்த வட்டார அரசியல் தேவைகளுக்கு ஏற்பப் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. அதனால்தான் சிறப்புகளும் குறைபாடுகளும் உள்ள சராசரி மனிதனாக வால்மீகி ராமாயணத்தில் சித்தரிக்கப்படும் ராமன், பிற்காலத்தில் கம்ப ராமாயணத்தில் அப்பழுக்கற்ற கடவுளின் அவதாரமாகக் காட்டப்படுகிறான்.
தமிழக மக்களின் ஒன்றரை நூற்றாண்டுக் கனவு சேது சமுத்திரத் திட்டம். சுற்றுச் சூழல், இயற்கைச் சமநிலை ஆகிய கவலைகளைக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஒருபுறம். அவர்களுக்கு அறிவியல் விளக்கம் அளிக்க முடியும். மீனவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்பவர்கள் இன்னொரு புறம். அவர்களுக்குப் பொருளாதாரம் சார்ந்த விளக்கங்கள் உள்ளன.
ஆனால் ஆதாரமெல்லாம் கேட்காதீர்கள், நம்பிக்கைக்கு ஆதாரம் தேவையில்லை என்று கூறி இதை எதிர்ப்பவர்களுக்கு என்ன விளக்கம் தர முடியும்? அறிவியலும் இலக்கியமும் கேள்வி கேட்கத் தூண்டுகின்றன. ஆனால் மதமும் மதம் சார்ந்த நம்பிக்கைகளும் மனிதர்களுடைய கேள்வி கேட்கும் உரிமையை மறுக்கின்றன. கேள்விகள் எழுப்பாத சமுதாயம் முன்னேறியதில்லை. இந்திய சமுதாயம் ஏன் இந்த 21ம் நூற்றாண்டில் இவ்வளவு பின்தங்கிக்கிடக்கிறது என்பதற்கான பதில் இத்தனை நூற்றாண்டுகளாக கேள்வி கேட்கும் உரிமையை மறுத்து வெறும் நம்பிக்கையை மட்டுமே சார்ந்திருக்கும்படி முடக்கப்பட்டதிலும் இருக்கிறது.
எந்த ராமேஸ்வரத்திலிருந்து மேற்படி பாலத்தை ராமன் கட்டியதாகச் சொல்கிறார்களோ, அந்த ராமேஸ்வரத்தின் உள்ளூர் வரலாறு முதல் தமிழகத்தின் எந்தவொரு வரலாற்றிலும் அந்தப் பாலம் பற்றிய குறிப்பு எந்த வடிவத்திலும் இல்லை. மூல ராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்தியது, ராமன் போய் மீட்டுவந்தது உள்பட எல்லாச் சம்பவங்களும் மத்திய இந்தியப் பகுதியைத் தாண்டவில்லை. விந்திய மலையோடு ராமாயணக்கதை முடிந்துவிடுகிறது.
ஆயினும் ராமன் கதையை விரிவுபடுத்தித் தமிழக எல்லையைத் தாண்ட வைத்ததில் அன்றைய அரசியல் நோக்கங்கள் இருந்தன. அதை விட முக்கியமாக, பகவத் கீதையின் மூலம் கெட்டிப்படுத்தப்பட்ட சாதியக் கட்டமைப்புக்கு தெய்வாம்ச முலாம் பூசிவிடுகிற நோக்கம் இருந்தது. பிறப்பால் மனிதர்களைப் பாகுபடுத்திய வர்ண அடுக்குக்கு கடவுளின் சித்தம் அது என்று நம்பவைக்கிற நோக்கம் இருந்தது. பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்ற ஆணாதிக்கச் சிந்தனையை உறுதிப்படுத்துகிற நோக்கம் இருந்தது. அரசன் தெய்வத்தின் பிரதி நிதி, அவன் சொல்வதெல்லாம் தெய்வ வாக்கு என்பதாக மனங்களில் உருவேற்றுகிற நோக்கம் இருந்தது.
இருக்கிற கடவுள்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் ஏன் ராமனை மட்டும் பிடித்துக் கொள்கிறார்கள்? அதற்கும் ஒரு ஆழ்ந்த நோக்கம் உண்டு. கம்பன் மறைத்த ராமன் ராமன் அவன்.
பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து திரும்பி வரும் ராமனிடம் பரதன் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறான். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பின், தம்பியின் ஆட்சி எப்படியிருந்தது என வினவுகிறான். மற்றவர்கள் நல்லபடியாகக்கூற, வசிஷ்டர் மட்டும் கோபத்துடன், "செய்யக் கூடாததைச் செய்துவிட்டான் உன் தம்பி," என்கிறார். என்ன நடந்தது எனக் கேட்கும் அண்ணனிடம் ராஜகுரு, "சூத்திரன் வேதம் படிக்கலாம் என ஆணையிட்டான் பரதன்," என்கிறார். "வேண்டுமானால், ஊர்க்கோடிக்குச் சென்று பார்," என்றும் கூறுகிறார். சினம் தலைக்கேறப் புறப்படும் ராமன் அங்கே சம்புகன் என்பவன் தலைகீழாகத் தொங்கியபடி தவம் இருப்பதைப் பார்த்து, "என்ன செய்கிறாய்," என்று கேட்கிறான். "உனக்குத் தெரியாமலா இங்கே வந்திருப்பாய் மன்னா? வேதம் படிக்க விரும்பினேன். பிராமணர்கள் போல நேரடியாக வேதம் படிக்க எமக்கு அனுமதி இல்லை என்பதால், இப்படித் தலைகீழாகத் தொங்கி என் தகுதியை வளர்த்துக் கொண்டு வேதம் கற்க எண்ணினேன்," என்கிறான் சம்புகன். அதைக் கேட்டு ஆத்திரவசப்படும் அந்த சத்திரிய மன்னன் வாளை உருவி அந்தச் சூத்திர ஞானியின் கழுத்தை ஒரே வீச்சில் துண்டாக வெட்டினான். "தர்மத்தை" மீறுகிறவர்களுக்கு உரிய தண்டனையை நிறைவேற்றிய திருப்தியோடு பாவம் தொலைக்க சரயு நதியில் தலை முழுகுகிறான்.இப்போது உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கும் கும்பல்களுடைய கூச்சல்களோடு இந்த சம்புகன் கதையை ஒப்பிட்டுப் பார்த்தால் ராமனை ஏன் பாலத்துக்கு இழுக்கிறார்கள் என்கிற நுட்பத்தையும் புரிந்து கொள்ளலாம்.
அறிவியலை அசிங்கப்படுத்தி, பலர் உண்மையாக நம்புகிற ஆத்திகத்தையும் அசிங்கப்படுத்தி இவர்கள் கட்ட விரும்புகிற பாலம் - மக்களிடையே உறவை வளர்ப்பதற்கு அல்ல. மாறாக ஒற்றுமையைப் பிளப்பதற்கு. பாலம் என்பதே இணைப்பதற்காகத்தான் என்ற இயற்கையையே சிதைக்க முயலும் இந்தக் குறுமதியினர் குறித்து எச்சரிக்கை தேவை.
No comments:
Post a Comment