Thursday 20 September 2007

புத்தகம்

பேரம்பலத்துக்கு வரும்
சிற்றம்பல ரகசியங்கள்

சிதம்பரம் கோயில் என்றால் ஒரு காலை உயர்த்தி நடனமாடும் நடராசர் உருவம், நந்தனார் பற்றிய பக்திக் கதை, ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி... இப்படியாகப் பட்ட படிமங்கள் மட்டுமே மக்கள் மனதில் ஊன்றப் பட்டுள்ளன. “சிதம்பர ரகசியம்” என்ற பதத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்தினாலும் கூட, அந்த ரகசியம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கு நாட்டம் இருப்பதில்லை. “அதெல்லாம் கடவுள் விவகாரம், நமக்குப் புரியாத தத்துவம்” என்று ஒதுக்கிவிடுவதில் ஒரு சுகம் இருக்கிறது போலும். மக்களின் அந்த எளிமையைப் பயன்படுத்திக் கொண்டு என்னென்ன அக்கிரமங்கள் அரங்கேறுகின்றன!

மற்ற இந்துக் கோயில்கள் போல் இக்கோயிலில் “மூலவிக்கிரகம்” அல்லது மற்ற சிவன் கோயில்கள் போல் கருவறையில் சிவலிங்கம் இருப்பதில்லை. மாறாக ஒரு திரைதான் இருக்கிறது. வழிபாட்டு நேரத்தில் அந்தத்திரைக்குத்தான் தீபாராதனை நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில் திரை விலக்கப்படும். திரைக்குப் பின்னால் ஒரு அறையோ, அதில் ஒரு சிலையோ இருக்காது. மாறாக ஒரு வெற்றுச் சுவர் மட்டுமே இருக்கும். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்ற தத்துவத்தை அது கூறுகிறதாம். கவர்ச்சிகரமான இந்தத்தத்துவத்தின் பின்னணியில், அப்படிப்பட்ட ஏன் இவ்வளவு பெரிய கோயில், ஏன் இத்தனை வழிபாட்டு விதிகள், ஏன் இப்படிப்பட்ட பாகுபாடுகள் என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகள் உண்மைலேயே ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ரகசியத்தை உடைத்துக் காட்டும் ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதில் பங்கேற்கிறது, ‘சிகரம்’ செந்தில்நாதன் ஆய்வில் வந்துள்ள ‘சிதம்பரம் கோயில் - சிலஉண்மைகள்.’

64 பக்கங்களே கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் நீண்ட நெடும் வரலாற்று மோசடியை, அதன் அடித்தளமாக உள்ள சமூக ஒடுக்குமுறையை, ஒரு சிறிய மாத்திரைக்குள் அடங்கிய பெரும் மருத்துவ ஆற்றலோடு வெளிக் கொணர்கிறது. படிப்பவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட அறியாமைச் சுகம் அகன்று, மெய்ப் பொருள் அறிந்து கொண்டதன் ஆவேசம் குடியேறுகிறது.

அண்மையில், இக்கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடச்சென்ற ஆறுமுகசாமி ஓதுவார் தடுக்கப்பட்டார். வயதில் முதியவர் என்றும் பாராமல் தாக்கப்பட்டார். நீதிமன்றத்தின் இடைக்கால ஆணை மூலம், அவர் அங்கு தமிழில் பாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டார். அந்தச் செய்தியிலிருந்து துவங்கும் புத்தகம், பின்னோட்டமாக கோயிலின் வரலாற்றுத் தடத்தில் சென்று அத்தடத்தில் புதைக்கப்பட்டிருக்கும் சாதிய ஆதிக்கச் சதிகளை, தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்ட சூழ்ச்சிகளை, கோயிலின் வற்றாத செல்வங்களைச் சுரண்டும் தந்திர ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக மக்களின் பேரம்பல மேடைக்குக் கொண்டுவருகிறது.

இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில் போல் முதலிலேயே இவ்வளவு பெரிதாகக் கட்டப்பட்டதல்ல. பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலங்களில் கோயிலை அவரவர் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரிவுபடுத்தினார்கள். கோயில் முதன் முதலில் எப்போது யாரால் எழுப்பப்பட்டது என்பதற்கான எவ்வித ஆவண ஆதாரமும் இல்லை. உடல் குறை காரணமாக பதவியைத் துறந்து இவ்வூரின் குளத்தில் குளிக்கவந்த கவுட நாட்டு மன்னன் சிம்மவர்மன் முன் சிவபெருமான் தோன்ற, அந்த இடத்தில் அவன் கோயிலைக்கட்டினான் என்பது போன்ற புராணக்கதைகள் மட்டுமே ஆதாரமாகக் காட்டப்படுகின்றன. “புராணக்கதைகள் பக்தர்களுக்கு இனிக்கலாம். வரலாற்று மாணவனுக்கு உண்மைதான் இனிக்கும்,” என்கிறார் செந்தில். ஆதிக்கவாதிகளுக்கு உண்மைகள் கசக்கத்தானே செய்யும்!

தில்லை நடராசனை தரிசிக்க விரும்பிய தலித் உழவுத் தொழிலாளி நந்தனுக்கு நேர்ந்தது போலவே புலையர் குலத்தைச் சேர்ந்த சாம்பான் என்ற விறகுவெட்டித் தொழிலாளிக்கு “கதிமோட்சம்” தரப்பட்ட கதையும் கிடைக்கிறது. சிதம்பரம் தீட்சிதர்களோடு இணக்கமாகப் போக முடியாததால் வள்ளலார் வடலூராராகியதும் நினைவூட்டப்படுகிறது.

ஆறுமுக சாமிக்கு எதிரான வழக்கில், தமிழில் பாட வேண்டுமானால் மேடைக்குக் கீழேதான் பாட வேண்டும் என்பதுதான் வழக்காறு, வழக்காற்றில் அரசாங்கம் தலையிட முடியாது என்ற வாதத்தை தீட்சிதர்கள் முன்வைத்துள்ளனர். அப்படியே தமிழில் பாடுவதானால் கூட, மற்றவர்கள் பாட முடியாது, தீட்சிதர்கள்தான் பாடுவார்கள் என்றும் கூறியுள்ளனர். அப்படியானால் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தேவார, திருவாசகப் படைப்பாளிகள் - அவர்களில் மூவர் இவர்களை விட ஞானமுள்ள பிராமணர்கள் - எங்கேயிருந்து பாடியிருக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை நீதிமன்றம் ஆய்வு செய்யத்தான் வேண்டும்.

இது ஒரு தனியார் கோயில், தீட்சிதர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பாரம்பரிய சொத்து என்ற வாதங்களையும் தவிடு பொடியாக்கியிருக்கிறார் வழக்கறிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக, 1978ம் ஆண்டில், அன்றைய மத்திய ஜனதா கட்சி ஆட்சியின் போது அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 44வது திருத்தத்தின் படி, சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை என்பது நீக்கப்பட்டுவிட்டது. அதனையும், கேரளக் கோயில் வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் வலுவான ஆயுதங்களாகப் பயன்படுத்தி, சிதம்பரம் கோயிலை மீட்க தமிழக அரசு தயங்காமல் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு முடிகிறது புத்தகம்.

சிதம்பரம் கோயில் மீட்பு என்பது தமிழ்மீட்பு மட்டுமல்ல, தீட்சிதர் சமூகப் பெண்களை அடிமைத் தளையியிலிருந்து மீட்பதோடும் என்று சொல்கிற இடத்தில், புத்தகம் மேலும் ஒரு சமூக அக்கறைப் பரிமாணத்தைச் சூடிக் கொள்கிறது. “தில்லைக் கோயிலில் எழும் திருமுறைகள் பிரச்சினை வெறும் ஆத்திகர்கள் பிரச்சினை அல்ல. பண்பாட்டுப் பிரச்சினை; மொழியும் ஆன்மீகமும் பண்பாட்டில் அடங்கும்! இப்போது பந்து அரசின் கையில்! தமிழக அரசு என்ன செய்யப்போகிறது,” என வினவுகிறார் செந்தில்நாதன். அரசு மட்டுமல்ல, அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் இயங்குகிற எல்லோருக்குமான வினா இது. சரியான விடையோடு களம் காண விழைவோர் கைகளில் இருக்க வேண்டிய புத்தகம்.

“சிதம்பரம் கோயில் - சில உண்மைகள்”
-ச. செந்தில்நாதன்
பக்கங்கள்: 64 விலை: ரூ.25
வெளியீடு:
சிகரம்,
ஏ -1, அருணாச்சலம் அடுக்ககம்,
1077, முனுசாமி சாலை,கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை - 600 078 தொலைபேசி: 044 / 24723269

No comments: