Saturday, 13 February 2010

காதலர் தினம் ‘கலாச்சார’ சீரழிவா?


தழைக்க வேண்டிய பயிரும்
உதிர வேண்டிய சருகும்

காதல் என்ற சொல்லைக் கேட்டாலே கூச்சமும் குறுகுறுப்புமாக பேசிக்கொண்ட பள்ளிக் கூடப் பருவம் நினைவுக்கு வருகிறது. பள்ளிக் குழந்தைகளைப் பொறுத்தவரையில் இன்று அந்த அளவுக்கு இல்லை என்கிற மாற்றம் ஏற்பட்டிருக் கிறது. வெகு இயல்பாக அவர்களும் காதல் பற்றிப் பேசுகிறார்கள். இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதில் அவர்கள் படிக்கிற பாடங்கள், பார்க்கிற திரைப் படங்கள், கேட்கிற பாடல்கள், கேள்விப்படுகிற தக வல்கள் என பல காரணிகள் இருக்கின்றன. அத் தகைய காரணிகளுள் ஒன்றுதான் பிப்ரவரி 14 - காத லர் தினக் கொண்டாட்டம். காதலிப்பவர்கள் மட்டு மல்ல, காதலிக்காதவர்களும் காதலித்துக்கொண் டிருக்கிற தங்களது நண்பர்களுக்கு வாலன்டைன் நாள் என்றும் குறிப்பிடப்படும் இந்த நாளில் வாழ்த் துத் தெரிவித்து காதல் உணர்வை மேன்மைப் படுத்துகிறார்கள்.

பள்ளிக் குழந்தைகள்தான் காதல் பற்றி இயல் பாகப் பேசுகிறார்களேயன்றி, ‘பெரியவர்களுடைய’ சமூகம் இன்னும் காதலைக் கொச்சைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. காதலர்களைக் கொ^ரமாக விரட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பாவேந்தர் சொன்னது போல், நாடகத்தில் திரைப் படத்தில் காதலென்றால் கைதட்டி மகிழ்கிற சமூ கம் உண்மையில் காதல் என்றால் கை நீட்டி அடிக் கிறது. அந்தக் கற்பனைக் காதலர்கள் இணைவதற் காக துடிக்கிற சமூகம் உண்மைக் காதலர்களைப் பிரிப்பதற்காக எப்படியெல்லாமோ நடிக்கிறது. சாதி-மத வேலிகள் தாண்டிக் காதலித்தவர்கள் தாக் கப்படுகிற, குரூரமாகக் கொலைசெய்யப்படுகிற செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. உண் மைக் காதலை இவ்வாறு உருத்தெரியாமல் அழிக்க முயல்கிறவர்கள், இளைய சமுதாயம் காதல் என்ற பெயரால் ‘சமூக ஒழுங்கற்றவர்களாக’ மாறியதற் குக் காரணம் பிப்ரவரி-14 கொண்டாட்டம்தான் என்கிறார்கள்.

காதல் எதிர்ப்பு என்பதோடு கொஞ்சம் ‘தேசி யம்’, கொஞ்சம் ‘கலாச்சாரம்’, கொஞ்சம் ‘மத வாதம்’ போன்றவற்றைக் கலந்து, “வாலன்டைன் நாள் கொண்டாட்டம் ஒரு அந்நிய விழா; அதை எதற்காக இங்கே கொண்டாட வேண்டும்,” என்று கிளப்பிவிடுகிறார்கள். “இந்துக்களின் மீது திணிக் கப்பட்ட ஒரு கிறிஸ்துவ விழா... மதமாற்ற சூழ்ச்சி யின் ஒரு அங்கம்,” என்றும் கூறி இதை எதிர்க்கிறார் கள். அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே கூட காதலை அங்கீகரிப்பதில்லை, அவர்கள் வாலன்டைன் நாள் கொண்டாடுவதில்லை என்பதை இந்தக் கூட்டம் கண்கொண்டு பார்ப்பதில்லை.

இந்த நாளைக் கொண்டாடுகிற காதலர்கள், அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறவர்கள் எல் லோருமே வாலன்டைன் தினத்தின் வரலாற் றையோ, அதன் கோட்பாட்டையோ புரிந்து கொண்டுதான் செய்கிறார்கள் என்று கூறிவிட முடி யாது. அவர்களைப் பொறுத்தவரையில் சேர்ந்து களித்திருப்பதற்கான ஒரு நாள், அவ்வளவுதான்.

வரலாற்றையும், கோட்பாட்டையும் புரிந்து கொண்டவர்களாக இதை ஆதரிப்பவர்களுக்கோ, இந்தியாவின் அவமான மரபாகத் தொடர்கிற சாதிய வரப்புகளையும் மதவாத மதில்களையும் தகர்க்கும் மாபெரும் இயக்கத்திற்குத் தானும் சிறிது பங்களிக்கிற கொண்டாட்டம் இது. உலக அளவிலேயே கூட, இயற்கையான நிலம்-கடல் சந் திப்புக் கோட்டைத் தாண்டி, சுரண்டல் வர்க்க அரசியலுக்காக வரை யப்பட்ட செயற்கையான எல்லைக்கோடுகளைக் கடந்து மனித உறவுகள் காதலால் பூத்துக் குலுங்கவும் இந்த நாள் உதவும்.

இப்படியெல்லாம் இது வேலிகளை உடைக்க ஊக்கமளிக் கும் என்பதால்தான் மனுவாதிகள் இதை எதிர்க்கின்றனர். இறை வன் எழுதியபடி என வர்ணாஸ்ரமத்தின் பெயரால் மக்களைப் பாகுபடுத்தி, பிறப்பிலேயே உயர்வு-தாழ்வு என வேறுபடுத்தி, கடவுளுக்குப் பயந்து மக்கள் அதை ஏற்க வைப்பதற்காக அதற்கு ஒரு தத்துவ முலாம் பூசுகிற ‘பகவத் கீதை’ போன்றவற்றைப் பரப்பி, அரசாங்கத்துக்கு பயந்து மக்கள் அதை ஏற்கவைப்ப தற்காக சாணக்கிய சட்டங்களை உருவாக்கி... இத்தனை ஆண்டு களில் எப்படியெல்லாம் சாதியக் கோட்டையைக் கட்டிவந்திருக் கிறார்கள்! மிதிபடும் ஒரு சாதி அதற்காக சினம் கொள்ளாமல், தானும் மிதிப்பதற்கு தனக்கும் கீழே ஒரு சாதி இருப்பதில் மன நிறைவடைந்து இந்த அமைப்பை எதிர்க்காமலிருக்கச் செய்தி ருக்கிறார்கள்! இத்தனைக்கும் பின்னால் வஞ்சகமான உழைப் புச் சுரண்டலும், வக்கிரமான சமூக ஒடுக்குமுறையும் இருக்கிறது.

இந்த ஒடுக்குமுறைகளின் தொடர்ச்சிக்கு ஒரு கட்டாயத் தேவையாகத் திணிக்கப்பட்ட ஒரு ஏற்பாடுதான், அகமணம் எனப் படும் அந்தந்த சாதிக்காரர்கள் அந்தந்த சாதிக்குள்ளேயேதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற விதி. இனத் தூய்மையைப் பாதுகாப்பதே முக்கியம், அதற்கு சாதிவிட்டு சாதி காதல் என்பதை அனுமதிக்கக்கூடாது என்று பகுத்தறிவை மழுங் கடிக்கிற சதி.
அதையெல்லாம் கேள்வி கேட்கத் தூண்டுவதுபோல் ஒரு கொண்டாட்டம் வருகிறது என்றால் அதை விட்டுவிடுவார்களா என்ன? ஆகவேதான் இந்த எதிர்ப்புகள். ஆகவேதான், கொண் டாடுகிறவர்கள் மீது தொடரப்படும் தாக்குதல்கள். ஆகவேதான், சாலையோரங்களில் நண்பர்களாகப் பேசிக்கொண்டிருந் தால்கூட சகித்துக்கொள்ள மாட்டாதவர்களாக விரட்டியடிக்கிற மூர்க்கங்கள்.

காதலர் தினத்தைப் புரிந்துகொண்டவர்கள் எத்தனை பேர் என்பதைப் போலவே, காதல் என்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டு காதலிக்கிறார்கள் என்ற கேள்வி எழாமலில்லை. அறிவும் அறிவும் சேர்வதல்ல காதல், இதயமும் இதயமும் இணைவதே காதல் என்பது போன்ற மயக்கம் தரும் சொல் லடுக்குகளால் இப்படிப்பட்ட புரியாக் காதல்கள் உயர் வாக சித்தரிக்கப்படுகின்றன. பாலின ஈர்ப்பற்ற காதல் இல்லை என்றாலும், பாலின உணர்வு மட்டுமே காதல் என்பதாக சுருக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் விபத்து கள் நிறைய. அந்த விபத்துகளில் பெரிதும் இழப்புகளைச் சந்திக்கிறவர்கள் பெண்கள்தான். ஆங்காங்கே சில ஆண்களும் ஏமாந்து போகிறார்கள்.

இதையே சாக்கிட்டு, இதனால்தான் காதல் மணங் கள் கூடாதென்கிறோம் என்று வாதிடுகிறவர்களும் உண்டு. விபத்துகள் மட்டுமே முழு வாழ்க்கை அல்ல என்பதால், இந்த வாதத்தைத் தள்ளுபடி செய்துவிடலாம்.
ஒருவரையொருவர் விழுங்குகிற அன்பு, ஒருவரை யொருவர் மீட்கிற அறிவு என இரண்டும் கலந்த காதல் உறவு தழைக்கட்டும். அது தழைக்கத் தழைக்க, பாகு பாடுகள் சருகாகி உதிரட்டும். மானுட சமத்துவக் கடலில் சங்கமிக்கும் ஆறுகளாகப் பாயும் காதல் நெஞ்சங் களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் வலிவும் தெளிவும் ஊட்டட்டும்.

No comments: