மாறுபட்ட முயற்சி
மாற்றத்திற்கு உதவ வேண்டாமா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடையாளம் அழிக்கப்பட்டு வந்திருக்கிறது பெண்ணினம். அவர்களது உரிமைகளின் அடையாளமாக உலக மகளிர் தினம் கொண்டாடுவது என்பது தொடங்கி ஒரு நூறாண்டுதான் ஆகிறது. பெண்கள் முன் போல் வீட்டுக்குள் அடங்கியிருக்காததால்தான், சுதந்திரமாய் வெளியே சுற்றுகிறார்கள் என்பதால்தான் சமூகக் கேடுகள் பெருத்துவிட்டன, இந்த நிலைமையில் மகளிர் தினம் என்பதெல்லாம் தேவைதானா என்று கேட்போர் இந்த 2010-ம் ஆண்டிலும் இருக்கிறார்கள். அவர்கள் இப்படிக் கேட்பதே மகளிர் தினம் கடைப்பிடிக்கப்படுவதன் கட்டாயத் தேவையை உணர்த்துகிறது.
இந்த நாள் ஒவ்வொரு வகையினராலும் ஒவ்வொரு வகையாகக் கொண்டாடப்பட்டது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சம்பிராதாயமாக சில நிகழ்ச்சிகள். மாதர் அமைப்புகள் பொதுக்கூட்டம், கருத்தரங்கம், விளையாட்டுப்போட்டிகள் என பல்வேறு வடிவங்களில் கொண்டாடின. இருபாலரும் பணிபுரியும் இடங்களில் பாலின சமத்துவம் குறித்த ஆரோக்கியமான விவாத நிகழ்ச்சிகளை சில தொழிற்சங்கங்கள் நடத்தின.
ஊடகங்களும் இந்த நாளுக்கு முக்கியத்துவம் வழங்கின. நூற்றாண்டு என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளித்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முந்தைய ஆண்டுகளை விட கூடுதலாக நல்ல கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடத்தப்பட்டது மாறுதலாக இருந்தது. மகளிர் தினத்தை பெண்களின் அழகு சாதனப் பொருள் விற்பனைக்கான விளம்பரக் களமாகப் பயன்படுத்தி வந்ததற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்த மாதர் அமைப்புகளுக்கு இது ஒரு சிறிய வெற்றி என்றே சொல்லலாம்.
இந்த நூற்றாண்டையொட்டியாவது நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்று பல ஏடுகள் தலையங்கம் தீட்டியுள்ளன. அநேகமாக அனைத்து ஏடுகளிலும் சிறப்புக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சாதனைப் பெண்களின் நேர்காணல்கள், போராளிப் பெண்களின் போராட்ட அனுபவங்கள் என வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆக்கப்பூர்வமான முறையில் மகளிர் தின சிந்தனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதைக் குறிப்பிடும்போது, ஒரு ஆங்கில நாளேட்டின் “மாறுபட்ட” முயற்சி பற்றியும் சொல்லவேண்டியிருக்கிறது.
‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் மார்ச் 8 தேதிய இதழின் இரண்டாம் பக்கத்தில் மாறுபட்ட பெண்கள் பற்றிய ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த மாறுபட்ட பெண்கள் யாரென்றால்... தாதாக்கள்! சங்கிலித் திருட்டில் ஈடுபடும் ஒரு பெண், வீட்டுவேலைக்குச் சேர்ந்து கொள்ளையடிக்கிறவர், கள்ளச்சாராய வியாபாரம் செய்கிறவர், அடியாட்கள் துணையுடன் தனது வட்டாரத்தில் கோலோச்சும் ரவுடித் தலைவி... இப்படியாகப்பட்டவர்கள் பற்றி அந்தத் தொகுப்பில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 2008-ம் ஆண்டில் பெண்களின் இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்பாகப் பதிவான வழக்குகள் 14,129 என்ற தகவலும் தரப்பட்டிருக்கிறது.
முன்பு ஒரு தமிழ் நாளேடு, மதுக் கடை வாசலில் நின்றபடி மது குடித்துக்கொண்டிருக்கும் ஒரு தொழிலாளிப் பெண்ணின் படத்தைப் போட்டு, “இதற்குத்தான் பெண் விடுதலையா” என்று தலைப்பிட்டிருந்தது. அதற்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோது, “கண்டனம் தெரிவிக்க வந்திருந்தவர்களில் அந்தப் பெண் இல்லை, சுடிதார் அணிந்த, ஜீன்ஸ் அணிந்த, டீ சர்ட் போட்ட, கிராப் வெட்டிய, லிப்ஸ்டிக் பூசிய, ஆங்கிலம் பேசிய பெண்கள்தான் வந்திருந்தார்கள்,” என்று எழுதி தன் வக்கிரத்தை மேலும் காட்டியது.
‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தொகுப்பு அப்படிப்பட்ட வக்கிரத் தொனியில் இல்லை என்பது உண்மைதான். இந்தப் பெண்கள் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தார்கள் என்பதையும் அந்தத் தொகுப்பு சொல்கிறது.
காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் (பொருளாதாரக் குற்றப்பிரிவு) திலகவதி அளித்துள்ள பேட்டியில், இத்தனை பெண்கள் இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தாலும், பெரும்பாலானோர் விவகாரங்களில் அவர்களை இயக்குவது ஆண்கள்தான் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். நுகர்வுக் கலாச்சாரம் பெருகுவதுதான் இதற்கும் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சமூகத்தின் உண்மை நிலைமைகளைப் புரிந்துகொள்ள இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் தேவைதான். ஆனால் எந்த நேரத்தில் எதைப் பற்றிப் பேசுவது என்ற நெறி வேண்டாமா? மறுக்கப்படுகிற பெண்ணுரிமை, தொடர்கிற குடும்ப வன்முறை, பெண்ணின் சுயமரியாதையை இழிவு செய்யும் மடமை, சம மரியாதையைத் தடுக்கும் கொடுமை... இவற்றிற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்குத் தோள்கொடுப்பதல்லவா இந்த நாளில் முக்கியம்? அதைப் பற்றிய சிந்தனைகளை வலுவாகவும் விரிவாகவும் வெளியிட வேண்டாமா? ஏதோ அந்தப் பிரச்சனையெல்லாம் முடிந்துவிட்டது போலவும், இப்போது விதிவிலக்காக எங்கேனும் இருக்கக்கூடிய இப்படிப்பட்ட பெண்கள் பற்றி விவாதிப்பதே முக்கியம் என்பது போலவும் “வேட்டைக்குக் கிளம்பும் பெண் தாதாக்கள்” என்றே தலைப்பிட்டு தொகுத்திருப்பதில் ஊடகநெறி தடுமாறுகிறதே!
இது பெண்களின் மையமான பிரச்சனைகள் குறித்த விவாதத்திலிருந்து திசைதிருப்புவதாகாதா?
மாறுபட்ட முயற்சிகள் மாற்றத்திற்கு உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்தே இந்த விமர்சனம்.
2 comments:
பெண்களைப் பற்றி உயர்வாகப் பேசுவது என்றால் இந்திராநூயி, அன்னை தெரசா என்று உதாரணம் காட்டுவார்கள். அதே போல் பெண்கள் பிரச்னை என்றால் விதிவிலக்குகளை (வேட்டைக்குச் செல்லும் பெண் தாதாக்கள்) மட்டும் அடையாளம் காட்டுவார்கள். உண்மையில் இவர்களுக்குப் பெண்களைப் பற்றிய பார்வை இல்லாததுதான் காரணம். அவர்களே உதாரணமாகச் சொல்லும் பெப்சியின் தலைவர் இந்திராநூயியிடம் கூட,நீங்கள் வீட்டில் சமைப்பீர்களா? என்ற கேள்வியைத்தான் முன் வைக்கிறார்கள். எவ்வளவு வேலையாக இருந்தாலும் இரவில் தயிர் சாதம் செய்து குடும்பத்துக்குத் தருவதுதான் எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது என்ற பதிலில் மனநிறைவடைகிறார்கள்.
பொருளாதாரம் ஈட்டாவிட்டாலும் வீட்டில் இருக்கும் பெண்களும் உழைப்பாளர்களே. மகளிர் தினம் என்ற வார்த்தைகள் கூடக் காதில் வந்தடையாமல் எங்கோ தொலைதூரக் கிராமங்களில் உழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கும் சம உரிமை, பொருளாதாரச் சுதந்தரம், குடும்ப பொறுப்புகளில் ஆண்களுக்கும் சமபங்கு என்ற நிலை எப்போது வருகிறதோ, அதுவரை மகளிர் தினத்தின் தேவை இருக்கும். இருக்க வேண்டும்.
You have put a reasonable question mark...It is a time to focus women's emancipation and developments..vimala vidya
Post a Comment