Friday 16 April 2010

மக்களை விட மேலாக ஒரு சபை தேவையா?


சாசரின் மேல் கப் இருக்குமானால்

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு மேலவை தேவை என்ற தீர்மானம் ஏப்ரல் 7 அன்று ஆளுங்கட்சியினராலும், அவர்களது கூட்டாளிகளாலும், மேலவையை ஆதரிப் போர்களாலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதன் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சில கட்சிகள் வெளிநடப்புச் செய்ய, மார்க் சிஸ்ட் கட்சி, அஇஅதிமுக ஆகியவை எதிர்த்து வாக்களித்தன. இனி முறைப்படி இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும், மத்திய அரசின் மூலமாக குடியரசுத் தலைவ ரின் ஒப்புதல் கிடைக்க வேண்டும்.

தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இதை எதிர்க்கிற மார்க்சிஸ்ட்டுகள், மேல வை என்பது நடைமுறைக்கு வருகிறபோது அதற்குப் போட்டியிடுவதில்லை என்று உறு தியளிப்பார்களா என முதலமைச்சர் கருணா நிதி தமக்கே உரிய பாணியில் கேட்டார். உணவுப் பொருள்களின் விலைவாசி உயர் வை எதிர்த்துப்போராடுகிற கம்யூனிஸ்ட்டு கள் சாப்பிடாமல் இருக்க உறுதியளிப்பார் களா என்று கேட்பது போல் இருக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு துணைத்தலைவர் நன்மாறன் தமக்கே உரிய பாணியில் பதில் கொடுத்தார்.

முதலமைச்சரும் சரி, மேலவையை ஆத ரிப்போரும் சரி முன்வைக்கிற வாதங்கள் இவைதாம்: நாடாளுமன்ற மக்களவைக்கு ஒரு மாநிலங்களவை இருப்பது போல் சட்ட மன்றத்திற்கு ஒரு மேலவை தேவை (முதல் வரின் வார்த்தைகளில், ‘கப் தேநீர் சூடாக இருக்கும்போது அதை ஆற்றுவதற்கு சாசர் தேவைப்படுவது போல்’); மேலவையின் உறுப்பினர்களாகிற அறிஞர்களின் ஆலோச னைகளைப் பெற்று முடிவுகள் எடுக்க உதவியாக இருக்கும்.

முதலில் நாடாளுமன்ற மாநிலங்களவை யும், மாநில சட்டமன்ற மேலவையும் ஒன் றல்ல. சிறிதும் பெரிதுமாக மாநிலங்கள் உள்ள இந்தியாவில், உ.பி. போன்ற ஒரு சில மாநிலங் களின் பிரதிநிதிகள் மக்களவையில் கூடுத லாக இடம்பெற முடிகிறது. இதனால் பல் வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதற்கேற்ற பிரதிநிதித்துவம் அமையாமல் போகிறது. அதை ஈடுகட்டவே, அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க மாநிலங்களவை உருவாக்கப்பட்டது. மேல வைக்கு அப்படிப்பட்ட நோக்கம் இல்லை.

மாநில மேலவை என்பது அதிகாரம் ஏது மற்ற ஒரு ஆலோசனை அமைப்பு. ஆனால் மாநிலங்களவையோ, மக்களவைக்கு நிகராக அதிகாரம் உள்ள ஒரு சபை.

சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை அல்லது ஒரு சட்ட முன்வரைவை விவாதித்து நிறை வேற்றி மேலவைக்கு அனுப்பும். அதை மேல வை விவாதித்து தானும் அதை அப்படியே நிறைவேற்றலாம் அல்லது தள்ளுபடி செய் யலாம் அல்லது திருத்தங்களுடன் நிறை வேற்றலாம். அப்படி தள்ளுபடி செய்தாலோ அல்லது திருத்தங்களுடன் திருப்பி அனுப்பி னாலோ அதை சட்டமன்றம் ஏற்க வேண்டும் என்பதில்லை. மறுபடியும் பழைய தீர்மானத் தையே தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப் பலாம். அதே போல், மூன்று மாதங்களுக்கு மேல் மேலவை ஒரு தீர்மானம் குறித்து முடிவு செய்யாமல் இருக்குமானால், அதை யும் சட்டமன்றம் மறுபடி நிறைவேற்றிக் கொள்ளலாம். அப்போது மேலவை மறுபடியும் குறுக்கிட முடியாது. மேலும், நிதி சார்ந்த தீர்மா னங்களில் தலையிடுகிற அதிகாரம் மேல வைக்கு இல்லை.

இப்படி அதிகாரமற்ற ஒரு ஆலோசனை அமைப்பு எதற்காக? ஆலோசனைகள் பெற்றுச் செயல்படுவதில் உண்மையிலேயே அரசுக்கு அக்கறை இருக்குமானால், எந்த ஒரு திட்டம் தொடர்பாகவும் அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள், ஜனநாயக அமைப்பு களைச் சார்ந்தோர், போராடுவோரின் பிரதிநிதி கள் ஆகியோரை அழைத்துப் பேசலாமே. அவ் வாறு பேசும்போது கிடைக்கிற ஆலோச னைகளை தீர்மானத்தில் இணைக்கலாமே?

மாறாக, சட்டமன்றம் முழுமையாக ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லாத ஒரு சபைக் கான பிரதிநிதிகளை கவுரவத்திற்காகத் தேர்ந் தெடுக்க, கோடிக்கணக்கில் மக்கள் பணத் தை செலவிட வேண்டிய தேவை ஏன் வந்தது?

மாநிலங்களவையோ, மக்களவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஒப்புக்கு விவாதிக்கிற, ஆலோசனை சொல்கிற கவுரவ அமைப்பு அல்ல. நேரடியாக மாநிலங்களவையிலேயே ஒரு சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்ய முடியும். அதனை அந்த அவையின் பெரும் பான்மை உறுப்பினர்கள் தள்ளுபடி செய்ய முடியும். இரண்டு அவைகளும் நிறைவேற் றினால்தான் அந்தத் தீர்மானமோ, சட்டமுன் வரைவோ நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டதாகும்; அப்போதுதான் அதற்கு குடிய ரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார்.

ஆம், மாநிலங்களவை என்பது அரச மைப்பு சாசனப்படி சட்டப்பூர்வமாக இருந் தாக வேண்டிய அதிகாரப்பூர்வ சபை. மேல வை அப்படிப்பட்டதல்ல. ஆகவே, கப் தேநீர் சூடாக இருந்து, அதை சாசர் ஆற்றிக் கொடுத் தால், மறுபடியும் அதையே சுடவைத்துப் பருக முடியும் என்கிறபோது, எதற்காக சாசர் தேவை? சாசரின் மேல் கப் இருக்குமானால் பார்க்க அழகாக இருக்கும் என்பதைத் தவிர வேறு என்ன பயன்?

அப்புறம், அறிஞர்களின் அவையாக இருக்கும் என்கிறார்கள். தற்போதைய விதிக ளின் படி, மேலவை அமைக்கப்படுமானால், சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல், 40 உறுப்பி னர்களுக்குக் குறையாமல் மேலவை உறுப்பி னர்கள் எண்ணிக்கை இருக்கும். அதன் மூன் றில் ஒரு பங்கு உறுப்பினர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன் னொரு மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். 12ல் ஒரு பங்கு உறுப் பினர்களை மாநிலமெங்கும் உள்ள ஆசிரியர் கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்னொரு 12ல் ஒரு பங்கினரை மாநிலத்தில் உள்ள பட்டதாரிகள் தேர்வு செய்வார்கள். 6ல் ஒரு பங்கு உறுப்பி னர்களை மாநில ஆளுநர் (மாநில அரசின் ஆலோசனைப்படி) நியமிப்பார்.

அதாவது, தமிழக மேலவைக்கு 60 உறுப் பினர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களில் 20 பேரை சட்டமன்ற உறுப்பினர்களும், 20 பேரை உள்ளாட்சிகளின் உறுப்பினர்களும், 5 பேரை ஆசிரியர்களும், 5 பேரை பட்டம் பெற்ற வர்களும் தேர்ந்தெடுப்பார்கள். 10 பேரை ஆளுநர் நியமிப்பார்.

அப்படியானால், சமுதாயத்தின் இதர பிரிவு மக்கள்? தொழிலாளர்கள்? விவசாயி கள்? மாணவர்கள்? நடுத்தர வர்க்கத்தினர்? தொழில் முனைவோர்? சிறு தொழில்கள் நடத்துவோர்? முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருப்போர்?

ஜனநாயகம் என்பதன் அடிப்படையே, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது தான். ஆசிரியர்களும் பட்டதாரிகளும் மட்டும் தேர்ந்தெடுக்கிறவர்கள் எப்படி சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப் படுத்த முடியும்? ஒரு ஆசிரியரோ, பட்ட தாரியோ சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெறுகிறபோது இயல்பாகவே அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதி யாகிவிடுகிறார்கள். மேலவை உறுப்பினர் அப்படியல்ல. மேலும் ஆசிரியர்களும் பட்ட தாரிகளும் சட்டமன்றத் தேர்தலிலும் வாக் களித்திருப்பார்கள். மேலவைக்கும் அவர்கள் வாக்களிக்கலாம் என்றால், அவர்களுக்கு இரட்டை வாக்குரிமை போல் ஆகிவிடு கிறதே!

மாநில சட்டமன்றம் எடுக்கிற ஒரு முடி வை முடக்குவதற்காகவே, அடிமைப்பட்டி ருந்த இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர் கள் கொண்டு வந்ததுதான் இந்த மேலவை ஏற்பாடு. 1862ல் அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் (பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி) மாகாண சபைகளுக்கான சட்டத்தைப் பிறப் பித்தார். அதன்படி ஒவ்வொரு மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னரும் ஆணை பிறப்பிக்க மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 1935ல் அந்த சபைகள் சட்டசபை, மேலவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டன. விடுதலைப் போராட்ட எழுச்சியின் விளைவாக மாகாண சபைகளில் போராளிகள் பிரதிநிதிகளாக அதிகமாக இடம்பெற்றார்கள். நம் மக்களுக்கு சாதகமாக அவர்கள் எடுக்கிற சூடான முடிவு களை ஆறப்போடுவதற்காகவே, முடக்குவ தற்காகவே, மேலவை ஏற்பாட்டை அன்றைய பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது என்பதை விளக்க வேண்டியதில்லை.

எனவேதான், அடிமைப்பட்ட இந்தியா வில் இருந்த ஒரு நடைமுறை தேவையில் லை, மக்கள் பிரதிநிதிகளை விட மேலான தாக ஒரு மேலவை தேவையில்லை என்ற நியாயமான உணர்வு மேலெழுந்தது. அதன் அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில், இடது முன்னணி அரசு ஆட்சிக்கு வந்ததும் 1969 மார்ச் 21 அன்று சட்டமன்றத்தில் மேலவையை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத் தில் அதே ஆண்டு ஆகஸ்ட் 1ல் நிறைவேற் றப்பட்ட சட்டத்தின் மூலம் மேற்கு வங்க மேலவை நீக்கப்பட்டது. தமிழகத்தில் 1986ல் மேலவை நீக்கப்பட்டது. தற்போது உ.பி., பீகார், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக்கிறது.

ஆக, அரசமைப்பு சாசனப்படி கட்டாய மல்லாத ஒரு சபை, சிலரை திருப்திப் படுத்து வதற்காக அவர்களை மேலவை உறுப்பினர் களாக்கலாம், புறவாசல் வழியாக சிலரை அதிகார பீடத்திற்குக் கொண்டுவரலாம் என்பதற்கே பயன்படும். அது மக்களுக்கான தீர்மானங்களை இழுத்தடிக்கவே பயன்படும். ஒரு சிறு பிரிவினரின் பிரதிநிதிகள், பெரும் பான்மை மக்களது பிரதிநிதிகள் நிறை வேற்றிய தீர்மானங்களை முடக்க வழிவகுக் கும். ஆகவேதான், கம்யூனிஸ்ட்டுகள் வேண் டாம் என்கிறார்கள். இதற்காகப் பல கோடி செலவு தேவையில்லை என்கிறார்கள். ஒரு வேளை மேலவை வந்தால், அங்கேயும் மக்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக கம்யூ னிஸ்ட்டுகள் அதையும் பயன்படுத்துவார்கள்.

-அ. குமரேசன்

No comments: