பெண் எப்படி மனைவியானாள்?
நிலம் அனைத்து உயிர்களுக்கும் தாய் என்ற பொது உடைமை நிலை மாறி அதைக் கைப்பற்றியவர்களின் சொத்து என்ற தனி உடைமை நிலை உருவானதை முந்தைய கட்டுரையில் கண்டோம். அந்த நிலத்தில் விளைகிற தாவரங்கள், வளர்க்கப்படும் கால்நடைகள், அதில் கட்டப்படுகிற கட்டடங்கள் ஆகியவை நிலச்சொந்தக்காரரின் உடைமையாகின்றன. இறங்கி வேலை செய்கிற மனிதர்களும் கூட நில உடைமையாளரின் சொத்தாகிறார்கள்.
நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்ட பிறகு, அதைக் கைப்பற்றியவர்கள் தொடர்ந்து தமது பிடியிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். வயது முதிர்ந்து முன்போல் யாரையும் கட்டுப்படுத்தவோ வேலை வாங்கவோ முடியாது என்ற நிலை வருகிறபோது, தன் சார்பாகக் கட்டுப்படுத்துகிறவர்கள் தேவை என்று திட்டமிடுகிறார்கள். தன் சார்பாகக் கட்டுப்படுத்துவதற்கு வேறு யாரையும் நம்ப முடியாது என்பதால் தனது இன்னொரு பிம்பத்திடம் - அதாவது வாரிசாகப் பிறக்கிறவரிடம் சொத்தை ஒப்படைக்கிற நடைமுறை உருவாகிறது.
அந்த ரத்த உறவான வாரிசை உருவாக்குகிற ஏற்பாடாகக் குடும்பம் உருவாகிறது. மனை என்ற சொத்தின் உடைமையாளன் குடும்பத்தின் தலைவனுமாகிறான். பயிர்களை உருவாக்கித் தருகிற நிலம் போல, வாரிசாக உயிர்களை உருவாக்கித் தருகிற உயிருள்ள நிலமாகப் பெண் மாற்றப்படுகிறாள். குடும்பத் தலைவனின் உடைமையாகிறாள்.
கணம் என்றால் குழு என்றும் அதன் தலைவன் கணபதி என்றும் பார்த்தோம் அல்லவா? குடும்பம் என்பதே ஒரு கணமாக உருவெடுக்கிறபோது அதன் தலைவன் கணவனாகிறான். அவனுடைய மனையை ஆள்வதற்கான வாரிசைப் பெற்றுக்கொடுக்கிற பெண் அவனது மனைவியாகிறாள்.
ஆம், குடும்பம் என்ற ஏற்பாட்டில் கணவனுக்கு நிகரான உரிமையோ அதிகாரமோ மனைவிக்குக் கிடையாது. எவ்வளவுதான் அவள் ஆணின் ஆசைக்கும் காதலுக்கும் உரியவளானாலும் அவளுடைய பொறுப்பு ஆணின் ரத்தச் சொந்தமாக அவனுக்கு ஒரு வாரிசை உருவாக்கித் தருவதுதான். கணவனுக்குப் பின் சொத்தின் உடைமையும் அதிகாரமும் அவனுடைய வாரிசுக்குத்தான். அதுவும் ஆண் வாரிசுக்குத்தான். பெண் வாரிசு பிரியத்துக்கு உரியவளாக இருந்தாலும், இன்னொரு ஆணுக்கு வாரிசை உருவாக்கித் தருவதுதான் அவள் பொறுப்பு. இப்படியாகப் பெண்ணுக்குப் பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற கருத்துக்கள் உருவாகின்றன.
இயற்கையாக ஒவ்வொருவரும் தன்னை ஈர்க்கிற இன்னொருவரைத் துணையாக்கிக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் அன்பையும் காதலையும் பொழிந்து, அந்த உறவால் பிறக்கிற குழந்தைகளை வளர்த்துவிட்ட உறவு முறைக்கு மாறாக, சமூகத்தின் விதிகளுக்கு உட்பட்ட குடும்ப உறவு முறை உருவாக்கப்படுகிறது. மனிதர்கள் இப்போது தன் குடும்பம் என்ற உணர்வோடு பாசத்தை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.
அரசு என்ற அதிகார அமைப்பின் மூலமாக இந்தக் குடும்ப உறவு முறைகளும் வாரிசு உரிமைகளும் சட்டப்பூர்வமானதாக எழுதப்படுகின்றன. ஆணுக்குப் பெண் அடங்கி வாழ்வதும், குறிப்பிட்ட ஆணுக்கு மட்டும் வாரிசைப் பெற்றுத் தருவதும் சமூக விதிகளாக போதிக்கப்படுகின்றன. அதற்கு கற்பு என்ற பெயர் சூட்டப்படுகிறது. கற்புடைய பெண்ணே புனிதமானவள் என்ற கருத்துக்களும் விதைக்கப்படுகின்றன.
இதையெல்லாம் விதிகளாக உருவாக்கி அறிவிப்பதற்கான அரசு என்ற அதிகார அமைப்பின் தலைவன்தான் அரசன். அவனுடைய ஆளுமை, ஆயுத வலிமை, படை பலம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசின் அதிகாரம் நிலைநாட்டப்படுகிறது. யாராவது அரசனின் ஆணையை மீறி இன்னொருவனின் சொத்தைக் கைப்பற்ற முயல்கிறபோது அல்லது தன் சொத்தைக் காப்பாற்றப் போராடுகிறபோது அவனை அடக்குவதற்கான அடியாட்கள்தான் அரசனின் படை. அதே நிலங்களைக் கைப்பற்ற வேறு இடங்களிலிருந்து வருகிற மற்ற அரசர்களின் ஆட்களோடு மோதுகிற வேலையும் இந்த அரசனின் படையாட்களுக்குத் தரப்படுகிறது.
இப்படியாக அதிகாரம், ஆயுதம் ஆகியவற்றைக் கொண்டு அடக்குவதன் மூலம் சமுதாயத்தைக் கட்டுப்படுத்துகிற அமைப்பாக உருவெடுத்ததால்தான் அரசு என்பது அடக்குமுறைக் கருவி என்று கூறப்படுகிறது.
இந்த அதிகாரக் கட்டமைப்பில் கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டது இன்னொரு வகையான ஏற்பாடு. அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
1 comment:
நான் கம்யூனிசத்தை ஆதரிப்பவன்.. அதே நேரத்தில் குடும்பம் என்னும் அமைப்பு இருக்க வேண்டும் என வாதிடுபவன்.. கண்டிப்பாக இது ஆனாதிக்க மனப்பான்மையில்லை.கண்டிப்பாக ஒரு பெண்னின் எல்லா விதமான எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஆண்மகன் இருக்க முடியாது.. அது முட்டாள் தனமான எதிர்பார்ப்பு.. அதற்க்குதான் பென்னும் சமுதாய உற்பத்தியில் ஈடுபடும்பொழுது அந்த முட்டாள்தனம் புரியும். ஒருவரை ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு (கவனிக்கவும் சகித்துக்கொண்டு என்று கூறவில்லை, அவ்வாறு கூறவும் மாட்டேன்..) வாழும் குடும்ப அமைப்பானது ஒரு நல்ல மனிதனை இச்சமுகத்திற்க்கு தரும்.. அத்துடன் வரையறுக்கப்பட்ட உறவுமுறைகள் தொடரும்... she may get a better gene to make her child.. better than the partners gene.. and the partner may also get a better female to remake his gene.. but that society may have to face relationship problem which we don face now... yeah i accept.. private property lead the way for male dominancy.... but that dosent mean that institution of family is incorrect... ??? cant it serve for the better of the society.. ofcourse this relation husband and wife is not a blood relation , probably the only relation which is not connected by blood... but they can understand that this can controll the society and its way of living...
if helendemuth and jenny marx din face any problem... i wont criticize marx. but that dosent mean that jenny marx should not have any other realtion....am i wright...?
can u comment.....?
Post a Comment