Wednesday, 6 October 2010

மனு நீதி மானுட அநீதி



(கம்யூனிசம் என்றால் - 11)

உழவு ஒரு அடிப்படைத் தொழிலாக உருவாகியிருக்க அத்துடன் இணைந்து ஊர் உருவெடுத்தது. ஊருக்குத் தேவையான கட்டுமானப் பணிகள், தச்சு வேலைகள், ஆடை நெய்தல், பானை செய்தல், மரமேறுதல், காவல் காத்தல், துணிகளை வெளுத்தல், முடி வெட்டுதல் என்று பல்வேறு தொழில்களும் பரிணமித்தன. நிலவுடைமையைப் பாதுகாக்கவும், அவரவர் பணிகளைக் கண்காணிக்கவும், வழிகாட்டவும், கைப்பற்ற வருகிறவர்களைத் தடுக்கவும் அரசு என்ற அமைப்பு உருவானது. தங்களது உடல் வலிமையாலும், ஆள் பலத்தாலும், அறிவாற்றலாலும் அந்த அரசின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தவர்கள் அரசர்களானார்கள்.

அரசு என்ற அதிகார அமைப்பு சொத்துடைமையோடு இருந்தவர்களுக்கு சாதகமாக சட்டங்களை உருவாக்கியது. நிலம் இல்லாமல் மற்ற தொழில்களில் ஈடுபட்டவர்களைத் தொடர்ந்து அந்தப் பணிகளிலேயே ஈடுபட வைப்பதற்காக - அதாவது அவர்கள் அரசுப் பதவிகளுக்கோ, அரசாங்கத்தை நெருங்கியிருப்பவர்களின் உடைமைகளுக்கோ போட்டிக்கு வராமல் தடுப்பதற்காக - கடவுளின் கட்டளைப்படி ஒவ்வொருவரும் தங்களது குடும்பத் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விதிகள் ஏற்படுத்தப்பட்டன.
ஊருக்குள் வாழ முடியாமல் காடுகளுக்குள் அமைந்த கிராமங்களில் இருந்தவர்கள், குகைகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்தார்கள். அரசரையும் ஆண்டைகளையும் பார்ப்பதற்காக ஊருக்குள் வந்தபோது, அங்கிருக்கும் வசதி மிக்க வீடுகளும், தெருக்களும், சாலைகளும், குளங்களும், தானியங்களை சேமித்துவைக்கும் ஏற்பாடுகளும் அவர்களை மலைத்துப்போக வைத்தன. அத்தகைய எந்த வசதியும் இல்லாமல் காடுகளில் விலங்குகளில் தாக்குதல்களுக்கு இலக்காகிக்கொண்டு, குளிரையும் கோடை வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு, மழையில் நனைந்துகொண்டு, காட்டுத் தீயில் வெந்துகொண்டு, தானியங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறபோது சுற்றி அலைந்துகொண்டு வாழ்கிற வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது! இப்படித்தான், வசதியான வாழ்க்கை என்பது சொர்க்கம் என்றும், அவலங்களோடு வாழ்வது நரகம் என்றும் சிந்தனைகள் தோன்றின.

இந்த சொர்க்கமும் நரகமும் இங்கேதான் இருக்கிறது என்றால் சொர்க்கத்தைக் கைப்பற்றக் கலகம் வெடிக்குமே? இந்தப் பிறவியில் ஒருவர் சுகபோக சொர்க்க வாழ்க்கை வாழ்வதும், இன்னொருவர் துன்பங்கள் நிறைந்த நரக வாழ்க்கை வாழ்வதும் அவர்களது முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கும் பாவத்திற்கும் ஏற்ப பரம்பொருளால் முடிவு செய்யப்பட்டதாகக் கற்பிக்கப்பட்டது. அதை ஏற்று இந்தப் பிறவியில் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் ஏற்ப கடவுள் அவருக்கு மறுபிறவியில் சொர்க்கத்திலோ நரகத்திலோ இடம் அளிக்கிறார் என்ற கற்பனைக் கதைகள் முளைத்தன. அந்தக் கதைகளை வலுவாகச் சொல்கிறவர்களாக வந்தவர்களே பார்ப்பணர்கள்.

நிலம் வைத்திருந்தவர்கள், அதிலே உழைத்தவர்கள், மற்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஆகியோர் எங்கேயிருந்து வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம். பார்ப்பணர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்? சமுதாயத்திற்காக மற்றவர்கள் ஆளுக்காள் ஒரு பணியைச் செய்துகொண்டிருக்க, பார்ப்பணர்கள் என்ன பணி செய்தார்கள்? எப்படி அவர்கள் எல்லாச் சாதிகளிலும் உயர்ந்த சாதியாகத் தங்களை அறிவித்துக்கொண்டார்கள்?
அரச குடும்பத்தினரை விடவும் உயர்ந்த சாதியாக எப்படி தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள்?

இன்றைக்கு சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன், ஆசியா கண்டத்தின் மத்திய வட்டாரங்களிலிருந்து வந்தவர்கள் பார்ப்பணர்களின் மூதாதையர்களாகிய ஆரியர்கள். இன்று ஈரான், இராக் போன்ற நாடுகள் அமைந்துள்ள, பாரசீக இன மக்கள் வாழ்ந்த வட்டாரம் அது. அப்போது இந்தியத் துணைக்கண்டத்தில் திராவிட இனத்தவர்கள் நிலத்தில் உழுது பயிரிடுவது, அதன் அடிப்படையில் வீடுகள் கட்டுவது, பல வீடுகள் சேர்ந்த ஊர்கள் அமைப்பது என்றெல்லாம் அக்காலத்திய நவீன வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆரியர்களோ காடுகளில் வேட்டையாடுவது, மேய்ச்சல் போன்ற தொழில்களையே செய்துவந்தார்கள்.

மேய்ச்சலுக்கும் வேட்டைக்கும் விரிந்த நிலங்களையும் காடுகளையும் தேடி பூமியின் பல்வேறு வட்டாரங்களுக்கும் அவர்கள் பரவினார்கள். அப்படித்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு வட்டாரத்திற்கு வந்தார்கள் (இன்று பஞ்சாப் இருக்கும் வட்டாரம்). அப்படி பல்வேறு நிலப்பகுதிகளையும் கடந்து வந்தபோது, இயற்கையில் ஏற்படும் புயல், மழை, வெயில் போன்ற மாற்றங்களைக் கவனித்தார்கள். அந்த அனுபவத்தில், அடிப்படையான வானியல் அறிவோடும் வந்தார்கள்.

ஆரியர்கள் இப்படி கண்டம் விட்டுக் கண்டம் இடம் பெயர்ந்தபோது, புதிய இடங்களில் நாகரிக சமூகங்களாக வாழ்ந்துகொண்டிருந்த இனங்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்த இடங்களைக் கைப்பற்றவும் செய்தார்கள்.
பூமியின் மற்ற பகுதிகளில் தங்களை ஒன்றுபட்டு எதிர்த்த மக்களை ஒடுக்குவதற்குக் கொடுமையான போர்முறைகளைக் கையாண்டார்கள். இந்தியப் பகுதிக்கு வந்தபோது, தொடக்கத்தில் அப்படிப்பட்ட அடக்குமுறைகளையும், எதிர்த்தவர்களை அழிக்கும் நடைமுறைகளையும் ஆரியர்கள் பயன்படுத்தவே செய்தார்கள். ஆயினும், அப்படிப்பட்ட அடக்குமுறைகள் இல்லாமலே இந்தியக் கண்டத்து மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆம், இங்கே மக்கள் சமூகக் குழுக்களாக - அதாவது சாதிப் பிரிவுகளாக - வேறுபடுத்தப்பட்டிருந்தது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அருமையான வாய்ப்பாகிப் போனது.

அந்தப் பிரிவினையை இறுதிப்படுத்துகிற, அதில் தங்களுக்கு உயர்வான இடத்தை உறுதிப்படுத்துகிற உத்திகளில் இறங்கினார்கள். ஏற்கெனவே இங்கே நிலங்களை வளைத்துப்போட்டு, பல ஊர்களை இணைத்து நாடுகளாக மாற்றி அவற்றை ஆட்சி செய்துகொண்டிருந்த அரசர்களோடு போரிட்டு மோதிக்கொண்டிருப்பதை விட, அவர்களோடு சமரசம் செய்துகொள்கிற உத்தி அது. அதேபோல், உடல் உழைப்பு சாராத மற்ற தொழில்களில் ஈடுபட்டு இடைத்தட்டு நிலையில் இருந்த சமூகங்களோடும் சமரசம் செய்துகொள்கிற உத்தி அது. நிலத்தில் உழுது பாடுபட்டவர்களும், துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களும், முடிதிருத்துதல், சடலங்களை அடக்கம் செய்தல் போன்ற இதர அடிமைத் தொழில்களைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டவர்களும் அதே தொழில்களையே விசுவாசத்தோடு செய்துவருமாறு தீர்மானித்த உத்தி அது.

அந்த உத்திக்குப் பெயர்தான் வர்ணாசிரம கோட்பாடு. பிறப்பால் மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் உண்டு என்று இந்தியத் துணைக்கண்டத்துக்கே உரிய தனித்துவமான அந்தக் கோட்பாட்டை எழுத்துப்பூர்வமாகச் சட்டமாக்கியதுதான் மனு நீதி என்ற மானுட அநீதி. அது என்ன?

அடுத்த சந்திப்பில் அதையும் பார்த்துவிடுவோம்.

1 comment:

chakravarthy said...

வெகு நாட்களாக இருந்த சந்தேகம் களைய போகிறதே என்று படித்து கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம்.இதன் தொடர்ச்சியை எதிர் பார்த்திருக்கிறேன்...