Saturday 2 October 2010

சாதிய நச்சு மரத்தின் வேர்


கம்யூனிசம் என்றால் - 10


பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபடுத்தும் சாதி என்ற அவமானம் இந்தியாவில் எப்படித் தோன்றியது என்ற கேள்வியோடு முந்தைய கட்டுரையிலிருந்து விடைபெற்றோம். இப்போது அந்தக் கேள்விக்கு விடை காண முயல்வோம்.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரிய இனத்தவர் ஆக்கிரமித்த பிறகு, அவர்களது வழித்தோன்றல்களாகிய பார்ப்பணர்களால்தான் சாதிப் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டன என்று கூறப்படுவதுண்டு. சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடுகிறவர்களில் ஒரு பகுதியினர், பார்ப்பணர்கள்தான் சாதி வேற்றுமைக்குக் காரணம் என்று நியாயமான ஆவேசத்துடன் கூறுவார்கள். சாதிப் பாகுபாடு என்ற அசிங்கம் இந்தியாவில் கெட்டிப்படுத்தப்பட்டதில் பார்ப்பணர்களாகிய ஆரியத் தலைமுறையினருக்கு மிக முக்கியமான பங்கிருப்பதை மறுக்க முடியாது.ஆனால் அவர்களை மட்டுமே இதற்கு முழுப் பொறுப்பாக்கிவிட முடியாது. அப்படிச் செய்வது - பறையர், பள்ளர், அருந்ததியர், சண்டாளர், சக்கிலியர் என்றெல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் முக்குலத்தோர், நாடார், யாதவர், வன்னியர் என்றெல்லாம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் பின்னுக்குத்தள்ளிவிட்டு, மண்ணின் வளங்களையும் அதிகார நலன்களையும் முன்பு அனுபவித்த, இப்போதும் அனுபவித்துக்கொண்டிருக்கிற - தங்களை முன்னேறிய சாதியினராக வைத்துக்கொண்ட பார்ப்பணரல்லாத பிற சாதிகளின் சூழ்ச்சிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாகிவிடும். ஆரியர்கள்தான் சாதிகளை உருவாக்கினார்கள் என்றால், உலகின் பல பகுதிகளிலும் ஆரியர்களின் ஆக்கிரமிப்பு நடந்ததே, அங்கேயெல்லாம் ஏன் சாதிப்பாகுபாடுகள் ஏற்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

அந்தக் கால பார்ப்பணர்கள் சாதி வேறுபாடுகளை கெட்டிப்படுத்துவதற்கு ஏற்றதொரு சூழல், அவர்களது ஆதிக்கம் தொடங்குவதற்கு முன்பே இங்கே இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது என்ன சூழல்?நிலத்தைக் கைப்பற்றி விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்வது என்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டவர்கள் அப்படிப் புரிந்துகொள்ளாதவர்களை விரட்டிவிட்டு நிலங்களைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோம். அந்த நிலங்களில் உழைப்பதற்குத் தொழிலாளிகள் வேண்டுமே? நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், விரட்டியடிக்கப்பட்ட அப்பாவி மக்களைப் பிடித்து வந்து உழைக்க வைத்தார்கள்.

சொந்த நிலம், சொத்து வளம் என்றெல்லாம் அனுபவிக்கத் தொடங்கியவர்கள் தாங்கள் வசதியாக வாழ்வதற்காக வீடுகளைக் கட்டினார்கள். அவ்வாறு வீடுகள் கட்டப்பட்டதால் ஊர்கள் உருவாகின. விவசாயத்திற்கும் இதர தேவைகளுக்கும் தண்ணீர் தேவை அல்லவா? ஆகவே ஆறுகளின் கரைகளையொட்டியே அன்றைய ஊர்கள் உருவாகின.வசதியானர்களின் வீடுகளில் தங்குவதற்கான அறை, துங்குவதற்கான அறை, உண்பதற்கான அறை, கழிப்பதற்கான அறை என்றெல்லாம் அமைக்கப்பட்டன. இப்போது அந்தக் கழிப்பறைகளையும், ஊரையும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.அந்த வேலையிலும், நிலத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களும், காடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

உலக அளவில் வெள்ளையர்கள் புகுந்த அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்த கறுப்பர்கள், செவ்விந்தியர்கள் போன்ற இனங்களின் மக்கள் எப்படி கொடூரமான முறையில் அடிமைப் படுத்தப்பட்டு இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதைத் தெரிந்துவைத்திருப்பீர்கள். அதே போல் இங்கே, புதிய ஊர் அல்லது நகரங்களில் அடிமட்ட வேலைகளை, ஊரிலிருந்து விரட்டப்பட்ட மக்களும் வனப் பகுதி மக்களும் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்களுடைய வாரிசுகளும் அதே வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறு அவர்களது உழைப்பை உறிஞ்சி வாழ்ந்தவர்களின் வாரிசுகளோ, தொடர்ந்து மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்கிறவர்களாகவே இருக்கலாம் என்று விதிகள் உருவாக்கப்பட்டன.

இந்த ஏற்பாடுகள் கடவுளின் கட்டளைப்படியே நடக்கின்றன என்று கதைகள் உருவாக்கப்பட்டன. ஒருவன் சொத்துக்களை அனுபவிப்பதும், ஒருவன் அந்த சோற்றிக்கில்லாதவனாக அடிமை வேலை செய்வதும் ஆண்டவனின் தீர்மானம் என்று மூளைகளில் ஏற்றப்பட்டது. அவரவர் முன்ஜென்மத்துப் பாவ புண்ணியங்கள் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் அவர் எந்த சமூகத்தில் பிறக்க வேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று இறைவனால் முடிவு செய்யப்படுகிறது என்ற சிந்தனைகள் புகுத்தப்பட்டன. இந்தப் பிறவியில் இப்படிப்பட்ட சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருந்தால், அடுத்த பிறவியில் ஆண்டவன் உன்னை உயர்ந்த குலத்தில் பிறக்க வைப்பான் என்று ஆசை காட்டப்பட்டது. அதை நம்ப வைக்கிற கற்பனைக் கதைகள் சொல்லப்பட்டன.

இதையும் மீறி யாராவது நான் ஏன் அடிமைத்தொழில் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டால், அவர்களுக்குக் கசையடி, சாணிப்பால் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. படிப்படியாக பல்வேறு தொழில்கள் உருவானபோது, ஒவ்வொரு தொழிலிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களது வாரிசுகளும் அதே தொழில்களையே செய்தனர்.

இப்படியாக, தொழில் அடிப்படையில், சரியாகச் சொல்வதானால் தந்திரசாலிகள் பரம்பரை பரம்பரையாக சுகங்களை அனுபவித்திருக்க, அப்பாவிகள் தலைமுறை தலைமுறையாக அடிமை வேலைகளைச் செய்துகொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் சமூகப் பிரிவுகள் கட்டமைக்கப்பட்டன. இதில் ஆதிக்கவாதிகளாக இருந்த சமூகங்கள், தங்களுடைய அதிகாரங்களுக்கும், சுகவாழ்க்கைக்கும் போட்டி வந்துவிடக்கூடாது என்று தங்களுடைய சமூகங்களுக்குள்ளேயே திருமண உறவு கொள்வது, தங்களுக்கென வழிபாட்டுச் சடங்குகளை வைத்துக்கொள்வது என்று விதிகளை உருவாக்கினார்கள். அடிமைப்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும், பாதுகாப்பு கருதி தங்களுக்குள்ளேயே திருமண உறவு, தங்களுக்கென வழிபாட்டு முறைகள் என்று ஏற்படுத்திக்கொண்டார்கள்.

இதை மீறி, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த சமூகங்களாகக் கூறப்பட்டவர்களோடு காதல் உறவு கொண்டால், மேற்படி உயர் சமூகத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி, மாறு கை மாறு கால் வாங்குவது போன்ற கொடுமையான தண்டனைகள் சட்டமாக்கப்பட்டன.

இப்படியாகக் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்பாட்டிற்குப் பெயர்தான் சாதி.

இதில் பார்ப்பண சாதியினரின் பங்கு என்ன? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

No comments: