கிராமத்தில் அவரை எல்லோரும் கோடாங்கிக் கோணார் என்றுதான் அழைப்பார்கள். அவருடைய அம்மா அப்பா வைத்த பெயர் அவருக்கே மறந்துபோயிருக்கும்.
வாய்க்கால் மேட்டில் ஒரு சிறிய காரைத் தூண். ஆண்டு முழுக்க அது வெயிலிலும் மழையிலும் தனியாக நின்றுகொண்டிருக்கும். தண்ணியடித்தவர் யாரேனும் அந்தப் பக்கமாய்ப் போனால் அந்தத் தூணில் முதுகைச் சாய்த்து கால்களை நீட்டி உட்கார்ந்துவிடுவார் (சுவத்துமுட்டி என்ற சரக்குக்கு நிறைய கிராக்கி. அதை உட்கொண்டவர் எதிரில் உள்ள சுவரில் தலையால் முட்டி நின்றுவிடுவார். “ழே... எவம்ல ரோட்டை இப்படி நிமுத்தி வெச்சவன்...”). யாராவது பார்த்தால், “எலேய் மூதி, நீ சாய்ஞ்சு கெடக்குறதுக்கு சுடலைமாட சாமிதான் கெடைச்சுதால,” என்று இழுத்துப்போட்டுவிட்டுப் போவார்.
சுடலைமாடனுக்கு கிராம மக்கள் கொடுத்திருந்த உருவம் அது. ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் அந்த சாமிக்கு கொடை கொண்டாடுவார்கள். தூணில் உதிர்ந்த இடங்களில் காரை வைத்து வெள்ளையடிக்கப்படும். சந்தனம், குங்குமம் பூசி மாலைகள் அணிவிக்கப்படும். பெரிய பந்தல், ஒலிபெருக்கி, கறியும் சோறுமாய்ப் பொதுச் சமையல், கரகாட்டம் என்று ஊரே உற்சாகப்படும். (பெருமாள் கோவில் தெருக்காரர்களும் சிவன்கோவில் தெருக்காரர்களும் இந்தக் கொடையில் கலந்துகொள்ள மாட்டார்கள்.)
சுடலை மாட சாமிக்குக் கொடை வரும்போதுதான் கோடாங்கிக் கோணாருக்கு மவுசு வரும். இத்தனூண்டு நிலம் வைத்திருந்த, மற்றவர்களின் வயல்களிலும் இறங்கி வேலை செய்த எளிய விவசாயி அவர். திருவிழா நடக்கிற மூன்று நாட்களில் அவர் ஊர் மதிக்கிற பூசாரியாகிவிடுவார்.
இரண்டாம் நாள் இரவு அவர் வடக்கில் திரும்பி, கைகளைப் பின்னால் கோர்த்து நிற்பார். கைகளில் முட்டை, தேங்காய், பழம் பூ என்று சில பொருள்கள் வைக்கப்படும். அந்தப் படையல் பொருள்களை அவர் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஊரின் சுடுகாடு நோக்கி ஓடுவார். அவரை யாரும் பின்தொடரக் கூடாது. மீறிப் போனால் சுடலைமாடனிடம் அடிவாங்கி ரத்தம் கக்கிச் சாக வேண்டியதுதான்.
ஊரின் எல்லையைத் தாண்டியதும் அவருக்கு நம்பமுடியாத வேகம் வந்துவிடுமாம். அந்த ஊர் சுடுகாடு மட்டுமல்லாமல் ஏகப்பட்ட ஊர்களின் சுடுகாடுகள் வழியாக அவருடைய ஓட்டம் அமையுமாம்.
அதிகாலையில் அவர் திரும்பி வருவார் - புறப்படும்போது இருந்ததுபோல் கைகளைப் பின்னால் கோர்த்தபடி - இப்போது கைகளில் ஒரு மனித மண்டையோடு இருக்கும். அவருக்கே தெரியாமல், படையலை சுடலைமாடன் எடுத்துக்கொள்வானாம். அதற்கு நன்றியாக கையில் மண்டையோட்டை சுடலைமாடனே வைப்பானாம். அதை அவரே திரும்பிப் பார்த்தால் அவருக்கும் ரத்த வாந்திதானாம்.
அவரை மேளத்தோடு வரவேற்பார்கள். வரிசையாகக் கடா ஆடுகளின் கால்களைப் பிடித்து அவர் முன்னால் தலைகீழாகத் தொங்கவிடுவார்கள். அவர் ஒரு கூர்மையான கத்தியால் ஒரே இழுப்பில் கடாவின் வயிற்றைக் கிழிப்பார். வாழைப் பழங்களை கடா வயிற்றில் திணித்துப் பிசைவார்கள். சாதாரணமாக எவ்வளவு பெரிய வயிற்றுக்காரர்களும் சாப்பிட முடியாத அளவுக்கு அந்த ஆட்டு ரத்தம்-பழ மசியலை அவர் விழுங்குவார். மிஞ்சுவதெல்லாம் சுடலை மாடனின் அருளாசியாக மக்கள் வாங்கிக்கொள்வார்கள். கடாக்களின் உடல்கள் சமையல் பாத்திரங்களுக்குப் போகும்.
அருளுணவு முடிந்ததும் கோடாங்கி அடித்துக் கொண்டே ஆடத் தொடங்குவார் பூசாரிக் கோணார். கொண்டை அவிழ்ந்து, குதிபோட்டு ஆட ஆட அவர் மேல் சுடலை மாடன் முழுமையாக வந்து இறங்கிவிடுவான். மக்கள் வரிசையாக நிற்பார்கள். கோடாங்கித் தாளத்தோடு, கோணாரின் உருவத்தில் சுடலை மாடன் ஒவ்வொருவருக்கும் அருள்வாக்கு சொல்வான். எல்லோரும் அவர் காலில் விழுந்து கும்பிட்டு, அவர் அள்ளித்தருகிற திருநீறைப் பெற்றுக்கொண்டு குடும்பச்சிக்கல் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு கலைவார்கள். கோடாங்கிக் கோணார் ஓய்ந்து விழ, கொடை முடியும்.
மறுநாளே அவரை, நிலச் சொந்தக்காரர்கள் “வே கோடாங்கி, வேலையை ஒழுங்கா செய்யும்வே” என்று அதட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
இது போன்ற நிகழ்வுகளை ஆர்வத்துடன் விசாரிக்கிறவனாய் நகரிலிருந்து அந்த ஊருக்கு நான் போயிருந்த அந்த ஆண்டின் ஆடி மாதத்தில் ஒரு முக்கியத் திருப்பம் நடந்தது. மூன்று இளைஞர்கள் பகுத்தறிவு மன்றம் என ஏற்படுத்தியிருந்தார்கள். கொடையின் இரண்டாம் இரவு கோடாங்கிக் கோணாரின் பின்னால், அவருக்குத் தெரியாமல் அவர்கள் போனார்கள். காலையில் அவருடைய அருள்வாக்கு முடிந்ததும், நன்றாக விடிந்ததும், அந்த இளைஞர்கள் அதே வாய்க்கால் மேட்டில் மக்களைத் திரட்டினார்கள். “கோடாங்கிக் கோணாரு ஒண்ணும் யாராலயும் முடியாத வேகத்துல ஓடலை. பல ஊரு சுடுகாட்டுக்கும் போகலை. நம்ம ஊரு சுடுகாட்டுக்கே கூடப் போகலை. ஆத்தங்கரையிலதான் உட்கார்ந்து, முட்டையையும் தேங்காயையும் பழத்தையும் அவரேதான் தின்னாரு. முட்டை ஓட்டையும் தேங்காய் ஓட்டையும் பழத் தோலையும் ஒரு எடத்துல புதைச்சாரு. அங்கே நாங்க அடையாளம் வெச்சிட்டு வந்திருக்கோம். இன்னொரு எடத்திலே தோண்டி, அங்கே மொதல்லேயே பொதைச்சு வச்சிருந்த மண்டையோட்டைத்தான் எடுத்து வந்தாரு...”
சிலர் ஆற்றங்கரைக்குப் போய், இவர்கள் சொன்னது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்கள். ஊரில் பலரும் கோடாங்கிக் கோணாரைப் பரிகசித்தார்கள். அவர்களை விடவும் பலர் அந்த இளைஞர்களைத் திட்டினார்கள். கோடாங்கிக் கோணார் சாபம் கொடுத்தார்: “சுடலை மாடன் சும்மா விடமாட்டான். நாத்திகப் பயலுக நாசமாப் போவானுக.”
அடுத்தடுத்த ஆண்டுகளில் கோடாங்கிக் கோணாரின் பழைய செல்வாக்கு வெகுவாகச் சரிந்தது. அந்த மூன்று இளைஞர்கள் என்ன ஆனார்கள்? புரட்சிகரமான சிந்தனையோடு புறப்பட்ட அவர்களில் ஒருவர் தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகளால் நோயில் விழுந்தார். இன்னொருவர் குடும்ப மோதல் ஒன்றில் சிறைக்குச் சென்றார். இன்னொருவர் பொதுப்பணத்தில் கைவைத்ததற்காக ஓட ஓட விரட்டப்பட்டார்.
பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவது வெறும் கவர்ச்சிகரமான விளையாட்டாக இருக்கக்கூடாது, அறிவியல் கண்ணோட்டத்தோடு புரிந்துகொண்ட ஈடுபாடாக இருக்க வேண்டும். இல்லையேல், முன்பு பகுத்தறிவுவாதிகளாய் நெஞ்சு நிமிர்த்திய பலர், இப்போது அதிதீவிர ஆன்மீகவாதிகளாய்ப் பணிந்துவிட்டது போன்ற எதிர்மறை விளைவுதான் ஏற்படும்.
அந்த ஊரில் இப்போதும் சுடலை மாடன் கொடை நடக்கிறது. அந்த மூன்று இளைஞர்களில் இரண்டு பேர் கொடைக்காக வசூல் செய்கிற பெரிய மனிதர்களாகிவிட்டார்கள். ஒருவர் இறந்துவிட்டார். கோடாங்கிக் கோணாரும் இறந்துவிட்டார். அவரது மகன் சுடுகாட்டு ஓட்டம் நடத்தி, கோடாங்கி அடித்து குறி சொல்கிறார். மக்கள் அவர் காலில் விழுந்து அருள் வாக்கு கேட்கிறார்கள்.
கிராமத்தில் செல்போன் டவர் வந்துவிட்டது, கணினி வந்துவிட்டது, வலைத்தள இணைப்பு வந்துவிட்டது. ஆனால்...
No comments:
Post a Comment