Sunday, 1 May 2011

கர்ப்பிணி மனைவியும் கம்பெனி விசாரணையும்


மே தினம் கொண்டாட்டமா, போராட்டமா?

புதிதாக ஒரு வீட்டிற்குக் குடி போகிறபோதெல்லாம் (வாடகைக்குத் தான்), நாமாகச் சென்று பக்கத்து வீட்டுக் காரர்களுடன் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஆனால் செய்யமுடியாமலே போனவன் நான். கலைச் செல்வன் அப்படியல்ல. பக்கத்துவீட்டுக்குக் குடிவந்த அவர், தானாகவே வந்து அறிமுகப் படுத்திக்கொண்டவர். நானும் கொஞ்சம் இலக்கியம், தமிழ் என்றெல்லாம் ஆர்வம் காட்டுவதை கவனித்துவிட்டு, தமிழ்ப் பற்றாள ரான தன் தந்தை இப்படியொரு பெயரைச் சூட்டியதற்காகப் பெருமைப்படுவதாகக் கூறி மேலும் நெருங்கியவர். இதையெல்லாம் விட, மதுரையின் மிகப்பெரிய தொழில் நிறுவனத் தில் எந்திரத் தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்துவந்த அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்கு இன்னொரு காரணம் உண்டு.

மனைவியைப் பேறுகாலத்திற்காக பெற் றோரிடம் அனுப்பியிருந்தார். ஒருநாள் குழந்தை நல்லபடியாகப் பிறந்துவிட்ட மகிழ்ச் சித் தகவல் வந்திருப்பதை இனிப்புகளுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது என் தந்தையார் குழந்தை ஆணா பெண்ணா என்பதை பழக்கப் பட்டுப்போன மரபுப்படி, "வரவா, செலவா" என்று கேட்டார். அதற்கு கலைச்செல்வன், "இன்னொரு பி.டி. உஷா" என்று பதிலளித்தார். அவர் கொண்டுவந்த இனிப்பை அவர் வாயிலேயே ஊட்டி மகிழ்ந்தேன்.

குழந்தை பிறப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன் ஒருநாள் அவர், ஒரு முக்கியமான விசயம் உங்ககிட்ட பேசணும், என்றார். அவர் முகத் தில் வெளிப்பட்ட ஆழ்ந்த உணர்வு, மற்ற வேலை களைத் தள்ளிவைத்துவிட்டு அவருடன் பேச வைத்தது.

"சார், எங்க கம்பெனியிலே நடக்கிற அநியாயம் தாங்க முடியலை. பெரிய மல்டிநேஷனல் மோனோபோலி கம்பெனி. ஆனா அவங்க தொழிலாளர்களை நடத்துற விதம் பார்த்தீங்கன்னா, கிராமத்துப் பண்ணையார் கூட பரவாயில்லைங்கிற மாதிரி இருக்கு..." என்று தொடங்கினார்.

ஐம்பதே காசுக்குத் தொழிலாளர்களுக்கு அருமையான முழுச்சாப்பாடு, இலவசமாகத் தரமான தேநீர், உயர்ந்த தரத்திலான சீருடை கள், அலுப்புத் தெரியாமல் வேலை செய்வதற் காக ஒலிக்கும் மெல்லிசை என்று வழங்குகிற நவீன நிறுவனம் அது. ஆண்டுக்கொரு முறை தொழிலாளர் குடும்பங்களை வரவழைத்துப் பரிசுப்பொருள்கள், விருந்து, எல்லோரும் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி என எந்திர தினம் (மே தினம் அல்ல) கொண்டாடுகிற நேயமிக்க நிர்வாகம் அது. ஆனால் இன்னொரு பக்கத்தில், வரம்பில்லாத வேலை நேரம், ஆபத்தான எந்திரங்களின் முன்பாகப் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்படாத கோரம் என இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டல நிலைமைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்தியிருந்தது அந்த நிர்வாகம்.

"இதையெல்லாம் தட்டிக்கேட்கலாம்னு எங்க யூனியன் லீடரைப்போய்ப் பார்த்தோம். அவரு என்னடான்னா, வேலையில்லாத் திண் டாட்டம் கடுமையா இருக்கிறப்ப, இதை யெல்லாம் பெரிசுபடுத்தக்கூடாதுன்னு அட்வைஸ் பண்றாரு. மேனேஜ்மென்ட் ஏதாவது முடிவெடுத்தா அதைத்தான் அவர் எங்ககிட்ட சொல்றாரே தவிர, எங்க பிரச்சனையை மேனேஜ்மென்ட்டுக்குக் கொண்டுபோறதே இல்லை... எங்க நிர்வாகமே அவருக்குக் கார் கொடுத்திருக்குன்னா பார்த்துக்கிடுங்க சார். கேட்டா பெரிய தேசிய சங்கம்னு சொல்லிக்கிடுறாங்க..." என்று சொல்லிக்கொண்டே போனார்.

"எல்லாத் தொழிலாளிகளும் பாதிக் கப்பட்டிருக்காங்க சார். நாங்க இப்ப சிஐடியு சங்கம் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். சங்க ஆஃபீசுக்கு என்னை அழைச்சிட்டுப் போங்க. எப்படி இப்ப இருக்கிற சங்கத்திலேயிருந்து வெளியே வர்றது, எப்படி சிஐடியு சங்கம் ஆரம்பிக் கிறதுன்னு யோசனை கேட்கணும்..." என்றார் கலைச்செல்வன்.

நானும் அந்த நிறுவனத்தில் மாற்று சங்க முயற்சி ஒரு போதும் வெற்றிபெற்றதில்லை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது ஒரு அரிய வாய்ப்பு வருவதாக நினைத்தேன் நான். அன்று மாலையே இருவரும் சைக்கிள்களில் புறப்பட்டோம். தன்னையும் கூட்டிச் செல்ல ஆணையிட்ட என் மூன்று வயது மகனை சைக்கிளில் முன்பக்கத் தொங்கு இருக்கையில் அமரவைத்துக் கொண்டு, மதுரை திடீர் நகரில் இருந்த சிஐடியு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கே தோழர் மணி இருந்தார், அவரிடம் இவரை அறிமுகப் படுத்தினேன்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு விட்டு மணி இவ்வாறு சொன்னார்: “நீங்க இங்கே வந்தது தப்பு. தகவல் சொல்லியிருந்தீங்கன்னா நாங்களே தோழரோட வீட்டுக்கு வர்ற மாதிரி வந்திருப்போம். அங்கே இந்த விவரமெல்லாம் உங்ககிட்ட விசாரிச்சிருப்போம். உங்க ஃபேக்ட ரியிலே அந்த நிர்வாக சங்கத்தை மீறி இன்னொரு சங்கம் ஆரம்பிக்கிறது அவ் வளவு ஈஸி இல்லை. அதுவும் சிஐடியு சங்கம் ஆரம்பிக்கிறதா தெரியவந்துச்சுன்னா உங்களையும் உங்க கூட வரத் தயாரா இருக்கிறவங்களையும் பழிவாங்கிடுவாங்க. முதல்ல உங்களை யெல்லாம் பாதுகாக்கிறது முக்கியம். இப்போதைக்கு அந்த சங்கத்துக்குள்ளேயே செயல்படுங்க. கூட்டங்கள் நடத்துறப்ப கேள்வி கேளுங்க. படிப்படியா எல்லாத் தொழிலாளிகளும் இல்லன்னாலும், கணிசமானவங்க உங்க கூட நிப்பாங்கங்கிற நிலைமை உருவாகும்... அப்ப நாம ஒரு முடிவு எடுக்கலாம். என்ன டெவலப்மென்டுன்னு மட் டும் அப்பப்ப எங்களுக்குச் சொல்லிட்டு வாங்க. நாங்களும் ஃபாலோ பண் றோம்.”

எனக்கே அவரது பக்குவமான அணுகுமுறை ஒரு பாடம் நடத்துவது போல இருந்தது. கலைச்செல்வன் சற்றே ஏமாற்றம் அடைந்தா லும் ஒரு சரியான வழிகாட்டல் பற்றிய மன நிறைவோடு எழுந்தார். இருவரும் கடைத்தெருவுக்குப் போய்விட்டு வீடு திரும்பினோம்.

மறுநாள், ‘தீக்கதிர்’ அலுவலகத்தில் வழக்கமான செய்தியாக்கப் பணிகளில் ஈடு பட்டிருந்தபோது கலையிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “சார், உங்க ஆளுக இப்படிச் செய்வாங்கன்னு நான் நினைக்கவே இல்லை.”

அவர் குரலின் பதைப்பு ஏதோ சிக்கலாகியிருக்கிறது என புரிய வைத்தது. தொழிற்சாலையில் எந்திரப் பழுது நீக்கும் பணியில் அவர் ஈடு பட்டிருந்தபோது, பணியாளர் பிரிவு மேலாளரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. பணிகள் தொடர்பாக அழைத்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு மேலாளரின் அறைக்குச் சென்றார் கலை.

மேலோட்டமாக சில தகவல்களை சொல்லிவிட்டு பின்னர் நேரடியாக, “என்னப்பா, நேத்து ஈவ்னிங் திடீர் நகர்ல சிஐடியு ஆஃபீசுக்கு போயிருந்த போல இருக்கே? என்ன விஷயம்? ஏதாவது ரைவல் யூனியன் ஆரம்பிக்கலாம்னு இருக்கீங்களா,” என்று கேட்டிருக்கிறார். இவர் மிரண்டுவிட்டார். “அப்படியெல்லாம் இல்லையே,” என்று பதிலளித்திருக்கிறார்.

“இல்லை, உன்னுடன் ஒரு தாடிக்காரர் அவருடைய குழந்தை யோடு வந்திருக்கிறார். இரண்டு பேரும் சிஐடியு ஆஃபீசுக்குள்ள போயிருக்கீங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கே இருந்துருக்கீங்க...” என்று மேலாளர் அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

கலை முதலில் தாம் சொன்ன “அப்படியெல்லாம் இல்லையே,” என்ற பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.

“எனக்கு கன்ஃபர்ம்டு இன்ஃபர்மேஷன் கெடச்சிருக்கு. பரவாயில்லை. ரைவல் யூனியன் ஆரம்பிக்கிறதுக்கு உங்களுக்கு ரைட் இருக்கு. ஆனா, எங்களுக்குத் தெரியாம செய்யாதீங்க... இப்ப நீ உன் ஒர்க்ஸ்பாட்டுக்குப் போயி உன் வேலையை கன்ட்டினியூ பண்ணு...” என்றார் மேலாளர்.

அறைக்கதவை திறந்துகொண்டு வெளியேற கால் வைத்தபோது மேலாளர், “என்ன கலைச்செல்வன், உன் ஒய்ஃப் டெலிவரிக்காக பேரன்ட்ஸ் வீட்டுக்குப் போயிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். இப்ப எட்டாவது மாசமா? இந்த நேரத்தில உனக்கு நெறையா செலவு வரும்ல... பாத்துக்க, எதாவது வேணும்னா என்கிட்ட கேளு,” என்று சொல்லிவிட்டு மேசையில் தாம் கவனித்துக்கொண்டிருந்த வேலையில் மூழ்குவது போல் தலையைக் குனிந்து கொண்டார்.

மேலாளர் இப்படி விசாரித்ததில் நிச்சயமாக ஒரு தொழிலாளியின் குடும்பம் பற்றிய அக்கறை வெளிப்படவில்லை, மாறாக இந்த நேரத்தில் போட்டி சங்கம் அது இது என்று சாகசத்தில் ஈடுபட்டு, வேலையைக் கெடுத்துக் கொள்ளாதே என்ற நாசூக்கான மிரட்டல் இருந்ததை கலைச்செல்வனால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

“சரி, இதுக்கும் சிஐடியு தலைவர்கள் இப்படி செய்வாங்கன்னு நினைக்கலேன்னு சொன்னீங்களே அதுக்கும் என்ன சம்பந்தம்,” என்று நான், நம்முடைய அமைப்பு பற்றி தவறாகச் சொல்லிவிட்டாரே என்ற ஆதங்கத் துடன் கேட்டேன்.

“நாம அங்கே போனது நம்ம ரெண்டு பேரைத் தவிர, அங்கே இருந்த லீடர்களுக்கு மட்டும்தான் தெரியும். அவங்கதான் எங்க நிர்வாகத்துல போட்டுக்கொடுத்திருப்பாங்கன்னு சொல்றாங்களே.”

“யார் அப்படிச் சொன்னது?”

“இன்னொரு ஆஃபீசர். யூனியன்ல எங்க யூனிட் செக்ரட்டரியும் சொன்னாரு.”

“அவங்க வேற எப்படிச் சொல்வாங்க? இதை உங்களால் ஊகிக்க முடியலையா? சிஐடியு தலைவரே நீங்க அங்கே வந்திருக்கக்கூடாதுன்னு சொன்னாரே மறந்துட்டீங்களா? அடுத்து, நீங்க உங்க மேனேஜர் கேட்டப்ப, அங்கே போகவே இல்லைன்னு சொல்லியிருக்கக் கூடாது. என் கூடத்தான் போனதாகவும், நான்தான் வழியில் அந்த சிஐடியு ஆஃபீசுக்கு என்னுடைய வேலையா போனதாகவும் சொல்லியிருக்கனும். சரி, கவலைப் படாதீங்க, நான் விசாரிச்சுட்டுச் சொல்றேன்.”

பின்னர் தெரியவந்த விவரங்கள் இவை:

சிஐடியு அலுவலகம் உள்ள பகுதி உள் ளிட்ட முக்கிய இடங்களில் நிறுவனத்திற்காக வேவு பார்க்கிற தனியார் துப்பறியும் நிறு வனங்களின் ஆட்கள் எப்போதுமே நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அருகில் உள்ள தேநீர்க் கடை முதல் ஒரு நடிகரின் ரசிகர் மன்றக் கொட்டகை வரையில் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள். தேவைப்பட்டால் அவர்களே பூ, காய்கறி விற்பவர்களாக, தேநீர் ஆற்றுகிறவர்களாக, ஏன் சிஐடியு அலுவலகத் திற்குள் குடிநீர் கொண்டுவந்து கொடுக்கிறவர்களாகக் கூட பல அவதாரங்களை எடுப்பார் கள்.

இந்தியாவில் செயல்படும் ஏராளமான தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்கு வருகிற வேலை ஒப்பந்தங்களில் 40 விழுக்காடு வரையில் இப்படிப்பட்ட தொழில் நிறுவனங்கள் சார்ந்த உளவுக் காரியங்களுக்காகத்தான் ஒப் படைக்கப்படுகின்றன என்று முன்பு படித்த தகவல் நினைவுக்கு வருகிறது. இன்றைய உலகமயப் பொருளாதார ஆக்கிரமிப்புச் சூழலில், சிறப்புப் பொருளாதார மண்டலத் திணிப்புச் சூழலில் தனியார் துப்பறிவாளர்களுக்கு வருகிற தொழிலாளர் வேவு வேலைகள் இன்னும் கூடுதலாக இருக்கும்.

உண்மைகள் தெளிவானதும் கலைச்செல் வன் அச்சமின்றி - இப்போது கொஞ்சம் வெளிப்படையாகவே கூட - நிர்வாக உடந் தைச் சங்கத்தை எதிர்த்து மற்ற தொழிலாளர்களைத் திரட்டுகிற முயற்சிகளில் உற்சாகமாக ஈடுபட்டார்.

அந்த ஆண்டு மேற்படி நிறுவனத்தின் மேலாண் இயக்குநருக்கு, சிறந்த முறையில் தொழிலாளர் உறவைப் பேணியதற்கான விருது வழங்கப்பட்டதை என்னவென்று சொல்வது!

இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சிஐடியு வழிகாட்டலுடன் அந்த நிறுவனத்தின் வாயிலில் புதிய சங்கம் உதித்தது. தொடக்க விழாவிற்கு சிஐடியு தோழர்களோடு ஒரு செய்தியாளராக நானும் சென்றிருந்தேன். அதே ஆண்டில் அதே வாயிலில் தொழிலாளர் ஒற்றுமை நாளாகிய மே தினம் கொண்டாடப் பட்டது. அதற்கும் சென்று வந்தேன்.

இன்றைய மே தின விழாவில் பங்கேற்கத் தயாராகிறபோது ஒரு சிந்தனை ஊறுகிறது: மே தினம் ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, அது தொடர்ந்து நடைபெறுகிற ஒரு போராட் டமும் ஆகும்.

(‘தீக்கதிர்’ ஞாயிறு இணைப்பாகிய ‘வண்ணக்கதிர்’ ஏட்டில் இன்று வெளியாகியுள்ள கட்டுரை)

1 comment:

hariharan said...

//எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு விட்டு மணி இவ்வாறு சொன்னார்: “நீங்க இங்கே வந்தது தப்பு. தகவல் சொல்லியிருந்தீங்கன்னா நாங்களே தோழரோட வீட்டுக்கு வர்ற மாதிரி வந்திருப்போம். அங்கே இந்த விவரமெல்லாம் உங்ககிட்ட விசாரிச்சிருப்போம். உங்க ஃபேக்ட ரியிலே அந்த நிர்வாக சங்கத்தை மீறி இன்னொரு சங்கம் ஆரம்பிக்கிறது அவ் வளவு ஈஸி இல்லை. அதுவும் சிஐடியு சங்கம் ஆரம்பிக்கிறதா தெரியவந்துச்சுன்னா உங்களையும் உங்க கூட வரத் தயாரா இருக்கிறவங்களையும் பழிவாங்கிடுவாங்க. முதல்ல உங்களை யெல்லாம் பாதுகாக்கிறது முக்கியம். //

நெகிழவைத்த வார்த்தைகள்