Monday 8 August 2011

அடையாள அழிப்பில் வெளிச்சம் பாயட்டும்


ண்டுதோறும் ஒவ்வொரு குறிப்பிட்ட பிரச்சனையின் மீதும் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற் காகவும், அரசுகளின் நடவடிக்கைகளை வலியு றுத்துவதற்காகவும் குறிப்பிட்ட நாள் கடைப் பிடிக்கப்படுகிறது. அந்தந்த நாடுகள் மட்டுமே மேற்கொள்கிற நாட்கள், பூமிப் பந்தின் சில பகுதி களில் மட்டும் கொண்டாடப்படுகிற நாட்கள் என பல வகை நாட்கள் இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற நாட்கள் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் அனுசரிக்கப்படு கின்றன. காதலர் தினம் போன்ற நாட்கள் ஐ.நா. சபை அங்கீகரிக்காமலே உலகின் பல பகுதிகளில் பரவியிருக்கின்றன.

உலகம் முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு நாளாக ஐ.நா. அமைப்பு அறிவித் திருக்கிற ஒரு நாள்தான் உலக உள்நாட்டுத் தொன்மக்கள் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிற இந்த நாள் தொன்மை மக்களின் உரிமைகளை உரத்து முழங்கு கிறது. அவர்களது சுதந்திரத்தையும் உரிமைகளை யும் பாதுகாக்க உலகளாவிய அக்கறையைக் கோருகிறது.

1982ம் ஆண்டில் இதே நாளில்தான் மனித உரி மைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. குழுவைச் சேர்ந்த தொன்மை மக்கள் பிரிவு கூடி யது. அதை நினைவு கூறும் வகையில், 1994ம் ஆண் டில் ஐ.நா. பொதுக்குழு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று உள்நாட்டுத் தொன்மை மக்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது. முதலில் 1995 முதல் 2004 வரையிலான பத்தாண்டு காலத்திற்கு இந்த நாளைக் கடைப்பிடிக்க வேண்டு கோள் விடுக்கப்பட்டது. 2005 முதல் 2015 வரையில் இந்த நாளுக்கான இரண்டாவது பத்தாண்டுக் காலம் அறிவிக்கப்பட்டது. இந்த பத்தாண்டு காலத் திற்கான கருப்பொருளாக செயல்பாட்டிற்கும் கவுரத்திற்குமான பத்தாண்டு என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

ஆய்வரங்குகள், பயிலரங்குகள், உரிமை முழக் கங்கள் என பல்வேறு வடிவங்களில் உள்நாட்டுத் தொன்மை மக்களின் சுயமரியாதையை உயர்த்திப் பிடிக்கவும், அவர்களது உரிமைகளுக்காக உறுதி யாக நிற்கவும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடு மாறு ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் விடுத்துள் ளது. தொன்மை மக்களுக்கான ஒரு நிலையான அமைப்பை ஐ.நா. சபை ஏற்படுத்தியபோது, அதற் கான அடையாளச் சின்னமாக பங்களாதேஷ் நாட் டைச் சேர்ந்த ரேபாங் தேவான் என்ற சிறுவன் வரைந்த ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
-இப்படியாகப்பட்ட வழக்கமான தகவல் களோடுதான் இந்த ஆண்டும் தொன்மை மக்கள் நாள் அனுசரிக்கப்படவுள்ளது. ஆனால், அப்படி யொரு வழக்கமான நாளாக இது முடிந்துவிடக் கூடாது.

அடையாளக் குறுக்கல்
ஒருபக்கம் அனைத்து மக்களுமான - அல்லது பெரும்பகுதி மக்களுக்கான - பொதுவான கோரிக் கைகளை முன்வைத்துப் ஒன்றுபட்ட போராட்டங் கள் நடக்கிறபோது பல்வேறு பிரிவு மக்களை அதில் இணையவிடாமல் தடுக்கிற கைங்கர்யத்தை சிலர் திட்டமிட்டே செய்து வருகிறார்கள். ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் பொதுப் பிரச்சனைகளுக் காக தொழிலாளர்கள் திரட்டப்படும்போது, சாதி, சமூக அடையாளங்களின் அடிப்படையில் அவர் களை அந்தப் போராட்டத்திலிருந்து விலக்கி வைக் கிற புண்ணியவான்கள் சுறுசுறுப்போடு செயல் படுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில், தங்களது மக்களின் விடுதலைப்போராட்டங்கள் வெற்றிபெறுவதை உண்மையிலேயே விரும்புகிறார் களா, அல்லது அப்படிப்பட்ட விடுதலை கிடைத்து விட்டால் அதன் பின் தங்களது தலைமையும் நாட் டாமையும் அடிபட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார் களோ என்று கூட தோன்றுகிறது.

எரியும் பிரச்சனைகள் எத்தனையோ இருந்தா லும், அந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப் படுகிறபோதுதான் தங்களுடைய பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்பதைப் புரிந்துகொள்ளாதவர் களாக - அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர் களாக - தங்களுடைய இன, மொழி, சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே முன்னிறுத்த இவர்கள் முனைகிறார்கள்.

இது ஒருவகையான அடையாள அரசியல் என்றால், இன்னொரு பக்கம் உலக மக்களின் பன் முக அடையாளங்களை அழிக்கத்துடிக்கிற இன் னொரு வகை அரசியலும் கோலோச்சிக்கொண்டி ருக்கிறது. அந்த அரசியலின் நோக்கம் சிறுசிறு அடையாளங்களையெல்லாம் உருமாற்றம் செய்து, ஒரே அடையாளமாக்குவதுதான்.

நாட்டு மக்களை மதத்தின் பெயரால் கூறு போட்டு அதன்மூலம் நாடு தழுவிய போராட்ட இயக்கங்களிலிருந்து பெரும் பகுதி மக்களை ஒதுக்கி வைக்கிற கரசேவையில் ஈடுபடுகிறவர் களும் உண்டு. இந்தியாவில் இந்துத்துவக் கூடா ரத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற சுலோகத்தை உச்சரித்து ஒரு ஒற்றை அடையாளத்தை மக்கள் மீது திணிக்க முயல்கிறார்கள். அவர்கள் பிடிவாதமாக நாட்டின் பன்முக அடையாளங்களை அங்கீகரிக்க பிடிவாத மாக மறுக்கிறார்கள்.

நாட்டின் மத்திய ஆட்சி பாஜக கையில் சிக்கி யிருந்த காலகட்டத்தில், ஒரு வார ஏட்டில் ஒரு சிறுகதை வெளியானது. ஒரு காடு. அதில் ஏராள மான செடிகள், கொடிகள், மரங்கள். அத்தனை செடி களிலும் கொடிகளிலும் மரங்களிலும் பூத்திருக்கிற லட்சக்கணக்கான மலர்களும் ஒரே மாதிரியாக மஞ்சள் வண்ணத்தில் இருப்பதாக அந்தக் கதை முடியும். அந்தக் கதையை படித்த ஒரு நண்பர் இப் படிப்பட்ட ஒரே வண்ணம் என்பது ஒரு சீரான அழகுதான் என்று கறுத்துக் கூறினார். ஆனால், காடு என்றால் பலப்பல வண்ணங்களில் இருப்பது தானே இயற்கை? அதுதானே அழகு? இதைக் கேட்டபோது அவர் ஒரு ஒப்புதலுடன் மவுன மானார்.

இந்த உள்நாட்டு ஒற்றைக் கலாச்சார திணிப்பு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் உலக அளவில் ஏதோ பிளாஸ்டிக் மோல்டிங் நாற்காலிகள் போல, மக்களை ஒரே மாதிரியாக வார்ப்பது அதன்மூலம் அவர்களது தொன்மை அடையாளங்களை வேரறுப் பது என்ற ஒரு பெரும் வரலாற்றுக் கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலின் பெயரால், பன்னாட்டு ஏகபோக சுரண்டல் கூட்டங்கள் இந்தக் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

அந்த வார்ப்பட வேலையின் விளைவாகத்தான், கிராமங்களில் கூட பாரம்பரியமான உணவுகள் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. விரும்பிப் பருகிற குளிர் பானங்கள் காணாமல் போய் கோக்குகளும் பெப்சி களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. உருளைக் கிழங்கு வறுவல் என்ற பெயரே கூட மறைக்கப் பட்டுலேய்ஸ் சரக்குகள் பல வண்ண உறைகளில் தொங்கு கின்றன. எந்த நேரத்திலும் உள் நாட்டுப் பொருளாதாரத்தைப் படு குழியில் தள்ளத் தயாராக உலக நிதி மூலதனம் ரவுடித்தனம் செய்துகொண்டிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களில் நவீன அடிமை களாகப் பணிபுரியும் இளைய தலைமுறையினர் தங்களது கணினிகளோடும், இணையத் தொடர்பு களோடும் கருவி இணைப்புகளோடும் சுருங்கிப் போனவர்களாக மாற்றப்படுகிறார்கள். கிடைத்திருக் கிற வேலையை விட்டுவிட முடியாது என்று அஞ்சு கிற அளவிற்கு கணிசமான ஊதியம் கொடுத்து, ஆனால் எந்த நொடியிலும் வெளியே அனுப்பப்பட லாம் என்ற கத்தியின் கீழே நிறுத்தப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் தங்களது வேலை நேரம், ஒப்பிட்டளவில் தங்களுக்குத் தரப்படும் ஊதியம் குறைவாகவே இருப்பது, தங்களது பிரச்சனை களை எடுத்துப் போராடுவதற்கான தொழிற்சங்க உரிமை போன்ற எதுகுறித்தும் பேசக்கூடாது; சிந் திக்கவே கூடாது. இப்படிப்பட்ட உளவியல் சார்ந்த அடையாள அழிப்பு அவர்களை மனத்தளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருவதை மருத்துவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதற்கு மாற்றாக மேற்படி உள்நாட்டு / பன்னாட்டு கார்ப் பரேட் தாதாக்கள் கண்டுபிடித்திருக்கிற ஏற்பாடு தான் வளாகக் கேளிக்கைகள்.

அடிப்படையில் எதையும் கேள்வி கேட்கிற, தட்டிக்கேட்கிற அரசியல் உணர்வை அடியோடு அழிப்பது என்பதே இந்த உலகளாவிய ஒற்றை அடையாள ஆதிக்கத்தின் நோக்கம். அப்போதுதான் அவர்களது உளகளாவிய சுரண்டல் தங்குதடை யின்றி நடைபெறும்.

உள்நாட்டுத் தொன்மை மக்களின் உரிமை களை, அவர்களது வரலாற்று அடையாளங்களை உயர்த்திப் பிடிக்கிறபோது, அவர்களது மொழியையும் கூட களவாடுகிற உலகமய அடையாள அழிப்பு, சொந்த அடையாளத்தின் பெயரால் நியாயமான போராட்டக் களத்திற்கு அவர்களை வரவிடாமல் தடுக்கிற போக்கு, இரண்டையுமே வெளிச்சத் திற்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. அந்த வெளிச் சம்தான், உலக வர்த்தகச் சுரண்டல் தாதாக்களை யும், அவர்களது உள்ளூர் சேவகர்களையும், உள் நாட்டு வர்ணபேதச் சதிகாரர்களையும் அடையாளம் காட்டும். அந்த வெளிச்சம்தான் அனைத்து மக் களும் அரசியல் விழிப்போடும் வர்க்க உணர் வோடும் ஒன்று பட்டுப் போராடுகிற பாதையைத் தெளிவாகக் காட்டும்.

No comments: