Sunday 2 October 2011

காந்தியின் கைத்தடியும் உள்ளாட்சி அரசாங்கமும்காந்தியால் மட்டும் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை; ஆனால் காந்தி இல்லாமல் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் நாட்டின் நாட்குறிப்பேட்டைத் திரும்பவும் படித்துப் பார்த்தால் இது புரியும்,

விடுதலைப் போராட்டத்தின்போது தலையெடுத்திருந்த இந்திய முதலாளி வர்க்கம், அதன் ரத்த உறவாக நீடித்த நிலப்பிரபுத்துவம் இரண்டின் அரசியல் அடையாள முகமாகத் திகழ்ந்தார் என்றாலும், காந்தியால் பல்வேறு வேலிகள் தாண்டி இந்திய மக்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வலிமை வாய்ந்த சக்தியாகத் திரட்ட முடிந்தது. ஆகவேதான் வர்க்கப்போராட்டம், சமுதாய சமத்துவம் என்ற இலக்குகளோடு புறப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளும் காந்தியை மதித்தார்கள். இந்தியாவின் தனி இழிவாகிய சாதியக் கட்டமைப்பை உடைக்கப் போராடியவர்களும், வர்ணாஸ்ரமம் நல்ல வேலைப்பிரிவினை என்பதாக ஒரு தவறான கருத்தைக் கொண்டிருந்த காந்தியோடு கடுமையாக முரண்பட்டாலும் அவரை மதித்தார்கள்.

சாதியக் கட்டமைப்பு பற்றிப் பேசுகிறபோது இயல்பாகவே நாட்டின் கிராமங்கள் பற்றிய எண்ணம் வருகிறது. நமது நகரங்களும் சாதிய நரகத்திலிருந்து விடுபடாமலே இருக்கின்றன என்ற போதிலும் நுட்பமான முறையில் சாதியப் பாகுபாடுகளைப் பேணி வளர்க்கிற நேரடியான சாதிய ஆதிக்கம், வெறி, பாகுபாடு, வன்மம், தீண்டாமை... இவற்றின் கொட்டம் மிகப் பெரும் அளவுக்கு அடங்காமல் இருப்பது கிராமங்களில்தான். கீழவெண்மணித் தீ நாக்குகள் பசியோடு நீண்டு பரவித் தீண்டிக்கொண்டிருப்பதை இப்போதுதான் பரமக்குடியில் பார்த்தோம்.
இப்பகுதிகளில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்வது பற்றிக் கருத்துக்கூறிய மார்க்சிஸ்ட் கட்சி, இங்கெல்லாம் தொழில்வளர்ச்சியும் பொருளாதார வாழ்க்கை மேம்பாடும் மேற்கொள்ளப்படாமல் போனதுதான் தொடரும் சாதிய வன்முறைகளுக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இதற்கு முன் நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமைத் தாக்குதல்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கள் அளித்த அறிக்கைகளிலும் இந்த உண்மை எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா தனது கிராமங்களில் வாழ்கிறது, என்றார் காந்தி. அதை அவர் வெறும் மேற்கோளாகச் சொல்லவில்லை. கிராம மக்களுக்கு ஒரு சுயமான பொருளாதார பலம், ஆளுமை இருக்க வேண்டும் என்ற நோக்கம்தான் அவருடைய கிராமராஜ்யம் என்ற கனவாக விரிந்தது. அந்தக் கனவை நிறைவேற்றுகிற எண்ணத்தோடுதான் அவர் கதர்த்துணி உள்ளிட்ட கிராமத் தொழில்கள் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இயக்கமாகவே மேற்கொண்டார்.

ஒருவகையில் அவரது இந்த கிராமத் தொழில் சார்ந்த ஈடுபாடு என்பது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்ட இயக்கத்தின் ஒரு அடையாளமாகவும் ஒரு வெளிப்பாடாகவும் இருந்தது. கிழக்கு இந்திய கம்பெனியின் வருகையில் தொடங்கி பின்னர், அதிகார பலத்தோடு வந்து ஆக்கிரமித்துக்கொண்ட பிரிட்டிஷ் நிறுவனங்களால் இந்தியாவின் பாரம்பரியக் கைத்தொழில்கள் விழுங்கப்பட்டிருந்தன. அவற்றை ஒரு இயக்கமாகவே மீட்பது என்பது அந்நிய ஆட்சிக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் அமைந்தது. ஆகவேதான் அன்று விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களுக்கு கதராடை ஒரு தேசிய அடையாளமானது. பின்னர், அது காங்கிரஸ்காரர்களின் உட்பூசல் சண்டைகளின் கிழிபடுகிற, விலையுயர்ந்த துணியாக மாறிப்போனது வேறு சோகம்.

இப்போதும் இந்திய மக்களில் 65 விழுக்காட்டினர் கிராமங்களில்தான் வசிக்கிறார்கள் (வாழ்கிறார்கள் என்று சொல்வதற்கில்லைதான்). பொதுவாக கிராம மக்களின் எளிமை, வெகுளித்தனம் போன்றவை ரசணைக்குரியதாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கிராமம் என்றால் அழகான வயல்கள், நீரோடும் கால்வாய்கள், அதில் விளையாடும் இளசுகள் என்றுதான் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அந்த அழகிய கிராமங்களுக்கு வெளியே வயல்களின் வரப்புகள் இருப்பது போல, உள்ளே சாதி வரப்புகள் இருக்கின்றன. வயல்வரப்புகளையாவது தாண்டிக் கடக்க முடியும். சாதி வரப்புகளையோ தாண்டவும் முடியவில்லை, உடைக்கவும் முடியவில்லை.

இந்த நிலையை மாற்றுவதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது கிராம மக்களின் சுய பொருளாதார பலம், அரசியல் பலம் இரண்டும்தான். பொருளாதார பலத்தைப் பொருத்தவரையில் இந்திய சுதந்திரத்தின் 64 ஆண்டுகால - குறிப்பாக கடந்த 20 ஆண்டுகால - சாதனை என்ன என்பதை, அண்மை ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற செய்தி உரக்கச் சொல்லுகிறது. தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் என்ற பெயருடன் மகாத்மா காந்தி என்ற சொற்களைச் சேர்த்ததுடன் கிராமங்களின் முகம் மலர்ந்துவிட்டதாய் கணக்கை முடிக்கப்பார்க்கிறது அரசு.

கிராமமக்களின் அரசியல் உறுதியை வளர்ப்பதற்கான ஒரு அடிப்படையான ஜனநாயக ஏற்பாடுதான் உள்ளாட்சி அமைப்புகள். கிராமப் பஞ்சாயத்துகளின் சொந்த வலிமையை காந்தி மிகவும் வலியுறுத்தினார்.

பஞ்சம் என்றால் ஐந்து; ஆயத்து என்றால் சபை. ஊரில் மரியாதைக்குரிய ஐந்து பேர் பொறுப்பேற்கிற, கிராம நிர்வாக சபை என்பதுதான் பஞ்சாயத்து என்ற சொல்லின் பொருளாம்.

ஒருகாலத்தில், மரியாதைக்குரிய அந்த ஐந்து பேர் என்பவர்கள் கிராமத்தில் பெரிய மனிதர்களாக - அதாவது பெரும் பண்ணையார்களாக இருந்திருப்பார்கள். குடவோலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த ஜனநாயகம் நம் கிராமங்களில் இருந்ததாகப் பெருமையுடன் சொல்லிக்கொள்ளப்படுவது உண்டு. ஆனால், மன்னர்களால் விரல்காட்டப்படுகிற இரண்டு மூன்று பெரிய மனிதர்களில் ஒருவரைத்தான் இம்முறையில் தேர்ந்தெடுக்க முடியும். அதுவும் கிராம மக்கள் எல்லோரும் குடத்திற்குள் தங்களது ஆதரவு யாருக்கு என்று தெரிவிக்கும் ஓலைகளைப் போட்டுவிட முடியாது. மேட்டுக்குடி சாதிகளைச் சேர்ந்தவர்கள், சொந்தமாக நிலபுலம் வைத்திருந்தவர்கள் மட்டுமே அந்த வாக்குப் பதிவில் பங்கேற்க முடியும். அவர்களிலும் ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

நெடும் போராட்டத்தின் பலனாக சுதந்திர இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களும் விதிகளும் அரசமைப்பு சாசனத்திலேயே இடம்பெற்றன. தற்போது சில குறைபாடுகள் இருக்கின்றன என்ற போதிலும் தற்போதுள்ள சட்டங்களைப் பாதுகாத்துக்கொண்டே, குறைபாடுகளை நீக்க வேண்டியிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம், செயல் அதிகாரம் உள்ளிட்டவற்றை கம்யூனிஸ்ட்டுகளும் சில பொது அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. உள்ளாட்சிகள் மாவட்ட நிர்வாகங்களைச் சார்ந்திருக்கிற நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும். ஒரு உள்ளாட்சி அமைப்பு கிராம அரசாங்கம் என்பதாக மதிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக பெண்களின் குரல் இந்த உள்ளாட்சிகளில் ஓங்கி ஒலிப்பது அவசியம். நடைமுறையில் பெண்கள் தங்களுடைய கணவன்மார்கள் உள்ளிட்ட ஆண்களின் கைப்பாவைகளாகவே செயல்படுவார்கள் என்று பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் சொன்னதுண்டு. தொடக்கத்தின் அத்தகைய நிலை இருந்தது என்றாலும், கடந்த ஆண்டுகளில் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, பெண்கள் கூட்டாகச் செயல்படுவதும் சுயபலத்தோடு தீர்மானங்களை மேற்கொள்வதும் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று ஊரக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வரவேற்கத்தக்க வளர்ச்சி.
இன்னொரு பக்கத்தில், இடஒதுக்கீடு அடிப்படையி தேர்ந்தெடுக்கப்படுகிற தலித் தலைவர்களை, கூடியவரையில் ஒதுக்கி வைக்கிற ஆதிக்கப் போக்கு பெருமளவிற்கு மாறவில்லை என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உள்ளாட்சிகளை முழு ஜனநாயக உரிமைகளோடு பாதுகாத்துக்கொண்டே, வேறு பல தளங்களிலும் தொடர்ச்சியான, போராட்ட இயக்கங்களை மேற்கொள்வதுதான் இத்தகைய பாகுபாடுகளுக்கு முடிவு கட்டும்.

உறுப்பினர் முதல் தலைவர் பொறுப்பு வரையில் ஏலம் விடப்படுகிற, ஊராட்சி ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. தமிழக மக்கள் தற்போது சந்திக்கிற உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்தச் செய்திகள் அடிபட்டன, மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்ட செய்திகளும் வந்துள்ளன. அரசியல் இயக்கங்களும் மக்களும் விழிப்புடன் இருந்து முறியடித்தாக வேண்டிய போக்கு இது.

காந்தி சிலைகளின் ஆடையில்லா மேனியை பூ மாலைகளால் மூடுவது, ராட்டை சுற்றுவது, ரகுபதி ராகவ ராஜாராம் பாடுவது... இவை மட்டுமே அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதாகிவிடாது. மக்களுக்காக உண்மையாகப் போராடுகிறவர்களை, மக்கள் சேவையே தங்களது பொது வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்களை உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அதன் மூலம் உள்ளாட்சிகள் ஊழலற்ற, முடக்கமற்ற முழு முழுமையான கிராம அரசாங்கங்களாகத் திகழ முடியும். அவ்வாறு திகழச் செய்வதுதான் காந்தியின் கைத்தடியை சரியாகப் பற்றிக்கொண்டதற்கு அடையாளமாகும்.

No comments: