காங்கிரஸ் கட்சிக்கென ஒரு கலாச்சாரப் பெருமை உண்டு. கட்சிக்கு உள்ளே ஒரு பொதுக்கருத்து என்றில்லாமல் ஆளுக்காள் அவரவர் கருத்தை வெளியே பேசுவார்கள், அதை உட்கட்சி ஜனநாயகம் என்பார்கள்; ஆனால் கட்சிக்கு வெளியே மாறுபட்ட கருத்துகள் வந்தால் அந்த ஜனநாயக உரிமையை ஒடுக்கிவிட முயல்வார்கள். இந்த மரபின் புதிய பதிப்பாகத்தான் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மூலமாக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
இணையத்தின் மூலமாக இன்று பரவலாகி வரும் சமூகவலைத்தளங்களை, அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அந்த சமூக வலைத்தளங்களில் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை படங்களில் உருமாற்றம் (மார்ஃபிங்) செய்து வெளியிட்டிருக்கிறார்களாம். சிலர் மதப் பகைமையைத் தூண்டுகிற கருத்துகளைப் பதிவு செய்கிறார்களாம். "இத்தகைய செயல்களால் சட்டம் ஒழுங்கு சிதையும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும். அத்தகைய தீங்கான பதிவுகளைத் தடுப்பதற்கு வலைத்தள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல் அரசாங்கமே தலையிட வேண்டியிருக்கும்," என்பதாக ஒரு மிரட்டல் கலந்த தொனியில் வற்புறுத்தியிருக்கிறார்.
இணையம் வழி சமூக வலைத்தளங்கள் பின்னப்படுவது இன்றைய ஒரு முக்கிய தொழில்நுட்ப வளர்ச்சி. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ், யாஹூ பிளஸ், ஆர்க்குட், லிங்கெடின், மை ஸ்பேஸ்,, பெர்ஃப்ஸ்பாட், பிக் அடா, ஃபிராப்பர் என்று பல சமூக வலைத்தளங்கள் இயங்குகின்றன. கணினி வழியாக இணைய உலகத்தைக் கையாளத்தெரிந்த எவரும் இந்த சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்கள் கருத்துகளைப் பதிவேற்ற முடியும்; மற்றவர்களின் கருத்துகளுக்கு எதிர்க்கருத்துச் சொல்லவும் முடியும். குறிப்பிட்ட அலைக்கற்றை சேவையை வழங்கும் நிறுவனத்திற்குத் தருகிற மாதாந்திரக் கட்டணத்தோடு சரி. சற்றே மின்சாரச் செலவும் ஆகும். இணையத்தில் இயங்குகிறபோது பக்கத்தில் நொறுக்குத் தீனி, தேநீர் என்று வைத்துக்கொண்டால் அதற்கான செலவுதான். வேறு பெரிய முதலீடுகள் தேவையில்லை. இவையன்றி அவரவரின் சொந்தப் பத்திரிகை போல வலைப்பூ எனப்படும் 'பிளாக்' தளங்களை யார் வேண்டுமானாலும் முற்றிலும் இலவசமாகத் தொடங்கலாம்.
பெரிய பத்திரிகைகளில் நட்சத்திரம் அல்லாத புதியவர்களின் எழுத்துகள் எளிதில் இடம் பிடிக்க முடிவதில்லை. பதிப்பகங்களின் வாசல்களுக்குள் சந்தை மதிப்பு இல்லாதவர்கள் நுழைந்துவிட முடிவதில்லை. இவர்களுக்கும் சேர்த்து இந்த வலைத்தளங்கள் ஒரு அறிமுக வெளியை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவர்களது கவிதையோ, கட்டுரையோ, ஓவியமோ உடனடியாக உலகம் முழுவதும் செல்கிறது. பலரிடமிருந்தும் பாராட்டோ விமர்சனமோ வருகிறது. அடுத்து, இந்த வலைத் தளங்களில் பெண்கள் நடமாடவும் தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
எழுத்தாளர்களாக, கலைஞர்களாக, சிந்தனையாளர்களாக, பத்திரிகையாளராக, தலைவர்களாக என தங்களது இடத்தை உறுதிப்படுத்தியிருப்பவர்களும் இந்த வலைத்தளங்களைக் கையாள்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே ஒரே உத்தரவாதம், இவர்களது எண்ணங்கள் வெட்டப்படாமல், மாற்றப்படாமல் முழுமையாக எடுத்துச்செல்லப்படும் என்பதே.
கபில் சிபலார் கூறுவது போல் நிறுவனங்கள் முன்கூட்டியே வடிகட்டத் தொடங்கினால் என்ன ஆகும்? குறைந்தது 60 விழுக்காடு பயன்பாட்டாளர்களை அந்த நிறுவனங்கள் இழக்க நேரிடும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால் அந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கிற விளம்பர வருவாய் வற்றிச் சுருங்கிவிடும். ஆகவே அந்த நிறுவனங்கள் இதற்கு முன்வரப் போவதில்லை. மேலும், தற்போதைய தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் அவ்வாறு முன்கூட்டியே வெட்டிச் சுருக்கிப் போடுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. அப்படி ஒரு ஏற்பாடு புகுத்தப்பட்டால் அதை உடைத்துக்கொண்டு இன்னொரு தொழில்நுட்பம் வந்துவிடும்.
வர்த்தக ரீதியான சில மென்பொருள் நிறுவனங்களின் சந்தை ஆக்கிரமிப்பை எதிர்த்துதான் சுதந்திர மென்பொருள் இயக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அந்த இயக்கத்தின் முக்கியப் பணியே இத்தகைய கட்டுகளை அறுப்பதுதான்.
தலைவர்களின் படங்களை உருமாற்றம் செய்வது, அரசியல் நையாண்டிக்காக என்றால் அதிலே கபில் சிபல்கள் கோபப்பட ஏதுமில்லை. நையாண்டிச் சித்திரங்களாகிய கார்ட்டூன்கள் அரசியல் விமர்சனத்தில் முக்கியமான இடம் பிடித்துள்ளன. அதைத் தடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரம்தான்.
ஆனால், வக்கிர எண்ணத்தில் ஊறிப்போன சிலர், ஆபாசமான முறையில் பட மாற்றம் செய்வதுண்டு. ஒரு பெண் பகுத்தறிவுக் கருத்துகளைத் துணிவுடன் பதிவு செய்தபோது, இந்துத்துவக் கூடாரத்தைச் சேர்ந்த சிலர், வேறொரு நிர்வாண உடல் படத்தோடு அந்தப் பெண்ணின் முகத்தை ஒட்டுவேலை செய்து, முற்போக்கு பேசுகிற இந்தப் பெண் இப்படித்தான் நடந்துகொள்கிறாள்... இவளை நம்பாதீர்கள், என்று பதிவு செய்தனர். பலரும் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தபோது, அந்தப் பெண் சற்றும் மனம் தளராமல் அது ஒட்டுவேலைதான் என்பதை எல்லோரும் அறியும்படி செய்தார். அந்த வக்கிரர்கள் அப்புறம் காணாமல் போனார்கள்.
விவாத நெறிகளை மீறி சிலர் மற்றவர்களது மத உணர்வுகளை இழிவுபடுத்துவது போன்ற சொற்களைப் பதிவிடுகிறார்கள்தான். எனினும், வலைத்தளங்களில் செயல்படுகிற பலரும் அத்தகைய நெறிப்பிறழ்வுகளை வெளிப்படையாகக் கண்டிக்கிறார்கள். அதன் மூலம், சிறுமதியுடன் பகைவளர்க்க முயல்வோர் தனிமைப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட ஒருவரது பதிவுகள் மனித மாண்புகளுக்குக் கறை ஏற்படுத்துவதாகப் பலரும் கருதினால், அவரைப் பற்றி புகார் செய்வதற்கான இணைப்பு, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அத்தகைய புகார்கள் வருமானால் அவரது தளக்கணக்கை முறித்துக்கொள்வதற்கான ஏற்பாடு முதலியவை இருக்கவே செய்கின்றன. விக்கிபீடியா என்ற சுதந்திரத் தகவல் ஏட்டில், பெரியார் பற்றிய கட்டுரையில் ஒருவர் வேண்டுமென்றே பெரியார் என்று வருகிற இடங்களில் எல்லாம் ராமசாமி நாயக்கர் என்று திருத்தம் செய்து வந்தார். அவரைப் பற்றிய புகார்கள் பதிவானதைத் தொடர்ந்து அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், கபில் சிபல் கூறுவது போல் சிலர் உள்நோக்கத்துடன் செயல்பட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடரவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வழி இருக்கவே இருக்கிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். காங்கிரஸ் தலைமைக்கு, வலைத்தளங்களில் நடைபெறும் நெறிமீறல்கள் பற்றிய கவலை திடீரென ஏன் வரவேண்டும்? சோனியா, மன்மோகன் படங்களில் ஒட்டுவேலை நடந்தது மட்டுமே காரணமா?
இல்லை. விக்கிலீக்ஸ் தளம், ஆட்சியாளர்கள் அமெரிக்க அரசோடு செய்துகொண்ட கொள்கைச் சமரசங்களையும் பேரங்களையும் அம்பலப்படுத்தியபோதே, அரசாங்க உயர்மட்டத்தில் எப்படியெல்லாம் வர்த்தகச் சூதாட்டத் தரகர்கள் புகுந்து செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பதை உலகறியச் செய்தபோதே இவர்களுக்கு ஆத்திரம் பொங்கத் தொடங்கிவிட்டது. இத்தகைய சமூக வலைத்தளங்களின் மூலம் பரவிய கருத்துகள் சில நாடுகளில் அண்மையில் ஆட்சிமாற்றங்களுக்கே இட்டுச் சென்ற மக்கள் கிளர்ச்சிகளுக்கு ஒரு முக்கியக் தத் தொடங்கிவிட்டது. உலகச் சுரண்டலின் நிதி மூலதன ஊற்றாகிய அமெரிக்காரணமாக அமைந்தன என்ற தகவல் வெளிவந்தபோதே இவர்களுக்கு உறுத்க வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டியதில் அதற்கென்றே உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் மையமான பங்காற்றியிருக்கின்றன என்ற தகவல் உறுதிப்பட்டபோது இவர்களுக்கு முழு விழிப்பு ஏற்பட்டுவிட்டது.
இந்திய சில்லரை வர்த்தகக் களத்தை அந்நிய நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றுவதற்குக் உடன்பட்ட கேவலம், உழைப்பாளிகளின் ஓய்வூதியப் பணத்தைக் கூட பங்குச்சந்தைச் சூதாடிகளின் 'உள்ளே வெளியே' ஆட்டத்துக்குத் தாரை வார்க்கும் துரோகம் உள்ளிட்ட அக்கிரமங்களை எதிர்த்து இங்கேயும் அத்தகைய மக்கள் போராட்டங்கள் வெடித்துவிட்டால் என்னாவது? ஆகவே, வருமுன் தடுக்கிற புத்திசாலி அரசாக இப்படிப்பட்ட மறைமுகத் தணிக்கையைப் புகுத்தப் பார்க்கிறது மன்மோகன் சிங் அரசு.
ப் புரட்சி; இரண்டு: அதனால் எழும் மக்கள் கிளர்ச்சி.
அவசர நிலை ஆட்சி, அவதூறு மசோதா ஆட்சி என்று கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை முறியடித்துக் காட்டிய நம் மக்கள் இதையும் வீழ்த்துவார்கள். இரண்டு விசயங்களை ஆட்சியாளர்களால் தடுக்க முடியாது. ஒன்று: தகவல் தொழில்நுட்பப் புரட்சி; இரண்டு: அதனால் எழும் மக்கள் கிளர்ச்சி.
-‘தீக்கதிர்’ 9-12-2011 இதழில் வந்துள்ள கட்டுரை
3 comments:
அருமையான பதிவு.நன்றி அன்புள்ளமே..
அன்புள்ள அசாக் அவர்களுக்கு! நமக்கு மிகவும் நெருக்கமான தோழர் ஒருவரின் வலைத்தளத்தில் பல நண்பர்களின் இடுகையை பிரசுரிப்பார். அப்படி ஒரு இடுகை "மச்சினியின் மச்சம் " என்றிருந்தது. ஒருவன் தங்கையயும் மனைவியையும் பெண்டாளுவதை சொல்லும் .porno. தோழருக்கு உடனடியாக தொடர்பு கோண்டு அதன அழிக்கச்சொன்னேன் . . theekkathir.in என்பதற்குப் பதிலாக theekkathir .com என்று அடித்தால் அது ஒரு porno site. இஸ்லாமிய ,கிற்ஸ்தவ,இந்துமத பிரச்சார இடுகைகள் அதிகமாக வருகின்றன. இந்த அயோக்கியர்களைக் காட்டி ஜனநாயக உரிமைகளை மறுக்கும் வாய்ப்பை ஆளும் வர்க்கம் பயன்படுத்த முயற்சிக்கிறது. இன்றய தினமணி தலையங்கம் கபில் சிபிலுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறது.---காஸ்யபன்
நவீன தகவல் தொழில்நுட்பத்தின் வழியே நடைபெறும் விவாத அரங்கை தடைசெய்ய முயற்சிக்கும் அரசதிகாரத்துக்கு எதிரான உரத்த குரல்....
Post a Comment