Sunday, 30 June 2013

தட்டிக்கேட்கும் உணர்வை என்கவுன்டர் செய்யும் சினிமாக்கள்


ள்கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் தப்பில்லை என்று நகைச்சுவையோடு சொல்லும்  சூது கவ்வும் திரைப்படத்தின் பிற்பகுதியில் ஒரு போலிஸ் அதிகாரி வருவார். அவர் ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றும், சிக்குகிறவர்களைத் தாக்குவதில் ஈவிரக்கமற்றவர் என்றும் சித்தரிக்கப்படுவார். கடைசியில் அவருக்கு என்ன நிலைமை ஏற்படுகிறது என்பது அந்தப் படத்தின் உச்சகட்ட சிரிப்பாக இருக்கும். படத்தின் கதாநாயகர்கள் கொள்ளையர்கள் என்பதால் அவர்களைப் பிடிக்க முயலும் போலிஸ் அதிகாரி வில்லனாகிவிடுவார், அவருக்கு ஏற்படுகிற தோல்வி ரசனைக்குரியாதாகிவிடும். கதாநாயகனே போலிஸ் அதிகாரி என்றால் அவன் செய்கிற என்கவுன்டர் கொலைகளும் வன்முறைகளும் தைதட்டி விசிலடித்து வரவேற்கப்பட வேண்டிய சாகசங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும். காக்க காக்க படத்தை மறந்துவிட முடியுமா?

தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட இதுதாண்டா போலிஸ் இப்படியாகப்பட்ட படங்கள் வேகம் பிடிக்கத் தூண்டுதலாக இருந்தது எனலாம். அநேகமாக எல்லா நட்சத்திர நடிகர்களும் என்கவுன்டர் நடத்துகிற போலிஸ் அதிகாரிகளாக நடித்துவிட்டார்கள். அவர்கள் கடைசியில் சுட்டுத்தள்ள வசதியாக வில்லன்களைப் படுமோசமான சட்டவிரோதிகளாகக் காட்டியிருப்பார்கள். பெரும்பாலான படங்களில் அந்த வில்லன்கள் கறுப்புத்தோல்காரர்களாக, சீவாத தலைமுடிக்காரர்களாக, எப்போதும் கொடூரமாகவே பார்த்துக்கொண்டிருக்கிற வியர்வை வழியும் முகத்துக்காரர்களாக ஒப்பனை செய்யப்பட்டிருப்பார்கள். வேட்டையாடு விளையாடு படத்தில் வக்கிரம்பிடித்த இளம் வில்லன்கள் இருவருக்கும் இளமாறன், அமுதன் என்று இனிய தமிழ்ப்பெயர் சூட்டியிருப்பார் கமல்.

இடைவேளைக்குப் பிறகு வில்லன்களால் நிச்சயமாகக் கதாநாயகர்களின் காதலிகளோ மனைவியரோ தங்கையரோ பிள்ளைகளோ பெற்றோர்களோ கடத்தப்பட்டுவிடுவார்கள். சில படங்களில் அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கோரமான முறையில் கொல்லப்பட்டிருப்பார்கள். கண்கள் சிவக்க, பற்கள் நறநறக்க, தரையிலிருந்து முகத்தை வானம் நோக்கி உயர்த்தி, வெஞ்சினத்தோடு பழிவாங்கப் புறப்படுவான் போலிஸ் கதாநாயகன். ஆக, தமிழ் சினிமா போலிஸ் நாயகர்களுக்குப் பொதுமக்களைக் காப்பாற்றுகிற சட்டப்படியான கடமையைவிட, சொந்த இழப்புக்குக் கணக்குத் தீர்ப்பதுதான் முக்கியம்!

நாயக நடிகைகள் காவல்துறை அதிகாரியாக வந்து தாதாமார்களை வதம் செய்கிற படங்கள் மிகமிகக் குறைவு. முன்பு ஒரே ஒரு வைஜயந்தி ஐபிஎஸ் வந்தது. அதுவும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட படம்தான்.

ரசிகர்களாகிய பொதுமக்கள் இதையெல்லாம் ஏனென்று கேட்பதில்லை. அதைப் போலவே உண்மை வாழ்க்கையில் கேள்விப்படுகிற காவல்துறையினரின் மோதல் துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இடதுசாரி இயக்கங்களும், காவல்நிலைய சித்திரவதைகளில் யாரேனும் மரணமடைகிறார் என்றால் அவர் யார் என்பதைப் பொறுத்து வேறு சில அரசியல் கட்சிகளும், பொதுவாக சில மனித உரிமை அமைப்புகளும்தான் கண்டனம் தெரிவிக்கின்றன. உண்மையறியும் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை வெளிப்படுத்தும் தகவல்கள் பெரும்பாலும் காவல்துறை அறிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றன.

காவல்துறையின் இப்படிப்பட்ட திட்டமிட்ட மோதல் நடவடிக்கைகளாலும், அவற்றைப் புகழ்கிற திரைப்படங்களாலும் உண்மையாகவே பாதிக்கப்படுகிறவர்கள் யார்? மேலோட்டமாகப் பார்த்தால், ஊரறிந்த ரவுடிகளும், கொலையே தொழிலாகக் கொண்ட அடியாள் கும்பல்களும்தானே போட்டுத்தள்ளப்படுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. மோதலின்போது இடையில் சிக்கிக்கொள்ளக்கூடிய ஓரிரு அப்பாவிகளைத் தவிர மற்றபடி குற்றவாளிகள் அல்லாத வேறு யாரும் கொல்லப்படுவதில்லையே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. உண்மையில் அந்த எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது.

சிலரது அரசியல் செல்வாக்கு, அதிகார மேலிடத் தொடர்பு, சரியான ஆதாரம் கிடைக்காத நிலைமை, சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தி அடக்கிவிடக்கூடிய வன்மம்... இப்படிப்பட்ட சூழல்களில் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைத்து, சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத்தர முடிவதில்லை. அப்போது இப்படி சட்டத்திற்கும் ஊருக்கும் வெளியே அவர்களின் கதையை முடிப்பதில் தவறு என்ற கருத்தும் பல்வேறு வழிகளில் மக்கள் மனங்களில் ஏற்றப்படுகிறது. அவ்வாறு கருத்தேற்றம் செய்யும் கைங்கரியத்தைச் செய்வதில் போலிஸ் நாயகத் திரைப்படங்கள் பங்காற்றுகின்றன.

அரசு சட்டம் ஒழுங்கைக் காப்பதில் கறாராக இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகக்கூட என்கவுன்டர்களுக்கு அனுமதி தரப்படுவது உண்டு. அரசியல் மட்டத்திலோ, துறைசார்ந்த அதிகார மட்டத்திலோ சிலபல சமூகவிரோதிகள் அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளப்படுவதும் நடக்கிறது. அவர்கள் எல்லை மீறிச் சென்று வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்க முயல்கிறபோது, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால் பல ரகசியங்கள் உடைபடக்கூடும் என்பதால் இப்படிப்பட்ட என்கவுன்டர்கள் அரங்கேற்றப்படுகின்றன என்றும் மனித உரிமை இயக்கத்தினர் சொல்கிறார்கள். ஒரு சில திரைப்படங்களிலும் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

"அட, வெறும் பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்களைப் பார்த்தோமா, பொழுதைப் போக்கிவிட்டு வந்தோமா என்றில்லாமல் இந்த அளவுக்கு ஆராய வேண்டுமா" என்று வழக்கம்போல் சிலர் கேட்கவே செய்கிறார்கள். எந்தத் திரைப்படம் பற்றி எப்படிப்பட்ட விமர்சனம் வைத்தாலும் இப்படிக் கேட்கிறவர்கள் அவர்கள். கலை-இலக்கியத்தின் சமூகத் தாக்கம் குறித்த புரிதல் இல்லாததால் இப்படிக் கேட்கிறார்களேயன்றி அவர்களை வன்முறை ஆதரவாளர்கள் என்று குறைசொல்வதற்கில்லை.

ஆனால், இப்படிப்பட்ட எண்ணங்கள் வளர்க்கப்படுவதன் விளைவை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது வேறொரு கவலை ஏற்படுகிறது.

காவல்துறை அத்துமீறல்கள் நியாயமானவைதான் என்ற கருத்து வலுவாக ஊன்றப்படுவதால், அவர்கள் செய்யக்கூடிய எந்தவொரு தவறான செயலையும் தட்டிக்கேட்க வேண்டும் என்ற மனநிலை மேலோங்குவதில்லை. மக்களுக்காகப் போராடுகிற கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மக்கள் போராளிகள் போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுகிறபோது, போலிஸ் நடவடிக்கையில் நியாயமில்லாமல் இருக்காது, என்ற நினைப்பு வருகிறது.

தேர்தல் காலத்தில் வேட்புமனு தாக்கல்கள் முடிவடைந்த பிறகு சில தன்னார்வ அறிவாளி அமைப்புகள் வேட்பாளர்கள் இத்தனை சதவீதம் பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அறிக்கை வெளியிட்டு செய்திகளில் இடம்பெறுவார்கள். கம்யூனிஸ்ட்டுகளும் வேறு சில அரசியல் இயக்கத்தினரும், தொழிற்சங்கத் தலைவர்களும் பொதுக்கோரிக்கைகளுக்கான மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்தான் பதிவு செய்யப்படுகின்றன. அவர்கள் தேர்தலில் பங்கேற்க மனு தாக்கல் செய்கிறபோது, இந்தப் பதிவுகளின்படி கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களேயாவர். இதை மேற்படி அறிவாளி அமைப்புகள் ஆராய்வதேயில்லை. அப்படி ஆராயத் தேவையில்லை என்ற மனப்போக்கை வளர்ப்பதில் என்கவுன்டர் நடவடிக்கைகளும் திரைப்படங்களும் பங்காற்றுகின்றன.

இந்த மனப்போக்கு பரவலாவதால், மனித உரிமைகளுக்கான எந்தவொரு போராட்டம் என்றாலும் சில அரசியல் இயக்கங்களும் சில மனித உரிமை அமைப்புகளுமே அந்தப் போராட்டங்களுக்கென வாக்கப்பட்டவையாக எப்போதும் களம் காண்கின்றனவேயன்றி, அந்த இயக்கங்கள் சார்ந்தவர்கள் அவற்றில் பங்கேற்கிறார்களேயன்றி, வெகுமக்கள் கலந்துகொள்வதில்லை. இது ஜனநாயக வளர்ச்சிக்குப் பெரும் கேடல்லவா?

ஏதாவது ஒரு காவல்நிலைய சாவு பற்றிய செய்தி வருகிறபோது, இறந்தவரின் குடும்பத்தினர், இடதுசாரி - ஜனநாயக சக்திகள், சில அமைப்புகள் தவிர்த்துப் பெரும் மக்கள்திரள் அந்தச் சாவுச் செய்தியைக் கண்டுகொள்வதில்லை. அவன் ஏதாவது தப்பு செய்திருப்பான். அவமானம் தாங்காமல் கயிற்றில் தொங்கியிருப்பான்... என்று இலகுவாக ஒதுக்கிவிடுகிறார்கள்.

ஒரு காவல்துறையின் அத்துமீறல்கள் பற்றிக் கேள்வி கேட்கத் துணியாத இந்த ஒதுக்கல்போக்கு, வேறு எந்தத் துறையின் வரம்பு மீறல்களையும் தட்டிக்கேட்காத  சமூக மனநிலையாக மாறுகிறது. அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட முன்வராத செயலின்மையைகக் கெட்டிப்படுகிறது.

ஒருவேளை இதையெல்லாம் எதிர்த்துக்கிளம்ப மக்கள் தயாராவார்களானால் இருக்கவே இருக்கிறது சாதி! மதம்! எல்லாம் கடவுள் செயல் என்ற போதனை! சாதித்தூய்மையைக் காப்பதற்கு அவதாரம் எடுத்தவர்களாக சில அமைப்புகள் பேரவைக்கூட்டங்கள் நடத்திக்கொண்டிருக்க, “ஆம்பளை கெட்டா வாழ்க்கை போச்சு, பொம்பளை கெட்டா வம்சமே போச்சு,” என்று பஞ்ச் டயலாக் பேசும் திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றனவே!

இப்படியெல்லாம் மக்கள் திசைதிருப்பப்பட வேண்டும், மக்களின் கேள்வி கேட்கும் திறன் மழுங்கடிக்கப்பட வேண்டும், மக்களின் தட்டிக்கேட்கும் வல்லமை பொசுக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய உள்நாட்டு - உலகமய சுரண்டல் தாதாக்களின் விருப்பம் அல்லது ஆக்ஞை. அந்த விருப்பம் அல்லது ஆக்ஞையை அரசு எந்திரங்களோடு சேர்ந்து நிறைவேற்றுகிற கரசேவையை போலிஸ் நாயகத் திரைப்படங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறபோது அதை வெறும் பொழுதுபோக்கென்று விட்டுவிடலாமா?

('தீக்கதிர்' 30-6-2013 இதழுடனான ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளிவந்துள்ள எனது கட்டுரை)

Monday, 24 June 2013

சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்

“பிற்படுத்தப்பட்ட நிலையைத் தீர்மானிப்பது பிறப்புதான், மதமாற்றம் அல்ல. ஆகவே மதம் மாறுகிற ஒருவர் தன் சமூக நிலையை இழந்துவிடுகிறார். முந்தைய மதத்தில் தனக்குக் கிடைத்த சாதி சார்ந்த சட்டப்பூர்வ ஏற்பாடுகளைப் புதிய மதத்தில் அவர் கோர முடியாது...”

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. சுப்பிரமணியன் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார். நீதிமன்றம் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கிற தீர்ப்பு இது.

பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பட்டியல் சாதிகளையும் சேர்ந்தவர்கள் பிற மதங்களுக்கு மாறுகிறபோது, கல்வியிலும் அரசுப் பணியிலும் தங்களுக்குரிய இட ஒதுக்கீடு உரிமையைக் கோர முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

சாதி நிலை என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது, மதமாற்றத்தால் அல்ல என்று சொல்லியிருக்கிறார் நீதிபதி. அப்படியானால் ஒருவர் எந்த மதத்திற்கு மாறினாலும், மதம் என்கிற இழவே வேண்டாம் என்று உதறினாலும், பிறப்பின் அடிப்படையிலான அவரது சாதி அடையாளம் மாறாது என்பதுதானே அர்த்தம்? அப்படியானால் அதற்குரிய சட்ட உரிமைகள் தொடரும் என்றுதானே அர்த்தம்?

“இந்து மதத்திலிருந்து, சாதியை அங்கீகரிக்காத கிறிஸ்துவத்திற்கோ வேறு மதத்திற்கோ ஒருவர் மாறுகிறபோது அவரது சாதி நிலை இழக்கப்படுவதாகவே பொருள்” என்று முன்பு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதாம். சென்னை உயர்நீதிமன்றமே கூட 1952ல் “மதம் மாறுகிறவர் எந்த சாதியையும் சேராதவராகிறார்” என்று தீர்ப்பளித்திருக்கிறதாம். நீதிபதி இந்த இரண்டு தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அப்படியானால் இந்து மதம்தான் கேவலமான முறையில் சாதிகளையும் சாதிப்பாகுபாடுகளையும் பராமரிக்கிறது என்று நீதிமன்றம் அறிவிக்குமா? அந்த மதத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கத் துணியுமா? சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் கூண்டோடு மதம் மாறிவிட வேண்டியதுதான் என்பதையும் நீதிமன்றம் அங்கீரிக்குமா?

இங்கே மதம் மாறுவது எளிது, ஆனால் சாதி மாறுவது இயலாது. அதாவது, கும்பிடுகிற கடவுளைக் கூட மாற்றிக்கொள்ளலாம், குறுகிய சாதி அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அதாவது, எந்தக் கடவுளாலும் சாதிச் சாக்கடையை சுத்தம் செய்ய இயலாது. காரணம், இந்திய சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படையே சாதிய வலையமைப்புதான்.

சாதியை ஒழிக்க மிக விரிவான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் தேவை. மிக மிக விரிவான சமூக சீர்திருத்தப் பிரச்சாரங்கள் தேவை. மிக மிக மிக அடிப்படையான வர்க்கப்போராட்டத்தோடு இணைந்த இயக்கங்கள் தேவை. ஆம், வர்க்க-வர்ண போராட்டங்கள் பிரித்துப் பார்க்க முடியாதவை. அந்தப் போராட்டங்கள் முழுமையாக வெற்றிபெறும் வரையில் இட ஒதுக்கீடு (தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் கூறுவது போல் உரிமைப் பங்கீடு) போன்ற பாதுகாப்புகள் தொடரவே வேண்டும்.

சாதியை ஒழிக்க இன்னொரு தேவை காதல் உறவுகள். வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்துவ நாடார் குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்துகொண்டவர். சென்ற ஆண்டில் தமிழக அரசின் 4ம் நிலை பணியிடங்களுக்கான தேர்வு எழுதிய அவர் தன் சாதி அடிப்படையிலான உரிமையைக் கோரியபோது, மதம் மாறிவிட்டதால் அந்தச் சலுகை இல்லை என்று கலந்தாய்வின்போது சொல்லப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில்தான் நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார்!

சாதி ஒழிப்பிற்கும் காதல் செழிப்பிற்கும் நீண்ட நெடிய போராட்டப் பயணம் தேவை என்பதே மறுபடியும் உறுதியாகிறது.



Friday, 7 June 2013

‘பெத்தவன்’ - இது வெறும் சிறுகதையல்ல

புத்தக அறிமுகம்

உண்மையோடு கற்பனை கலந்துறவாடுகிற ஒரு இலக்கியப் படைப்பு நேரடி உண்மையை விடவும் பல மடங்கு வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்த வல்லதாக இருக்கும். எந்த இடம் வரையில் உண்மை, எங்கேயிருந்து கற்பனை என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இமையம் படைத்துள்ள பெத்தவன் சிறுகதை அப்படியொரு வாழ்க்கை உண்மையை அழுத்தமாக உணரவைக்கிறது. மிகையான பெருமிதங்களின் அடியில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மை நிலைமைளை உணர்வது என்பது அந்த நிலைமைகளை மாற்றுவதற்கான முதற்படி. தமிழக கிராமங்களின் தெருக்களில் புரையோடிப்போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை உணரச் செய்து அந்த முதற்படியில் கைப்பிடித்து ஏற்றிவிடுகிற பணியைத் தமது அனைத்துப் படைப்புகளிலும் செய்து வந்திருப்பவர் இமையம்.

தமிழகத்தில் விடுதலைப்போராட்ட காலத்தில் பிராமணர் அல்லாத சமூகங்களை அரசியலாகத் திரட்டுகிற முயற்சிபில் திராவிட இயக்கம் உருவானது. தனி மனிதர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் சாதியை ஒட்டவைத்துக்கொள்வதை அருவருப்பானதாக உணரச்செய்து, பெண்ணுரிமைக் கருத்துகளுக்கு ஒரு களம் அமைத்துக்கொடுதது, பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு ஒரு சமூக மரியாதை கிடைக்கச்செய்ததோடு சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டியதிலும் திராவிட இயக்கத்திற்கு உள்ள வரலாற்றுப் பங்களிப்பு மறுக்கவியலாதது.

இன்றைக்குத் தமிழகத்தில் வேறு வகையான அணிதிரட்டல் வேலை நடந்துகொண்டிருக்கிறது. தலித் அல்லாத சமூகங்கள் அரசியலாகத் திரட்டப்படுவதன் அப்பட்டமான நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அலலது அதிகார பேரம் நடத்துவது. அனைத்து சமுதாய தலைவர்கள் பேரவை என்பது போன்ற பெயர்களில் கூட்டப்படுகிற கூட்டங்களில், அந்த மேட்டுத்தெரு சமூகங்களின் மக்கள் மனங்களில் ஏற்கெனவே குடியேற்றப்பட்டிருக்கிற தலித் விரோத மனநிலைகள் மேலும் மேலும் வளர்க்கப்படுகின்றன. நெடும் போராட்டங்களின் பலனாக சில தலித் குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டிருக்கிற சிறிதளவு முன்னேற்றங்களையும் சகித்துக்கொள்ள முடியாத வன்மங்கள் கூர்தீட்டப்படுகின்றன. இளம் தலித் ஆண்களுக்கும் பிற சாதிகளின் இளம் பெண்களுக்கும் ஏற்படுகிற இயற்கையான காதல் உணர்வுக்கு எதிரான ஆத்திரத் தீயில் எண்ணெய் வார்க்கப்படுகிறது. அதன் மூலம் அந்த சமூகங்களின் பெண்களுக்குத் தங்களது வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்ட பரம்பரை என்பது போன்ற  பெருமைக்கட்டுமானங்களால் பகுத்தறிவு இழிவுசெய்யப்படுகிறது. அந்த போலியான கட்டுமானங்களைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அது தலித் குடியிருப்புகளின் மீதான வன்முறைத் தாக்குதல்களாக, காதலர்களைக் காவு கொடுக்கும் கவுரவக் கொலைகளாக வடிவெடுக்கிறது.

இடதுசாரிகள் வலுவான இயக்கமாக வேரூன்றியிருக்கிற இடங்கள் தவிர்த்து நாடு முழுவதுமே இந்த தலித் எதிர்ப்பு அரசியல் அணிதிரட்டல் நடக்கிறது. இந்திய சமுதாயத்தின் தனித்துவ அநாகரிகமான சாதியப் பாகுபாடுகளை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அப்படியே கட்டிக்காக்கிற இந்த அணிதிரட்டலின் பின்னால் திருட்டுச்சிரிப்பு சிரிக்கிறான் மனு. தன்னை மேலிருந்து ஒரு சாதி மிதிக்கிறது என்ற கோபத்தை விடவும், தனது காலுக்குக் கீழே மிதிபடுவதற்கு ஒரு சாதி இருக்கிறது என்பதில் ஒரு மனநிறைவை ஏற்படுத்திய சூட்சுமத்தின் சிரிப்பு அது. போராடும் தொழிலாளிக்கு சாதியில்லை, மதமில்லை என்ற வர்க்க உணர்வு முழக்கம் வெறும் முழக்கமாக மட்டுமே தொடர்ந்திருக்க, ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தொழிலாளிக்கு சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது என்ற பாறை போன்ற உண்மை இங்கு வர்க்கப்போராட்ட அணிதிரட்டலுக்கு இன்னும் எவ்வளவு தொலைவு சென்றாக வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அந்த நெடுந்தொலைவைக் கடப்பதில் சாதிப்பற்றிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும். அதில் ஒரு முக்கியமான கட்டம்தான் சுயசாதிப் பெருமையைக் கட்டுடைப்பது. சுயசாதிப் பெருமைக்குள் மறைந்திருக்கும் அழுகல்களைக் காட்சிப்படுத்துவது. சமூகத்தளத்தில் நடந்தாக வேண்டிய இந்தக் கட்டுடைத்தலுக்கும் காட்சிப்படுத்தலுக்கும் இலக்கியத்தளத்தில் அடிக்கல் நாட்டுகிற பணியைச் செய்கிறது பெத்தவன் சிறுகதை. எல்லோரும் படித்தாக வேண்டிய ஒரு கதைப்படைப்பு, எல்லோரும் பார்த்தாக வேண்டிய ஒரு திரைப்படம் என்று நான் கருதுவேனானால் அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்வதில்லை என்ற ஒரு வழிமுறையை இலக்கிய/திரைப்பட விமர்சனங்கள் எழுதத்தொடங்கிய நாளிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன். அந்த மரபுப்படி 'பெத்தவன்' கதை என்ன என்பதையும் இங்கு குறிப்பிடப் போவதில்லை.

ஒரு "கீழ்ச்சாதிப் பயல்|" பெரியசாமி மீது காதல் கொள்ளும் ஒரு ஆதிக்கசாதிப் பெண் பாக்கியம். அவளுடைய உயிரை அவளது பெற்றோரே அழித்துவிட வேண்டும் என்று ஊர்கூடி முடிவு செய்கிறது. ... "எங்களுக்காவா செய்யுறம்? ஆயிரம் தலக்கட்டுக்காரனும் வேட்டி கட்டிக்கிட்டுப் போகணுமில்ல, அதுக்காகத்தான்,| என்ற அந்த முடிவுக்கான நியாயம் ஊட்டப்படுகிறது. ஆயிரம் தலக்கட்டுக்காரன், வேட்டி கட்டிக்கிட்டுப் போகணும்ல என்ற வார்த்தைகள் சாதிப்பெருமையின் உடன்பிறப்புதான் ஆணாதிக்கம் என்பதன் வெளிப்பாடுகளே.

சாதிய ஆணாதிக்கத்தின் வெற்றி, பெண்களின் மூலமாகவே இதையெல்லாம் நிறைவேற்ற வைத்ததில் இருக்கிறது. பூச்சி மருந்த வாயில் ஊத்தி ஒரு அறயில போட்டுப் பூட்டிப்புடனும். எம்மாம் கத்தினாலும் கதவயும் தொறக்கக்கூடாது. ஒரு வா தண்ணீயும் தரக்கூடாது. செத்த நேரத்துக்கெல்லாம் கத முடிஞ்சிடும், என்று எப்படி பாக்கியத்தைக் கொல்வது என்பதற்கு வழிசொல்கிறவள், இடுப்பில் குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெண்!

பொதுவாகத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனையும் சேர்த்துக்கொல்லவே பல ஊர்ப்பஞ்சாயத்துகளில் முடிவு செய்யப்படும். இங்கே பெரியசாமியை ஏன் விட்டுவைக்கிறார்கள் என்றால் அவன் காவல்துறையைச் சேர்ந்தவன்! அதிகாரம் எவ்வளவு முக்கியமானது என்பது நுட்பமாகச் சொல்லப்படுகிறது.

இது என் குடிதெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும்... என்று இரவோடு இரவாக மகளைக் கொன்றுவிட ஊருக்கு சத்தியம் செய்துகொடுக்கிறான் பாக்கியத்தைப் பெற்றவனான வண்டிக்காரன்மூட்டு பயினி (பழனி). பெத்தவன், பெத்தவள், பெத்தவனைப் பெத்தவள், உடன்பிறந்தாள் என, ஊராரின் முடிவை நிறைவேற்றியாக வேண்டிய குடும்பத்திற்குள் பாசத்திற்கும் சாதிக்கட்டுப்பாட்டிற்கும் இடையே அந்த இரவில் நடக்கும் மனப்போராட்டத்தை இவ்வளவு உயிரோட்டமாகக் கதையாக்க முடியுமா என்ற வியப்பு ஏற்படுகிறது.    குடும்பத்தில் ஆண் எடுக்கும் முடிவே இறுதியானது என்ற நியதி இவர்களது குடும்பத்தில் வேறு வகையில் செயல்படுகிறது...

காதலை சில தலைவர்கள் நாடகம் என்று கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதன் தாக்கத்தில் சாதியமைப்பாகவும் அரசியல் கட்சியாகவும் சேர்க்கப்பட்டிருக்கிற உள்ளூர்க்கும்பல், காதலை வெறும் ஆணுறுப்பைத் தேடும் பெண்ணுறுப்பின் தினவாக மட்டுமே பார்க்கிறது. பிடிபட்ட பாக்கியத்தின் முன் இருபது முப்பது பையன்கள் வேட்டியை அவிழ்த்துக் காட்டி, இதுக்குத்தான அலையுற? எத்தன வேணும் எடுத்துக்க, என்று கூறுவதில் எவ்வளவு வக்கிரம் தோய்ந்த வன்முறை!

நிகழ்வுகளில் நேரடியாகத் தொடர்பு கொள்ளாத, ஆனால் சமூகத்தைப் படம்பிடித்துக்காட்டுகிற ஒரு ஜோசியக்காரன் வந்துபோகிறான். பாக்கியம் விவகாரம் சிக்கலானதைத் தொடர்ந்து அவளது ஜாதகத்தை பெண்ணாடம் பொன்னேரி ஜோசியக்காரனிடம் கொண்டுசெல்கிறார்கள். அதைப் பார்த்ததுமே அவன் யாரோ சொல்லிக்கொடுத்த மாதிரி இப்படிச் சொல்கிறான்: "ஜாதகப்படி புள்ளெ சோரம்போவும். இந்த ஜாதகத்தால பெரிய கலகம் மூளும்...." பின்னர் அதே ஜோசியக்காரன், பாக்கியத்தின் அம்மா கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டு, "எனக்கு ஆறு புள்ளிவோ. இந்த வாய வித்துத்தான் அதுவுளுக்குச் சோறு போடுறன். புள்ள எங்கிருந்தாலும் உசுரோட இருந்தா போதும்னு வுட்டுட்டுப் போ. கச்சிகட்டாத. மகராசியா இருப்ப போ,|" என்கிறான். ஜோசியம் சொல்வது என்பது உண்மையில் நட்சத்திரங்களின் நடமாட்டத்தைப் பொறுத்ததல்ல, வாழ்க்கை நடப்பைப் பொறுத்ததுதான் என எடுத்துக்காட்டுகிற உரையாடல் அது. அப்படி வாயை விற்றுப் பிழைக்கிறவர்களிலும் சிலர் மாறுபட்டவர்களாக இருக்கக்கூடும்!

கதை முடிவில் ..... உசுரு போறாப்ல கத்திக்கிட்டு... காடு பூரா அது சத்தம்தான் என்று குரைத்துக்கொண்டிருக்கிறது பழனியின் நாய். மனித முயற்சிகள் தோற்றுவிடுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில், அந்த நாயின் பெருஞ்சத்தமாவது சாதியூர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பட்டும்.

இந்த ஒற்றைச் சிறுகதைப் புத்தகத்தை வெளியிட்டிருப்பதன் மூலம் பாரதி புத்தகாலயம் செய்திருப்பது ஒரு சமுதாயத் தொண்டு. முன்னுரை அளித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், "ஒரு கலைஞன் தான் வாழும் சமூகத்துக்கும் காலத்துக்கும் ஆற்றவேண்டிய கடமை குறித்து நாளெல்லாம் நாம் பேசியும் எழுதியும் வருகிறோம். இமையம் பிரச்சனைக்குரிய அதே நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டு, துணிச்சலாகவும் துல்லியமாகவும் தன் காலத்தின் வாழ்க்கையை, அதன் குரூரத்தை நம் மனமெல்லாம் கரையும் விதத்தில் இப்படைப்பை வெளியிட்டுள்ளார். கண்களில் நீர் திரையிடாமல் இக்கதையை வாசித்து முடிக்க முடியாது," என்று கூறுகிறார். கண்களில் திரையிடும் அந்த நீர், சமூகத்தின் சாதித்திரை கிழிக்கும் ஆவேச வெள்ளத்தின் துளி.

பெத்தவன்
இமையம்

வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600 018
தொலைபேசி: 044 24332424,   24332924
மின்னஞ்சல்: வாயஅணைடிடிமளபஅயடை.உடிஅ
பக்கங்கள் 40
விலை ரூ.20

(தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிற 'வெண்மணி' பத்திரிகையின் இம்மாத இதழுக்காக நான் எழுதிய புத்தக அறிமுகக் கட்டுரை இது)

Sunday, 2 June 2013

தமிழர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?

புத்தக அறிமுகம்

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி,” என்று மிகைப்பெருமை உணர்வோடு சொல்லப்படுவதுண்டு. அறிவியல்பூர்வமாகச் சிந்தித்தால் கல்லும் மண்ணும் தோன்றாமல் தமிழர் குடி எங்கே தோன்றியிருக்க முடியும், எப்படி வாழ்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும். தமிழர் இனம் தமிழகத்திலேயே தோன்றிய தொல்குடிதான் என்று சொல்வதற்காக இவ்வாறு மிகைபடக் குறிப்பிடுவதில் குறைகாணலாமா என்று சிலர் கேட்கிறார்கள். இன்று நாம் தமிழ் மண் என்று அடையாளப்படுத்துகிற இடங்களில் வாழ்கிற மக்களின் தொன்மைக்கால மூதாதையர்கள் முன்பு வேறு எங்கிருந்தோ வந்தவர்கள்தான் என்ற புரிதல் அறிவியல்பூர்வமானது. இதை ஒப்புக்கொள்கிறவர்களிடையே அந்தப் பூர்வீக இடம் எது என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஒரு பகுதியினர் தற்போதைய குமரிமுனைக்குத் தெற்கில் நீண்டதொரு நிலப்பகுதி இருந்ததாகக்கூறி அதற்கு லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என்றெல்லாம் பெயர் சூட்டினர். அந்த நிலப்பரப்புகளைக் கடல்கொண்டுவிட்டதாகவும் கூறினர். ஆயினும் அந்தக் கருத்துகளில் இனப்பெருமை உணர்வுகள் இருந்த அளவுக்கு அறிவியல் அணுகுமுறைகள் இருந்ததில்லை.

அதே போல் சிந்துசமவெளி நாகரிகம் பற்றிய பேச்சுகளிலும் அங்கே திராவிடர்களின் தொன்மை அடையாளங்கள் இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்படுவதுண்டு. அதை வைத்து அக்காலத்திய தமிழ் மக்கள்தான் இங்கிருந்து அங்கே சென்று அந்த நாகரிகத்தைக் கட்டினார்கள், பின்னர் எதிரிகளின் தாக்குதலால் அழிந்தார்கள் என்று சொல்வோரும் உண்டு. அந்த முயற்சிகளும் ஊகங்களாக இருந்ததேயன்றி அறிவியல் கண்ணோட்டமாக வெளிப்பட்டதில்லை. பொதுவாகவே தமிழர் கதைகளைப் பதிவு செய்வதில் வரலாற்றுப் பார்வையும் அறிவியல் கண்ணோட்டமும் தவறவிடப்படுகின்றன என்ற விமர்சனங்கள் உண்டு. அந்தக் குறையை நீக்கும் வகையில் பொறியியலாளர் பா. பிரபாகரன் எழுதியுள்ள புத்தகம்தான் ‘குமரிக்காண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்.’

லெமூரியா, குமரிக்கண்டம் ஆகிய கருத்தாக்கங்கள் பழங்காலத் தமிழ் இலக்கிய ஆக்கங்களைச் சார்ந்தே வலியுறுத்தப்படுகின்றன. வரலாற்று ஆதாரங்களோ அறிவியல் தடயங்களோ இல்லாத அந்தக் கருத்தாக்கங்கள் வெறும் கற்பனையே என்பதை அதே இலக்கியங்களின் துணையோடும், பகுத்தறிவு வாதத்தின் வலுவோடும் நிலைநாட்டுகிறார் பிரபாகரன்.
“... தமிழர்கள் தோன்றிய இடம் எது? இந்தக் காலகட்டம் வரையில் நம்மால் விடை சொல்ல முடியவில்லை. மீண்டும் முன்னேறிச்செல்ல முடியாத ஒருவழிப் பாதையில் வந்ததைப் போல் உணர்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இதுவரை நிகழ்ந்த அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம் தமிழர்களின் தாய்நாடு கடலில் மூழ்கியதாக நாம் நம்பியதுதான். கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ஒரு பேரழிவை நமது இலக்கியங்கள் கடல்கொண்டதாக உயர்வு நவிற்சியாகக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு அல்லாமல் தமிழர்களின் தாய்நாடு என்பது கடலுக்குள் மூழ்கவில்லை, மாறாக ஏதோ ஒரு காரணத்துக்காக மக்களால் கைவிடப்பட்ட இடம் என்று வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் ஒரு ஒளிக்கீற்று தென்படுகிறது,” என்கிறார்.

ஏற்கெனவே புத்தியில் அடைத்துவைத்திருக்கிற நம்பிக்கைகளை அகற்றினால் அந்த ஒளிக்கீற்று பெரும் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
அந்த வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிகிறது சுமேரியம். தற்போது இராக், ஈரான் என்று அழைக்கப்படுகிற, பைபிள் காலத்தில் பாபிலோனியா என்றும் அதற்கு முன்பு மெசபடோமியா என்றும் அழைக்கப்பட்ட பகுதிக்கு அதற்கும் முன்பாக இருந்த பெயர் சுமேரியம். உலகில் மனித உழைப்பு சார்ந்த இயக்கத்தில் நடைபெற்ற முதல் புரட்சி விவசாயப் புரட்சி. ஒரு கைப்பிடி விதை நெல்லைத் தூவினால் அது பெருங்குவியலாய் நெல்மணிகளைத் தரும் என்ற இயற்கை உண்மையைக் கண்டுபிடித்ததுதான் விவசாயப் புரட்சி. இனி உணவைத் தேடி காடுகாடாகச் செல்ல வேண்டியதில்லை, இருந்த இடத்திலேயே உணவை விளைவிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், அவ்வாறு இருந்துகொண்ட இடங்கள் ஊர்களாகவும் நகரங்களாகவும் வளர்ச்சியடைந்தன.

புவியில் விவசாயப் புரட்சி முதலில் நடந்த இடம் சுமேரியம். அதற்குக் காரணம் அங்கு பாயும் இரண்டு நதிகள். குறிப்பாகக் குறைவான வேகத்தில் பாயும்  யூபிரிடிஸ் நதி (தமிழ் இலக்கியத்தில் பஃறுளி ஆறு) கொண்டுவந்து கரையில் சேர்ந்த வளமான வண்டல் மண். இந்தப் பின்னணியில் அங்கு விவசாயப் புரட்சி நடந்தது பொ.யு.மு. 8000 ஆண்டு... (வரலாற்றுக்காலத்தை கி.மு., கி.பி. என்று குறிப்பதற்கு பதிலாக இன்று பொது யுகத்துக்கு முன், (பிஃபோர் காமன் எரா) பொது யுகம் (காமன் எரா) என்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதையொட்டி பிரபாகரனும் பொ.யு.மு, என்று குறிப்பிடுகிறார்.)

விவசாயப் புரட்சியின் இன்னொரு விளைவு, மனிதர்கள் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிந்தது, கிளைத்தொழில்கள் வளர்ந்தன. கலைகள் பிறந்தன. எழுத்து உருவானது. இலக்கியம் உருவெடுத்தது. தங்கள் எண்ணங்களையும் எண்ணற்ற தகவல்களையும் அவர்கள் களிமண் ஓடுகளில் எழுத்தாகப் பெருமிதத்துடன் பதித்து வைத்தார்கள். அன்றைய சுமேரிய மக்கள் உருவாக்கிய நகரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி மன்னர்களின் தனித்தனி நாடுகளாக இருந்தன. அந்த நாடுகளுக்குள் போர்களும் நிகழ்ந்தன!

சிறப்பான நாகரிகத்தை அங்கே கட்டியவர்கள் பிறகு எதற்காக அந்த இடத்தைக் கைவிட்டு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிக்கு வந்தார்கள்? அங்கே ஏற்பட்ட பெரும் கடல் கொந்தளிப்பு போன்ற ஒரு இயற்கைச் சீற்றம்தான் காரணம். அவர்கள் எதற்காக இங்கே வர வேண்டும்? நீண்டகாலமாவே சுமேரிய மக்களின் கனவுத் தலமாக இருந்து வந்த இடம் தில்முன். இயற்கை வளங்கள் கொழித்த, யானைத்தந்தங்கள் செழிப்பாகக் கிடைத்த, கதகதப்பும் குளுமையும் எழிலும் மிகுந்த இடம் அது. அங்கே சென்று வருவது என்பது சுமேரிய இலக்கியங்களில் பதிவாகியிருக்கிற சாதனைப் பயணம். அந்த தில்முன்தான் இன்றைய கேரளம் உள்ளிட்ட அன்றைய தமிழகம்!

தங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வளத்தையும் வழங்கக்கூடிய தமிழகத்தில் குடியேறக் கப்பல்களில் புறப்பட்டார்கள். கடல் வழி கப்பலில் வந்ததால் குறைவான பொருட்களையே கொண்டுவர முடிந்தது - இலக்கியச் சான்றுகளான ஓடுகள் உட்பட. இந்தத் தகவல்களுக்கு முன்பாக சுமேரியத்தில் எப்படி படகு செய்தலும் கப்பல் கட்டுதலும் வளர்ந்தன என்பதற்கான இயற்கை வளம் சார்ந்த செய்திகளை நூலாசிரியர் கொடுத்துவிடுவதால் தில்முன் பயணம் கற்பனையானது அல்ல என்ற உறுதி நமக்கு ஏற்படுகிறது.

ஒரு பகுதி மக்கள் தரைவழியாகவும் புறப்பட்டார்கள். அவர்கள் சென்றடைந்த இடம்தான் சிந்துசமவெளி. அங்கே குடியேறிய மக்களின் பண்பாட்டு அடையாளங்களுக்கும் தமிழகத்தில் குடியேறியவர்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பினும் அதைவிட மிகுதியான வேறுபாடுகள் இருப்பது ஏன்? கடல் வழி புறப்பட்டவர்கள் நேரடியாக இலக்கை வந்தடைந்தார்கள். தரைவழி புறப்பட்டவர்கள் இயல்பாகவே ஆங்காங்கே தங்கினார்கள். அப்படித் தங்கியது என்பது ஆண்டுக்கணக்கில், தலைமுறைக் கணக்கில் கூட நடந்திருக்கிறது. எனவே அந்தந்தப் பகுதிகளின் பண்பாட்டுத் தாக்கங்களோடு இறுதியில் இலக்கைச் சென்றடைந்தார்கள். சொல்லப்போனால் ஆரியர்கள் என்பவர்கள் கூட சுமேரியத்திலிருந்து வந்தவர்களே! திராவிடர், ஆரியர் இரு இனத்தாருக்கும் தாய்மடி ஒன்றேதான் என்பது ஒரு துணிச்சலான வாதம்.

இதையெல்லாம் உடலமைப்பு சார்ந்த மானுடவியல், புவியியல், மொழியியல், இலக்கியம், புராணக் கதைகள், வழிபாட்டு முறை ஒற்றுமைகள், கல்வெட்டுகள், கட்டடக் கலை, நடைமுறை எடுத்துக்காட்டுகள் என பல கோணங்களில் முன்வைத்து நிறுவியிருப்பது இந்நூலின் சிறப்பு. எளிய நடையில், ஒரு வரலாற்று நாவலுக்கான விறுவிறுப்போடு சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பு.

சுமேரியாவில் இருந்த ‘எரிது’ நகரம்தான் மூல ‘மதுரை!’ தனித்து இயங்க வல்லது என்ற பொருள்தரும் ‘தமி’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது தமிழ் என்ற சொல்! இத்தகைய வாதங்கள் சுவையும் கனமும் சேர்க்கின்றன.

சில வாதங்களோடு சிலர் முரண்படலாம். ஆனால், அறிவியல்பூர்வமான தர்க்கவியல் பார்வையை எதிர்பார்ப்பவர்கள் அப்படிப்பட்ட உழைப்பின் பலனாய் இந்தப் புத்தகம் பூத்திருப்பதை மறுக்க மாட்டார்கள். துறைமுக அதிகாரியாய்ப் பணியாற்றிய அனுபவம் இந்த எந்திரவியல் பொறியியலாளரின் முயற்சிக்குத் துணைசெய்திருக்கிறது.

இனம் தொடர்பான மிகைப்பெருமை, தாழ்வு மனப்பான்மை இரண்டுமே முன்னேறும் கால்களுக்குத் தளை போடுகிறவைதான். அந்தத் தளைகளில் சிக்காமல் இருக்க இனத்தின் தொன்மை குறித்த உண்மை வரலாறு ஒவ்வொருவருக்கும் தெரிந்தாக வேண்டும். அதை நோக்கி நடைபோடத் துணை செய்யும் சிறிய ஒளிக்கீற்றுதான் இந்தப் புத்தகம்.

‘குமரிக்கண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்’
-பா. பிரபாகரன்
வெளியீடு:
கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம்,
அம்பாள் கட்டடம்,
லாயிட்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை - 600 014
பக்கங்கள்: 176
விலை: ரூ.125

(‘தீக்கதிர்’ ஜூன் 2, 2013 இதழின் ‘புத்தக மேசை’ பகுதியில் வெளிவந்துள்ள, பா. பிரபாகரன் புத்தகத்திற்கு நான் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரை.)