Sunday, 26 January 2025

பாரெங்கும் பரவிய சொற்கள்!



ரு கிராமம். கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைத் தோழர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடக் கூடியிருக்கிறார்கள். ஒரு மூத்த தோழர் கம்பத்தில் செங்கொடி உயர்த்துகிறார். ஒரு தோழர் “செங்கொடிக்கு” என்று குரலெழுப்புகிறார். உடனே மற்ற தோழர்கள் “ஜே” என்று வாழ்த்தொலிக்கிறார்கள். மென்மையாக வீசுகிற காற்றோடு உணர்ச்சிநிறை முழக்கமும் சேர்ந்து கொடியை அலை போல அசைந்தாடிப் பறக்க வைக்கிறது.

ஒரு தொழிற்சாலை. குறிப்பிட்ட துறையின் தொழிலாளர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவாக மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் கூடியிருக்கிறார்கள். விண்ணதிரும் முழக்கம் எழுப்பப்படுகிறது. “ஜிந்தாபாத் ஜிந்தாபாத், ஒர்க்கர்ஸ் யூனிட்டி ஜிந்தாபாத்!” எல்லோரும் கரத்தையும் குரலையும் உயர்த்தி ஒலிக்கிறார்கள். பெய்யப் போகிறேன் என்று திரண்டிருக்கும் மேகம் ஆர்ப்பாட்டம் முடியும் வரை காத்திருக்க முடிவு செய்கிறது.

அந்த “ஜே” தமிழ்ச்சொல் அல்ல. “ஜிந்தாபாத்”, “ஒர்க்கர்ஸ் யூனிட்டி” இவையும் தமிழ்ச்சொற்கள் அல்ல. ஆயினும் அவர்கள் அவற்றைத் தங்களது சொற்களாகவே உள்வாங்கி முழங்குகிறார்கள். தமிழகத்தில், அந்தக் கிராமத்தில் மட்டுமா, மற்ற மாநிலங்களிலும் மற்ற ஊர்களிலும் அந்தந்த மொழியில் செங்கொடிக்கான சொல்லை உச்சரிக்கிறபோது “ஜே” இணைகிறது. வேறு பல நாடுகளிலும் தொழிலாளர் திரட்சியில் “ஒர்க்கர்ஸ் யூனிட்டி” முன்வைக்கப்படு கிறது, “ஜிந்தாபாத்” பின்தொடர்கிறது.

ஆம், இந்தச் சொற்கள் தாம் பிறந்த மொழிகளோடு நின்றுவிடாமல் எல்லோ ருக்குமானவையாகப் பரவியிருக்கின்றன. இதைப் பற்றிய சிந்தனையில் திளைத்தி ருந்தபோது, “ஹலோ, என்ன பலத்த யோசனையில இருக்கீங்க போல,” என்று கேட்டவாறு அருகில் அமர்ந்தார் நண்பர். அவரிடம் சிந்தனையைப் பகிர்ந்தேன். “இன்ட்ரெஸ்ட் டிங்,” என்றார். இத்தகைய எல்லை கடந்த சொற்கள் பற்றியே சிறிது நேரம் உரையாடி னோம்.

ஹலோ ஹலோ சுகமா?

“நான் இன்ட்ரெஸ்ட்டிங்னு சொன்னேனே, அது கூட இங்கிலீஷ்தானே?,” என்று நண்பர் வினவினார். “அது உங்க ஆங்கில அறிவிலிருந்தும் பழக்கத்திலிருந்தும் வருது. ஆனா, முதல்ல ஹலோன்னு சொன்னீங்களே, அதை ஆங்கிலம் தெரியாதவங்களும் சொல்றாங்க. அது ஆங்கிலம்னு தெரியாமலே சொல்றாங்க,” என்று நான் விடையிறுத்தேன்.

“சரிதான். புதுசா ஒரு கட்டுரைக்கு லேபர் நடந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கிறேன். சீக்கிரம் டெலிவரி பண்ணிடுங்க,” என்று கூறிவிட்டு விடை பெற்றார். அவர் போனால் என்ன, நம்மிடம்தான் உரையாடுவதற்கென்றே சேட்ஜிபிடி ஏஐ இருக்கிறதே என்று கணினியில் அதனைத் திறந்துவைத்துக்கொண்டு, இது தொடர்பாக அதற்குத் தெரிந்த தகவல்களை நான் கேட்டறிய, எனக்குத் தெரிந்ததை அதுவும் கேட்டுத் தெரிந்துகொண்டது.

‘ஹலோ’ (சரியாகச் சொல்வதானால் ‘ஹெலோ’) என்ற சொல் உருவாகி இரண்டு நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ஆங்கிலத்தில் ஏற்கெனவே 16ம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் இருந்து வந்த ஹல்லோ, ஹால்லோ, ஹோல்லோ என்ற சொற்களிலி ருந்து இது உருவானதாகத் தெரிகிறது. முற்கால ஜெர்மன் மொழியின் ஹாலா, ஹோலா என்ற சொற்களிலிருந்து இவை ஆங்கிலத்திற்கு வந்தனவாம். ஒருவரது கவனத்தைக் கவர, வியப்பைத் தெரிவிக்க, யாரையேனும் கூப்பிட அந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டு நடை முறைக்கு வந்ததைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் மக்களிடையே ‘ஹலோ’ பற்றிக்கொண்டது. அந்தக் கருவியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் முதலில் அஹோய் என்ற சொல்லைப் பயன்படுத்தினாராம். தாமஸ் ஆல்வா எடிசன் பின்னர் ஹலோ என்று பயன்படுத்தத் தொடங்க அதுவே தொலைபேசிக்கான கையேட்டில் இடம்பெற்றதாம். தற்போது, தொலைபேசி அழைப்புகளுக்கு அப்பால், நேரில் சந்திக்கிறபோதும் ஒருவரையொரு வர் விளிப்பதற்கும், வியப்புடன் விழிகளை விரிப்பதற்குமான சொல்லாகிவிட்டது.

நட்பு வட்டாரத்துக் குடும்ப இணையர் இருவர் எப்போது பேசிக்கொண்டாலும் ஹலோ சொல்லிதான் தொடங்குவார்கள். “‘ஹலோ, என்னப்பா இட்லி கொஞ்சம் கெட்டியா இருக்கு?” “ஹலோ, இருக்கிற தைச் சாப்பிட்டுப் போப்பா, சாம்பாரை நிறையா ஊத்திக்கோ. ஓகேயா?”… இப்படியாக.

ஓகே கண்மணி

அந்த “ஓகே” இருக்கிறதே, அதுவும் கண்டங்கள் கடந்த ஒரு சொல்தான். அமெரிக்காவின் பாஸ்டன் வட்டாரத்தில் 1830ம் ஆண்டுகளில் இந்தச் சொல் அறிமுகமானது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறுவதற்கான “ஆல் கரெக்ட்” என்ற ஆங்கிலச் சொற்களை யாரோ “ஓல் கொரெக்ட்” (Oll Korrect) என்று எழுத்துப் பிழையோடு எழுதப்போக, அதுதான் சரி என்று நினைத்துப் பலரும் அப்படியே எழுத, நாட்கள் செல்லச் செல்ல, சுருக்கப்பட்ட வடிவமாக அந்தச் சொற்களின் முதல் எழுத்துகளை எடுத்துக் கொண்டு “ஓகே” வந்ததாம். ஆட்சியதிகாரம், வணிகத் தொடர்புகள், அலுவலகச் செயல்பாடுகள் என்று அனைத்து நாடுகளி லும், ஒரு செயலை ஏற்பதற்கான, உறுதிப் படுத்துவதற்கான சொல்லாக “ஓகே” ஊன்றிக்கொண்டுவிட்டது.

வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போதும், நாமே வெளியூர்ப் பயணம் புறப்படுகிறபோதும் “பை” என்று கூறி கையசைப்பது வழக்கமாகிவிட்டது. அந்தக் காலத்தில் இப்படியான நேரங்களில் “காட் பி வித் யூ” (கடவுள் உன்னோடு இருப்பாராக) என்று கூறி விடைபெறுகிற வழக்கம் இருந்திருக்கிறது. கடவுள் தன்னோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதவர்களும் இருந்திருப்பார்கள் அல்லவா? பிற்காலத்தில் அந்த நான்கு சொற்கள் கொண்ட பதம், நல்லாயிரு என்று வாழ்த்தும் வகையில் “குட்பை” என்று சுருங்கியதாம். தொடர்ச்சியாக ஓடியும் நடந்தும் குனிந்தும் நிமிர்ந்தும் பயிற்சியால் கச்சிதமாக்கிக்கொள்ளும் உடல் போல குட்பை மேலும் மெலிந்து “பை” என்றாகிவிட்டது.

ஹலோ போலவே, ஒருவரையொருவர் அழைக்கவும், சந்திப்பின்போது ஒருவர்க்கொருவர் வாழ்த்தவும் கூறப்படும் சொல் “ஹை”. மொழி வேலிகளைத் தாண்டிய இந்தச் சொல், 11 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான மைய ஆங்கிலக் காலக்கட்டத்தில் புழக்கத்தில் இருந்த “ஹேய்”, “ஹய்ய்” என்ற சொற்களிலிருந்து புறப்பட்டது.

ம்மா, ப்பா

அம்மா, அப்பா என்ற சொற்கள் பல மொழிகளிலும் அப்படியே அல்லது சிறு ஒலி மாறுதல்களுடன் புழங்குகின்றன. மா, பா, மம்மா, பப்பா என்று. பேசப் பழகும் குட்டிக் குழந்தைகளின் தொடக்க உச்சரிப்புகள் பெரும்பாலும் ம்மா, ப்பா என்றுதான் வரும். அதிலிருந்தே இந்தச் சொற்கள் உரு வாகின.

காலையில் வாழ்த்தும் ‘குட் மார்னிங்’, இரவில் இனிய உறக்கத்திற்காக ‘குட் நைட்’, நன்றி தெரிவிப்பதற்கான “தேங்க் யூ”, வருத்தம் தெரிவிப்பதற்கான “சாரி”. தயவு செய்து என எதையேனும் கோருவதற்கு ‘ப்ளீஸ்’ ஆகிய சொற்களும் அப்படித்தான், மொழி அடையாளத்தைத் தாண்டிப் பயன் படுத்தப்படுகின்றன.

அரபு மொழியிலிருந்து வந்த வசூல், வாரிசு, பாரசீக மொழியிலிருந்து சரிகை, சால்வை என பல சொற்கள் தமிழோடு கலந்து விட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்திலிருந்து வந்த விஷயம், அர்த்தம், அனுஷ்டிப்பு, உபதேசம், கீர்த்தனை, சம்பிரதாயம், சாஸ்திரம், ஜலதோஷம், சினேகிதம் ஆகி யன உள்ளிட்ட ஏராளமான சொற்கள் தமிழ் வடிவமாக்கப்பட்டுப் புழங்குகின்றன.

இவற்றுக்கு மாற்றாகத் தமிழ்ச் சொற்களையே பேசுவதிலும் எழுதுவதிலுமான சுகத்தை அனுபவிக்கிற முயற்சிகளும் நடை பெறுகின்றன. மனம் – மனசு – மனஸ், வார்த்தை – வார்த்தா, அதிகம் – அதிக், ஆலயம் – ஆலயா, முக்கியம் – முக்கியா, காவியம் – காவ்யா, இராத்திரி – ராத், மெது – ம்ருது, தலம் – ஸ்தலா என தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்குச் சென்ற சொற்களும் நிறைய இருக்கின்றன. இதே போல் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தமிழ்ச்சொற்கள் சென்றிருக்கின்றன.

நம்ம ஊரின் “அய்யோ” அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பரவியிருக்கிறது. ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் இந்தச் சொல்லைக் கூறுவதைக் கேட்கலாம். அதே போல தமிழிலிருந்து சென்ற அரிசி ஆங்கிலத்தில் ‘ரைஸ்’ என்றும், கட்டுமரம் அங்கே ‘கேட்டமரான்‘ என்றும், மிளகுத் தண்ணீரிலிருந்து ‘முல்லி காட்டாவ்னி’ என்றும், சுருட்டு ‘செரூட்’ என்றும், கயிறு ‘காயர்’ என்றும், வெற்றிலை ‘பேட்டல்’ என்றும் புழக்கத்தில் இருக்கின்றன.

தமிழின் மங்கை, அங்கே, இங்கே, நகரம் ஆகிய சொற்கள் ஆஸ்திரேலியாவின் சில பழங்குடி மக்களால் அதே பொருள்களில் சொல்லப்படுகின்றன. கொரிய மொழியில் நம்முடைய நான், நீ, நாள், புல், ஏறு ஆகிய சொற்கள் இருக்கின்றன என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. முறையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமானால் இப்படிப் பட்ட ஏராளமான சொற்கள் கிடைக்கக் கூடும்.

ஒரு மொழியிலிருந்து வேறு மொழியையும் தழுவிக்கொண்ட சொற்கள் மட்டுமல்லாமல், உலகின் பல மொழிகளைப் பேசும் மக்களும் உச்சரிக்கிற பொதுவான சொற்கள் தொகுக்கப்படுவது முக்கியமான ஆவணமாகப் பதிவாகிவிடும். நெடுங்காலத்திற்கு முன்பே பல சொற் கள் இப்படிக் கண்டம் விட்டுக் கண்டம் தாவியிருக்கின்றன. தொழில், வேலை உள்ளிட்ட உலகளாவிய தொடர்புகள், ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழும் மக்கள், பிற்காலத்திய நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் இன்ன பல காரணங்களால் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.

ஒரு பக்கம், ஆக்கிரமிக்க வரும் மொழித் திணிப்புகளை எதிர்த்து அவரவர் மொழியின் தனித்துவத்தையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கான போராட்ட நியாயங்கள் தொடர்கின்றன. இன்னொரு பக்கம், வலுக்கட்டாயத் திணிப்புகள் இல்லாமல், வாழ்க்கை சார்ந்து இயல்பாக நிகழ்கிற இத்தகைய சொற்பரவல்கள் பூமியெங்கும் மனிதர்கள் யாவரும் ஒன்றே எனக் காட்டு கின்றன.

***************

நன்றி: 'தீக்கதிர்' நாளேடு (ஜனவரி 26) ‘வண்ணக்கதிர்’ இணைப்பு

Monday, 20 January 2025

பெரும்பான்மை மக்களுக்கும் பெருங்கேடு

“நீங்கள் எங்களைப் பாராட்ட வேண்டி யதில்லை; எங்களைத் திட்டியாவது பேசியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது அல்லவா? அது போதும் எங்களுக்கு!” ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் இப்படிச் சொன்னார்.தங்களைப் பற்றி மற்றவர்கள் ஆக் கப்பூர்வமாக இல்லாவிட்டாலும் எதிர் மறையாகவாவது பேசியாக வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்துவது பாசிசவாதிகளுடைய ஒரு உத்தி. அதுவே ஒரு வகையான பிரச் சாரமாகிவிடும், அதன் மூலம் தங்களைப் பற் றியே மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிற கட்டாயம் ஏற்படும் என்கிற “மூளைச்சாயம்” ஏற்றுகிற உத்தி.
அது அவர்களின் உரிமை
திருவாளர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி ஆர்எஸ்எஸ் பரிவாரம் கிளப்பிவிடுகிற தூசு தும்பட்டைகள் இப்படியொரு விளம்பரத்துக்கு உதவுவ தாக இவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். தெருவுக்குள் திருடன் நுழைவதை அறிந்த ஒருவர் எல் லோரையும் எச்சரிப்பதற்காக “திருடன் திருடன்” என்று உரக்கக் குரல் எழுப்புவதை அந்தத் திருடன் தனக்கான விளம்பரம் என்று நினைத்துக்கொண்டால் அப்படி நினைப்பதற்கு அவனுக்கு உள்ள உரிமையை யார் தடுக்க முடியும்?அப்படி எச்சரிக்கிற குரல்தான் பிரதமர் நாற்காலிக்கான ஆர்எஸ்எஸ் வேட்பாளர் நரேந்திர மோடியும், அவரது பாஜக-வும் சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு எதி ரானவர்கள் என்ற உண்மையை ஒலிப்பது. அவர் 13 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் குஜராத் மாநிலத்தில், முஸ்லிம் களும், கிறிஸ்துவர்களும் அவரை மனமு வந்து ஆதரிக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தின் பொய்மைகளை மதவெறிக்கு எதிரானவர்கள் எடுத்துரைத்து வருகிறார்கள்.
மோடி முத லமைச்சர் பதவியில் அமர்ந்த அடுத்த ஆண்டி லேயே அரங்கேற்றப்பட்ட படுகொலைகள் மூலமாக முஸ்லிம் மக்களும், பரவலாக நடத்தப் பட்ட வன்முறைத் தாக்குதல்கள் மூலமாக கிறிஸ்துவ மக்களும் இன்று வரையில் எதிர்க்குரல் எழுப்ப முடியாதவர்களாக அடக்கி வைக்கப்பட்டிருப்பதன் மீது வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்கள். படுகொலைகளைத் தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல அஞ்சுவது, முஸ்லிம் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிற கல்வி உதவி நிதியை மோடி அரசு முடக்கிவைத்திருப்பது என பல்வேறு சான்றுகளையும் முன்வைத்து வருகிறார்கள்.
சிறுபான்மை மக்கள் மிகுதியாக வாழும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் கூறி வருகிறார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள் வேலை தேடிப் போகிறபோது தங்களது உண் மைப் பெயர்களை மறைத்து முன்னா, குட்டு என்பன போன்ற பொதுவான பெயர்களில் பதிவு செய்துகொள்ள வேண்டிய நிலைமை இருப்பதையும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.இப்படியாக, நாட்டின் சிறுபான்மை மக்கள் ஒன்று இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது குடிமக்களுக்கான உரிமையைக் கூட கோராதவர்களாக ஒடுங்கியிருக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை நடைமுறைப்படுத்திக் காட்டிக்கொண்டிருப்பது மோடி அரசு.
ஆகவேதான், இவர்கள் ஒரேயடியாகப் பட்டாசு வெடிக்கிற குஜராத் வளர்ச்சிப் புள்ளி விவரங்களை விட மேம்பட்ட முறையில் செயல்பட்டுள்ள, பாஜக-வே ஆட்சி செய்கிற மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்களை விட்டுவிட்டு, மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக தலைவர்கள் முடிவெடுக்க ஆணையிட்டது ஆர்எஸ்எஸ் பீடம்.
இன்னொரு உண்மை
ஆனால் இன்னொரு உண்மையையும் உரக்கச் சொல்லியாக வேண்டும்: சிறுபான்மை மக்களுக்கு இவர்கள் எந்த அளவுக்கு எதிரிகளோ அதில் கொஞ்சமும் குறையாத அளவுக்குப் பெரும்பான்மை மக்களுக்கும் எதிரிகள்தான்.பொதுவாக பாஜக பற்றி விமர்சிக்கிறபோது, “தேர்தல் ஆதாயத்துக்காக இந்து மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்துகிறார்கள்,” என்று கூறப்படுவதுண்டு. இது பாஜக பற்றிய ஒரு மேலோட்டமான புரிதலே. ஏனென்றால், தேர்தல் ஆதாயத்துக்காக மதஉணர்வுகளைப் பயன்படுத்தத் தயங் காத கட்சி காங்கிரஸ். அதே போல் வேறுபல கட்சிகளும் இடத்திற்கும் நேரத் திற்கும் ஏற்ப மதவாதத்தையும் சாதிய வாதத்தையும் பயன்படுத்திக்கொள்ளக் கூச்சப்படுவதில்லை.
ஆனால் பாஜக அப்படியல்ல. அரசியல் ஆதாயத்துக்காக மதத்தைப் பயன்படுத்துகிற கட்சியல்ல அது... மாறாக மத ஆதிக்கத்துக்காக அரசியலைப் பயன்படுத்துகிற கட்சி அது! உடனடி அரசியல் ஆதாயத்துக்காக மதச்சார் பின்மையையும் பயன்படுத்துகிற கட்சி அது! அந்த வகையில் அது ஒரு மாறுபட்ட கட்சி தான்!அடிப்படையில் ஒரு இந்து நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் லட்சியம். அந்த ஒற்றை மத ஆதிக்கத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு அரசியல் ஏற்பாடுதான் பாஜக.
அவர்களிடம் பேசிப்பாருங்கள், “இந்து என்று நாங்கள் மத அடிப்படையில் சொல்லவில்லை. அமெரிக்க மக்களை எப்படி அமெரிக்கர்கள் என்று சொல்கிறோமோ அதே போல இந்தியக் குடிமக்கள் அனைவருமே இந்துக்கள் என்றஅர்த்தத்தில்தான் சொல்கிறோம்” என்றுவிளக்கம் சொல்வார்கள். இந்தியக் குடிமக்கள்தான் தங்களை இந்தியர்கள் என்றுபெருமிதத்தோடு சொல்லிக்கொள்கிறார்களே, பிறகு ஏன் இந்து என்று அடையாளப் படுத்துகிறீர்கள் என்று கேட்டால், “நீங்க ளெல்லாம் போலி மதச்சார்பின்மைவாதிகள்” என்று சபிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
பசுக்களின் பெயரால்...
பாஜக தனது கொள்கைகளில் ஒன் றாக பசுவதைத் தடைச்சட்டம் பற்றிச் சொல்கிறது. பசுக்கள் இந்துக்களின் புனித வழி பாட்டுச் சின்னம் என்பார்கள். இப்படிச் சொல்வதன் மூலம் மாட்டு இறைச்சித் தொழிலில் ஈடுபடும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான உணர்வுகளை விசிறிவிடுவார்கள். அதே வேளையில், மாட்டுக்கறி உண்கிற தலித் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் உணவுப் பழக்கத்தையும் தாக்குகிறார்கள்.
அவர்களை எல்லாம் இந்துக்கள் என்றுதான் இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். மாட்டுக் கறி உண்பது அதன் ஊட்டச்சத்து அடிப் படையில் மட்டுமல்ல, பொருளாதார அடிப் படையிலும் கட்டுப்படியாகிற ஒன்று. அதை நிறுத்திவிட்டால் அத்தனை பேருக்கும் காய்கறிகளும் மற்ற கறிகளும் வழங்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா பாஜக? இந்து மக்களில் ஒரு பகுதியினரின் நம்பிக்கை யையும் உணவுப் பழக்கத்தையும் மற்றவர்கள் மீது திணிப்பது ஒரு பண்பாட்டு ஆதிக்கமே.பண்பாட்டு ஆதிக்கம் உணவோடு மட்டும் நிற்கவில்லை. பாஜக தனது அடிப் படை லட்சியங்களில் ஒன்றாக ‘பொது சமூகச் சட்டம்’ என்பதை அறிவித்திருக்கிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு நாட் டில் வாழ்கிற எல்லா மக்களுக்கும் ஒரேமாதிரியான, சீரான சமூகச் சட்டம் கொண்டுவருவது நியாயம்தானே என்று நினைக்கத் தோன்றும். இவர்கள் சொல்கிற பொது சமூகச் சட்டம் என்பதே மற்ற சமயங்களின் தனிப்பட்ட அடையாளங்களை மூர்க்கத் தனமாக அழிப்பதற்காகத்தான்.பொது சமூகச் சட்டம் என்பது மதங் களுக்கிடையேயானதாக மட்டும் இருக்க முடியாது. இந்து மதத்திற்கு உள்ளேயே கூட எண்ணற்ற சமூகப் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்திற்கும் தனிப்பட்ட பண்பாட்டு அடையாளங்கள் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, ஆடை அணிவதிலேயே கூட அந்த மாறுபாடுகளைப் பார்க்க முடியும். வேட்டி கட்டுவதிலேயே கூட தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கும் வட மாநில இந்துக்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. இதில் எதைப் பொதுவாக்கச் சொல்வார்கள்? வட மாநில ஆண்கள் தட்டைச்சுற்றாக வேட்டிகட்ட வேண்டும் என்பார்களா? அல்லது தமிழ்நாட்டு ஆண்கள் பஞ்சகச்சம் கட்ட வேண்டும் என்பார்களா?பெண்களின் சேலை மாராப்பில் கூட வேறுபாடு இருக்கிறது. தென் மாநிலங்களில் இடது பக்கமாக மாராப்பு அமைகிறது என்றால் வட மாநிலங்களில் வலது பக்க மாராப்புதான். இதில் எதைப் பொதுவாக்கச் சொல்வார்கள்?நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், ஒரு சமூகம் பெண்களின் முகங்களை மறைத்து புர்கா போட்டுவிடுகிறது என்று மறைமுகமாக முஸ்லிம் மக்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆனால், வட மாநிலங்களில் இந்து சமயத்தைச் சேர்ந்த பெருவாரியான சமூகங்களில் பெண்கள் முகங்களை சேலை முந்தானையால் மறைத்துக்கொண்டு நடமாடுகிற பழக்கம் இருக்கிறதே. பொது சமூகச் சட்டம் என்ற பெயரில் அந்தப் பெண்களின் முக்காட்டை அகற்றச் சொல்லப்போகிறார்களா அல்லது இந்தப் பெண்களின் முகங்களை மறைக்கச் சொல்லப்போகிறார்களா?
சமூகநீதி எதிரிகள்
மூகநீதி எதிரிகள்சாதிப் பாகுபாட்டைப் படிப்படியாக ஒழித்துக்கட்டுகிற நோக்கத்தோடு, நெடிய போராட்டங்களின் பலனாகக் கொண்டு வரப்பட்ட சமூக நீதி ஏற்பாடுதான் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு கொள்கை. பெரும்பான்மை மதமாகிய இந்து சமயத்திலேயே பெரும்பான்மையினராக உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சமுதாய ஏணியில் ஓரிரு படிகளாவது மேலே ஏறுவதற்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.
ஆனால், வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங் கிடுவதற்கான மண்டல ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்த ஆணை யிடப்பட்டபோது, அதை எதிர்த்து நாடு முழுவதும் கலவரத் தீயை மூட்டியவர்கள் இவர்கள். தகுதிக்கே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனக்கூறி, இந்த மக்கள் தகுதி பெறுவதற்கான இட ஒதுக்கீடு வாசல்களை அடைக்கத் துடிக்கிறவர்கள் இவர்கள்.எப்படிப்பட்ட தகுதிகளோடு யார் புறப் பட்டாலும் அவர்களுக்கான வழிகளை அடைப்பவை, மத்திய அரசு மக்கள் மீது திணிக்கிற பொருளாதாரக் கொள்கைகள்.
உள்நாட்டுத் தொழிலாளர் நலன்களையும் உரிமைகளையும் தட்டிப்பறிக்கிற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சிறு- நடுத்தரத் தொழில்களை அழித்து உள் நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் கொழுப்பதற்கான திட்டங்கள், சில்லரை, வர்த்தகர்களைத் தெருவில் நிறுத்தும் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதிகள், உழைப்பாளி மக்களின் வியர்வைத் துளிகளால் திரண்ட ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டப்பணமாக மாற்றுகிற ஏற்பாடுகள் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸ் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வந் திருப்பவர்கள் இவர்கள். தங்களது ஆறாண்டு ஆட்சிக்காலத்திலேயே மக்களுக்குப் பகையான இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் வீர்யத்தோடு செயல்பட்டுக் காட்டியவர்கள் இவர்கள்.
இக்கொள்கைகளால் மிகச் சிலரான பெரும் முதலாளிகள், மேல் நிலை நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே ஆதாயங்களை அனுபவிக் கிறார்கள். நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கை நிலையோ வேலையின்மை, கடன் பளு, தொழில் அழிவு, தொடர முடியாத கல்வி என்று சின்னாபின்னமாகிறது. அந்தப் பெரும்பகுதி மக்களில் பெரும்பாலோர் இந்துக்களே அல்லவா?ஆகவே, உண்மையான மதச்சார்பின்மை என்று போலியாகச் சொல்லிக்கொண்டு வருகிற இந்தக் கூட்டம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரிகளே. அந்தப் பெரும் பான்மை மக்கள் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள விடாமல் தடுப்பதற்காக மதவெறி உணர்வுகளைக் கிளறிவிடவும் தயங்காத இந்த சங் அடியார் கூட்டம் தனிமைப்பட்டாக வேண்டும். அது நடக்க வேண்டுமானால் இவர்களைப் பற்றிய உண்மைகள் அம்பலப்பட்டாக வேண்டும்.

(‘தீக்கதிர்’ 6-11-2013 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)

அந்தக்காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் மாதிரி இந்தக்காலத்தில் இருக்கிறார்களா?


“என்னதான் சொல்லுங்க, அந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் மாதிரி இந்தக் காலத்தில கிடையாது. நீங்க அந்தக் காலத்திலேயும் பார்த்திருக்கீங்க, இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளையும் பார்க்கிறீங்க. நான் சொல்றதை நீங்க ஒப்புக்கிடுவீங்கன்னு நினைக்கிறேன்.”


காலை நடை நண்பர், பூங்காவில் சந்தித்துக்கொண்டபோது ஊரிலிருந்து வந்திருக்கும் தனது உறவினரை அறிமுகப்படுத்தி, என்னைப் பற்றியும் அவரிடம் சொன்னார். “சார்கிட்ட நீ எதைப் பத்தியும் தயங்காமப் பேசலாம்.”

கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது. அந்தப் புதியவர்தான் மேற்படிக் கேள்வியை சட்டென்று கேட்டார். பெருமை பின்வாங்கியது. அவர் இப்படிக் கேட்டது நண்பருக்கே சங்கடத்தை ஏற்படுத்தியதை முகம் காட்டியது. இருந்தாலும், என்னதான் சொல்கிறேன் என்ற எதிர்பார்ப்புடன் அவரும், பூங்கா உரையாடலில் வழக்கமாகச் சேர்ந்துகொள்ளும் அன்பரும் கவனித்தார்கள்.

“இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளைப் பத்திக்கூட என்ன தெரியும்?”

“இல்லை சார், அந்தக் காலத்திலே எவ்வளவு அற்புதமான தலைவர்கள் இருந்தாங்க! அவங்களோட போராட்டங்களைப் பத்தியும் தியாகங்களைப் பத்தியும் தெரியும்.”

“அவங்களைப் பத்தி எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?”

“அவங்க பயோகிராபி புக்ஸ் படிச்சிருக்கேன். சீனியர் ஜெனரேசன் ஆட்கள் சொல்றதைக் கேட்டிருக்கேன்…”

““புத்தகங்கள்ல படிச்சிருக்கீங்கன்னு கேட்கிறது உண்மையாவே மகிழ்ச்சியா இருக்கு. இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளைப் பத்தி என்ன தெரிஞ்சி வச்சிருக்கீங்க?”

“தெரியலையே...”

“தெரியாமலே அவங்களைப் போல இவங்க இல்லைன்னு எப்படிச் சொல்றீங்க?”

“... … …”

“அந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளைப் போல இந்தக் காலத்துல இல்லைன்னு சொல்றது ஒரு ஃபேஷன், ஒரு டாக்டிக்ஸ்… ஒண்ணு, கம்யூனிஸ்ட் இயக்கமே மோசம், அந்நியத் தத்துவம், வன்முறைக்காரங்க அப்படி இப்படின்னு பிரச்சாரம் பண்ணுவாங்க. அதை முழுசா ஏத்துக்க முடியாதவங்ககிட்ட இப்படி அந்தக் காலத்து ஆள்களைப் போல இப்ப இல்லைன்னு சொல்லுவாங்க. எப்படியாவது கம்யூனிஸ்ட்டுகளைப் பத்தி ஒரு தப்பான எண்ணத்தை ஏற்படுத்துறதுதான் அந்தப் பிரச்சாரத்தோட நோக்கம். அதை உங்களை மாதிரி உள்ளவங்களும் நம்புறீங்களே சார்…”

“அப்படியில்லை சார். இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் ஜென்யூனா இருக்காங்களா? அவங்களை மாதிரிப் போராடுறாங்களா? தியாகம் பண்றாங்களா?”

“கம்யூனிஸ்ட்டுகள்னா போராடுவாங்க, தியாகங்களுக்குத் தயாரா இருப்பாங்கன்னு புரிஞ்சு வச்சிருக்கிறது நல்லதுதான். இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் பத்தியும் நாளைக்குப் புத்தகங்கள் வரும். ஜூனியர் ஜெனரேசன் ஆள்கள் சொல்வாங்க. இவங்க என்ன போராட்டங்கள்லாம் நடத்தியிருக்காங்க, மக்களுக்கு என்ன பலனெல்லாம் கிடைச்சிருக்கு, ஆனா இவங்க எதையெல்லாம் இழந்திருக்காங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கிடுவீங்க. இப்பவும் ஓட்டுப் போடுறாங்களோ இல்லையோ, பிரச்சினை ஏதாச்சும் தீராம இருந்தா இந்தக் கம்யூனிஸ்ட்டுக்காரங்க என்னதாம்பா செய்றாங்கன்னு கேட்டுட்டு, உள்ளூர்த் தோழர்கள்ட்டதானே வர்றாங்க?”

சில தோழர்கள் தொடர்பான செய்திகளை, அந்த நேரத்தில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொன்னேன். ஓரிரு தகவல்களை ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பதாகவும் மற்ற நிகழ்வுகளை இப்போதுதான் கேள்விப்படுவதாகவும் தெரிவித்தார்.

“உங்களுக்கு இன்னொரு உண்மையையும் சொல்லட்டுமா? அந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் பத்தியும் அன்னிக்கு இதே மாதிரிதான் பேசுனாங்க. அவங்களுக்கு முந்தியிருந்த கம்யூனிஸ்ட்டுகள் மாதிரி அவங்க இல்லைன்னு சொன்னாங்க. அந்த முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்டுகளைப் பத்தியுமே கூட, உலக அளவில் புகழ்பெற்ற மத்த நாட்டுக்காரங்க மாதிரி இல்லைன்னு பேசுனாங்க. கம்யூனிஸ்ட்டுகள் எல்லாக் காலத்திலேயே இதையெல்லாம் கேட்டுக்கிட்டு மக்களுக்காக உழைச்சிக்கிட்டேதான் இருக்காங்க.”

“... … … ”

“சார் சொல்றதைக் கவனிக்கலையா? மொபைலை நோண்டிக்கிட்டிருக்கியே?" உறவினரிடம் நண்பர் இப்போது கேட்டார்.

“கவனிச்சுக்கிட்டுதான் இருந்தேன். சார், உங்க கான்டாக்ட் நம்பர் சொல்லுங்க… போட்டு வச்சிக்கிடுறேன்.”

மறுபடியும் பெருமை முன்னுக்கு வந்து சேர்ந்துகொண்டது.


Friday, 10 January 2025

அவன் பொண்டாட்டி முகத்தையே, அவள் புருசன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?




“ஏம்பா, நான் என்ன வீட்டுல பொண்டாட்டி மொகத்தையேவா உத்துப் பார்த்துக்கிட்டிருப்பேன்? புள்ளைகளோட கொஞ்சி விளையாட மாட்டேனா? எல்லாருமா வெளிய எங்கேயாச்சும் போயிட்டு வர மாட்டோமா? ஃபிரெண்ட்ஸ் கூட எதையாச்சும் டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்க மாட்டேனா?”


“அதானே, நான் என்ன வீட்டுல புருசன் மொகத்தையேவா உத்துப் பார்த்துக்கிட்டிருப்பேன்? பசங்களுக்குக் கதை சொல்லி, அவங்க சொல்ற கதையெல்லாம் கேட்க மாட்டேனா? ஏதாச்சும் புக் படிக்க மாட்டேனா? நானும் எழுதலாம்னு உட்கார மாட்டேனா? மீட்டிங் எதுனா போயி புதுசா தெரிஞ்சுக்கிட மாட்டேனா?”

“பொண்டாட்டி மொகத்தைப் பார்க்கக்கூடாது, புள்ளைகளோட கொஞ்சி விளையாடக்கூடாது, எல்லாருமா வெளிய எங்கேயும் போகக்கூடாது, ஃபிரெண்ட்ஸ் கூட எதையும் டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்ககூடாதுன்னுதானே இப்படிச் சொல்ற?”

“புருசன் மொகத்தைப் பார்க்கூடாது, பசங்களுக்குக் கதை சொல்லி, அவங்க சொல்ற கதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கக் கூடாது, எந்த புக்கும் படிக்கக் கூடாது, நானும் எழுத உட்கார்ந்துடக் கூடாது, மீட்டிங் எதுனா போயி புதுசா தெரிஞ்சிக்கிடக் கூடாதுன்னுதானே இப்படிச் சொல்ற?”

ஊழியர்கள் ஞாயிற்றுக் கிழமை உட்பட வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிற எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் அதைச் சொன்னதோடு போயிருந்தால் அதைப் பற்றி மட்டுமே (முன்பு இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி 70 மணி நேரமென்று பேசியபோது வந்த எதிர்வினைகள் போல) எல்லாரும் விவாதிப்பார்கள்.

கூடவே அவர், “வீட்டில் மனைவி முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? மனைவி கணவனின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பாளா,” என்று கேட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அதைப் படிக்கிற இணையர் இருவர் என்ன பேசிக்கொள்வார்கள் என்று கற்பனை செய்தேன்.

Tuesday, 7 January 2025

அந்த ஏழாண்டில் அமைந்த அரசியல் அடித்தளம்




மிழகத்தோடு, இந்திய அரசியலிலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்திய காலக்கட்டம் அந்த ஏழாண்டுகள். ஒரு கூட்டாட்சியின் நலத்தை, கூட்டணியின் பலத்தை அது எடுத்துக்காட்டியது. அதற்கு முன்னரும் பின்னரும் ஒன்றியத்தில் கூட்டணிகள் ஆட்சியமைத்துள்ளன.  ஆனால் 2004–2011 தனித்துவமானது.

 இடதுசாரிகள் வெளியே இருந்து ஆதரித்த, மன்மோகன் சிங் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது. காங்கிரஸ் கட்சியையடுத்து அதிக இடங்களைப் பெற்றிருந்த திமுக அமைச்சரவையில் பங்கேற்றதுடன்,  மையமான ஏழு துறைகள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. திமுக தலைவர் கலைஞர் தில்லியில் முகாமிட்டு அதை உறுதிப்படுத்தினார்.

 மாநிலக் கட்சிகள் வலுவாகப் பங்கேற்கிற  கூட்டாட்சியால் நாடு மொத்தத்திற்கும் நன்மையளிக்கிற செயல்களை மேற்கொள்ள முடியும் என்பதை மக்கள் பார்த்தார்கள். அதற்கோர் அடிப்படையாக,  கூட்டணி அரசுக்கென இடதுசாரிகள் முன்மொழிந்து, திமுக வழிமொழிந்த  குறைந்தபட்ச  பொதுத் திட்டம் முதல் முறையாக (கடைசியாகவும்) உருவாக்கப்பட்டது. 

 இந்திய மொழிகளில் முதல் முறையாக  தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது அப்போதுதான் (2004). தமிழ் நெஞ்சங்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறியது. அதுவே சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகியவையும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட முன்னுரையானது.

 கிராமப்புற நூறு நாள் வேலை, தகவல் உரிமை, கல்வி உரிமை, உணவு உறுதி உள்ளிட்ட என்றும் பயனளிக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.  நாற்கரச் சாலைகளுக்கான சுழி  வாஜ்பாய் அரசு போட்டது என்றாலும், நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில், விரிவாக அந்தச் சாலைகளை அமைப்பதற்கான வழி இக்காலத்தில்தான் திறக்கப்பட்டது (அது ‘டோல் கேட்’ வசூல் ஏற்பாடாகவும் மாறியது வேறு கதை). பிஎஸ்என்எல்  கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதைச் செய்ய வேண்டியதாயிற்று. இவ்விரு துறைகளின் அமைச்சர்கள் தமிழகத்தின்  டி.ஆர். பாலு, ஆ. ராசா..

 145 ஆண்டுக் கனவான சேதுக் கால்வாய்க்கு 2005ல் மதுரையில் தொடக்கவிழா நடத்தப்பட்டது. மதப் புராணத்தைக் காட்டி ஒரு பகுதியினரும், கடல்  அறிவியலின் அடிப்படையில் வெறொரு பகுதியினரும் எதிர்த்த அத்திட்டத்திற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆட்சி மாறியபின் மறுபடி அது கனவாகிப் போனது.

 இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைமைகளை ஆராய 2006ல் நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின்படி 15 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பங்களித்த திமுக தனது ஆதரவுத் தளங்களில் ஒன்றான தமிழக முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியது.

 ஐமுகூ அரசின் முதலாம் ஐந்தாண்டு முடிவதற்குள்ளாகவே, அமெரிக்காவுடனான அணு உடன்பாட்டை ஏற்க மறுத்து இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டது. இரண்டாம் ஐந்தாண்டு முடிவதற்குள் 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கீடு விவகாரங்கள், செயலாக்கத் துறை சோதனைகள் பின்னணியில், இலங்கைத் தமிழர் நிலை தொடர்பான  அணுகுமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக  விலகிக்கொண்டது. 2014லிருந்து பாஜக கூட்டணி ஆட்சிகளும், மதவாதத்தில் தோய்ந்த அதன் நடவடிக்கைகளும் தேசத்தின் அனுபவமாகியிருக்கிறது.

 இந்த நிலைமை, தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சனாதனவாத அரசியலைத் தடுக்கிற,  கொள்கைக் கூட்டெனும் கட்டுமானத்தை விரும்புவோர் மகிழத்தக்க நிகழ்வுப்போக்கிற்கும் (அவ்வப்போது உரசிக்கொண்டாலும்) இட்டு வந்திருக்கிறது. அதற்கோர் அடித்தளம் அமைத்தது அந்த ஏழாண்டு என உறுதியாகச் சொல்லலாம்.

[‘அந்திமழை’ ஏடு இந்த மாதம் (ஜனவரி 2025) ‘கால் நூற்றாண்டு தமிழகம்’ என்ற சிறப்புப் பக்கங்களை வெளியிட்டுள்ளது. அரசியல், இலக்கியம், சினிமா, கிரைம் என பிரித்து இருபத்தைந்து ஆண்டுத் தடங்களைப் பதிப்பித்திருக்கிறார்கள். அரசியல் பகுதியில், அந்தக் காலக்கட்டத்தின் முதல் ஏழாண்டுகள் தொடர்பான எனது இந்தக் குறுங்கட்டுரை இடம்பெற்றுள்ளது.]

Friday, 3 January 2025

உண்டியல் குலுக்கிகள் ஒன்று கூடுகிறார்கள்



மதுரை:- இயக்கத்தை அடையாளம் கண்டு இணைந்துகொண்ட தொடக்க நாளொன்றில், “கட்டபொம்மன் சிலைக்குப் பக்கத்திலே ஸ்கூலுக்கு முன்னாடி இருக்கிற பிளாட்பாரத்துக்கு வந்துடுங்க. பஸ் ஸ்டாண்டு ஏரியாவுல மூணு மணியிலேயிருந்து இருட்டுற வரைக்கும் நிற்கிறோம்…” என்று சொல்லிவிட்டுப் போனார் கிளைச் செயலாளர். புரட்சிகரமாக ஏதோ செய்யப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பின் கிளச்சிகர உணர்வோடு அங்கே போனேன். தோழர்கள் சிலர் ஏற்கெனவே வந்திருந்தார்கள், சைக்கிள்களிலும், நகரப் பேருந்துகளிலும் பல தோழர்கள் வந்து சேர்ந்துகொண்டார்கள்.

எல்லோரின் கைகளிலும் பொறுப்பாளர்கள் இரண்டு பொருள்களைத் தந்தார்கள். ஒன்று தோளில் சாய்த்துப் பிடித்துக்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான மூங்கிலில் கட்டப்பட்டிருந்த செங்கொடி. இன்னொன்று, ஒரு பக்கம் கைப்பிடி பொருத்தப்பட்ட, முற்றிலும் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட, மூடியில் துளையிடப்பட்ட பெரிய அளவிலான தகர டப்பா. ஆம், உண்டியல்தான்.

எனது கூச்சத்தைப் புரிந்துகொண்டவராக ஒரு தோழர் சொன்னார்: “இதுவும் புரட்சிப் பணிதான் தோழர். இதுல மூணு விசயம் நடக்கும். முதலாவதா, கூச்சம் உடைஞ்சு போகும்; நம்ம மண்டையில இது வரைக்கும் கௌரவம் அது இதுன்னு ஊட்டி வளர்த்து வைச்சிருக்கிற போலித்தனம் உதிரும். ரெண்டாவதா, நாம எதுக்காக வந்திருக்கிறோம், என்ன செய்யப் போறோம்கிறதை நம்மளைக் கடந்து போற ஒவ்வொருத்தர்கிட்டேயும் சொல்வோம். சில பேர்ட்ட கொஞ்சம் விரிவா பேசுற வாய்ப்பும் அமையும். மூணாவதா, அடுத்த வாரம் நடத்தத் திட்டமிட்டிருக்கிற போராட்டச் செலவுக்கு நிதி கிடைக்கும்.”

கூச்சம் தொலைந்தது. கௌரவக் கட்டுமானம் தகர்ந்தது. மக்களிடம் பேசியதும், பெரும்பாலோர் ஒரூ ரூபாய் நாணயம் முதல் பத்து ரூபாய் நோட்டு வரையில் உண்டியலில் போட்டதும் கூடுதல் புரிதலையும் தெளிதலையும் ஏற்படுத்தின. வீரபாண்டிய கட்டபொம்மன், “இவய்ங்க செஞ்சு முடிப்பாய்ங்க” என்பது போல வாளையும் கேடயத்தையும் பிடித்துக்கொண்டு நின்றார்.

நிதி வசூல் முடிந்த பிறகு, உண்டியல்களைக் கட்சி அலுவலகத்தில் சேர்த்துவிட்டு டீக்கடைக்கு வந்தோம். சூடான டீ நாக்கின் வழியே வயிற்றுக்குள் இறங்கியது. பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்ட இயக்கங்களின் தேவைகளுக்காக, வசதியுள்ள தோழர்கள் கூட தங்களின் சொந்தப் பணத்திலிருந்து செலவிடக்கூடாது, அது தற்‘பெருமையையும், தான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டுமென்ற மனப்போக்கையும் வளர்த்துவிடும். அவர்களும் மற்ற தோழர்களோடு சேர்ந்து தெருவில் இறங்கி, உண்டியல் ஏந்தி, தொழிலாளர்கள், விவசாயிகள் உள்படப் பொதுமக்களிடமிருந்துதான் நிதி திரட்ட வேண்டும் என்ற கருத்து செவி வழியே மூளைக்குள் ஏறியது.

*******

சென்னை:- தந்தி தொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்ச்சியில், கார்ப்பரேட்டுகளிடம் ஒன்றிய ஆளுங்கட்சியான பாஜக கோடிக் கணக்கில் நிதி பெற்றிருந்தது பற்றிய செய்தி அலசப்பட்டுக்கொண்டிருந்தது. என்னிடமிருந்த தகவல்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தினேன்.

”கார்ப்பரேட்டுகள் சும்மாவா அத்தனை கோடியைக் கொடுப்பார்கள்? அவர்களுக்கான பல தேவைகளை அரசு செய்துகொடுக்கும். இது ஒரு மறைமுக லஞ்சம்தான்…” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, “கம்யூனிஸ்ட்டுகள் பணம் வாங்குறதில்லையா,” என்று குறுக்கிட்டுக் கேட்டார் தொகுப்பாளர். “உங்க கட்சியும் டொனேஷன் வாங்கத்தானே செய்யுது,” என்றார்.

“யாரிடம் வாங்குறோம்,” என்று கேட்டேன்.

“ஏன், ரோட்டுல உண்டியல் குலுக்குறீங்கள்ல…”

“அது, மக்களிடம் வாங்குறது சார்.”

“யாரிடம் வாங்கினால் என்ன, பணம் வாங்குறீங்கதானே?”

“ஆமா, வாங்குறோம். கார்ப்பரேட்டுகள்ட்ட பணம் வாங்குறவங்க அவங்களுக்காகப் பேசுவாங்க. நாங்க மக்கள்ட்ட பணம் வாங்குறோம், மக்களுக்காகப் பேசுவோம்.”

சட்டென என்னை விட்டுவிட்டு அடுத்தவர் பக்கம் திரும்பினார் தொகுப்பாளர். ஆம், நம்ம பாண்டே சார்தான்.

மக்களிடம் நிதி பெற்று, மக்களுக்காகவே உழைத்துக்கொண்டிருக்கிற, மக்களுக்காக உதையும் வாங்குகிற, மக்களுக்கான போராட்டத்தில் சிறைக்கும் போகிற பெருமைக்குரிய உண்டியல் குலுக்கிகள் இன்று மாநாடு காண்கிறார்கள். செம்படைப் பேரணியோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் கூடுகிறது. தலைவர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள், தொண்ட,ர்கள், அவர்களையெல்லாம் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் அனுப்பிவைத்திருக்கும் மாநிலந்தழுவிய கிளைகளின் தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

ரெட் சல்யூட்.

(ஜனவரி 3, 2025 முகநூல் பதிவு)

Thursday, 2 January 2025

அவர்கள் பட்டத்தைச் சுட விடாதீர்கள்


1989ல் வெளியான துருக்கிய மொழிப் படம் ‘டோண்ட் லெட் தெம் ஷூட் தி கைட்’. இதே பெயரில் ஃபெரைட் சிசிகோக்லு எழுதியிருந்த நாவல்தான் படமாக்கப்பட்டது. துருக்கியில் 1980ல் ராணுவச் சதியால் ஆட்சி கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அரசியல் கைதியாகப் பெண்கள் சிறையில் நான்கு ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தவர் அவர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தச் சிறை வாழ்க்கையின் பின்னணியில் நாவலை எழுதியிருந்தார். தயாரிப்பாளரும் இயக்குநருமான டன்க் பஸ்ரான் சக கலைஞர்களோடு அங்காரா நகரச் சிறைக்கே சென்று படப்பிடிப்பை நடத்தினார். திரைக்கதையை அவரும் எழுத்தாளரும் சேர்ந்து அமைத்திருந்தனர்.


போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஃபாட்மா பெண்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். துருக்கி நாட்டு நடைமுறையின்படி அவளுடன், பேரிஸ் என்ற ஐந்து வயது மகனும் சிறைக்குள் அவளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறான். வெறுப்பும் சோம்பேறித்தனமுமாக இருக்கும் ஃபாட்மா மகனை சரியாகக் கவனித்துக்கொள்வதில்லை.

அங்கே அரசியல் கைதியாக அடைக்கப்பட்டிருப்பவள் இன்சி. அவள் பேரிஸ் மீது பாசம் கொள்கிறாள். அவனும் அவளுக்கு நெருங்கிய உறவாகிறான். சிறைக்குள் வளரும் இவர்களின் அன்புப் பயிரையும், அதைச் சாய்க்க வரும் சூறாவளியையும் கதையாகச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன், அதிகாரக் கெடுபிடிகளையும், கைதிகளின் மன நிலைகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சிறையின் மதில் சுவருக்கு வெளியே உயரத்தில் ஒரு பட்டம் பறக்கிறது. “வானத்துல புதுசா ஒரு பறவை பறக்குதே,” என்று காட்டுகிறான் பேரிஸ். அதைப் பிடிக்க முடியுமா என்று கேட்பவனை மகிழ்விப்பதற்காகத் தரையில் வெள்ளை எழுதுகோலால் ஒரு பட்டத்தை வரைகிறாள் இன்சி. “இது பறக்குமா” என்று கேட்கிறான். “பார்த்துக்கிட்டே இரு, பறக்கும்,” என்கிறாள்.



இன்சியும் அவளைப் போன்றவர்களும், அநாகரிகமானவர்களாகக் கருதப்படும் மற்ற கைதிகளோடு நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால் அதிகாரிகள்தான் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள். தரையில் வரையப்பட்டிருக்கும் பட்டத்தைப் பார்த்துவிட்டு அதை அழிப்பதற்கு ஆணையிடுகிறான் தலைமைச் சிறையதிகாரி. உள்ளே ஒரு குறிப்பிட்ட வேலை சரியாக நடக்கிறதா என்று கண்காணித்துவிட்டு வருமாறு ஒரு துணையதிகாரியை அனுப்புகிறான். அவன் போன பிறகு, அவன் சரியாகக் கண்காணிக்கிறானா என்று கண்காணித்துவிட்டு வருமாறு இன்னொரு துணையதிகாரியை அனுப்புகிறான். அவனைக் கண்காணிப்பதற்கு மூன்றாவதாகவும் ஒரு துணையதிகாரியை அனுப்புகிறான். அதிகாரத்தை இப்படித் தாறுமாறாகப் பயன்படுத்தும் தலைமை அதிகாரியின் ஆட்டம், அன்றைய ராணுவ ஆட்சியின் பற்றிய எள்ளல்.

இன்சியிடமிருந்து பேரிஸ், “பட்டத்தை அடிக்காதீங்க, அப்புறம் அது உங்களையே அடிச்சிடும்,” என்று சொல்வதற்குக் கற்கிறான். மற்ற கைதிகளின் உரையாடல்களிலிருந்தும் சண்டைகளிலிருந்தும் அவன் “கம்யூனிஸ்ட்”, “வசவு” எனப் பல புதிய சொற்களைக் கற்றுக்கொள்கிறான். வேறொரு சொல்லுக்குப் பொருள் கேட்கிறபோது, “இவனுக்கு இன்னமும் சுன்னத்தே நடக்கவில்லை, அதற்குள் இதையெல்லாம் கேட்கிறான் பாரு,” என்று பேசிச் சிரிக்கிறார்கள். சில நாட்களில், சிறை மருத்துவரைக் கொண்டு அவனுக்கு சுன்னத் செய்ய வைத்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுகிறார்கள். சிறையானாலும் விடாத சமூகப் பழக்கம் சுட்டிக்காட்டப்படுகிறது.

நிறைமாதக் கர்ப்பிணி ஒருத்திக்கு, ஒரு விடுமுறை நாளில் திடீரென இடுப்பு வலி ஏற்பட, மருத்துவரை அழைத்துவர முடியாத நிலையில், தங்களுடைய சண்டைகளை மறந்து கைதிகள் பொறுப்பேற்பதும், சுகப்பேறு நடப்பதும் சிறைவாசத் திரைப்படங்களில் அரிதான காட்சி.

தண்டனைக் காலம் முடிந்து இன்சி விடுதலையாகிறாள். பேரிஸ்சிடம் சொல்லிக்கொண்டு விடைபெறுவதற்குத் துணிவற்றவளாக, அவள் வெளியேறுவதிலும், அவன் அவளைத் தேடிச் சிறைத்தாழ்வாரங்களில் ஓடிவருவதிலும் உண்மையான உருக்கம்.

படம் தொடங்குவதே, விடுதலை பெற்ற இன்சி வெளியேயிருந்து நினைத்துப் பார்ப்பதிலிருந்துதான். அவள் வெளியேறிய பிறகு, பேரிஸ்சின் கண்கள், இப்போதும் மேலே ஒரு பட்டத்தைக் காண்கின்றன. மற்ற பெண்களும் அதைக் கவனித்துக் கும்மாளம் போடுகிறார்கள். அப்போது அங்கே வருகிற தலைமையதிகாரி, பட்டத்தைத் துப்பாக்கியால் சுட ஆணையிடுகிறான். முடியவில்லை. சில நொடிகளில் இன்னொரு பட்டம், அடுத்தொரு பட்டம், அடுத்தடுத்துப் பட்டங்கள் என ஆகாயத்தில் ஒரு பட்டப்படை அணிவகுப்பே நடக்கிறது. கவித்துவமாக விடுதலையின் பரவசம்.

மனம் கவரும் சிறுவனாக ஓஜான் பிலேன், அன்றைய அரசியலைத் தெரிந்துகொள்ளத் தூண்டும் பெண்ணாக நூர் சுரூர் உள்ளிட்டோரின் நடிப்பு, எர்டால் காராமான் ஒளிப்பதிவு, ஓஸ்கான் டர்பே இசைக்கோர்ப்பு என சிறப்பானதொரு படத்திற்குச் சிறப்பான கூட்டுப் பங்களிப்பு.

அனடால்யா கோல்டன் ஆரஞ்ச், மையத் தரைக்கடல் நாடுகள் விழா, இஸ்தான்புல் பன்னாட்டுத் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் விருதுகளையும் திறனாய்வாளர்களின் பாராட்டுகளையும் பெற்ற இந்த 100 நிமிடப் படம் தற்போது நவீன 4கே பதிவு நுட்பத்துடன் மூபி தளத்தில் காணக் கிடைக்கிறது.

[‘செம்மலர்’ ஜனவரி, 2025 இதழ் ‘ஓடிடி மேடையில் உலக சினிமா’ பகுதியில் வந்துள்ள எனது கட்டுரை]