Saturday, 15 March 2025

கூடுதலாக ஒரு மொழி கற்பதில் என்ன தவறு?



“மூ
ணாவதா ஒரு மொழியைக் கத்துக்கிடறதுல என்ன சார் தப்பு?”


பல நாட்களாகக் காலை நடையில் சினிமா, சொந்த ஊர் நிலவரம், நண்பர்களுடைய கதை என்று பேசிக்கிட்டு கடந்துகொண்டிருந்தோம்.. எழுதிப் பதிவு செய்வது போல எதுவும் அமையவில்லையே என்று நினைத்துக்கொள்வேன். இன்று காலையில், நண்பரின் கேள்வியில் அது அமைந்தது.

”மூணு மொழியில்லை, முப்பது மொழி கூட கத்துக்கலாம். தப்பே இல்லை. தடையும் இல்லை. ஆனா எந்த மொழியையும் ஆசைப்பட்டுக் கத்துக்கணும். வற்புறுத்திப் படிக்க வச்சா அது கத்துக்கிடற மொழி ஆகாது, கட்டாயமாத் திணிக்கிற மொழியாத்தான் இருக்கும்…”

“குழந்தைகள் எக்ஸ்ட்ராவா ஒரு லாங்குவேஜ் கத்துக்கிடறதுக்கு சிரமப்படுவாங்கன்னு நீங்களா ஏன் அவங்களை அண்டர்எஸ்டிமேட் பண்றீங்க? அதிலேயும் இந்தக் காலத்துப் பசங்க ரொம்ப ஸ்மார்ட்… ஈஸியா கத்துக்குவாங்க…”

“உண்மைதான்… குழந்தைகளோட மூளை இயற்கையாவே புத்துணர்ச்சியோட எதையும் வாங்கிக்கிடும். அந்தப் புத்துணர்ச்சி வறண்டு போகக்கூடாது. அறிவியல், கணிதம், வரலாறு, இலக்கியம், கலைன்னு அவங்களோட வயசுக்கு ஏத்த மாதிரி கத்துக்கிட வேண்டியது நிறைய இருக்கிறப்ப, எதுக்கு செயற்கையா, கூடுதலா இன்னொரு மொழியைக் கத்துக்கிடறதுல அந்த இயற்கையான திறமையைச் செலவு செய்யணும்?”

“அப்படின்னா ஏற்கெனவே தெரிஞ்சிருக்கிற லாங்குவேஜஸ் மட்டும் போதும், எங்கே போனாலும் அதை வச்சே சமாளிக்கட்டும்னு சொல்றீங்களா?”

“அப்படில்லாம் யாரும் சொல்லலை. எங்கேயாவது போறோம்னா அங்கே தேவைப்படுற மொழியை இயல்பா நாம கத்துக்கிடுவோம். அங்கே நிறைய காலம் வாழப்போறோம்னா வேலை பார்க்கிற இடத்தில மட்டுமில்லாம ஊர்க்காரங்களோட பழகுறதுக்கும் அந்த மக்களைப் புரிஞ்சிக்கிடறதுக்கும் அந்த மொழி ஒரு பாதை மாதிரி இருக்கும்கிறதால நிச்சயமா கத்துக்கிடுவோம். அதிலேயும் இலக்கிய ஆர்வம் இருந்துச்சுன்னா, அந்த மக்களோட கதைகளையும் கவிதைகளையும் ரசிச்சு வாசிக்கிறதுக்கு அந்த மொழியை விரும்பிக் கத்துக்கிடுவோம். அப்படிக் கத்துக்கிடறது மூளைக்கு சுகமா இருக்கும், சுமையா இருக்காது.“

“அதெல்லாம் எக்ஸெப்ஸனலா சில பேரு செய்றது. மத்தபடி சின்ன வயசுலேயே ஆரம்பிச்சாத்தான் வளர வளர மூணாவது லாங்குவேஜ்ல எக்ஸ்பெர்ட்டாவே வளருவாங்க.”

“சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருக்கீங்கல்ல? மாமல்லபுரம்?”

“அடிக்கடி டெல்லி, மும்பைன்னு போயிட்டு வர்றவனாச்சே, சென்ட்ரல் ஸ்டேஷன் தெரியாம இருக்குமா? மாமல்லபுரத்துக்குக் ஃப்ரெண்ட்ஸ் ஃபேமிலிஸ் சேர்ந்து போயிருக்கோம்.”

“சென்ட்ரல்ல வண்டி உள்ளே வர்றப்ப, சுமைத் தொழிலாளிகளைக் கவனிச்சிருக்கீங்களா? ஒவ்வொரு பெட்டியிலேயிருந்தும் இறங்குறவங்களைப் பார்த்ததுமே அவங்க எந்த மாநிலத்துக்காரங்கன்னு புரிஞ்சிக்கிட்டு அவங்களோட மொழியிலேயே பேசுவாங்க. மாமல்லபுரத்துல வழிகாட்டியா தொழில் செய்றவங்க, சுற்றுலா வந்தவங்களோட மொழியிலேயே விளக்கம் கொடுப்பாங்க. அதெல்லாம் சின்ன வயசுலேயிருந்து கட்டாயப்படுத்திக் கத்துக்கிட்டது இல்லை. இதுதான் வாழ்க்கை அமைச்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி கத்துக்கிட்டவங்கதான்.”

“அந்த மாதிரி வேலைகளுக்குத்தான் எக்ஸ்ட்ரா லாங்குவேஜஸ் தேவைன்னு நீங்க சொல்றீங்கன்னு எடுத்துக்கிடறதா?”

“இதே மாதிரி தொழில், வணிகம், கல்வி, ஆராய்ச்சின்னு வல்லுநரா இருக்கிறவங்க பல மொழி அறிஞ்சவங்களா அசத்துறாங்க. குழந்தைகளோட மூளைக்கு மட்டுமில்லை, வளர்ந்த பெரியவங்களோட மூளைக்கும் புது மொழிகளை எளிதாக் கத்துக்கிடுற இயற்கையான ஆற்றல் இருக்குறதைச் சொல்றேன்னு எடுத்துக்குங்க.”

“இது யோசிக்க வேண்டிய பாயின்ட்தான்.”

“யோசிக்கிறதுதான் முக்கியம். யோசிக்க விடாமலே, எதிர்காலத் தலைமுறையோட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுறாங்க, வாய்ப்புகளைத் தடுக்கிறாங்க, வட மொழி மேல வெறுப்பை வளர்க்கிறாங்கன்னு பேசி வெறுப்பைக் கொட்டுறாங்களே அதைப் பத்தியும் யோசிங்க. இது மாதிரியெல்லாம் அறிவியல்பூர்வமா அவங்க ஏன் யோசிக்க மாட்டேங்கிறாங்கன்றதையும் யோசிங்க.“

“மத்த பல ஸ்டேட்டுகள்ல த்ரீ லாங்குவேஜ் பாலிசி இருக்கிறப்ப இங்கே மட்டும்…” –இது எப்போதும் எங்கள் உரையாடலைக் கவனித்துக்கொண்டே நடக்கிற, எப்போதாவது பேச்சுக்கொடுக்கிற இரண்டாவது நண்பர்.

“எந்த மாநிலமா இருந்தா என்ன? எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்றேன்.”

“சரிங்க சார். ஸ்கூல்லேயே ஆரம்பிக்காம வேற வேற மொழிகளை எப்பதான் கத்துக்கிடறது?” –மறுபடியும் முதலாமவர்.

“என் நண்பர் ஒருத்தர், எழுபது வயசுல தெலுங்கு படிச்சுக்கிட்டு இருக்காரு, கேட்டா அருமையான இலக்கியங்கள் தெலுங்குல இருக்குதுன்னு சொல்றாரு. எனக்குக்கூட ஏதாவது ஒரு புது மொழி படிக்கணும்னு விருப்பம் இருக்கு. எதைப் படிக்கலாம்னு நண்பர்கள்கிட்ட விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் திறமையாளர்கள்… கட்டாயப்படுத்தித் திணிக்காமலே கூடுதலா பல மொழிகள் தெரிஞ்சவங்களா இருக்காங்க. அவங்களும் கூட தேவையையொட்டியும் அவங்களா தேர்வு செஞ்சும்தான் படிச்சாங்க.”

“அதுவும் நிஜம்தான். எந்த ஸ்டேட்டுக்குப் போனாலும் அந்த லாங்குவேஜ்லேயே பேசுறங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்.“

“அது மட்டுமில்லை, அவங்க யாரும் மும்மொழி கத்துக்கிடறதுல தப்பு இல்லைன்னு பேசிக்கிட்டு இருக்கிறதில்லை, எனக்கு ஏழு மொழி தெரியும் எட்டு மொழி தெரியும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறதில்லை. ரொம்பவும் அறிவாளியா மாறி இந்தி வேணாம்னுட்டு உங்க சினிமாக்களை மட்டும் ஏன் இந்தியில டப்பிங் பண்றீங்க, ஏன் இந்தி சினிமா நடிகர்களை ரசிக்கிறீங்கன்னு எல்லாம் கேட்கிறதும் இல்லை. அப்புறம்…”

“ஓகே, ஓகே. கடை வந்துருச்சு. சூடா காஃபியோட கூலாயிடுவோம். வழக்கம் போல சர்க்கரை இல்லாமத்தானே?”

“இப்ப பால் இல்லாமலும்.”

No comments: