Saturday, 2 August 2025

புனித அத்தி மரத்தின் விதை




The Seed of Sacred Fig

ந்தப் பாரசீக மொழிப் படத்திற்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பபட்ட ஈரான் இயக்குநர் முகமது ரசூலோஃப் தப்பித்துச் சென்றார். தொழில்நுட்பப் பணிகளை ஜெர்மனியில் முடித்து, 2024ஆம் ஆண்டின் கேன்ஸ் விழாவில் திரையிட்டார்.  படம் சிறப்பு விருது பெற்றது.  ஈரான் நாட்டில் 2022இல் நடந்த பெண்களின் சுயமரியாதைப் போராட்டத்தின் கைப்பேசிக் காணொளிப் பதிவுகளையும் இணைத்துக்கொண்டுள்ள இந்தப் படம் பிரைம் தளத்தில் ஒளிபரப்பாகிறது.

ஈரான் உயர்நிலை நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் இமான்.  அரசால் வழங்கப்படும் புதிய வசதியான வீட்டில் மனைவி நஜ்மே, மகள்கள் ரெஸ்வான், சனா ஆகியோருடன் குடியேறுகிறார்.

நீதிபதிப் பதவி அளிக்கப்பட்டது, தனது சட்ட அறிவைப் பயன்படுத்தி முறைப்படி விசாரணை நடத்தித் தீர்ப்பளிப்பதற்காக அல்ல, அரசாங்கம் குற்றவாளிகள் என்று கைகாட்டுகிறவர்களுக்குத் தண்டனை அளிக்கும் ஆணைகளில் கையெழுத்திடுவதற்காகத்தான். பணமும் வசதியும் இமானை உடன்பட வைக்கின்றன. அவருக்கு அரசாங்கம் ஒரு துப்பாக்கியை வழங்குகிறது.

அரசின் சர்வாதிகாரத்தையும் சமூகத்தின் ஹிஜாப் கெடுபிடிகளையும் எதிர்த்துப் பெண்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். அப்போது ரெஸ்வானின் தோழி சதாஃப் முகத்தில் சுடப்படுகிறாள். அவளை ரகசியமாக வீட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். தாய் நஜ்மே மகள்களின் இந்தத் தொடர்புகளை விரும்பாவிட்டாலும் முதலுதவி அளித்து அனுப்பி வைக்கிறார். சில நாட்களில் சதாஃப் கைது செய்யப்படுகிறாள். அரசியல் போராட்டங்கள் தீவிரமடைய, நூற்றுக்கணக்கான, முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட தீர்ப்புகளில் கையெழுத்திடுகிறார் இமான். 



ரெஸ்வான் தகப்பனின் செயல்களை விமர்சிக்கிறாள். பெண்ணுரிமைக் கருத்துகளை எதிரிகளின் பரப்புரையென்று கூறிக் கடிந்துகொள்கிறார் இமான்.

வீட்டில் துப்பாக்கி காணாமல் போகிறது.கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலையில் இமான் மனைவியையும் மகள்களையும் தனது அலுவலரின் விசாரணைக்கு உட்படுத்துகிறார். 

இதற்கிடையே இமானின் பெயர், படம், முகவரி ஆகியவற்றை சமூக ஊடகங்களில் போராளிகள் வெளியிடுகிறார்கள். பாதுகாப்புக்காக இமான் மலைப்பகுதியில் உள்ள தனது குழந்தைப் பருவ வீட்டிற்குச் சென்றுவிட முடிவு செய்கிறார். சக அலுவலர் பாதுகாப்புக்காக வேறொரு துப்பாக்கியைக் கொடுக்கிறார். காரில் ரெஸ்வானிடம் சனா துப்பாக்கியை எடுத்தது தான்தான் எனக்கூறி அதைக் காட்டுகிறாள்.  ரெஸ்வான் அவளிடமிருந்து அதைப் பிடுங்கி,  காருக்குள் மறைத்து வைக்கிறாள்.

தனது பழைய வீட்டிற்கு வந்ததும் இமான் மூவரிடமும் விசாரணை நடத்துகிறார். தாயையும் தங்கையையும் காப்பாற்றுவதற்காக ரெஸ்வான் பழியைத் தானே ஏற்கிறாள். இமானைக் காருக்கு அழைத்துச் செல்கிறாள் –துப்பாக்கி காரில் இல்லை. ஆத்திரப்படும் இமான் மனைவியையும் மகளையும் தனித்தன அறைகளில் அடைக்கிறார், சனா துப்பாக்கியுடன்  நழுவி விடுகிறாள்.

அவளுடைய தந்திரமான ஏற்பாட்டில், தொலைவில் உள்ள கொட்டகைக்கு வரும் இமானை அதற்குள் பூட்டி வைக்கிறாள். தாயையும் தமக்கையையும் விடுவிக்கிறாள். கொட்டகைக் கதவை உடைத்து வெளியே வரும் இமான் நகரத்தின் இடிபாடுகளுக்கிடையே நீண்ட நேரம் துரத்திய பிறகு, நஜ்மேயைப் பிடித்துக்கொள்கிறார். தாயின் அலறல் மகள்களை அந்த இடத்திற்கு அழைத்து வருகிறது. அதன் பின் வருகிற அதிர வைக்கும் நிகழ்வுகள் ஆழ்ந்த சிந்தனைக்குள் இழுக்கின்றன.

அடக்குமுறை, பழமைவாதம், ஆணாதிக்க மூர்க்கம், பெண்களுக்கு எதிரான அநீதி ஆகியவற்றை விசாரணைக் கூண்டில் ஏற்றுகிற இந்தப் படத்தைக் கடுமையான நிலைமைகளுக்கிடையே உருவாக்கினார் ரசூலோஃப். ஆனால், அந்தச் சவால்கள் படத்தின் கலையியலைப் பாதித்துவிடவில்லை. அதிகாரத்தின் கண்களுக்குக் கலை தெரியுமா? அவருக்கு 8 ஆண்டுகள் சிறைவாசத்துடன் கசையடித் தண்டனையும் அளிக்கப்பட்டது. இமானைப் போலவே ஆணையில் கையெழுத்திட ஒரு நீதிபதி இருந்திருப்பார்தானே?



சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் தப்பித்த ரசூலோஃப், பாலைவனத்தையும் மலைப் பாறைகளையும் நடந்தே கடந்து ஈரானிலிருந்து வெளியேறினார். ஜெர்மனி தூதரகம் அவருக்கு அடைக்கலம் அளித்தது.

(இதற்கு முன்பும் ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹி 2011இல் தயாரித்த "திஸ் ஈஸ் நாட் எ ஃபிலிம்" (இது ஒரு திரைப்படமல்ல) என்ற ஆவணப்படமும் இதே போன்ற சவால்களை எதிர்கொண்டது. அரசாங்கத்தை விமர்சித்ததற்காக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவர், வீட்டுக் காவலில் இருந்தபோது, அந்த அனுபவங்களையே ரகசிய கேமராவில் படமாக்கினார். படத்தை ஒரு மின்னணுச் சிப்பியில் பதிவு செய்து  ஒரு ரொட்டிக்குள் மறைத்துவைத்து வெளியே அனுப்பினார். பல்வேறு விழாக்களிலும் அது பாராட்டுகளைப் பெற்றது.)

அத்தி மரம்  கடினமான இடங்களிலும் வேர் விட்டு நிலத்தைப் பிளவு படுத்தக் கூடியது. உரிமைகளுக்கான போராட்டங்களும் ஒடுக்குமுறைகளை மீறி வேரூன்றி ஓங்கும் என்ற குறியீடு படத்தின் தலைப்பில் இருக்கிறது.

மிஸ்ஸாக் சரேஹ் (இமான்), சோஹைலா கொலெஸ்தானி (நஜ்மே), மாஹ்சா ரோஸ்டாமி (ரெஸ்வான்), செட்டாரே மாலேகி (சனா), நியூஷா அகஷி (சதாஃப்) கதாபாத்திரங்களில் நடிப்பைத் தாண்டிய புரிதலோடு பங்களித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பூயான் அகாபாபாயி, இசைஞர் கர்சான் மஹ்மூத், தொகுப்பாளர் ஆண்ட்ரூ பேர்ட் ஆகியோரின் பணிகளும் படத்தின் நேர்த்திக்குத் துணை செய்கின்றன.

மக்கள் போராட்டங்களின் நியாயங்களை ஈரான் அங்கீகரிப்பது அமெரிக்க–இஸ்ரேல் போர் வன்மத்தை எதிர்ப்பதில் உலகத்தின் ஒருமைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தும். அடக்குமுறை ஆட்சியாளர்கள் இதை உணர வேண்டும். 

[0]

செம்மலர் ஆகஸ்ட் 2025 இதழ், ‘ஓடிடி மேடையில் உலக சினிமா’ பக்கத்தில் இந்தப படம் பற்றிய எனது அறிமுகக் கட்டுரை


No comments: