‘ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு தனிச் சட்டம் தேவையில்லை... ஏற்கெனவே இருக்கும் சட்டங்களே போதும்’ என்றார் முதல்வர் ஸ்டாலின். அப்படி அவர் சொன்ன பிறகு, பல ஆணவக்கொலைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிட்டன. அவை தொடர்கதையாகவும் நீடிக்கின்றன!
இந்தியாவில் சாதி ஆணவக்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கிவருகிறது. பொருளாதாரத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் மாநிலம், சமூக நீதி மண், பெரியார் மண் என்றெல்லாம் ஒருபுறம் சொல்லிக்கொண்டாலும், இந்தப் பெருமைகளுக்கு மத்தியில் பெரும் கரும்புள்ளிகளாகவும், அவமானச் சின்னங்களாகவும் ஆணவக்கொலைகள் தொடர்கின்றன என்பது கசப்பான உண்மை. இதற்கு சமீபத்திய உதாரணம், நெல்லையில் நிகழ்ந்திருக்கும் மென்பொருள் பொறியாளரான இளைஞர் கவினின் ஆணவப் படுகொலை.
நன்கு படித்துப் பட்டம் பெற்று, ஒரு முன்னணி ஐ.டி நிறுவனத்தில் லட்சங்களில் மாத ஊதியம் பெற்றுவந்த இளைஞரான கவின், தன் குடும்பத்தின் பெருங்கனவுகளை நனவாக்கத் தொடங்கியிருந்தார். இந்த இளைஞர், ‘மேல்சாதி’ பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக, அந்த பெண்ணின் சகோதரனாலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் (ஜூலை 27). இந்த சூழலில், ஆணவக் கொலைகளைத் தடுக்க உடனடியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
கௌரவமல்ல, ஆணவம்!
‘கௌரவக் கொலை’ என்றுதான் பல ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, குடும்ப கௌரவத்தைக் காப்பதற்காக, சமூக மதிப்பைத் தக்கவைப்பதற்காக நடத்தப்படும் கொலை என்பது அதன் பொருள். அதாவது, கொலைக்கு ஒரு ‘நியாய முக்காடு’ போடப்படுகிறது. கொலையில், அதுவும் சாதிவெறியோடு செய்யப்படும் கொலையில் என்ன கௌரவம் இருக்கிறது?
சொந்தச் சாதி அடையாள ஆணவத்தோடு செய்யப்படும் உயிரழிப்பு என உணர்த்துவதாகத் தமிழில் ‘ஆணவக் கொலை’ என்ற பதம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆணவம் எந்த மட்டத்திலும் இருக்கலாம். சாதியக் கட்டமைப்பின் வெற்றியே, இந்த ஆணவத்தை அனைத்து மட்டங்களிலும் புகுத்தியதில்தான் இருக்கிறது.
சாதி, மத வேலிகளைத் தாண்டி, தங்களின் காதல் இணையைத் தேர்வுசெய்யும் பெண்ணோ, ஆணோ, அல்லது இருவருமோ படுகொலை செய்யப்படுகிறார்கள். அப்படி படுகொலை செய்துவிட்டு சிறைக்குப் போவதை சமூக மரியாதைக்குரிய வீரமாகப் போற்றுகிற அவலம் தமிழகத்தில் நிலவுகிறது. ‘மேலிருந்து தன்னை மிதிக்கிறார்கள்’ என்ற கோபத்தைவிட, ‘கீழே தன்னிடம் மிதிபடுகிறவர்கள் இருக்கிறார்கள்’ என்ற வக்கிரத் திருப்தியின் பலத்தில்தான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக சாதியம் ஊழித் தாண்டவமாடுகிறது.
வர்ணப் பிரிவினைக் கோபுர அமைப்பின் உச்சி தளத்தில் தங்களை வைத்துக்கொண்ட சாதிகளுக்குள்ளேயே பாகுபாடு இருக்கிறது. கோயில் கருவறைக்குள் குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் நுழைய முடியும், (அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வழி வகுக்கும் சட்டம் இதை அசைத்திருக்கிறது). அடித்தட்டிற்குத் தள்ளப்பட்ட சாதிகளுக்குள்ளேயும் இதே போன்ற பாகுபாடுகள் இருக்கின்றன. ஒதுக்கப்பட்ட சாதிகளுக்கு உள்ளேயும் ஆணவக் கொலைகள் நிகழ்கின்றன.
பெற்ற மகளைக் கொன்ற தந்தை!
பட்டுக்கோட்டை பகுதியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞரை மணந்துகொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்ணை, அவரது தந்தையே தூக்கிலிட்டு கொன்ற கொடுமை கடந்த ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்தது. தான் பெற்ற மகள் என்றாலும், சாதிப்பெருமை மூர்க்கத்தால் முதலில் பாசத்தைக் கொன்று, பிறகு மகளையே கொன்றார் கொடும் மனம் கொண்ட அந்த தந்தை. அவர் செய்தது ஓர் அப்பட்டமான ஆணவக்கொலை.
‘மானத்தை இழந்து வாழ்வதைவிட, நாங்கள் விஷம் குடித்துச் செத்துப் போகிறோம்’ என்று குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள். காதலனிடமிருந்து பிரியும் பெண், அந்த விஷத்தைத் தானே குடித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள். காதலியின் பெற்றோரும், உற்றாரும் வந்து குடும்பத்தாரைத் தாக்கிக் காயப்படுத்துவார்கள் என்று கலங்கும் ஆண், ரயில் முன் பாய்ந்து உயிரிழக்கிறான். இவையும் ஆணவக் கொலைகள்தான்.
ஆணவக் கொலைகள் தொடர்வது நாட்டுக்கும், நவீன சமுதாயத்திற்கும் பெருத்த அவமானம். ஆகவேதான், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், எந்தக் கட்சியினர் ஆட்சியில் இருந்தாலும், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர மறுக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, பல முன்னுதாரண நடவடிக்கைகளை எடுத்திருப்பதன் மூலம் முற்போக்காளர்களால் பாராட்டப்படும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும்கூட, ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவர மறுக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, ‘தமிழகத்தில் ஆணவக் கொலைகளே நடக்கவில்லை’ என்று சட்டமன்றத்தில் அறிவித்து அவர் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இப்போது, அந்த சட்டத்தைக் கொண்டுவரக்கூடிய அதிகாரமிக்க இடத்தில் இருக்கும்போது, ‘ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் தேவை இல்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்களே போதும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவது ஏன் என்று விளங்கவில்லை.
வாக்குகள் வராது என்ற பயமா?
ஆணவக்கொலைகளைக் கண்டித்தால், அல்லது ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தால், ஆதிக்க சாதியினரின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினுடைய குடும்பத்தினரை தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவரான கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்’ என்றார். அந்த வலியுறுத்தல் தேவைதான். ஆனால், தமிழக அரசே அந்தச் சட்டத்தைக் கொண்டுவரலாமே? அதில் என்ன தயக்கம்?
இதை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியிருக்கிறார். நல்லது. ஆனால், அவருடைய கட்சி ஆள்கிற ஒன்றிய அரசை நோக்கி இந்தக் கோரிக்கையை அவர் ஏன் முன்வைக்கவில்லை? இப்படியொரு சட்டம் கொண்டுவருவது, தங்களுடைய ‘சோசியல் என்ஜினீயரிங்’ செயல்பாட்டுக்கு இடையூறாகிவிடும் என்று பா.ஜ.க அஞ்சுகிறதா?
சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும்தான் இந்தத் தனிச் சட்டக் கோரிக்கையை இடையறாமல் எழுப்புகின்றன. 2015-ல் அ.தி.மு.க ஆட்சியின்போது, ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான முன்வரைவு ஒன்றை சி.பி.எம் சட்டமன்றக் குழுத் தலைவரான அ. சவுந்தரராசன் தாக்கல் செய்தார். அதை விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளாமல் அ.தி.மு.க அரசு தள்ளுபடி செய்தது.
‘நடப்புச் சட்டங்களே போதும்’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் போதாமையை சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, ஆணவக் கொலைகளாகவே இருந்தாலும்கூட, பின்வரும் சூழல்களில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது.
அதாவது, இணையர் இருவரும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், அவர்களில் ஒருவர் அல்லது இருவரும் கொல்லப்படுவார்களானால், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்ய இயலாது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இருவரில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட சாதி, இன்னொருவர் பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி என்ற நிலையில் கொலை நடந்திருந்தாலும், வன்கொடுமை சட்டம் அங்கே வராது. சாதி ஆணவக்கொலையாக இருந்தாலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் படி, வழக்கமான கொலை வழக்காகத்தான் பதிவு செய்யப்படும்.
"பிரிவு 302, தகராறுகளால் நடைபெறக்கூடிய கொலைகள் தொடர்பானது. ஆனால், சாதி ஆணவக் கொலையை, ஒரு தகராறு காரணமாக நடந்த கொலையாக பார்க்க முடியுமா? சாதி ஆணவக்கொலை செய்யும் நபரைக் காப்பாற்ற ஊரே திரளும்போது, பிரிவு 302 மூலமாக பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கச் செய்ய முடியுமா?’ என்று கேட்கிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், ‘எவிடென்ஸ்’ அமைப்பின் நிர்வாக இயக்குநருமான கதிர்.
"வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தாத வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டவர் பெரும் தொகை செலுத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞரை தனக்காக வாதிட நியமித்துக் கொள்வார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுபவமிக்க மூத்த வழக்கறிஞர்கள் இருக்க மாட்டார்கள். இதுபோன்ற வழக்குகள் உள்ளூர் அளவில் பேசி முடிக்கப்படுகின்றன. சில சமயம் கொலை வழக்குகளாக பதியப்பட்டாலும், வழக்கு விசாரணை நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள்" என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்.
தனிச் சட்டம் என்ன செய்யும்?
பெண்களின் இணைத் தேர்வு உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கம், ஆணவக் கொலைகளுக்குள் இருக்கிறது. பெரும்பாலும், வேறு சாதியை, குறிப்பாகப் பட்டியல் சாதியை அல்லது பழங்குடி சமூகத்தவர் ஒருவரைப் பெண் தன் வாழ்க்கை இணையாகத் தேர்ந்தெடுப்பாரானால், அதைக் குடும்பத்தினர் அவமானமாகக் கருதுகின்றனர். அவர்கள் வெளியே தலைகாட்ட முடியாத சூழலை சமூகம் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட நிலைமைகளில், இணையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை, அல்லது அவரைத் தேர்ந்தெடுத்த பெண்ணைக் கொலை செய்வது பெரும்பாலும் பெண் வீட்டார்தான்.
ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் வந்தால், இத்தகைய கொலைகள் வழக்கமான சட்டப் பிரிவுகளில் சேர்க்கப்படுவதைத் தடுக்க முடியும். தவறான சட்டப் பிரிவுகளில் குற்றத்தைப் பதிவு செய்தவர்கள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். ஆகவே, அவர்கள் அவ்வாறு செய்வதிலிருந்து பின்வாங்க வைக்கும். சாதி ஆணவக் கொலை என்றால் என்ன, அதில் யார் யார் குற்றவாளிகள் (கொலையாளிகள், தூண்டுபவர்கள், உடந்தையாக இருப்பவர்கள், பெருமைப்படுத்துகிறவர்கள் உள்பட) என வரையறுக்கப்படும். கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதும், விரைவில் தண்டனை கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.
சதிகளை வெளிக்கொண்டுவரும்!
சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் அச்சுறுத்தப்படும்போது, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதை அரசின் கடமையாக தனிச்சட்டம் மாற்றும். அவர்கள், காவல்துறையின் பாதுகாப்பில் அச்சமின்றித் தங்குவதற்கு இடம், தொலைபேசி வசதி, போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளை உறுதிப்படுத்த முடியும். அவர்களுக்கும், பாதிக்கப்படக்கூடிய குடும்பத்தினருக்கும் இலவச சட்ட சேவை, தேவைப்பட்டால் நம்பிக்கையும் தெம்பும் ஊட்டக்கூடிய மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் கிடைக்கச் செய்ய முடியும்.
ஆணவக் கொலைகள் பெரும்பாலும் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது ஒரே சாதியைச் சேர்ந்தவர்களின் கூட்டுச் சதியாகவே செய்யப்படும் நிலையில், தற்போதுள்ள சட்டப் பிரிவுகளில் அந்தச் சதிகளை முழுமையாக வெளிப்படுத்துவது சவாலாக இருக்கிறது. தனிச் சட்டம் அந்தச் சதிகளை வெளியே கொண்டுவர வழிவகுக்கும்.
இன்றைய ஏற்பாடுகளில் ஆணவக்கொலை வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்புகள் அறிவிக்கப்படுவதற்குள் காலம் அதிகமாகக் கரைந்துவிடுகிறது. இந்த நிலையில், தனிச் சட்டம் வந்தால், வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் அமைக்க வழி செய்யும். அது ஒப்பீட்டளவில் நீதி நிலைநாட்டப்படுவதை வேகப்படுத்தும். காவல்துறையினர் தயக்கமில்லாமல் விசாரணைகளை மேற்கொள்ள தனிச் சட்டத்தின் மூலம் வலுவான வழிகாட்டுதல்களை வழங்க முடியும். குற்றவாளிகள் தப்ப முடியாதவாறு ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டிய சட்டக் கட்டாயம் ஏற்படுவதோடு, அதற்கான அதிகாரமும் கிடைக்கும்.
தனிச் சட்டம் சாதி ஆணவக் கொலைகளில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்தும். ஆணவக் குற்றங்களில் தனிக் கவனம் செலுத்துவதையும், தீவிர நடவடிக்கைகள் எடுப்பதையும் அரசின் கடமைப் பொறுப்பாக்குவதற்கும் தனிச் சட்டம் வழி செய்யும்.
ராஜஸ்தான் சட்ட முன்வரைவு!
2012-ம் ஆண்டில், ஆணவக் கொலைகள் பிரச்னையை கையாள்வதற்காக ஒன்றிய அரசுக்கு ஒரு சட்ட முன்வரைவை இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. அப்போதைய ஆட்சியாளர்கள் அதை எடுத்துக்கொள்ளவில்லை, 2014 முதல் இன்று வரையில் ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
பாரம்பர்யத்தின் பெயரால் திருமணச் சுதந்திரத்தில் தலையிடுவதைத் தடுக்கும் சிறப்புச் சட்டத்திற்கான முன்வரைவு ஒன்றை 2019-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில அரசு இயற்றியது. ஆணவக் கொலைகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் அதிகாரம், கொலைகளைத் தூண்டுபவர்களுக்கும் (அதாவது சாதிக்காரப் பெரிய மனிதர்களுக்கு), உடந்தையாக இருப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை, குற்றவாளிகளின் சொத்துகள் பறிமுதல், தம்பதியினருக்குப் பாதுகாப்பு, விரைவு நீதிமன்றங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் அதில் இருந்தன.
ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட அந்த முன்வரைவுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்காமலே இருந்தது. 2023-ல் ராஜஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பா.ஜ.க அரசு, அந்தச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியதாகவும் தெரியவில்லை.
சட்ட ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அதனால்தான் ராஜஸ்தான் சட்ட முன்வரைவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறது என்றும் பேசப்படுகிறது. எந்த அளவுக்கு உண்மையோ, யாருக்குத் தெரியும்?
2006-ம் ஆண்டு, லதா சிங் எதிர் உத்தரப் பிரதேச அரசு வழக்கில், மனுதாரர் தனது சொந்த விருப்பப்படி ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை உச்ச நீதிமன்றம் ஓங்கி உரைத்தது. கௌரவக் கொலைகள் நிலப்பிரபுத்துவ மனநிலையின் காட்டுமிராண்டித்தனமான செயல்களே என்று கூறியது. 2018-ம் ஆண்டு, சக்தி வாஹினி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், உரிய வயது வந்த இருவர் இல்லறமாக இணைய முடிவு செய்வார்களானால் குடும்பத்தின் சம்மதமோ சமூகத்தின் ஒப்புதலோ தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இந்த உரிமையில் தலையிட உள்ளூர் சாதிப் பஞ்சாயத்துகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தீர்ப்பளித்தது. இதற்காக ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இத்தகைய சில முன்முயற்சிகளும், உச்ச நீதிமன்றப் பரிந்துரைகளும் இருக்கின்றன என்ற போதிலும், குறிப்பிட்ட சட்டம் இன்னும் வராமலிருப்பதை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக மனித உரிமை ஆய்வு அமைப்பின் அறிக்கையொன்று பதிவு செய்திருக்கிறது.
‘இந்திய சமூகத்தில் நிலவும் கடுமையான மதம், சாதி அடிப்படையிலான பிளவுகளின் பிரதிபலிப்பாக ஆணவக்கொலைகள் இருக்கின்றன. பெண்களின் சுயத்தையும், அவர்களின் முடிவெடுக்கும் உரிமையையும் கட்டுப்படுத்துகிற, ஆழமாக வேரூன்றிய ஆணாதிக்கக் கட்டமைப்புகளின் குறிகாட்டிகளாகவும் அவை இருக்கின்றன. ஆணவக்கொலைகள் அனைத்தும் சமூகப் படிநிலையைச் செயல்படுத்துகின்றன’ என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
"1993-ல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புப் பிரகடனத்தை ஐ.நா பொதுச்சபை நிறைவேற்றியது. அதில் அங்கம் வகித்த இந்திய அரசுக்கு, இந்தக் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தை இயற்றுகிற, வேறு உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிற பொறுப்பு இருக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனத்தின் 46-வது சட்ட உரையின்படி, ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை சமூக அநீதிகளிலிருந்தும் பிற சுரண்டல்களிலிருந்து பாதுகாக்க அரசு கடமைப்பட்டிருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றக் கோருவது நம் உரிமை," என்கிறார் வழக்குரைஞரும் எழுத்தாளருமான மு.ஆனந்தன்.
ஆணவக்கொலை தடுப்புச் சட்ட முன்வரைவைத் தமிழகமே உருவாக்கலாம். ராஜஸ்தான் சட்ட முன்வரைவுக்கு ஏற்பட்ட கதி அதற்கும் ஏற்படலாம்தான். ஆனால், அதன் பிறகு அதை மக்களின் விவாதப் பொருளாகவும், போராட்டமாகவும் ஆக்க முடியும். அது ஒரு கட்டத்தில், உரிய சட்டம் கொண்டுவரப்படுவதற்கு வழி வகுக்கும். அதன் பின்? சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வைப்பதற்கான போராட்டம் தொடரும்.
சாதிப் பாகுபாடும், சாதியப் பெருமிதமும் கலந்த தீண்டாமைக் கேவலம் நீடிக்கிற வரையில், ஆணவக் கொலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அதைத் தடுப்பதற்கான கருத்தியல் போராட்டமும், களப் போராட்டமும் இடைக்கால வெற்றிகளோடு தொடரும். சாதிப் படிநிலைக் கோபுரத்தைத் தகர்ப்பதில் இருக்கிறது இறுதி வெற்றி!
[0]
விகடன் டிஜிட்டல் பதிப்பில் (ஜூலை 2) எனது கட்டுரை
No comments:
Post a Comment