Saturday, 1 November 2025

கரூர் துயரம் ஒரு குறியீடு




41 –இது கணிதமுறை வரிசைப்படி 40, 42 ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் எண் அல்ல என்று பதிவாகியிருக்கிறது. கரூர் நகரின் வேலுசுவாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 அன்று முன்னிரவு தொடங்கியிருந்த பொழுதில் சுமார் 27,000 பேர் கூடியிருக்க, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உரையாற்றுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 10 பேர் குழந்தைகள். 124 பேர் காயமடைந்தனர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழக மக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள்.

பொதுவில் ஒரு நேரத்தை அறிவித்து, குடிநீர் வசதி கூட செய்யப்படாத நிலையில், தெரிவிக்கப்பட்டதை விடவும் மூன்று மடங்கு கூட்டத்தைத் திரளச் செய்து, மிகத் தாமதமாக விஜய் வந்ததுதான் நெரிசலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. காவல்துறையினர் தகுந்த முறையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டதாக முதலில் தவெக நிர்வாகிகள் கூறினார்கள். பின்னர் விஜய்யின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் இதில் அவருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் அதிமுக, பாஜக தலைவர்கள் கூறினார்கள். இப்போது, கூச்சமே இல்லாமல் இது திமுக–வின் சதி என்று சொல்கிறார்கள்.

துயரம் நேர்ந்த இடத்தில் கதறிக்கொண்டிருந்த மக்களைப் பார்க்காமல் சென்னைக்குத் திரும்பிய பிறகு தனது இதயமே நொறுங்கிவிட்டதாகவும், இதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார் விஜய். ஆனால் இதை வைத்து அரசியல் செய்கிறவர்களை அவர் தடுக்கவில்லை, அவர்கள் கூறுவதை மறுக்கவுமில்லை.

விவாதக் களம்

நிகழ்வின் மறுநாளே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கே சென்று பாதிக்கப்பட்டோர் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவ்வளவு விரைவாக அவர் அங்கே சென்றது ஏனென்று விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதக் களத்தில், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற ஆணைகளுக்கு எதிரான தவெக–வினரின் மேல்முறையீடு உச்சநீதிமன்றம் உடனடியாக எடுத்துக்கொண்டது, அதன் இடைக்கால ஆணைப்படி தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையம் விலக்கப்பட்டது, சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட்டது, அதன் புலனாய்வு தொடங்கிவிட்டது… இப்படியான செய்திகள் தொடர்கின்றன. இதில் இடைக்கால ஆணை பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம் எல்லை மீறுகிறதா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இதனிடையே, மேல்முறையீட்டாளர்களாக நிறுத்தப்பட்டவர்களில் இருவர், தங்களுக்கே தெரியாமல் தங்கள் பெயர்களில் வழக்குத் தொடுக்கப்பட்டதாகக் கூறினார்கள். அதைத் தனி மனுவாகத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அவர்கள் கூறுவது உண்மையென நிறுவப்படுமானால் தனது தற்போதைய தீரப்பை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த நிகழ்வு வரையில், விஜய் வருவது பற்றிய ஆர்வத்தை எகிறச் செய்தது போலவே, இப்போது கரூருக்குப் போவது பற்றிய எதிர்பார்ப்பை ஏற்றுவது உள்பட அவர் எப்படியெல்லாம் நகர்கிறார் என்று பல ஊடக நிறுவனங்கள் “பிரேக்கிங் நியூஸ்” சொல்லிக்கொண்டிருக்கின்றன.

சமூக அக்கறையோடு இவற்றைக் கவனிப்பவர்கள், அவர் இப்படியெல்லாம் நகர்வதன் பின்னணியில் அவரை நகர்த்துவது யார் என்று கேட்கிறார்கள். புலனாய்வு சந்தேகத்திற்கு இடமின்றி நடைபெறும், நியாயத் தீர்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு தமிழகம் காத்திருக்கிறது.

அடுத்தடுத்த தகவல்களைக் கடந்த, அரசியலும் சமூகமும் தலைமுறையும் சார்ந்த ஆழ்ந்த கவலைகள் இதில் பொதிந்திருக்கின்றன.

முந்தைய நெரிசல்கள்

செய்திகளின் உ லகத்தில் கூட்ட நெரிசல் சாவுகள் புதிதல்ல. கால்பந்துப் போட்டியைக் காண வந்தவர்கள், இசை நிகழ்ச்சியை ரசிக்கக் கூடியவர்கள், வழிபாட்டுக்காகச் சேர்ந்தவர்கள் எனக் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் இறந்துபோன நிகழ்வுகள் அனைத்து நாடுகளிலிருந்தும் செய்திகளாக வந்திருக்கின்றன.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட துயரங்கள் பல முறை நடந்திருக்கின்றன. 1954இல் உத்தரப் பிரதேசத்தின் அலஹாபாத்தில் கும்பமேளா வழிபாட்டுக்காக லட்சக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் நெரிசல் ஏற்பட்டு 800 பேர் இறந்தார்கள். 2008இல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் சாமுண்டாதேவி கோவிலின் குறுகிய பாதையில் ஏற்பட்ட நெரிசலில் 200 பேருக்கு மேல் மடிந்தார்கள். அதே ஆண்டில் இமாசல பிரதேசத்தின் நைனாதேவி கோவில் விழாவில், ஒரு பாலம் இடிந்ததாகப் பரவிய வதந்தியால் ஏற்பட்ட பதற்றத்தின் நெரிசலில் 160 பேர் மரணமடைந்தார்கள்.

குஜராத்தின் சமலாஜி கோவில் கூட்ட நெரிசலில் 8 பேர் மாண்டார்கள். மறுபடியும் அதே ஆண்டில் மஹாராஷ்டிராவில் ஹாஜி அலி தர்காவில் நிகழ்ந்த நெரிசலில் 18 பேர் மூச்சிழந்தார்கள். 2011இல் கேரளத்தின் சபரிமலை புல்மேடு பகுதியில் சாலையில் ஒரு ஜீப் கவிழ்ந்ததால் பரவிய பதற்றத்தின் நெரிசலில் 116 பேர் மறைந்தார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 29 அன்று உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ், திரிவேணி சங்கமம் பகுதியில் திரண்டிருந்த மக்களில் அதிகாரப்பூர்வ தகவலின்படி 30 பேர் இறந்தார்கள். கடந்த ஜூன் 4 அன்று கர்நாடகத்தில் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணியின் ஐபில் வெற்றியைக் கொண்டாடக் குவிந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 11 பேர்களின் உயிர் பறிபோனது. இந்த நிகழ்வுகளைப் போன்றதுதான் கரூர் துயரம்.

தியாகமும் பரிதாபமும்

கம்யூனிஸ்ட் இயக்கம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் போராட்டக் களமிறங்கி, அரசாங்க ஒடுக்குமுறையாலும் எதிரிகளின் வன்முறையாலும் உயிர் நீத்ததெல்லாம் வரலாறுகளாக இருக்கின்றன. அந்தத் தியாகங்களுடன் கரூர் கண்ணீரை ஒப்பிடுவதற்கில்லை, ஒப்பிட வேண்டியதுமில்லை. ஆனால், வேறுபாடின்றி வேதனையைப் பகிர்ந்தவர்கள், அந்தப் பரிதாப மரணங்கள் அரசியல் மூலதனமாக்கப்படுகிற அருவருப்பைக் கண்டு விசனம் கொள்கிறார்கள், விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.

கூட்டத்திற்குள் சிலர் புகுந்து பதற்றத்தைக் கிளப்பினார்கள் என்ற சித்தரிப்பை நிறுவுவதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் நடக்கின்றன. அப்படிச் சிலர் குற்றம் சாட்டுகிற காணொளிகள்தான் வலம் வருகின்றனவேயன்றி, அப்படி நடந்ததாகக் காட்டுகிற பதிவுகள் எதுவும் வரவில்லை. அன்று அங்கே கூடியிருந்தவர்களே எடுத்துப் பகிர்ந்துள்ள காணொளிகளிலும் யாரோ ஊடுருவிய காட்சிகள் இல்லை. ஆகவே, அந்தத் துயரம் எதிர்பாராத வகையில், கூட்ட மேலாண்மையின் பலவீனத்தால் நடந்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. அதற்கு முன்பாகவும் விஜய் வருகைகளுக்குப் பெருமளவில் கூட்டம் திரண்டதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புகளையும் கட்டுப்பாடுகளையும் மேலும் கறாராக்கியிருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்தான்.

ஆயினும், மேலே குறிப்பிட்ட நெரிசல் துயரங்களுக்கும் கரூருக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. பல மணி நேரம் முன்னதாகவே மக்களை வரச் செய்ததில், நேரம் கடக்கக் கடக்கப் பார்வையாளர்கள் பெருகிக்கொண்டே போக வைத்ததில் உள்நோக்கம் இருந்திருக்கிறது. விஜய் ஒரு “பெருங்கூட்ட ஈர்ப்பாளர்” என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிற உள்நோக்கம். ஒரு சினிமாவுக்கு, அதன் நட்சத்திர நடிகருக்குச் செய்யப்படுகிற பிம்பக் கட்டுமானம் போன்றதுதான் இது. தவெக தலைவரது திரையுலகப் பின்னணியின் பவர் லைட்டுகளோடும் கேமரா கோணங்களோடும் கட்டவுட் சாரங்களோடும் இணைத்துப் பார்க்கலாம்.

இதைச் சொல்ல வேண்டிய தேவை ஏன் வருகிறது? கட்சியைத் தொடங்கியபோது மட்டுமல்லாமல், அதன் பிறகும் அவருக்குத் திரளும் கூட்டம் முழுக்க முழுக்க அவருடைய சினிமா ரசிகர்கள்தான். படங்களில் அவர் பேசிய அரசியல் வசனங்களுக்குக் கைதட்டியவர்களேயன்றி, அரசியல் சிந்தனைகளோடு உருவெடுத்தவர்களில்லை. அவ்வாறு அவர்களை உருவெடுக்கச் செய்கிற அக்கறையும் அவரிடமிருந்தும் வெளிப்படவில்லை.

அரசியல் தலைவர் விஜய் முன்வைக்கும் கொள்கைகள் பற்றிய புரிதலை விடவும் வலுவாக இருப்பது, சினிமா தளபதி விஜய் மீதான ஈர்ப்புதான். அரசியல் செயல்பாட்டாளர்களாக அவர்களை வளர்த்தெடுப்பதற்கு மாறாக, ரசிகர் மன்ற மனநிலையில் வைத்திருப்பதாகவே அவருடைய வழிமுறைகள் இருந்து வந்திருக்கின்றன.

உருவங்களின் குறியீடுகள்

பெரியார், அம்பேத்கர், அண்ணா, வள்ளலார், திருவள்ளுவர் என கூட்டத் திடல்களில் உருவப் படங்கள் வைக்கப்படுகின்றன. அவர்கள் முன்வைத்த பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, மாநில சுயாட்சி, மதமாகிய பேய் விரட்டல், பிறப்பொக்கும் எனும் கோட்பாடுகள் முன்வைக்கப்படுவதில்லை. அந்த உருவங்கள் அவர்கள் உயர்த்திப் பிடித்த இத்தகைய லட்சியங்களுக்கான குறியீடுகள்தான். அதைப் புரிந்துகொள்கிறவர்கள் புரிந்துகொள்ளட்டும், மற்றவர்கள் விஜய் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிடுவது என்ன விதமான அரசியல் பயிற்சி?

பின்னர் எம்ஜிஆர் உருவத்தைச் சேர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் அவர் மீது ஒரு பக்தியோடு இருப்பவர்களை நெருங்கும் விதத்தில் அப்படி வைத்தார்கள் என்று புரிந்துகொள்ளலாம்தான். ஆனால் உண்மையில் அதன் குறியீடு, அவர் திமுக எதிர்ப்பை மட்டுமே தன்னுடைய மைய அரசியலாக வைத்துக்கொண்டார் என்பதுதான்.
விஜய் பரப்புரைகளிலும் அதுவே எதிரொலிக்கிறது. அவர் கூட்டிய முதல் மாநாட்டிலும் அதன் பிறகு ஓரிரு மேடைகளிலும், “பாஜக சித்தாந்த எதிரி, திமுக அரசியல் எதிரி,” என்று பேசினார். சித்தாந்த எதிரியைப் போகிற போக்கில் இரண்டொரு இடங்களில் விமர்சித்துவிட்டு, மீதிப் பேச்சு முழுக்க திமுக மீதான சாடல்களாகவே இருந்து வந்திருக்கிறது.

பாசாங்குப் பரிவு

ஒரு வகையில் இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் இதே அரசியலைச் செய்துவந்த அதிமுக–வுக்கு அவர்களது வாக்கு வங்கியின் இருப்பைக் குறைத்துவிடுமோ என்ற கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆகவேதான் அவரைத் தனது கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி அழைப்புவிடுத்து வருகிறார்.

சித்தாந்த எதிரியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அதிமுக–வின் அழைப்பை அவர் ஏற்பாரா என்று கேட்கப்பட்டது. இப்போதோ, கரூர் நுழைவாயிலில் நின்றுகொண்டு, அவருக்குப் பரிவோடு கை நீட்டுகிறது பாஜக. முன்பு ஒரு சினிமாவில் பேசிய வசனத்துக்காக அவரை இந்துக்களின் எதிரி என்றும், அதற்குக் காரணம் அவர் கிறிஸ்துவர் என்றும் கூறி, அவருடைய உண்மைப் பெயர் ஜோசப் விஜய் என “அம்பலப்படுத்தி” அரசியல் செய்தவர்கள் பாஜக தலைவர்கள். அதை அவர் மறந்துவிடுவாரா? பல்வேறு நிர்ப்பந்தக் கெடுபிடிகளில், பாஜக–வின் தற்போதைய பரிவுக்கு விசுவாசத்தைப் பரிசளிப்பாரா?

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரும், காயமடைந்தவர்களும் அரசியல் பேச்சைக் கேட்பதை விட அவருடைய முகத்தைப் பார்ப்பதற்காகவே கூட்டத்திற்குச் சென்றதாகத் தெரிவிக்கிறார்கள். அவர் மீதோ, அவருடைய கட்சியின் மீதோ அவர்கள் எள்ளளவும் வருத்தத்தை வெளிப்படுத்தவில்லை. தன் மகளைப் பறிகொடுத்திருக்கும இளம் தாய், “விஜய் அண்ணா முகத்தைப் பார்க்கனும்னு ரொம்பவும் ஆசைப்பட்டான்னுதான் கூட்டிட்டுப் போனோம். ஆனா அவர் முகத்தைப் பார்க்காமலே செத்துப் போயிட்டா,” என்று உருக்கத்துடன் சொன்னதை உண்மையறியச் சென்ற வழக்குரைஞர் குழுவினர் தெரிவிக்கிறார்கள். இந்த அன்பு புரிந்துகொள்ளத் தக்கதே.

வளர்ப்பும் வார்ப்பும்

அன்பினால் பின்தொடர்வோரை, ஆதரவுப் படையாக மட்டும் வைத்துக்கொண்டால் போதுமா, அரசியலாக வளர்த்தெடுக்க வேண்டாமா? அரசியலற்ற தலைமுறைகளாக வார்க்கப்படுவது அடிப்படையில் அவர்களுக்குத் தீங்காகவே முடியும். சொந்தக் கம்பீரம் இல்லாதவர்களாக, கேள்வி கேட்காதவர்களாக, எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாற்றி, சமத்துவத்தையும் சமூகநீதியையும் பகையாகக் கருதும் கூட்டங்களிடம் பிடித்துக்கொடுத்துவிடும்.

சினிமா வழியைப் பின்பற்றிக் கூட்டம் சேர்த்த உத்தியாலும், ரசிக மனநிலையை மட்டுமே பயன்படுத்திய அடுத்த மட்டத் தலைவர்களின் பயிற்சியின்மையாலும் விளைந்ததே கரூர் சோகம். அதன் தொடர்ச்சியான சோகமாக விஜய் கட்சி பாஜக பிடிக்குச் சென்றிருப்பதாகவே தெளிவாகத் தெரிகிறது என்கிறார்கள் அரசியல் கருத்தாளர்களான ஊடகவியலாளர்கள்.

கொள்கைப் பிடிப்பில்லாத ஓர் “அ–அரசியல்” சேனையாக உருவெடுப்பது, கல்வி உரிமையிலும் பாகுபாட்டைப் புகுத்திய சித்தாந்தத்தை, நாட்டின் கலாச்சார மாண்பெனத் தூக்கிப் பிடிக்கிற, மக்கள் வாழ்வை கார்ப்பரேட் பிடியில் ஒப்படைக்கிற அப்பட்டமான வலதுசாரிகளுக்கு ஊழியம் செய்வதற்கே இட்டுச் செல்லும்.

ஜெர்மனியில் அவ்வாறு உருவான தலைமுறைகள்தான் நாஜி சித்தாந்தம் மேலோங்குவதற்கும், சர்வாதிகாரி ஹிட்லர் படுகொலைத் தாண்டவமாடுவதற்கும் தளமமைத்துக் கொடுத்தன. சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சர்வாதிகார ஆளுமைகள் செல்வாக்குப் பெற்றதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக, அரசியல் உணர்வு அகற்றப்பட்ட தலைமுறைகளின் வளர்ச்சியை உலக நிலவர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இயல்பான அரசியல் உணர்வை முனை மழுங்கடிக்கும் கைங்கரியத்தை ஏற்கெனவே தில்லி பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்கள் செய்கின்றன. ஐஐடி வளாகத்திற்குள் அச்சடித்த பாடங்களை மட்டும்தான் படிக்க வேண்டும், சமூகநீதி, சாதி ஒழிப்பு பற்றியெல்லாம் கலந்துரையாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதை மறப்பதற்கில்லை. சமய வேறுபாடின்றி பற்பல ஆன்மீக பீடங்கள், திரைப்படங்கள், ஊடகக் குழுமங்கள், அவ்வப்போது கிளம்பும் “விழிப்புணர்வு” குழுக்கள்… இதே காரியத்தைச் செய்கின்றன. கார்ப்பரேட் ஆதிக்கர்களுக்கும் அவர்களைத் தூக்கிச் சுமக்கும் ஒன்றிய சேவகர்களுக்கும் உவப்பான சமூக உளவியல் இது.

ஆம், 41 வெறும் எண் அல்ல. மரபணு நீக்கப்பட்ட விதைகள் போல அரசியல் உணர்வு அகற்றப்பட்ட தலைமுறைகள் வார்க்கப்படுவதன் குறியீடு அது.

[0]
செம்மலர் நவம்பர இதழில் எனது கட்டுரை