Thursday, 6 November 2025

சசி தரூர் எழுப்பும் வாரிசு அரசியல் விவகாரம் – மோடியின் குரலுக்கு வலுச் சேர்க்கிறாரா?

 

வாரிசு அரசியல் இந்தியாவுக்குப் புதியதல்ல, அது பற்றிய விவாதங்களும் கூட புதியவையல்ல. இப்போது இதை முன்வைத்திருப்பவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், உயர்நிலைத் தலைவர்களில் ஒருவருமான சசி தரூர். கேரளத்தைச் சேர்ந்தவரான இவர் இப்படி ஏதாவது சர்ச்சையைக் கிளப்புவதும் புதிய செய்தியல்ல, ஆயினும் பிஹார் மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள், 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று நடைபெற உள்ள சூழலில் சொந்தக் கட்சியையே விமர்சிக்கும் தொனியில் அவர் கருத்துக் கூறியிருக்கிறார். 


காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாகத் தங்களது எதிர்வினைகளை அடக்கி வாசித்துக்கொண்டிருக்க, பாஜக தலைவர்கள் தேர்தல் நேர பம்பர் பரிசு போல இதை எடுத்துக்கொண்டு குறிப்பாக ராகுல் காந்தியைச் சாடுகிறார்கள். தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் ஈடுபட்டுள்ள வேறு பல கட்சிகள் வெளிப்படையாகக் கருத்துக் கூறவில்லை. அந்த மௌனத்தை, நாட்டின் அரசமைப்பு சாசன மாண்பைப் பாதுகாப்பதோடு தொடர்புள்ள மிக முக்கியமான அரசியல் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் களச் சூழலில் இதை ஒரு விவகாரமாக்க வேண்டாம் என்ற நிதானமாக எடுத்துக்கொள்ளலாம்.


பிராஜக்ட் சிண்டிகேட் கட்டுரை


சசி தரூர் இந்தியப் பத்திரிகைகள் எதிலும் இதை எழுதவில்லை. ‘பிராஜக்ட் சிண்டிகேட்’ என்ற பன்னாட்டு கருத்துப் பரிமாற்றத் தளத்தில் எழுதியிருக்கிறார்.  செக் நாட்டின் பிராக் நகரில் இதன் தலைமையகம் உள்ளது. அதன் அக்டோபர் 31 பதிப்பில் ‘குடும்பத் தொழிலாகிவிட்ட இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் அவர் கட்டுரையை எழுதியிருக்கிறார்.


வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது, குடும்பப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அல்லாமல் தகுதிகளின் அடிப்படையிலான தலைமைக்கு மாற வேண்டிய நேரம் இது என்ற கூர்மையான கருத்துகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். “சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா வத்ரா ஆகியோர் அடங்கிய நேரு-காந்தி பாரம்பரியத்தின் செல்வாக்கு, இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றோடு பிணைந்திருக்கிறது. ஆயினும், அரசியல் தலைமை ஒரு பிறப்புரிமையாக இருக்க முடியும் என்ற கருத்தையும் இது வலுப்படுத்தியிருக்கிறது.” என்று எழுதியிருக்கிறார் தரூர்.


“தலைமையைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறைகள் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மையற்றதாக இருக்கின்றன. ஒரு சிறிய குழுவால் அல்லது ஒற்றைத் தலைவரால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு தற்போதைய நிலவரங்களை மாற்றியமைப்பதில் ஆர்வம் இல்லை," என்றும் கூறியிருக்கிறார்.  2022இல் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனவர் சசி தரூர். அந்தத் தேர்தலில்தான் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். விதிகளின் படி அவர்தான் கட்சி அமைப்பின் தலைவர் என்றாலும், பொதுவெளியில் கட்சியின் தலைவர்களாக ராஜீவ் காந்தி  – சோனியா காந்தி இருவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா பெயர்களே கவனம் பெறுகின்றன. 


அனைத்துக் கட்சிகளிலும்

 

கட்டுரையை அவர் நேரு குடும்பத்தோடு  நிறுத்திக்கொள்ளவில்லை. வம்சாவளி வாரிசுரிமை அரசியல் வட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவுகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒடிஷா மாநிலத்தில் மக்களிடையே மிகுந்த செல்வபாக்கைப் பெற்றிருந்தவர் பிஜூ ஜனதா தளம் கட்சியை உருவாக்கியவரான பிஜு பட்நாயக். அவருடையை மறைவுக்குப் பிறகு, மகன் நவீன் பட்நாயக் நாடாளுமன்ற மக்களவையில் காலியான இடத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது நவீன் பட்நாயக்தான் ஒடிஷாவின் நீண்டகால முதலமைச்சராக இருந்து வருகிறார்.


"மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரே, தலைமைப் பொறுப்பைத் தன் மகன் உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்தார். இன்று உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே வெளிப்படையாகவே காத்துக்கொண்டிருக்கிறார்," என்றும் தரூர் கூறியிருக்கிறார்.


"இது உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் நிலைமைக்கும் பொருந்தும். அவருடைய மகன் அகிலேஷ் யாதவ் பிறகு அந்த இடத்திற்கு வந்தார்; இப்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் தலைவராகவும் உள்ளார். பிஹாரில், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுக்குப் பின் அவருடைய மகன் சிராக் பாஸ்வான் வாரிசானார்," என்று  மேலும் சில உதாரணங்களைக் காட்டியிருக்கிறார். ஆயினும், அதே பிஹாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடவில்லை. அணியின் வெற்றி பற்றிய அக்கறையோடு இந்த மௌனம் என்று புரிந்துகொள்ளலாமா?


“ஜம்மு–காஷ்மீரில் மூன்று தலைமுறைகளாக அப்துல்லாக்கள் (தேசிய மாநாடு) தலைமை வகித்து வருகின்றனர். அதன் முக்கிய எதிர்க்கட்சியிலும் (மக்கள் ஜனநாயகக் கட்சி) இரண்டு தலைமுறைகளாக முஃப்திக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பஞ்சாபில், நீண்ட காலமாக பிரகாஷ் சிங் பாதல் வழிநடத்திய சிரோமணி அகாலி தளம் தற்போது, அவருடைய மகன் சுக்பீர் சிங் பாதல் பொறுப்பில் இருக்கிறது. தெலுங்கானாவில், பாரத் ராஷ்டிர சமிதி  நிறுவனர் கே. சந்திரசேகர ராவ் மகனுக்கும் மகளுக்கும் இடையே தலைமைக்கான போராட்டம் தற்போது நடந்து வருகிறது. தமிழ்நாட்டில், காலஞ்சென்ற மு. கருணாநிதியின் குடும்பம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டுப்படுத்துகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

துணைக்கண்டம் முழுக்க

தரூர் தனது வாதத்தில், “இந்த வாரிசு அரசியல் போக்கு ஒரு சில முக்கியக் குடும்பங்களோடு சுருங்கிவிடவில்லை.  மாறாக, கிராம ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றத்தின் உயர் நிலைகள் வரை இந்திய ஆட்சிக் கட்டமைப்பில் ஆழமாகப் பிணைந்திருக்கிறது,” என்று கூறுகிறார்.


"நியாயமாகச் சொன்னால், இத்தகைய வாரிசு அரசியல் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே நடைமுறையில் இருக்கிறது,” எனக்கூறும் தரூர். பாகிஸ்தானில் பூட்டோக்கள், ஷெரீஃப்கள், வங்கதேசத்தின் ஷேக், ஜியா குடும்பங்கள், இலங்கையின் பண்டாரநாயகா, ராஜபக்ச குடும்பங்கள் ஆகிவற்றை சாட்சியமாக்கியிருக்கிறார்.


இவ்வாறு தொகுத்துக் கூறிவிட்டு, “வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. திறமை, அர்ப்பணிப்பு அல்லது வேர்மட்டத் தொடர்புகளுக்கு மாறாக வம்சாவளியால் அரசியல் அதிகாரம் தீர்மானிக்கப்படும்போது, ஆட்சியின் தரம் குறைகிறது. ஒரு திறமை வாய்ந்த ஒரு சிறிய குழுவிலிருந்து தேர்ந்தெடுப்பது ஒருபோதும் நன்மையளிக்காது; அத்துடன் வேட்பாளர்களின் முக்கியத் தகுதி அவர்களின் குடும்பப் பெயராக இருக்கும்போது அது மிகவும் சிக்கலாகிறது," என்கிறார்.


“உண்மையில், வம்சாவளியில் வருகிறவர்கள் எளிய  மக்கள் எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து பொதுவாக விலகியே இருப்பதன் காரணமாக, அவர்கள் தங்கள் தொகுதிகளைச் சேர்ந்தோரின் எதிர்பார்ப்புககளைத் திறம்பட நிறைவேற்றும் தகுதியில் போதாமையுடன் இருக்கிறார்கள். வம்சாவளி முறையை விடுத்து, தகுதி அடிப்படையிலான தலைமைக்கு  மாறுவதற்கு இதுவே சரியான நேரம்.


இதற்கு, சட்டப்படி கட்டாயமாக்கப்பட்ட பதவிக் கால வரம்புகளை விதிப்பது முதல், அர்த்தமுள்ள உட்கட்சித் தேர்தல்களைக் கட்டாயமாக்குவது வரையிலான அடிப்படைச் சீர்திருத்தங்கள் தேவை. அத்துடன், வாக்காளர்களைத் தகுதியின் அடிப்படையில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக் கல்வி கற்பிக்கவும் அதிகாரம் அளிக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசியல் ஒரு குடும்பத் தொழிலாக இருக்கும் வரை, 'மக்களின் அரசாங்கம், மக்களால் ஆன அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம்' என்ற ஜனநாயகத்தின் உண்மையான வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போகும்,” என்று தரூர் கட்டுரையை முடித்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்த நேரம்

இயல்பான காலக்கட்டத்தில் இதை அவர் எழுதியிருந்தால்,  அக்கறை மிகுந்த உரையாடல்கள் தொடங்கியிருக்கும். வாரிசு அரசியலின் பின்னணி, அதன் நன்மைகள், தீமைகள் குறித்த ஆழ்ந்த விவாதங்கள் புறப்பட்டிருக்கும். ஆனால், பிஹார் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பல மாநிலங்கள் அடுத்த ஆண்டில் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில் இது பற்றி எழுதியிருப்பதுதான், பொதுவாகப் பல்வேறு கட்சிகளைப் பொறுத்தவரையில் சங்கடமான மௌனத்தையும், பாஜக–வுக்கு மட்டும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது. இது ராகுல் மீதான நேரடித் தாக்குதல்தான் என்று பாஜக தலைவர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள்.


ஒரு பொதுத்தன்மையைக் கொண்டுவர முயன்றுள்ள தரூர், ஏன் பாஜக–வுக்குள் பல்வேறு மட்டங்களில் வாரிசுகளின் நடமாட்டம் குறித்து எதுவும் சொல்லவில்லை? பிரதமரின் குடும்பத்தினர் என யாரும் அரசியலுக்கு வரவில்லைதான். ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் உ.பி. மாநில சட்டமன்ற உறுப்பினர். ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மகன் துஷ்யந்த் சிங் மக்களவை உறுப்பினர். முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த கோபிநாத் முண்டே மகன் பிரிதம் முண்டே மக்களவை உறுப்பினர். ஹரியானாவின் முன்னாள் பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் யாதவ் மகன் பூபேந்திர யாதவ் ஒன்றிய அமைச்சர். சத்திஸ்கர் முன்னாள் முதல்வர் ரமன் சிங் மகன் அபிஷேக் சிங் மக்களவை உறுப்பினர். மாநில சட்டமன்றங்களிலும் பாஜக அமைச்சரவைகளிலும் இப்படிப்பட்ட வாரிசுகள் பலர் இருக்கிறார்கள். சசி தரூருக்குக் கிடைக்க முடியாத தகவல்கள் இல்லை இவை.


பாஜக–வை விட்டுவிட்டது ஏன் என்று சில ஊடகங்கள் எழுப்பும் கேள்வியை காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர்கள் எதிரொலிக்கிறார்கள். அக்கட்சியின் உ.பி. மாநில தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மக்களவை உறுப்பினரும், ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அலுவலருமான உதித் ராஜ், “வம்சாவளி அணுகுமுறை அரசியலோடு மட்டுமல்லாமல்,  இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பரவியிருக்கிறது. ஒரு மருத்துவரின் மகன் மருத்துவராகிறார், ஒரு வணிகரின் பிள்ளை அதே வணிகத்தைத் தொடர்கிறார்.  அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குக் கூறியிருக்கிறார். வருவாய்க்கான தொழில்களோடு மக்கள் சேவைக்கான அரசியல் ஈடுபாட்டை ஒப்பிடலாமா? சரியான வாதங்களை வைப்பதற்கு இவர்களெல்லாம் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது.


சரியான பதில் வேறு எங்கோ இருக்கிறது. அதைத் தேடுவதற்கு முன் வேறொரு வேடிக்கையையும் பார்த்துவிடுவோம்

அதிலென்ன வியப்பு?

“வாரிசு அரசியல் இந்தியாவின் கலாச்சாரப் பழக்கம். மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில், தந்தை செய்யும் தொழிலை மகனோ மகளோ தொடர்வது இயல்பு. ஆகவே, அரசியலிலும் ஒரு குறிப்பிட்ட அளவு 'பரிவார் வாத்' (குடும்ப அரசியல்) இருப்பதில் வியப்பில்லை.” –இந்தக் கருத்தைக் கூறியது யார் தெரியுமா? உங்கள் ஊகம் சரிதான், சசி தரூரேதான்!


‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளில் உள்ள வாரிசு அரசியல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பல இடங்களில் பேசியபோது, அதற்குப் பதிலடியாக இதைக் கூறினார் தரூர். “வாரிசு அரசியலை மோடி விமர்சிப்பது முரண்பாடானது. பாஜகவிலும் கூட, உச்சி மட்டத்தில் இருக்கும் சில தலைவர்களைத் தவிர, மற்ற அமைச்சர்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் பலர் மூத்த பாஜக நிர்வாகிகளின் மகன்களோ மகள்களோதான்,” என்றார் அவர். 2024 மார்ச் மாதம் இவ்வாறு ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். 19 மாதங்கள் கடந்தபின் தற்போது எழுதியுள்ள கட்டுரையில் வாரிசு அரசியலை விமர்சித்திருக்கிறார்!


உலகம் முழுவதுமே நேரடியாகவோ, சடங்குப் பூர்வமாகவோ வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பிரிட்டனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்திற்கே முழு அதிகாரம் என்றாலும், அங்கே மன்னரின் கீழ் குடியரசு என்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறதே! ஜப்பானில் நாட்டின் சின்னமாகவும் மக்கள் ஒருமைப்பாட்டின் குறியீடாகவும் ஓர் அடையாளப்பூர்வ அரசாராட்சி தொடர்கிறதே! இன்னும் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஸ்வீடன்,  நார்வே, டென்மார்க், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் அடையாளப் பூர்வமான அரசராட்சி நடைமுறையில் இருக்கிறது. கனடா நாட்டிற்கு இப்போதும் பிரிட்டன் மன்னர்தான் பெயரளவுக்கு அரசுத் தலைவர்.

அரசமைப்பின் அரண்!

சவூதி அரேபியா, ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், புரூனை ஆகிய நாடுகளில் இன்றளவும் பரம்பரை மன்னராட்சிதான் நடைபெறுகிறது. இந்தியாவில் அப்படி யாரும் சட்டப்படி வாரிசுரிமை கோரி அரசியலுக்கு வர முடியாது என்பது அரசமைப்பு சாசனத்தின் சிறப்பானதொரு தனித்துவம். இத்தனைக்கும் பல பேரரசர்களின் கொடிகள் பறந்த நாடுகளின் இணைப்பில் உருவான மகத்தான் இந்திய அரசு என்ற போதிலும், இவ்வாறு வாரிசுரிமை அடிப்படையில் அதிகாரத்தைக் கோர முடியாது.


அதாவது, வாரிசுகள் அதிகாரப்பூர்வ  அரசியல் களத்திற்கு வருவதற்குத் தடையில்லை. ஆனால் நடைமுறையில், தலைவர்களின் பிள்ளைகள் என்பதாலேயே கட்சிகளுக்குள் வாய்ப்பு வாசகல்கள் திறக்கப்படுவதைப் பார்க்கிறோம். அதை அந்தந்தக் கட்சிகளின் அடுத்த மட்டத் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையில் ஏற்கிறார்கள், பொதுமக்களும் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், இங்கே ஜனநாயக முதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்ற நிலையில், வாரிசுகளைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதன் மூலம் உட்கட்சி மோதல்கள் பெருமளவுக்குத் தவிர்க்கப்படுகின்றன என்ற எதார்த்தத்தையும் புறக்கணிப்பதற்கில்லை.


அப்படிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்கிறார்களா என்பதே கவனிக்கப்பட வேண்டியது. தலைவர் குடும்பம் என்பதை ஒரு அறிமுகத்துக்கு மட்டும் பயன்படுத்தி, பின்னர் அமைப்பு சார்ந்த பணிகளாலும் அரசியல் நிலைப்பாடுகளாலும் தங்களுடைய அசைக்க முடியாத ஆளுமையை நிறுவிக் காட்டியிருப்பவர்களையும் காண்கிறோம். அவ்வாறு வாரிசுளாக வந்தவர்களில் யாரெல்லாம் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், யார் அடையாளமின்றிப் போனார்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய இடத்தில்தான்  சசி தரூர் கண்ணை மூடிக்கொள்கிறார்.


எடுத்துக்காட்டாக, இன்று நாடு தழுவிய அளவில் மதச்சார்பின்மை, சமூக நீதி, மொழி உரிமை உள்ளிட்டவற்றை உயர்த்திப் பிடிப்பதில் தமிழகத்தின் திமுக உள்பட இந்தியா கூட்டணியில் இருக்கும் வாரிசுகள் முத்திரைப் பங்கு வகிப்பதை அதே மாண்புகளுக்காக வாதாடுவதாகக் கூறும் தரூர் ஏற்கிறாரா இல்லையா?   


வாரிசு என்பது மட்டுமே அடிப்படைத் தகுதியாக ஒருவரைக் கொண்டுவருவது ஆரோக்கியமற்ற அரசியல்தான். அதே போல, வாரிசு என்பதற்காகவே வரக்கூடாது என்று தடுப்பதும் உரிமை மறுப்புதான். சமூக உளவியலோடு தொடர்புள்ள இந்த அரசியல் நுட்பம் பற்றிய தெளிவு இந்தியச் சூழலில் மிக மிகத் தேவை. அந்தத் தெளிவை வெளிப்படுத்தாததால், தனிப்பட்ட குமுறல்களிலிருந்தே இதை இந்நேரத்தில் எழுதியிருக்கிறார் என்ற விமர்சனத்திற்குத் தாராளமாக இடமளித்திருக்கிறார் சசி தரூர்.

கொள்கை மனம் விரிய வேண்டும்

இன்னொரு பக்கத்தில், “நீங்கள் மட்டும் அரசியல் களத்திற்கு வந்தால் போதாது, உங்கள் குடும்பத்தினரும் விரும்பி ஏற்று இயக்கத்தில் பங்கேற்க முன் வர வேண்டும். அதற்கேற்ப உங்கள் அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும்,” என்று இடதுசாரிக் கட்சிகளுக்குள் தோழர்களுக்கு அறைகூவல் விடுக்கப்படுகிறது.


குடும்பமே கட்சிதான் என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு அங்கே ஒரு தனிப் பெருமிதம். அடிப்படையில் மற்ற கட்சிகள் இதை ஏற்கின்றன என்றாலும், உள் ஜனநாயகத்தை மேலோங்கச் செய்வதில், மனக்குறைகளுக்கு இடமில்லாத பங்கேற்புச் சூழலை விசாலப்படுத்துவதில் அந்தக் பெருமிதத்தைக் கையகப்படுத்திடும் கொள்கை மனம் விரியவேண்டும்.

[0]

-விகடன் ப்ளஸ் (நவம்பர் 5) கட்டுரை


No comments: