Saturday, 27 December 2025

`மக்கள் விரோத' மசோதாக்களுக்கு மத்தியில் சிறு மகிழ்ச்சி - தாய் மொழிகளில் அதிகம் பேசும் எம்.பி-க்கள்!

 இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகளோடும் மொழிபெயர்ப்பு முன்னேற்றங்களோடும் 22 மொழிகளையுமே ஒன்றியத்தில் செயல்படுத்த முடியும். அதை செயல்படுத்தாததற்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது?


தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில், தேசத்தந்தை ‘மகாத்மா காந்தி’ பெயரை பா.ஜ.க அரசு நீக்கிவிட்டதால், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அனல் வீசியது. கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைப் புகலிடமாக ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம் திகழ்ந்துவருகிறது. அதில் இருந்த தேசத்தந்தை ‘மகாத்மா காந்தி’ பெயரை நீக்கவும், அதன் உள்ளடக்கத்தை நீர்த்துப் போகச் செய்யவும் ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது.

அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினர். அதற்காக, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி-க்கள் மீது உரிமை மீறல் புகாரை பா.ஜ.க எம்.பி-க்கள் அளித்ததுடன், அது தொடர்பாக விளக்கம் கேட்டு எட்டு எம்.பி-க்களுக்கும் பா.ஜ.க அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

எளிய மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வாதாடியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நோட்டீஸ். ஆனால், அது தொடர்பான விவாதங்களில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டிய பிரதமர், நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாட்டிலேயே இல்லை. அவர் விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்கு பறந்துசென்றுவிட்டார். ‘அவருக்கு யார் நோட்டீஸ் கொடுப்பது?’ என்ற வேதனைக் கேள்விகள் எழுகின்றன.

டிசம்பர் முதல் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், அணுசக்தித் துறையில் தனியார் நுழைவு, காப்பீட்டுத் தொழிலில் 100 சதவிகித வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட சட்டங்கள் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தாய்மொழிகளில் பேச்சு

இத்தனைக்கும் மத்தியில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது குளிர்காலக் கூட்டத்தொடரில், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் மாநில மொழிகளில் அதிகமாக இருந்தன என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி. ஒன்றிய ஆட்சியாளர்களின் மொழித்திணிப்புக் கொள்கையின் விளைவாக, மாநில மொழிகள் அவமதிக்கப்பட்டு, புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியில் பெயர்சூட்டப்பட்ட அந்தச் சட்டங்கள் குறித்து பல உறுப்பினர்கள் தங்களின் தாய்மொழிகளில் உரையாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் தனது தாய்மொழியில் பேசினால், அதை அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் மற்ற உறுப்பினர்களால் கேட்க முடியும். அதற்கான மொழிபெயர்ப்பு வசதி இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததன் பின்னணியில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இப்படியொரு நல்ல ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். இதுவும், மொழிபெயர்ப்பு வசதியுமாகச் சேர்ந்து, பல உறுப்பினர்கள் தங்கள் மொழிகளில் பேச முன்வந்திருக்கிறார்கள்.


                                                    மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய்


மொத்தம் 535 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 160 உரைகள் முழுமையாக அல்லது பகுதியளவில் மாநில மொழிகளில் அமைந்தன. அதில் முதலிடம் தமிழ்தான். தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டன. அடுத்ததாக மராத்தி. அதில், 43 உரைகள். வங்க மொழியில் 25 உரைகள். பிற மொழிகளில் 42 உரைகள் வந்திருக்கின்றன என்று மக்களவைச் செயலகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய மழைக்காலக் கூட்டத்தொடரில் தமிழில் 13, மராத்தியில் 12, வங்கத்தில் 10 என்ற அளவில் பேச்சுகள் இருந்தன என்றும் அந்தத் தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.


22 மொழிகளில் பேசலாம், கேட்கலாம்!


இதற்கு முன் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில்தான் உடனடியாகப் பேச முடியும் என்ற நிலைமை இருந்தது. அதற்குக் காரணம், போதுமான மொழிபெயர்ப்பாளர்கள் நியமனமும், மொழிபெயர்ப்பு வசதிகளும், அதற்குத் தோதான பிற ஏற்பாடுகளும் இல்லாததுதான். இந்தியோ, ஆங்கிலமோ தெரிந்திருப்பவர்கள் அந்த ஏற்பாடுகளை எதிர்பார்க்காமல் பேச முடியும். தனது மாநில மொழியில் பேச விரும்பும் உறுப்பினரோ, முன்கூட்டியே அதற்கு அனுமதி கோரி கடிதம் கொடுக்க வேண்டும். அப்போதுதான், மொழிபெயர்ப்பாளரை ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்.


“வட்டார மொழிகளில் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குத் துணை செய்யக்கூடிய சிறப்பான ஏற்பாடு இப்போது வந்துவிட்டது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் நடைபெறும் நாட்களில் மொத்தம் 84 மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். முந்தைய தொழில்நுட்பப் பிரச்னைகளும் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டன. ஆகவே, முன்கூட்டியே அனுமதி கோர வேண்டியதில்லை" என்கிறார் செயலக அதிகாரி ஒருவர்


                                                    கேரள சி.பி.ஐ (எம்) டாக்டர். ஜான் பிரிட்டாஸ் (மாநிலங்களவை)

தற்போது நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மொத்தம் 37 உறுப்பினர்கள் இந்தியும் ஆங்கிலமும் அல்லாத மொழிகளில் பேசியிருக்கிறார்கள். போடோ, மணிப்புரி, சந்தாலி, அசாமி, உருது, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பேசியிருக்கிறார்கள் (செய்தி: ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ –டிசம்பர் 24).

22 அலுவல் மொழிகளில் நேரடியாக மொழிபெயர்க்கும் நடைமுறை 2023 டிசம்பர் 11இல் தொடங்கப்பட்டது. கேள்வி நேரத்தின்போது தொடங்கிய அந்த ஏற்பாட்டில் முதலில் 10 மொழிகள்தான் இடம்பெற்றன. பின்னர், மேலும் இரண்டு மொழிகள் சேர்க்கப்பட்டன. இப்போது இந்தியாவின் 22 மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பேச முடியும், கேட்க முடியும்.


எளிதாக, தெளிவாக, கூர்மையாக..!


அடுத்தபடியாக, அவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களால், அவர் பேசுவதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. வேறு மொழியில் பேசியதை, சொந்த மொழியில் பெயர்த்து, அதைக் கேட்பதை விட, சொந்த மொழியிலேயே நேரடியாகக் கேட்பது எளிமையானதாக, இனிமையானதாக, துல்லியமானதாக இருக்கும் என்பதை விளக்க வேண்டுமா என்ன?


                                                                எம்.பி சச்சிதானந்தம்

இந்த மாற்றம் குறித்துக் கேட்டபோது, திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் இரா. சச்சிதானந்தம், “கடந்த காலங்களில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் நேடியாகப் பேச முடியும். இப்போது மேசையில் முன்னாலிருக்கிற மல்டி மீடியா கருவியில், நமக்கு வேண்டிய மொழியை செட் பண்ணி வைத்துவிட்டால், மொழிபெயர்ப்பாளர் தனது அறையிலிருந்து உடனுக்குடன் தமிழாக்கம் செய்து சொல்வதைக் கேட்க முடியும்.

அதே போல் நாம் தமிழில் பேசுவதை, மற்ற உறுப்பினர்கள் தாங்கள் செட் செய்த மொழிகளில் கேட்க முடியும். என்னுடைய மொழியில் பேசும்போது அந்தப் பேச்சு தங்குதடையில்லாமல் இருக்கும். மனந்திறந்து விவாதிக்க முடியும். ஆகவேதான், இந்த வசதி செய்யப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது” என்றார்.

பல மொழிகள் பேசப்படும் எந்தவொரு நாட்டிலும் அதன் மக்களவையில் இதே போன்ற வசதி இருந்தாக வேண்டும் என்று கூறும் சச்சிதானந்தம், “இப்போதும் கூட, நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் இரண்டு மொழிகள் மட்டும்தான் பேச முடியும் என்று இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இவ்வாறு 22 மொழிகளிலும் பேசவோ கேட்கவோ முடியும் என்ற ஏற்பாடினை இப்படிப்பட்ட நாடாளுமன்றக் குழுக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்” என்ற வலியுறுத்தலையும் முன்வைக்கிறார்.

இதைப் பற்றிக் கூறும் அதிகாரிகள், மக்களவையின் இந்த மொழிபெயர்ப்புச் சேவை, தற்போது பிரதமரின் கூட்டங்கள், பல்மொழி நிகழ்வுகள், நாடாளுமன்ற அமைப்புகளின் மாநாடுகள், அரசின் கொள்கை ஆய்வு அமைப்பான நிதி ஆயோக் ஆகியவற்றின் சந்திப்புகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மற்ற செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன. இங்கெல்லாம் சென்றிருக்கிற இந்த ஏற்பாடு, ஏன் இன்னமும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டங்களுக்கு வரக்கூடாது? தமிழக எம்.பி-யின் வலியுறுத்தல் விரைவில் வழிமுறையாக வேண்டும்.

மிரட்டும் ஆதிக்கக் குரல்!


மக்களவையில் ஒலிக்கும் இந்த மாற்றத்தில் இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது. விடுவேனா என்று தொடர்கிற இந்தி மொழித் திணிப்பு பிடிவாதங்களுக்கு எதிரான ஒரு சிறிய செய்திதான் அந்த முக்கியத்துவம்.

நாடாளுமன்றம் வீற்றிருக்கிற அதே தில்லியிலிருந்து ஒரு செய்தி. கிழக்கு தில்லியின் மயூர் விஹார் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சிப் பூங்காவில் சிறுவர்களுக்கு ஒருவர் சில மாதங்களாகக் கால்பந்து பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். சமீபத்தில் அங்கு சென்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ரேணு சவுத்ரி, "எங்கள் பணத்தைச் சாப்பிடுகிறாய். ஆனால், எங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளாமல் இருக்கிறாயே. இரண்டு மாதங்களில் இந்தி கற்றுக்கொள்ளவில்லையென்றால் உன் நாட்டுக்கே போய்விட வேண்டும்" என்று மிரட்டியிருக்கிறார். அந்த காணொளிப் பதிவை சமூக ஊடகங்களிலும் அவர் பரப்பியிருக்கிறார்.


                                                ஓம் பிர்லா - டி.ஆர்.பாலு


தலைநகர் தில்லியின் அப்படிப்பட்ட குடியிருப்புப் பகுதியில், ஆகப் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயேதான் பேசிக்கொள்கிறார்கள். ஆகவே, அந்தத் தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளருக்கு உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இதுதான் யதார்த்தம். ஆனால், அந்த பா.ஜ.க கவுன்சிலர் தனது மொழி மீதான அக்கறையிலிருந்து அந்த மிரட்டல் வேலையைச் செய்யவில்லை.

வெறும் விளம்பரத்துக்காகவும், தனது அரசியல் செல்வாக்கைக் காட்டிக்கொள்ளவுமே அப்படி நடந்துகொண்டிருக்கிறார். பா.ஜ.க தலைமை தலையிட்டதைத் தொடர்ந்து, அந்த கவுன்சிலர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். மாமன்ற உறுப்பினரின் நோக்கம் எதுவானாலும், பா.ஜ.க மற்றும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மொழிக் கொள்கையிலிருந்தே இது வருகிறது.

அதேபோல, சென்னை விமானநிலையத்தில் பாதுகாவலர் பணி ஒப்பந்தத்தின் கீழ் சீருடையோடு இருக்கிற ஒருவர், தமிழ்நாட்டுப் பயணிகளைப் பார்த்து, ஏன் இந்தி படிக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டது, பரவலான கண்டனத்திற்கு உள்ளானது.


அமித் ஷாவே அப்படித்தான்!

2020-ம் ஆண்டில் ஆயுஷ் அமைப்பின் செயலர் வைத்ய ராஜேஷ் கோட்டேச்சா மருத்துவர்களுக்கான இணையவழி முகாம் ஒன்றை நடத்தினார். அதில் அவர் இந்தியில் பேசியபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள், தங்களுக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பேசக் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் கோபமாக, “இந்தி தெரியாது என்றால் வெளியேறிவிடுங்கள்” என்று சொல்ல, அது தமிழ்நாட்டில் “இந்தி தெரியாது போடா” என்ற எதிர்ப்பியக்கமே எழுவதற்கு இட்டுச் சென்றது. இப்படி நிறைய உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.

அந்தத் தென்னாப்பிரிக்கரைப் போன்ற வெளிநாட்டவர்களிடம் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வட மாநிலங்களுக்கு வருகிறவர்களிடமும், இந்தி தெரியாது என்றால் வெறுப்போடு அணுகுகிற கலாசாரம் வளர்க்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது ஒரே மொழி ஆதிக்கச் சிந்தனை என்பது மறுக்க முடியாத உண்மை.


ஏன், ஒன்றிய உள்துறை அமைச்சரே அப்படித்தான் பேசுகிறார். ‘இந்தி‘தான் இந்தியாவின் தொடர்பு மொழி என்று நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில் (2022) உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். பின்னர் ஒரு நிகழ்வில், ‘இந்தியை உள்ளூர் மொழிகளுக்குப் போட்டியாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாகத்தான் கொண்டுவருகிறோம்’ என்றும் அவர் பேசியிருக்கிறார்.


                                               ஓம் பிர்லா, தயாநிதி மாறன்


ஆங்கிலத்துக்கு மாற்றாக அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிதான் என்று கொண்டுவர வேண்டும். ஒன்றியத்தில், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகளோடும் மொழிபெயர்ப்பு முன்னேற்றங்களோடும் 22 மொழிகளையுமே செயல்படுத்த வேண்டும். நாட்டின் உயர்ந்த அமைப்பான, சட்டங்களை உருவாக்குகிற, மக்கள் பிரதிதிதித்துவ சபையான நாடாளுமன்றத்தில் சாத்தியமாகிறது என்றால், ஆட்சி நிர்வாகத்தில் முடியாதா?

ஒன்றிய அரசுக்கும், மாநில/ஒன்றியப் பகுதி அரசுகளுக்கும் இடையேயான தொடர்புகளுக்கும் அதைக் கொண்டுவர முடியாதா? ஏன் முடியாது? மாநிலங்களின் கூட்டாட்சி, அனைத்து மொழிகளுக்கும் சம இடம் என்ற மக்களாட்சி விழுமியங்களை மதித்து ஏற்றுக்கொண்டால் நிச்சயம் முடியும்!


[0][0][0]


-விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பில் (டிசம்பர் 26)  எனது கட்டுரை




Friday, 26 December 2025

சிறை - ஹீரோத்தனம் எதுவெனக் காட்டுகிற திரைப்படம்


‘இன்றைக்குள் முடித்துவிட வேண்டும்’ என்று நேற்று ஓய்வின்றிச் செய்துகொண்டிருந்த வேலையின்போது மகன், “இந்தப் படம் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, வர்றீங்களா,” என்று கேட்க, சரிதான் என்று கணினியை மூடிவிட்டுப் புறப்பட்டேன். அது எவ்வளவு சரியான முடிவு என்று காட்சிக்குக் காட்சி உணர வைத்தது ‘சிறை’.


பாராட்டுகளை வரிசைப்படுத்தும்போது முதலில் வந்து நிற்பது, படத்தில் ஹீரோத்தனம் என்று மருந்துக்கும் இல்லை. தொடக்கத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் காவலர்கள் முகங்களில் மிளகாய்ப்பொடி வீசி உள்ளேயிருந்த குற்றவாளியுடன் தப்பித்து ஓடும்போது தலைமைக் காவலர் கதிரவன் அவர்களோடு மோதுகிற, அக்கணத்தில் செய்கிற ஒரு செயலை வணிகப் படத்துக்கான நாயக சாகசம் எனலாமா? அதற்கும் வாய்ப்பில்லை, ஏனென்றால் அந்த சாகசம்தான் அவனுக்கான நிர்வாகத் தண்டனையாக, சிறைக்கு அனுப்ப வைக்கிறது – கைதிகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் வழிக்காவலராக. அதில் வெளிப்படும் உண்மைத்தன்மை கடைசி வரையில் காப்பாற்றப்படுகிறது.

வேலூர் சிறையிலிருந்து சிவகங்கை நிதிமன்றத்திற்கு அப்துல் என்ற கைதியைக் கொண்டு செல்ல வேண்டும். கூட இரண்டு காவலர்களோடு அந்த ‘லாங் எஸ்கார்ட்டில்’ பயணிக்கிறபோது அவன், “ஐயா, கோர்ட்டு வாசல்லயிருந்து உள்ளே போறப்ப மட்டும் கையில விலங்கு மாட்டாம கூட்டிட்டுப் போங்கய்யா,” என்று வேண்டுகோள் விடுக்கிறான். அவனுடைய பெயரும் அந்த வேண்டுகோளும் ஏதோதோ ஊகங்களுக்கு இட்டுச் செல்கின்றன. அதையெல்லாம் தாண்டிக் குதித்து, விலங்கில்லாமல் அவனை நீதிமன்றத்திற்குள் கதிரவன் கூட்டிச் செல்ல, முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்துக்குள் கூட்டிச் செல்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரி.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவனான அப்துல் ஏன் அந்த வேண்டுகோளை முன்வைக்கிறான்? மத வரப்புகளை மீறிய ஒரு கிராமத்துக் காதல் கதை விரிகிறது. அதை விவரிக்கிற, ஒரு நல்ல படத்துக்கு எதிரான, அநீதியை நான் செய்ய மாட்டேன்.

சிறை என்று பெயரிருந்தாலும், பேருந்திலும் லாரியிலும் ஆட்டோவிலுமாக அப்துலை கதிரவன் குழுவினர் இட்டுச் செல்லும் நீண்ட பயணம்தான் திரைக்கதை. காவலர்களின் கடமையுணர்வற்ற செயல்கள், வழியில் ஒரு காவல்நிலையத்தில் ஒரு குறுகிய விசாரணை, நீதிமன்றத்தில் விரைவாக உள்ளே அழைக்கப்படுவதற்கு தலைமைக்காவலராகவே இருந்தாலும் ரகசியமாகக் கையில் பணத்தை ஊட்டுகிற அவலம் (இதனால்தான் கையூட்டு என்ற சொல்லாடல் வந்ததோ?), காவல்துறைக்குள் நேர்மையானவர்களும் அதைத் துறந்தவர்களுமாக இரு பிரிவினர் இருப்பது போலவே நீதித்துறையிலும் பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்கிறவர்களும், “எனக்கே சட்டம் சொல்லித் தர்றீங்களா,” என்று தன்னகங்காரம் கொள்கிறவர்களுமாக இரு பிரிவினர் இருப்பது… இப்படி அந்த நீண்ட காவல் பயணத்தில் காட்சிப்படுகின்றன.

‘டாணாக்காரன்’ படத்துக்குப் பிறகு காவல்துறையின் இன்னொரு பிரிவு பற்றிய இவ்வளவு துல்லியமான சித்தரிப்புகளோடு வந்திருக்கிறதே என்று யோசித்தபோது, அதனை உருவாக்கியவர்தான் இதன் கதையை எழுதியவர் என்ற தகவல் கிடைத்தது. இன்னும் பல அத்தியாயங்கள் உங்களிடமிருந்து வரட்டும் தமிழ்.

ஐந்து ஆண்டுகளாக ஒருவன் விசாரணைக் கைதியாகவே இருக்கிறான். இயல்பாக அவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறைவாசத்துக்கு அதிகமான காலம். அதன் பின்னணி, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள், போதுமான நீதிமன்றங்கள் இல்லாமை, துறைகள் சார்ந்த மெத்தனம் போன்றவை மட்டுமல்ல – அவன் பெயர் அப்துல் என்பதும்தான். கூர்மையாகவும், கச்சிதமான அளவோடும் மதமாச்சரியப் பார்வையை விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். இடைவழியில் அவர்கள் எதிர்கொள்ளும் காவல் நிலைய அதிகாரி கேட்கிறார். கைதியை அழைத்துச்செல்கிறபோது, விதிமீறலாகத் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரம்பியிருப்பது ஏன்?

“அய்யா, அக்யூஸ்டு ஒரு முஸ்லிம்.. அதனாலதான்…” என்று இவர்கள் பதிலளிக்கிறார்கள். “அதுக்கு?,” என்று கேட்கிறார் அதிகாரி. ‘அயோத்தி’ படத்தில் கதாநாயகன் தன் பெயர் என்ன என்று கடைசியில் சொல்வானே, அதே போல் அந்த அதிகாரி தன்னை வெளிப்படுத்துகிறார். அரங்கம் கரவொலிகளால் நிரம்புகிற மற்றுமொரு தருணம் அது.

இன்றைய திட்டமிட்ட தூண்டல் சூழலில் கலையாக்கத்தின் இப்படிப்பட்ட தருணங்கள் முக்கியமானவை.

நீதிபதியின் தனியறை விசாரணைக்குப் பிறகு வெளியே வரும் அப்துலும் கலையரசியும் கதிரவன் காலில் விழுந்து கதறுகிறபோது கண்கள் துளிர்த்ததைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை நான். அக்‘ஷய் குமார், அனுஷமா அனில்குமார் இருவரும் முதல்படமென்றே தோன்றாத அளவுக்குச் சிறப்பான ஒத்திகைகளை மேற்கொண்டு நடித்திருப்பது தெரிகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையாலும், மாதேஷ் மாணிக்கம் படப்பதிவாலும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாலும் இயக்குநரின் நோக்கத்திற்குப் பங்களிக்க, இவ்வாண்டின் முக்கியமான ஒரு சினிமாவை ஆண்டிறுதியில் வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் எஸ். எஸ். லலித் குமார்.

உண்மையான ஹீரோத்தனம் என்பது எதிலே இருக்கிறதென்றால் என்ற விளக்கமளிக்காமல், கடைசியில் பயிற்சிநிலைக் காவலர்களுக்கும், திரையுலக நட்சத்திரங்களுக்கும், பொதுச் சமூகத்துக்குமே கூட வகுப்பெடுக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி – கதிரவனாகிய விக்ரம் பிரபு மூலமாக.

Monday, 22 December 2025

தீய தூய மாய....


 

“அன்னிக்கு எலான் மஸ்க் உழைக்காமலே சாப்பிடலாம்னு சொன்னது பத்தி நாம பேசினதை உங்க கட்டுரையிலே சேர்த்திருந்தீங்க.  நேத்து பேசிக்கிட்ட மேட்டரை கண்டிப்பா ஸ்டேட்டஸ் போடுவீங்கன்னு நினைச்சேன். போடலையே…”


“வழக்கம்போல நேத்தும் பல செய்திகள் பத்திப் பேசினோம். நீங்க எதைச் சொல்றீங்க?”


“அதான் சார், தவெக விஜய் தீய சக்தி, தூய சக்தின்னு பேசினாரே, அதைப் பத்தி இவரு கேட்டாரு. அதுக்கு நீங்க ஒரு பதிலைச் சொன்னீங்கல்ல, அதைத்தான் சொல்றேன்…”


காலை நடை நிறைவு நிகழ்ச்சியான பூங்கா இருக்கை உரையாடலில் நண்பர் அடுத்தவரைக் கைகாட்டிக் கேட்டார்.


“முக்கியமான ஒரு புத்தக சரிபார்ப்பு வேலை… இந்தா அந்தான்னு இழுத்துக்கிட்டே போகுது. அதனால நம்ம பேசிக்கிட்டதைப் பதிவு செய்ய நேரம் வாய்க்கலை. அதுதான் காரணம்.”


“சார், திருமாவளவன் கூட அவருக்கு யாரோ அடுக்கு மொழியிலே பேசுறதுக்குக் கத்துக்கொடுத்திருங்கான்னு தெரியுதுன்னு சொல்லியிருந்தாரு. அதையெல்லாம் ரெஃபர் பண்ணி நான் கேட்டதுக்கு நீங்க சட்டுனு பதில் சொன்னீங்க, அது எனக்குப் பிடிச்சிருந்துச்சு, டெஃப்னட்டா அதை  ஸ்டேட்டஸ் போடுவிங்கன்னு நீங்க போனப்புறம் நாங்க பேசிக்கிட்டோம்.” –அந்த இரண்டாவது நண்பர் கூறினார்.


“ஓ… அதை நான் பெருசா நினைக்கலை, ஆனாலும் இப்ப வீட்டுக்குப் போனதும் பதிவேத்தம் பண்ணிடுறேன்.  சரி, நான் என்ன சொன்னேன்னு ஞாபகப்படுத்துங்களேன்…”அதா


“அதான் சார், தீய சக்தின்னு அரசியல்  எதிரிகளை நினைச்சா வெளிப்படையாவே எதிர்கொள்ளலாம், தேர்தல் மூலமாக் கூட தூய்மைப்படுத்தலாம், ஆனா சித்தாந்த எதிரிகளா நினைக்கிற சக்திகள் சமுதாயத்துக்கே பெரிய கேடு, முதுகுக்குப் பின்னால சூழ்ச்சிகள் செய்றவங்களை எதிர்கொள்றது அவ்வளவு ஈஸியில்லைங்கிற மாதிரி சொன்னீங்க…”


“ஆமா, அவங்களால ஏற்படுற தீமையைத் தடுக்கிறதுக்கு, உண்மையான சமுதாய அக்கறையும் தெளிவான பார்வையும் விரிவான இய்க்கமும் தேவைப்படும்னும் சொன்னேன்.”


முதலாவது நண்பர் குறுக்கிட்டார். “அதைச் சொன்னப்ப உங்க வாய்ஸ்ல ஒரு கவலை இருந்ததைக் கவனிச்சேன்.”


“கவலைப்படுறேன்தான். தானா எதுவும் சரியாயிடாதுல்ல. இதெல்லாம் புரியாம தூய சத்திகள்னு சொல்லிக்கிட்டா உண்மையில மாய சக்திகள்தான், மக்களோட எதிரிகள்தான்.“


“மக்கள் கவனிச்சுக்குவாங்க சார், ஒர்ரி பண்ணிக்காதீங்க, டீ கடை ஓப்பன் பண்ணிட்டாங்க, வாங்க…”


Sunday, 21 December 2025

மெய்யான மெடிட்டேஷன் எங்கே இருக்கிறதென்றால்...


தியானம் ஒரு மாயவித்தை போல. எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் மருந்தாகப் பேசப்படுகிறது. எதுவுமே செய்யாமல், எதையுமே சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்துவது தியானம் என்கிறார்கள்.

யோகாவிலாவது உடல் உறுப்புகளை இயக்குவது சார்ந்த, வியர்வை சிந்தத் தேவையில்லாத ஒரு பயிற்சி முறை இருக்கிறது. ஆனால், தியானத்தில் என்ன இருக்கிறது? சிதறிய மனதை ஒரு புள்ளியில் குவியச் செய்வது தசைப் பயிற்சியை விடக் கடினமானதுதான்.

ஒருவர் தொடர்ந்து தியானிக்கும்போது மூளையில், பயம், பதற்றம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் 'அமிக்டலா' என்ற பகுதி அமைதியடைவதையும், முடிவெடுக்கும் திறன் தொடர்பான 'ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ்' என்ற பகுதி வலிமையடைவதையும் எம்ஆர் ஸ்கேன் சோதனைகளால் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக சில செய்திகள் படித்திருக்கிறேன். இதில் அறிவியல் இருக்கிறதென்றால் ஏற்கத்தக்கதே.

ஓடிக்கொண்டிருக்கும் எந்திரத்தை சிறிது நேரம் நிறுத்திவைப்பது போல, உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அவ்வாறே உள்ளத்துக்கும் அமைதி தேவைப்படுகிறது என இதைப் புரிந்துகொள்ளலாம்தான். தியானம் ஒரு 'மன நலப் பராமரிப்பு' என்று இது பற்றிய ஒரு கலந்துரையாடலில் கூறப்பட்டது – அதை ஏற்கலாம்தான்.

எங்கே சிக்கலென்றால், "ஞானம் பிறக்கும்", "நோயே அண்டாது" என்றெல்லாம் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட மத போதனை போன்றதே. கண்மூடித்தனமாகப் பின்பற்ற வைப்பதே. இப்படி உட்கார்ந்துகொள்ள வேண்டும், கைகளை அப்படி வைத்துக்கொள்ள வேண்டும், கண்களை மூடிக்கொள்ள வேண்டும், அதிலும் கால்வாசிக் கண்ணை மட்டும் திறந்துகொள்ள வேண்டும், மூச்சை இப்படியப்படி இழுத்துவிட வேண்டும் என்றெல்லாம் சடங்குமயமாக்குவது மனிதரின் சுதந்திர மனதை நம்பிக்கைக்கு அடிமைப்படுத்துகிற கைங்கரியமே.

தனது கடமையில் கவனம் சிதறாமல் ஈடுபடுவதிலேயே ஒரு தியானம் இருக்கிறது. இதை நவீன உளவியலில் இயல்பான மன ஓட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், ஓவியம் வரையும் கலைஞர், துணியை நேர்த்தியாகத் தைக்கும் தொழிலாளி – இன்னுமுள இவர்களைப் போன்றோர் அனைவரும் ஒருவித ஆழ்ந்த தியான நிலையில்தான் இருக்கிறார்கள். அவரவர் இருக்கையிலேயே அமர்ந்தும், நின்றும், நடந்தவாறும், ஓடியவாறும். இதற்குத் தனியாக அமர வேண்டிய அவசியமில்லை. புற உலகிலிருந்து துண்டித்துக்கொள்ள வேண்டியதுமில்லை.

"மனதை எதையுமே நினைக்காமல் வெற்றிடமாக வைப்பது" ஒரு தவறான புரிதல். மனித மூளையின் இயற்கைத் தன்மையே சிந்திப்பதுதான். ரத்தம் ஓடிக்கொண்டிருப்பதற்காக இதயம் துடித்துக்கொண்டே இருப்பது போல், ஆக்சிஜனை உள்வாங்கி கார்பனை வெளியேற்றுவதற்காக நுரையீரல் சுவாசித்துக்கொண்டே இருப்பது போல், மூளை சிந்தித்துக் கொண்டேதான் இருக்கும். எதையுமே சிந்திக்காமல் இருக்க முடியுமா என்றும் சிந்தித்துக்கொண்டிருக்கும்!

எண்ணங்களை நிறுத்துவது அல்ல; எந்த எண்ணத்தோடு இணைந்துகொள்வது, எதை வேடிக்கை பார்ன்ப்பதோடு விடுவது என தேர்ந்தெடுக்கும் திறனை வளர்ப்பதே மெய்யான மெடிட்டேஷன்.

அது ஒரு குறிப்பிட்ட 'செயல்' அல்ல; அது ஒரு 'நிலை'. சம்பிரதாயச் சடங்குக்கு மாறாகத் தெளிவான கவனமிகு அக்கறையும் ஈடுபாடும் மேலானது. அரசியல் முதல் அன்றாட வாழ்க்கை வரையில் இது பொருந்தும். சடங்கு முறைகளில் சிக்கிக்கொள்ளாத சுதந்திர மனதுடன் சிறகடித்து உலக நேயம் வளர்த்திட–

உலக தியான தின (டிசம்பர் 21)வாழ்த்துகள்.

Monday, 8 December 2025

உலகளாவிய பண்பாட்டுக் களத்தில் என்ன நடக்கிறது?

 



தொழில் – வணிகம், கல்வி, மருத்துவம், அறிவியல் ஆகியவை சார்ந்து உலக அளவில் அரசியல் களத்தில், சமுதாய வாழ்வில் தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. ஒருபக்கம் தாக்கங்களை அங்கீகரித்து ஏற்பவர்கள். மறுபக்கம் மாற்றங்களை மறுத்து எதிர்ப்பவர்கள். இதிலிருந்து சமூக வாழ்க்கையும் கலை இலக்கியமும் சார்ந்த பண்பாட்டுத் தளம் தனித்திருக்க முடியுமா?

உலக அளவில் முன்னுக்கு வந்துள்ள நிகழ்வுப் போக்குகளுக்குள் ஒரு சிற்றுலா சென்று வந்ததில் சில விவாதங்களைக் கேட்க முடிகிறது.

ஏஐ ஒரு சவாலா, சாதகமா?

இன்று இந்த விவாதங்களில் இயற்கையாகவே முதலிடம் பிடித்திருப்பது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி நிலைதான். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிற துறைகளைப் போலவே கலை இலக்கிய மேடைகளில் சரசரவென்று ஏறிவிட்டது ஏஐ. பேனாவுக்கு மாற்றாக தட்டச்சு விசைப்பலகை, பெரிய அரங்கத்திற்குப் போட்டியாகக் கைப்பேசித் திரை என்ற கருவி மாற்றங்களோடு அது நிற்கவில்லை. இசைக் குழுக்கள், பழைய–புதிய பாடல்கள், கதை–கவிதை ஆக்கங்கள், ஓவியம்–சிற்பங்கள், நாடக–திரைப்படங்கள், காட்சியமைப்புகள், நடிப்புக் கலைஞர்களின் பருவத் தோற்றங்கள், நினைவில் வாழ்வோரின் திரை நடமாட்டங்கள், நிறச் சீரமைப்புகள் என ஏஐ கால்படாத இடமே இல்லை.

தேடுகிற தகவல்களைத் தருவது மட்டுமல்லாமல், திருத்தங்களுக்கு ஆலோசனை வழங்குகிற இடத்திற்கும் அது வந்துவிட்டது. ஒரு கதையின் கரு இது, தொடக்கம் இப்படி இருக்கட்டும், இவ்வாறு வளரட்டும், இங்கே முற்றட்டும், இத்தோடு முற்றுப் பெறட்டும் என்ற குறிப்புகளை உட்செலுத்தினால், சில நொடி நேரத்தில் அவரவரின் சித்தரிப்பு நடையிலேயே ஒரு கதையைச் செய்து கொடுத்துவிடும். அதற்கு மேல் படைப்பாளியின் பணி தன் கண்ணோட்டத்தையும், அழகியலையும் பொருத்தமாக இணைத்து நிறைவாக்குவதுதான்..

இப்படியே போனால், பல்வேறு தொழில்களின் பாட்டாளிகள் போல, கலை–இலக்கியத் துறையில் படைப்பாளிகள் வெளியே நிறுத்தப்பட்டு விடுவார்களா? அல்லது அவர்கள் ஏஐ திறனை உள்ளே வாங்கிக்கொண்டு மேம்பட்ட ஆக்கங்களைப் படைத்தளிப்பார்களா? இதனால் மெய்யான படைப்பாற்றல் ஒளிமங்கிவிடாதா? ஒருவரது நுட்பங்களை ஏஐ கருவி வசப்படுத்திக்கொள்ளும், அவருடைய படைப்பைப் போலவே உருவாக்கித் தரும் என்றால், போலிகள் வந்து ஆக்கிரமிக்காதா? நியாயமான கவலைகள்.

இல்லை, போலிகளைக் கண்டுபிடிப்பதற்கே கூட ஏஐ கருவிகளைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் பகிரப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்படும் போலியான ஆவணங்களைக் கண்டுபிடிப்பதற்கென்றே ஏஐ செயலிகள் வந்திருப்பது பற்றி ஒரு பேராசிரியர் தெரிவித்தார்.

கலை உலகில், குறிப்பாகத் திரைக்கதையாக்கத்தில் ஏஐ நுழைப்பை எதிர்த்து ஹாலிவுட் எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெருவில் இறங்கினார்கள். 148 நாட்கள் நீடித்த அந்தப் போராட்டம், ஏஐ பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகளோடு, அதுவரையில் இல்லாத வகையில் எழுத்தாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற ஒப்பந்தம் ஒன்று தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்போடு ஏற்பட்டது.

கலப்பும் திணிப்பும்

உலகமயமாக்கல் கொள்கைகள், நடைமுறைகளின் தாக்கத்தில் உள்நாட்டளவிலும் உலக அளவிலும் கலை இலக்கியப் பகிர்வுகள் நடப்பது போலவே, பண்பாடுகளின் கலப்பு குறித்த விவாதமும் முன்னுக்கு வந்திருக்கிறது. புதிய கலப்பு அடையாளங்கள், பண்பாட்டுத் தழுவல்கள், மக்களின் ஏற்பு மனநிலைகள் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியலும் வணிக உறவுகளும் சார்ந்ததாக ஒரு பண்பாட்டின் கூறுகளை மற்றொன்றின் மீது ஏற்றுவதால் ஏற்படக்கூடிய அழிப்புகள், மக்களின் தன்விருப்ப ஏற்பில்லாத கட்டாயத் திணிப்புகளை மறுக்கும் நியாயமான அடையாளப் பாதுகாப்புக் கேடயங்கள், இதே சூழலிலிருந்து உருவாகும் புதிய அடையாள அரசியல் இயக்கங்கள் ஆகியவையும் பேசுபொருளாகியிருக்கின்றன.

இந்தக் கலந்துரையாடல்கள் கலை இலக்கிய மேடைகளில் நிகழ்த்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) அரங்குகளிலும் நிகழ்கின்றன. 2022 செப்டம்பர் 28 முதல் 30 வரை மெக்சிகோ நகரத்தில் “பண்பாட்டுக் கொள்கைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உலக மாநாடு” ஒன்றை யுனெஸ்கோ நடத்தியது. “மோண்டியாகல்ட்” எனப்படும் இந்த மாநாடு 1982இல் முதல்முறையாக நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் இரண்டாவது மாநாடு நடைபெற்றது.

பொது நன்மை

அதில், “உலகளாவிய ஒரு பொது நன்மையாக பண்பாடு” என்ற கோட்பாடு ஏற்கப்பட்டது. பண்பாடு உலகத்திற்கே பொதுவான நன்மை, ஆனால் அது ஒற்றைத் தன்மையானது அல்ல, அதன் பன்மைத்துவம் உயர்த்திப் பிடிக்க வேண்டியது என்பதே அதன் அடிப்படை நோக்கம். தமுஎகச பண்பாட்டுப் பன்மைத்துவ உரிமை மாநாடு நடத்தியது நினைவுக்கு வருகிறதல்லவா?

மொழியையும் உணவையும் உடையையும் உள்ளடக்கிய ஒற்றைக் கலாச்சார அடாவடிக்கு எதிராக இந்தியாவில், குறிப்பாகத் தென்னகத்தில், மேலும் குறிப்பாகத் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

புவியின் பல வட்டாரங்களிலும் பண்பாட்டுத் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்கப் போராட்டங்கள் முளைத்துள்ளன. “மேன்மைக்” கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும், மொழி வழியாக அடிமைப்படுத்தும் திணிப்புகளுக்கும் எதிரான கிளர்ச்சிகள் விவாத மேடைகளிலும் பிரதிபலிக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கான முனைப்புகளில், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகளுக்கு எதிரான செயல்களில் பண்பாட்டுப் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உரிமையாக உறுதிப்படுத்துவதன் தேவைகள் வலியுறுத்தப்படுகின்றன.

மக்களின் பேச்சாக

இன்றைய அறிவியல் வளர்ச்சிகளோடு இந்தத் தேவைகளை இணைப்பதற்கான உரையாடல்களும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வட்டாரப் பண்பாட்டு உள்ளடக்கங்களைத் தரவுகளாக இணையத் தளங்களில் பதிவேற்றிச் செழுமைப்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்கள் வழங்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் வசப்படுத்துவது, தகவலறிவின் இடைவெளிகளைச் சுருக்கிக்கொண்டே போவது, மொழிகள் உள்ளிட்ட பன்முகப் பண்பாடுகளை எண்ம உலகில் மேம்படுத்துவதன் மூலமாகவும் உரிமைகளைப் பாதுகாப்பது…

அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்களிடையேயான கருத்துப் பகிர்வுகளாகவும் சொற்போர்களாகவும் நடந்துகொண்டிருந்த இந்த விவாதங்கள் இன்று குறிப்பிடத்தக்க அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. மக்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து இவற்றைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கிடும் அமைப்புகள், தனிமனிதர்களின் தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள ஓர் அடையாள வெற்றி என்றும் இதைக் கூறலாம். மக்களை உசுப்பிவிடுகிறார்கள், கலகத்தை மூட்டுகிறார்கள் எனவாக ஆதிக்கவாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் மாட்டிவிடும் பட்டைகளை மீறி இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

இது படிப்படியாக, சமுதாய அசைவுகளை ஏற்படுத்துவது, அரசுகளைச் செயல்பட வைப்பது, அதை நோக்கிய இயக்கங்களை முடுக்கிவிடுவது என்ற அரசியல் விளைவுகளுக்கும் இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையை களமெங்கும் விரவியிருக்கும் போராட்டத் தடங்கள் அளிக்கின்றன.

[0]

தமிழ்நாடு முறபோககு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் பூத்துள்ள சிறப்பு மலரில் ஓர் இதழாக எனது கட்டுரை

Sunday, 7 December 2025

`இனி, உழைக்காமலே சாப்பிடலாம்... சம்பாதிக்காமலே ஊர் சுற்றலாம்!' - எலான் மஸ்க் ஜோதிடம் பலிக்குமா?

 


உழைக்காமலே உட்கார்ந்து சோறு சாப்பிடலாம், உழைத்துப் பணம் சம்பாதிக்காமலே ஊர் சுற்றலாம்… இப்படியொரு எதிர்காலம் வருமானால் யாருக்குத்தான் பிடிக்காது. உண்மையாகவே அப்படியொரு காலம் வருகிறது, பக்கத்தில் வந்துவிட்டது என்று குடுகுடுப்பை அடித்திருக்கிறார் எலான் மஸ்க். தோராயமாக 33 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரரான எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்.

அவர் ‘பீப்பிள் பை டபிள்யூ.டி.எஃப். (People by WTF) என்ற இணையவழி ஒலிபரப்பு மேடை (பாட்காஸ்ட்) நேர்காணலில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தக நிறுவனமான ‘ஸெரோதா’ குழுமத்தின் நிறுவனர் நிகில் காமத் இந்த ஒலிபரப்பு மேடையை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 30 அன்று மஸ்க்கிடம் கேள்விகள் கேட்டவரும் இவர்தான்.

ஒரு கேள்விக்குப் பதிலளித்த மஸ்க், ‘மனிதர்கள் இனி வேலை செய்யத் தேவையில்லை’ என்ற கருத்தைக் கூறினார். மேலும், “அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), எந்திர மனிதவியல் (ரோபோட்டிக்ஸ்) வளர்ச்சி காரணமாக, வேலை ஒரு விருப்பத் தேர்வாக மட்டுமே இருக்கும், கட்டாயமானதாக இருக்காது.

தன்விருப்ப உழைப்பு வீட்டில் காய்கறி வளர்ப்பது போன்ற செயலாக இருக்கும். வேலை ஒரு பொழுதுபோக்காகிவிடும்/ ஏஐ மூலம் உற்பத்தி நடக்கும். அந்த உற்பத்தி மிகவும் அதிகரிக்கிறபோது, பணம் தேவையற்றதாகி, படிப்படியாகப் பொருத்தமற்றதாகிவிடும்” என்றார் மஸ்க். அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளிலேயே இந்த மாற்றங்கள் நிகழும் என்று ஆர்வப் பரபரப்பை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.


இந்தக் கருத்து இந்தியச் சூழலில் கூடுதல் கவனம் பெறுகிறது. அந்த நேர்காணலின் இலக்கு குறிப்பாக பாட்காஸ்ட் நேயர்களான இந்தியர்கள்தான். அடுத்து, ஏஐ ரோபோக்கள் நுழைக்கப்படுகிறபோது எண்ணற்ற தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சம் பரவியிருக்கிறது.


                                        நாராயண மூர்த்தி

14, 18 மணி நேர வேலை!

கூர்மையான மூன்றாவது காரணமும் இருக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா உச்சத்திற்கு வர வேண்டுமானால் பணியாளர்கள் வாரத்தில் 70 மணி நேரம் (வாரம் ஐந்து நாள் வேலை என்ற கணக்கில் ஒரு நாளில் 14 மணி நேரம்) உழைக்கத் தயாராக வேண்டும் என்று இன்ஃபோசிஸ் குழுமத்தின் தலைவர் என்.ஆர்.நாராயண மூர்த்தி கூறினார். லார்சன் அன் டூப்ரோ (எல்&டி) குழுமத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன். வாரத்தில் 90 மணி நேரம் (ஒரு நாளில் 18 மணி நேரம்) உழைக்க முன்வர வேண்டும் என்று பேசினார்.

இந்தப் பேச்சுகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. பின்னர், எல்&டி மனிதவளத் துறைத் தலைவர் அளித்த விளக்கத்தில், அலுவலக ஊழியர்களிடையே பேசிய நிறுவனத் தலைவர் நகைச்சுவைக்காகவே அவ்வாறு சொன்னதாகக் கூறினார் என்று விளக்கமளித்தார். தொழிலாளர்களின் உழைப்பு நகைச்சுவைத் துணுக்காகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.


சுவையான கற்பனை!


இந்தப் பின்னணியில்தான், வேலையே செய்யாமல் அனுபவிக்கலாம் என்று மஸ்க் சொன்னது விவாதக் களத்திற்கு வந்திருக்கிறது. உண்மையாகவே, வேலை செய்யாமல் விருந்து சாத்தியமா? உழைப்புக்கும் பணத்திற்கும் தேவையின்றிப் போய்விடுமா? அவரவரும் தத்தமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வேலை செய்வார்கள், அடிப்படைத் தேவைகளுக்காக உழைக்க வேண்டியிருக்காது என்ற சோதிடம் நம்பக்கூடியதா?


மஸ்க்கின் இக்கருத்து ஒரு தொலைநோக்குக் கனவாக, சுவையான கற்பனையாக உற்சாகமூட்டுவதாக அமையுமேயன்றி, குறுகிய காலத்தில் மெய் நடப்பாவதற்கு வாய்ப்பே இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். குறைந்தது அடுத்த 70 ஆண்டுகளில் அதற்கான அறிகுறியே இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். வல்லுநர்களை விடுங்கள், நடைப்பயிற்சிக்காகப் பூங்காவுக்கு வருகிறவர்களுடன் உரையாடுகையில் மஸ்க்கின் கருத்து பற்றிய பேச்சு வந்தபோது, “உழைக்காம சாப்பிடுறது உடம்புல ஒட்டாது,” என்றார்கள்.


                                        டிரம்ப், மஸ்க்

இது பற்றி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது (டிசம்பர் 2). “பணம் ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. அது, நீ விரும்புவது உன்னிடம் வந்து சேரும் என்ற மஸ்க் வாக்கு பலிப்பதைத் தடுக்கிறது. ஆசைகள் எல்லாம் குதிரைகளாக மாறுமானால், அவற்றை எங்கே மேய்ச்சலுக்கு விடுவது? அவற்றின் சாணத்தை யார் அப்புறப்படுத்துவது,” என்று அந்தத் தலையங்கம் கேட்கிறது. “ஆசைகள் குதிரைகளாக மாறினால் பிறகு பிச்சைக்காரர்கள்தான் சவாரி செய்வார்கள்” என்ற ஆங்கிலப் பழமொழியை இப்படி நாசூக்காக மாற்றியிருக்கிறார்கள். இயற்கை வளங்களேயானாலும் வரம்புக்கு உட்பட்டவைதான் என்கிறபோது, இத்தகைய ஆசைகள் எப்படி நிறைவேறும் என்பதைத்தான் இப்படிக் கேட்டிருக்கிறார்கள்.

உழைப்பால் உருவான இனம் உழைப்பே இல்லாத சமுதாயம் சாத்தியமா? இயற்கையான பொருள்களைப் பறித்தும் வெட்டியும் தோண்டியும் எடுத்துப் பயன்படுத்திய உழைப்புச் செயல் தொடங்கியதால்தான், முதுகெலும்புள்ள ஒரு பாலூட்டி இனங்களில் ஒன்றாக இருந்தது, அறிவார்ந்த மனித இனமாகப் பரிணமித்தது. உழைப்பின் புதுப்புது வடிவங்களில்தான் சமுதாயம் நாகரிகமடைந்தது. உழைப்புச் செயல் ஓய்ந்துவிட்டால் என்னாகும்? பூமியில் டைனோசர்களுக்கு நேர்ந்தது மனிதர்களுக்கும் நேர்ந்துவிடும்.


வருவாய்க்கான வழி மட்டுமல்ல!

விருப்பத்தோடு செடி வளர்க்கும் வேலையைச் செய்தால் போதுமென்ற நிலை இப்போது வருவதாகவே வைத்துக்கொள்வோம். தேவையான பொருள்கள் ஏராளமாக உற்பத்தியாவதாகவும் வைத்துக்கொள்வோம். அவற்றைச் சமச்சீராக அனைவரிடமும் கொண்டுசேர்த்தாக வேண்டும். அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோக அமைப்பு இருந்தாக வேண்டும். பணம் கைமாறாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. எவரிடமும் பணம் இல்லாத நிலையில் வளங்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை சிலரிடமே குவியும். இப்போதே அவ்வாறு சிலரிடம் வளங்கள் குவிந்திருப்பதுதான், எல்லா ஏற்றத் தாழ்வுகளுக்கும் மூலகாரணம்.


பணம் கைவிடப்பட்டு வளங்கள் ஒரு சிலரிடம் குவியுமானால், அது புதிய சர்வாதிகாரத்துக்குத்தான் அரியாசனம் போட்டுத் தரும். எதுவும் கொடுக்காமல் தானாக எதுவும் வீடு தேடி வந்துவிடாது. ஒரு காலத்தில் அரிசியைக் கொடுத்து அங்கியை வாங்குவது என்ற பண்டமாற்று முறை இருந்தது. தோராயமாக 2,600 ஆண்டுகளுக்கு முன் உலோக நாணயங்கள் வந்தன, பின்னொரு 600 ஆண்டுகள் கழித்து காகிதப் பணம் வந்தது. நாம் எந்த மதிப்புக்குப் பணம் கொடுக்கிறோமோ, அந்த மதிப்புக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவாதம் இருப்பதால்தான் அது செல்லுபடியாகிறது.


 அந்தப் பணத்தைப் பெறுவதற்காகத்தான் மக்கள் வேலை செய்கிறார்கள். முதலாளிகளும் அந்தப் பணத்தைப் பெறுவதற்காகத்தானே உற்பத்திச் சரக்குகளைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள்? முந்தாநாள் பண்டமாற்று இருந்தது. நேற்று பணம் வந்தது; இன்று கண்ணால் காண முடியாத மின்னிலக்க ரொக்கம் வந்திருக்கிறது; நாளை வேறொன்று வரலாம்; எது போய் எது வந்தாலும், ஏதோவொரு வடிவத்தில் பணத்தின் இருப்பு தொடர்ந்திருக்கும். அதைப் பெறுவதற்கான உழைப்பும் தொடர்ந்திருக்கும். பொருளாகவோ பணமாகவோ எதையேனும் கொடுக்காமல் எதையும் பெறக்கூடிய எதிர்காலம் நிகழ்காலத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் காணவில்லை.

வேலை ஒரு வருவாய் வழி மட்டுமல்ல, அது மற்ற மனிதர்களுடனான சமூகத் தொடர்பு ஊடகம். வேலை நீக்கப்பட்டால் அந்தத் தொடர்பு அறுந்து தனிமைப்படுவார்கள். அப்போது மனித மனம் உழைக்காமலே கிடைப்பதை நுகர்ந்து களித்திருப்பதை விரும்புமா, அல்லது உழைத்து ஊரோடு உறவாடி வாழ்ந்திருப்பதை நாடுமா?

செயற்கை நுண்ணறிவில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வளங்களுக்கு மனித உழைப்பும் தொடர்பும் தேவை. இவை முற்றிலுமாகத் தானியங்கி மயமாவது அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் சிக்க வைத்துவிடும்.

 

8.30 கோடி வேலைகள் ஒழிக்கப்படும்!


பிறகு ஏன் எலான் மஸ்க் உழைப்பு தேவைப்படாத எதிர்காலம் வருமென நம்புகிறார்? உண்மையில் அவர் அப்படி நம்மைத்தான் நம்ப வைக்க முயல்கிறார். எதற்காக? 

ஏஐ முதலான அறிவியல் கொடைகளை அடங்காத லாப வேட்கைக்காகக் கைப்பற்றுகிற பெருநிறுவனங்களால் உலகெங்கும் மிரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தானியங்கிப் புகுத்தலால் 2023-ல் தொடங்கிய வேலையிழப்புகள், 2027-ல் ஒரு உச்சத்தைத் தொடவிருக்கின்றன.

இந்த ஐந்தாண்டுகளில் 8.30 கோடி வேலைகள் ஒழிக்கப்படும். இதே ஐந்தாண்டுக் காலத்தில், ஏஐ சார்ந்து 6.90 கோடி புதிய வேலைகள் உருவாகும்தான். ஆனால், 1.40 கோடி வேலைகள் போனது போனதுதான். மேலும், தரவுகளைப் பதிவு செய்கிற கணக்கர், எழுத்தர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கும். இதனை உலக பொருளாதார மன்றம் (WEF) தெரிவிக்கிறது.


                                        வேலை

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO) தனது அறிக்கையில் (2023), வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் ஏஐ, ரோபோ ஆதிக்கத்தால் நிர்வாகம், அலுவலகம் சார்ந்த வேலையிழப்புகள் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கிறது. அமெரிக்கா, கனடா. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முழுவதுமாகத் தானியங்கி மயமாக்கப்பட்டுவிட்டன.

ஆகவே, அங்கெல்லாம் இவ்வகை வேலைகளில் பெருமளவுக்கு இழப்பு ஏற்படும். வளரும் நாடுகளில் இன்னமும் அந்த அளவுக்குத் தானியங்கி மயமாக்கப்படவில்லை, ஆகவே, வேலையிழப்பும் குறைவாகவே இருக்கும் என்கிறது ஐஎல்ஓ. அதிகமாகப் பறிபோகும் பணிகளில் பெரும்பாலானவை பெண்கள் ஈடுபடும் வேலைகளாக இருக்கின்றன. அதற்கடுத்ததாக இளைஞர்களின் வேலைகள் என்று ஐஎல்ஓ சுட்டிக்காட்டுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கார்ல் பெனெடிக்ட் ஃப்ரே, மைக்கேல் ஆஸ்போர்ன் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 2013-ல் தங்களின் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அமெரிக்காவின் வேலைகளில் சுமார் 47% அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் தானியங்கியலால் நீக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அந்த இருபதாண்டுக் காலத்தில் முதல் பத்தாண்டுகள் ஏற்கெனவே கடந்துவிட்டன. இவர்களது இந்த அறிக்கைதான் ஏஐ கருவிகளும் ரோபோ எந்திரங்களும் புகுத்தப்படுவது குறித்த விவாதங்களுக்குத் தொடக்கப்புள்ளி வைத்தது எனலாம்.

காலியாகும் சிறுகுறு தொழில்கள்!

வேலையிழப்பு என்றால் தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் மட்டுமல்ல. மகா நிறுவனங்கள் பணபலத்தோடு அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உழைப்பாளிகளை வெளியேற்றி லாபத்தை வேட்டையாடுகிறபோது, அதில் சிறுதொழில், குறுந்தொழில் முனைவோரும் சிக்கிக்கொள்கிறார்கள்.


ஊருக்குள் கடனாளியாகி மூடப்படும் பல நடுத்தர, சிறு, குறு தொழிற்கூடங்கள் இந்த வேட்டைக்கு இரையானவைதான். இத்தகைய நிலைமைகள் எண்ணற்றோரின் சொந்த அனுபவமாகிறபோது எந்த அளவுக்குக் கொந்தளிப்புகள் ஏற்படும் என்று எவரும் முன்னுணரலாம். அதில் தண்ணீர் ஊற்றி அணைக்கிற உத்திதான் மஸ்க்கின் ஆரூடம். உழைப்பை உதாசீனப்படுத்தும் நிகழ்ச்சிப்போக்கை அவர், உழைப்பே தேவைப்படாத வளர்ச்சிப்போக்காகக் காட்ட முயல்கிறார். மார்க்ஸ்சும் மஸ்க்கும் இப்படிப்பட்ட கூற்றுகளை விமர்சிக்கிறவர்கள் இந்த லாப வேட்டை வட்டாரத்தைக் கண்டுகொள்வதில்லை.


ஏற்கெனவே பார்த்த தலையங்கம், மஸ்க்கின் கருத்தை, ஒருபோதும் நனவாக மாறாத கனவென்று தள்ளுபடி செய்கிறது. அத்தோடு நிற்கவில்லை, ஒருபடி மேலே போய் அல்லது கீழே இறங்கி, மஸ்க்கின் கனவை, சமுதாய மாற்றத்திற்கான அறிவியல்பூர்வமான செயலாக்கத் தத்துவத்தை வழங்கிய கார்ல் மார்க்ஸ் லட்சியத்தோடு ஒப்பிடுகிறது. “எலானின் வேலைக்குப் பிந்தைய கனவுலகம் அவரை மார்க்ஸ் கூட்டாளியாக்குகிறது. அவரைப் போலவே இவரும் தன் கனவு நனவாவதைப் பார்க்கப் போவதில்லை,” என்று தலையங்கத்தின் துணைத்தலைப்பு சொல்கிறது. உள்ளே, “மஸ்க் தனது கனவின் பாட்டன் மார்க்ஸ் என்றும், அன்பான மாமன் கீன்ஸ் என்றும் தெரிந்துகொள்ளட்டும். அவர்களது முகாமில் தன்னை வைத்துப் பார்ப்பதை அவர் விரும்ப மாட்டார்,” என்று இருக்கிறது.

தலையங்கத்தின் தலைப்பே ‘கார்ல் மஸ்க்’ என்று சுரண்டல் எதிர்ப்புப் போராளிக்கு நிகராக சுரண்டல் கோட்டை அதிபதியை வைக்கிறது. போன நூற்றாண்டின் முக்கியமான பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ். சுதந்திரமான பொருளாதாரக் களத்தில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற முதலாளிய வாதத்தை நிராகரித்தவர்.

நெருக்கடிகளின்போது அரசாங்கம் தலையிட்டு செலவினங்களை அதிகரித்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், தொழில்–வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டவர். முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டல் அமைப்பைப் பாதுகாத்துக்கொண்டே, காயத்திற்கு ஒத்தடம் கொடுக்கிற கோட்பாடுதான் அவருடையது. ஆயினும் உடனடி நிலைமைகளில் அந்த ஒத்தடமும் தேவைப்படத்தானே செய்கிறது? அவருடைய கண்ணோட்டத்தையும் கனவென்று தள்ளுகிறது மேற்படி தலையங்கம்.

மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

பொன்னுலகம் கனவல்ல இழப்பதற்கு அடிமைச் சங்கிலியைத் தவிர வேறேதும் இல்லாததையும், அடைவதற்கு ஒரு பொன்னுலகம் இருப்பதையும் காட்டி, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட அறைகூவல் விடுத்தவர் காரல் மார்க்ஸ். 19-ம் நூற்றாண்டில் தனது கடும் உழைப்பாலும் தெளிந்த பார்வையாலும் ‘மூலதனம்’ நூலை உருவாக்கி உலகுக்கு வழங்கியவர். அதில் அவர் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். புதிய நுட்பங்கள் வரலாறு சார்ந்தவை, முற்போக்கான வளர்ச்சியாக வருபவை என்று அங்கீகரிக்கிறார்.


நவீன எந்திரங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகின்றன, அதே வேளையில், தொழிலாளர்கள் அறியாமலே அவர்களுடைய உழைப்பு சக்தியை உரிய அளவுக்கு மேல் உறிஞ்சுவதற்கு வழி செய்கின்றன என்று வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். உழைப்புச் சுரண்டலிலிருந்து கிடைக்கும் உபரி மதிப்புதான் முதலாளியின் உண்மையான லாபம் என்று, அதுவரையில் வேறு எந்தப் பொருளாதார மேதையும் காணத் தவறிய ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்.

சுரண்டலற்ற பொதுவுடைமைச் சமுதாயத்தின் மலர்ச்சியில், உணவு உடை மருந்து குடியிருப்பு என, உயிரோடு இருப்பதற்குரிய கட்டாயத் தேவைகளை அடைவதற்காக உழைத்தாக வேண்டுமென்ற என்ற இன்றைய நிலவரம் மறைந்துவிடும்; கல்வி, கலை, குடும்பம், பயணம் என வாழ்க்கையைச் சுவைப்பதற்காக உழைக்கிற பண்பாடு உருவாகிவிடும் என்ற திட்டவட்டமான மாற்றத்தையும் முன்னுரைக்கிறார். அப்படியிருக்க, அவர் ஏதோ உழைக்காமலே உண்ணலாம் என்ற கனவை விதைத்தது போல் அந்தத் தலையங்க ஆசிரியர் சித்தரிப்பதை என்னவென்பது?


 இந்தியாவைப் பற்றித் தப்புத்தப்பாக எழுதியிருக்கிறார் என்று மார்க்ஸ் பற்றிய தப்பான சித்திரத்தைத் தீட்டுவது ஒருபகுதியினருக்கான அரசியல் பொழுதுபோக்காக இருக்கிறது. அந்த “டிரெண்ட்” இந்தத் தலையங்கத்திலும் தொடர்கிறது போலும். ஆனாலும் இது நல்லதுக்குத்தான் – மார்க்ஸைத் தேடவும் தெரிந்துகொள்ளவும் தூண்டுகிறார்களே!

ஏஐ, ரோபோ, தானியங்கி என அளவுக்கு மேல் போனால், மக்கள் வேலையும் பணமும் இல்லாதவர்களாகத் தள்ளப்பட்டால் என்ன நடக்கும்? உழைப்பாளிகள் பொங்கியெழுவார்கள். அது ஒருபுறம் நிகழ்ந்திருக்க, மறுபுறம் வேறொன்றும் நடக்கும். உழைக்கும் மக்கள்தான் அடிப்படையான சந்தைத் திரள் என்கிற நிலையில், வேலையிழப்பால் வருமானத்தை இழக்கிறபோது, அவர்களால் எதையும் வாங்க இயலாமல் போகும். அப்போது முதலாளிகள் தங்கள் உற்பத்திகளை யாரிடம் விற்பார்கள்? அவர்களே தின்று, அவர்களே உடுத்தி, அவர்களே வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பார்களா?


இந்த நிகழ்வுப் போக்கில் முதலாளித்துவமே முட்டுச்சந்தில் நிற்கும்! உழைப்பே தேவைப்படாமல் போய்விடும் என்பவர்கள் முதல், உழைப்புச் சுரண்டலில்லா சமுதாய மலர்ச்சியை நிறைவேறாக் கனவு என்கிறவர்கள் வரையில் இதைப் புரிந்துகொண்டாக வேண்டும். பொது அறிவுக்காக மட்டுமல்ல, அவர்களுடைய நலன்களுக்காகவுமே கூட!

[0]

விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பில (டிசம்பர் 6) எனது கட்டுரை

 


 

Tuesday, 2 December 2025

கோடா: செவித்திறன் இழந்தோரின் செல்ல மகள்

 ஓடிடி மேடையில் உலக சினிமா:


மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையைப் பேசும் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. அவற்றில் ஒரு மாற்றுப் படம் ‘கோடா’ (ஆங்கிலம், 2021). பல்வேறு விருதுகளை வசப்படுத்தியுள்ள இந்தப் படம், ஒரு மகளின் கதை வழியாக மாற்றுத் திறனாளிகளின் உலகத்திற்குள் கொண்டுசெல்கிறது.


‘சைல்ட் ஆஃப் டெஃப் அடல்ட்ஸ்’ (செவி கேளாப் பெரியவர்களின் குழந்தை) என்ற சொற்களின் முதல் எழுத்துகளிலிருந்து உருவாகிப் புழக்கத்தில் இருக்கும் பதம் ‘கோடா’. இன்னொரு புறம், கோடா என்றால் இசைக் கோர்ப்புக்கான நிறைவுச் சேர்ப்பு என்று பொருள்.

ரூபி ரோஸி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் க்ளவ்செஸ்டர் என்ற கடலோர மீன்பிடி நகரைச் சேர்ந்தவள். நடுக்கடல் சென்று மீன்பிடிப்பில் ஈடுபடும் தகப்பன் ஃபிராங்க், தாய் ஜாக்கி, அண்ணன் லியோ மூவருமே காது கேளாதவர்கள். ஆகவே வாய் பேசவும் இயலாதவர்கள். அன்றாட வாழ்விலும் தொழிலிலும் மற்றவர்களோடு பேச்சு நடத்துவது, பேரம் பேசுவது, மருத்துவர் ஆலோசனை கோருவது அனைத்திலும் அவர்களுடைய குரலாக ஒலிப்பவள் 17 வயது ரோஸிதான்.

தொழிலுக்கு அப்பால், அவளுக்குள் பாட்டுப் பாடுவதில் ஒரு காதல் இருக்கிறது. பாடிக்கொண்டேதான் வேலைகளைச் செய்வாள் – பெற்றோரையும் உடன் பிறந்தவனையும் தவிர மற்றவர்களுக்குத்தான் அது கேட்கும். பள்ளிக்கூடப் பாடகர் குழுவில் இணைகிறாள். அங்கே குடும்பத்தினரின் இயலாமையைச் சொல்லிக்காட்டி அவமதிக்கிறார்கள். சோர்வடைகிறவளுக்கு ஊக்கமாக அமைகிறார் அன்பும் கறாருமான இசையாசிரியர் பெர்னார்டோ.

அவளுக்குக் குழுவில் மற்றொரு பாடகன் மைல்ஸ் உறுதுணையாக இருக்கிறான். இருவரையும், இணைப் பாடகர்களாக வளர்த்து முக்கிய இசைப் போட்டியில் பங்கேற்கச் செய்யவும், பெரிய இசைக் கல்லூரியில் சேர்க்கவும் பெர்னார்டோ தீவிரமாக முயல்கிறார்.

இசையின் மீதும் மைல்ஸ் மீதும் ஏற்படும் ஈர்ப்பால் ஒருநாள் குளத்தில் நீந்திக் களிக்கிற நிலையில், அவள் இல்லாமல் மீன்பிடிப்புக்குச் செல்லும் ஃபிராங்க்கும் ஜாக்கியும் லியோவும் நடுக்கடலில் காவல்படையின் எச்சரிக்கையைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகச் சிக்கிக்கொள்கிறார்கள். மொழிபெயர்க்க ஆளின்றி நடவடிக்கைக்கு உள்ளாகிறவர்களைப் போராடி மீட்கிறாள் ரோஸி.

அந்த நிகழ்வு, தன் இசைக் கனவுக்குத் தாழ் போட்டுவிட்டு அவர்களுக்குத் துணையாகவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தூண்டுகிறது. இந்நேரத்தில் பெருமைக்குரிய இசைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு வருகிறது. ஆசிரியரும் காதலனும் அதை ஏற்க வலியுறுத்துகிறார்கள். பெற்றோர், தங்களுடைய கடந்த காலக் கசப்புகளின் நினைவுகளோடு, அவள் கடுமையான இழப்புகளைச் சந்திக்க நேரிடுமே என்று கலங்குகிறார்கள்.


இந்த நிலைமையில் கோடாவின் இசைக் கோர்ப்பு இறுதிச் சேர்ப்பு என்னவாகும் என்ற பதைப்பையும் பரிவையும் பார்வையாளர்களின் நெஞ்சங்களில் பதியமிடுகிறார் இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான சியான் ஹெடர்.

தங்களுடைய வாழ்வில் இசையல்ல, ஒலியே இல்லாதவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைப் புரிந்துகொள்கிறவள் ரோஸி. நண்பனை வீட்டுக்கு அழைத்து வருகிறாள். அங்கே பெற்றோரின் அறைக்கு உள்ளேயிருந்து வருகிற, அவர்களால் கேட்க முடியாத, கட்டில் ஓசையைக் கொண்டு நடப்பதைப் புரிந்துகொண்டு அவள் அந்தச் சூழலைக் கையாளுவதையும், அவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதையும் வெறும் பாலியல் ரசனையெனத் தள்ளிவிட முடியாது.

‘தி ஃபெமில் பேலியர்’ என்ற பிரெஞ்சுப் படத்தின் கருவை எடுத்துக்கொண்டு அமெரிக்க மீன்பிடிக் குடும்பத்தின் கதையாக உருவமைத்ததில் சிறப்பான வெற்றியடைந்திருக்கிறார் ஹெடர். அந்த வெற்றி அவ்வாண்டின் சிறந்த தழுவல் படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்தது. ரோஸியின் தாயாக நடித்த ட்ராய் கோட்ஸுர் சிறந்த துணை நடிப்புக் கலைஞர் விருது பெற்றார். அவர் உட்பட, செவி மாற்றுத்திறனாளிகளாக மார்லி மாட்லின், டேனியல் டூரண்ட் ஆகியோரைத் தேர்வு செய்து, அவர்களின் வாழ்வியலை உண்மையாகவும் கலைநேர்த்தியோடும் திரைக்குக் கொண்டுவந்ததற்காகவும் ஹெடர் பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றார். 2016இல், இவரது முதல் படமாக வந்த ‘டல்லூலா’ என்ற படமும் ஆதரவற்ற மூன்று பெண்களிடையே உருவாகும் உறவு பற்றிப் பேசி கவனம் பெற்றது.

‘அவங்க உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாங்கன்னா அவங்கதான் தப்புப் பண்றாங்க,” என்று தகப்பனும், “நான் பிறந்ததிலிருந்தே என்னைக் கேலி செய்கிறவங்களைத்தான் பார்த்துட்டு வர்றேன், அந்த நிலைமை உனக்கும் வரக்கூடாது,” என்று தாயும், “நம்ம குடும்பத்தில் உனக்கு மட்டும்தான் காது கேட்குது. நீ ஒருபோதும் தனிமையை உணர மாட்டாய், ஆனால் நாங்கள் தனிமையில் இருப்போம்,” என்று அண்ணனும் சொல்கிறார்கள். சைகை மொழியில் அவர்களும், பேச்சாகவே இசை ஆசிரியரும் நிகழ்த்தும் உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கின்றன.


போட்டிக்காக வந்த இடத்தில், வேறு யாரும் அனுமதிக்கப்படாத அரங்கில், எப்படியோ பெற்றோரும் சகோதரனும் நுழைந்து பால்கனியில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறாள் ரோஸி. அவர்களுக்கும் புரியும் விதத்தில் தன் பாட்டை சைகை கலந்து அவள் பாடுகிற காட்சியில் அந்தப் பாடலின் கவித்துவம் பிரதிபலிக்கிறது.

மீன்பிடிப்புத் தொழிலில் பெரிய கார்ப்பரேட்டுகளின் மோசடிகளைப் புரிந்துகொள்ளும் பிராங்க், அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து அனைவரும் பயன்பெறக்கூடிய கூட்டுறவு சங்கம் ஒன்றைத் தொடங்குகிறான். இத்தகைய சித்தரிப்புகள், ஆப்பிள் ஓடிடி தளத்தின் வழியாக, ‘கோடா’ கதைக் களத்திற்கு நம்மை மேலும் நெருக்கமாக்குகின்றன.

[0]

‘செம்மலர்’ டிசம்பர் 2025 இதழில் எனது பதிவு