Friday, 25 October 2024

விஜய் கட்சியைப் பார்த்து பயமா?




“நம்ம நாட்டுல ஒருவர் தனியா அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு உரிமை இருக்கா இல்லையா?”

காலை நடையில் சுற்றிவரும்போது சிறிது நேரம் பூங்கா இருக்கையில் அமர்ந்திருப்பது வழக்கம். இன்று என்னைக் கவனித்துவிட்ட அன்பர் அருகில் வந்து அமர்ந்தார். “இப்ப ரெகுலரா வாக்கிங் வர்றீங்க போல இருக்கு. கீப் இட் அப்,” என்றவர் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தார். அப்போது மேற்படிக் கேள்வியைக் கேட்டார்.

“நிச்சயமா இருக்கு.  வாங்க நடந்துக்கிட்டே பேசுவோம்.”

“அப்புறம் ஏன் விஜய் கட்சி ஆரம்பிச்சிருக்கிறதைப் பார்த்து மத்த கட்சிக்காரங்க எல்லாம் பதறுறாங்க?” எனக்கு ஒத்தாசையாக மெதுவான வேகத்தில் நடந்தபடி கேட்டார் அன்பர்.

“அப்படி யாரும் பதறுன மாதிரித் தெரியலையே? அவர் அரசியலுக்கு வரட்டும், மக்களோட பிரச்சினைகள்ல அவரு என்ன நிலைப்பாடு எடுக்கிறாரு, யாரு பக்கம் நிற்கிறாரு அப்படீங்கிறதைப் பொறுத்து ஆதரிக்கிறதா வேணாமான்னு முடிவு செய்வோம்னுதானே சொல்றாங்க?”

“அதாவது ஒரு பிரச்சினைன்னு வர்றப்ப அவரு உங்களை மாதிரியே சொன்னாருன்னா சரியான கருத்துன்னு ஆதரிப்பீங்க,  வேற மாதிரி சொன்னாருன்னா தப்பான கருத்துன்னு எதிர்ப்பீங்க, அப்படித்தானே?”

“ஆமா. நான் சொல்ற கருத்தைத்தான் அவரும் சொல்லணும்கிறது இல்லை. அவரோட கருத்தையே நானும் ஏத்துக்கிடற மாதிரியும் சொல்லலாம். பிரச்சினைகள எப்படி அணுகுறதுங்கிறதுல கருத்து வேறுபாடு இருக்கிறதாலதானே தனித்தனிக் கட்சிகளா இருக்காங்க. அவரோட கருத்தால பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்னா ஆதரிக்கப் போறாங்க. பிரச்சினை தீராது, தீவிரமாகும்னா எதிர்க்கப் போறாங்க. இதிலே  என்ன தப்பு இருக்கு?”

“இல்லை, சில பேரோட பேட்டிகள், கட்டுரைகளைப் பார்த்தா அவருக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கு, என்ன அரசியல் பின்னணி இருக்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறதாலேயே மக்களுடைய தலைவராயிட்டாருன்னு ஏத்துக்க முடியாது… இப்படியெல்லாம் கருத்துச் சொல்லியிருக்காங்க.”

“அரசியல் தலைவர்கள் யாரும் அப்படிச் சொல்லியிருக்கிறதாத் தெரியலை. சில அரசியல் விமர்சகர்கள் அப்படிச் சொல்றாங்க. ஏற்கெனவே அரசியல் பின்னணி இருக்கிறவங்கதான் அரசியலுக்கு வரணும்னு விதி எதுவும் இல்லை. அரசியல் அக்கறை இருக்கிற யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனா, அந்த விமர்சகர்கள் அந்த மாதிரி சொல்றதுலேயும் என்ன தப்பு இருக்கு? மக்களோட பிரச்சினைகள்ல எந்த அளவுக்குத் தலையிட்டிருக்காரு,  அரசியல் போக்குகள்ல என்ன நிலைப்பாடு எடுக்கிறாருன்னு கேட்கத்தானே செய்வாங்க? கட்சி ஆரம்பிக்கிறதுக்கு அவருக்கு இருக்கிற உரிமையைப் போலவே, இப்படி விமர்சனப்பூர்வமா கேட்கிறதுக்கு இவங்களுக்கும் உரிமை இருக்குதுல்ல.”

“பிரச்சினைகள்ல அவரு தலையிடத்தானே செய்றாரு? ரசிகர் மன்றத்திலேயிருந்து உதவிகள் செய்றாங்க. மாணவர்களுக்குப் படிப்புச் செலவு, பாடப்புத்தகம், மழையால பாதிக்கப்பட்டப்ப உணவு டிரெஸ்சு போர்வைன்னு கொடுக்கிறாரு. மாணவர்கள் காமராஜரைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் அம்பேத்கார் பற்றியும்  படிக்கணும்னு சொல்றாரே… கட்சியோட முதல் மாநாடு நடக்கப்போற இடத்தில இந்தத் தலைவர்கள் கட்டவுட்டுகளை வெச்சிருக்காங்க… அப்புறம் என்ன?”

“அந்தத் தலைவர்களை அடையாளப்படுத்துறது நல்ல நோக்கங்களை அடையாளப்படுத்துற செயல்தான். அவங்க வெறும் உருவங்கள் இல்லை. சித்தாந்தங்களுடைய வடிவங்கள்தான் அவங்க. அந்த சித்தாங்களை இவரோட கட்சி பிரதிபலிக்குதான்னுதான் பார்க்கணும். மக்களுக்கு உதவி செய்றதும் பாராட்டக்கூடிய செயல்தான்.. ஆனா எத்தனையோ பெரிய மனுசங்க தங்களோட சம்பாத்தியத்துல கணிசமா இப்படி பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுறதுக்குன்னே செலவு செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க. பல தன்னார்வத் தொண்டர்கள் தாங்களாக முன்வந்து உதவி செய்றாங்க. தன்னுடைய வாழ்க்கைக்கே போராடிக்கிட்டிருக்கிற ஏழைத் தொழிலாளி கூட கடுமையான புயல் வெள்ளம்னு வர்றப்ப, தானும் போய் அவங்களுக்கு உதவியா வேலை செஞ்ச செய்தி கூட வந்துச்சு…”

“அவங்கெல்லாம் அரசியலுக்கு வரணும்னு ஆசைப்படலை, இவரு மட்டும் ஏன் ஆசைப்படுறார்னு கேட்குறீங்க, அப்படித்தானே?”

“இல்லை. தொழில், வியாபாரம், கல்வி நிறுவனம், ஊழல்னு கொள்ளையடிக்கிறவங்க கூட பாவத்தைக் கழுவிக்கிடுற மாதிரி, கோவில் உண்டியல்ல போடுற மாதிரி, கொள்ளையடிச்சதிலே ஒரு பகுதியை உதவி செய்றதுக்கு ஒதுக்குறாங்க. உடனே, அப்படின்னா விஜய் கொள்ளையடிச்சாருன்னு சொல்றீங்களான்னு கேட்காதீங்க. உதவி செய்றது மட்டுமே தகுதியாகிடாதுங்குறதுக்காகச் சொல்றேன்.”

"சினிமாவுல டாப்புல இருக்கிறப்பவே, இன்னும் மார்க்கெட் டல்லாகாம இருக்கிறப்பவே, கமர்சியலா பல கோடி சம்பாதிக்கிற படங்கள் தொடர்ந்து புக்காகிக்கிட்டு இருக்கிறப்பவே இது போதும்னு முடிவு செஞ்சு அரசியலுக்கு வர்றாரு. அதுவே ஒரு தகுதி இல்லையா?”

“அதுதான் தகுதின்னு பல பேர் நினைக்கிறாங்க, அவரோட ரசிகர் மன்றத்து ஆட்களைப் போல. உங்களுக்குத் தெரியுமா, நானும் விஜய் படங்களை ரசிக்கிறவன்தான். நல்லா இருந்தா பாராட்டுவேன், வாரிசு, கோட் மாதிரி வந்தா நொந்துக்குவேன். ஆனா நான் அவரோட சினிமாவுக்குத்தான் ரசிகன். அவரோட அரசியலுக்கு இல்லை. அவரோட அரசியல் என்னன்னே தெரியாதப்ப அதை ஆதரிக்கவோ எதிர்க்கவோ முடியாதுல்ல...”

“ஏன் நம்பிக்கையோட அவரை வரவேற்க மாட்டேங்கிறீங்க? தமிழ்நாடு முழுக்க நிறைய யூத்துகளை அவர் இழுத்துடுவாருன்னு பயப்படுறீங்கதானே?”

“அவரோட ரசிகர் மன்ற உறுப்பினர்கள் எல்லாரும் அவர் பின்னால போவாங்கதான். ஆனா ரசிகர்கள் எல்லாரும் போயிட மாட்டாங்க. சினிமா ரசனை வேற, அரசியல் ஈடுபாடு வேறங்கிறது அவங்களுக்குத் தெரியும். மன்றத்திலே இல்லாதவங்கள்லேயும் பல பேரு அவரு அரசியல்ல ஏதோ மாற்றம் செய்யப்போறாருன்னு நம்பக் கூடியவங்க இருப்பாங்க, அவங்களும் அவரை ஆதரிக்கலாம்…”

“அதை நினைச்சுதானே பயம்?”

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமைன்னு வள்ளுவர் சொல்லியிருக்காருல்ல? அதாவது பயப்பட வேண்டிய நிகழ்வுகள் வர்றப்ப பயப்படாம இருக்கிறது மடத்தனம்கிறாரு. நம்ம சமுதாயத்திலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தணும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு முடிவு கட்டணும், சமத்துவத்தைக் கொண்டு வரணும், சமூகநீதியை நிலைநாட்டணும், சாதிப் பாகுபாட்டை ஒழிக்கணும், பெண்களுக்கான சம உரிமைகளை நிலைநாட்டணும், இன்னிக்கு ஏற்பட்டிருக்கிற புரிதல்கள்ல திருநங்கை, திருநம்பி, தற்பாலின ஈர்ப்பாளர்கள் இவங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தணும், மதத்தோட பிடியிலே நாடு சிக்கிவிடாமல் தடுக்கணும், சர்வாதிகாரம் முளைவிடாமல் பார்த்துக்கணும், மொழி வழி அதிகாரத்துக்கு நடக்கிற முயற்சிகளை முறியடிக்கணும்… இப்படியான லட்சியங்களோட செயல்படுகிற இயக்கங்கள் இருக்கு. கரடு முரடனான பாதை அவங்களோடது. அதிலே முன்னேற விடாம தடுக்கிற கைங்கரியம் அப்பப்ப நடந்துக்கிட்டே இருக்கு. புதுசுபுதுசா கிளம்புறவங்களும் அதே மாதிரி கைங்கரியத்தைத்தான் செய்வாங்கன்னா இந்த மாற்றங்களுக்கு இன்னும் எத்தனை காலமாகுமோன்னு கவலை ஏற்படத்தானே செய்யும்? அது நியாயமான பயம்தானே?”

“அப்ப விஜய் அந்த லட்சியங்களைப் பின்னால இழுக்கிறவராத்தான் இருப்பாருன்னு சொல்றீங்களா?”

“அப்படி இருந்துவிடக்கூடாதுன்னு சொல்றேன். அப்படிப் போயிட மாட்டாருன்னு நம்புற மாதிரி அவரோட கருத்துகளும் செயல்பாடுகளும் இருக்கணும்னு சொல்றேன்.”

“எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்காந்த், கமல்ஹாசன் இவங்க அப்படி இருந்தாங்களா இல்லையா?”

“எம்ஜிஆர் அரசியல் பின்னணியோடேயும் அனுபவத்தோடேயும்தான் தன்னோட கட்சியை ஆரம்பிச்சாரு. அவருக்குப் பிறகு ஜெயலலிதா தொடர்ந்து அதை பராமரிச்சாங்க. அவங்களோட கட்சி ஆரம்பத்திலே மக்களுக்கு ஆதரவா பல முடிவுகள் எடுத்துச்சு. அப்புறம் ஊழல் பாதைக்குப் போயிடுச்சு. விஜய் காந்த்துக்கு அரசியல் பின்னணி இல்லைன்னாலும் நிலைப்பாடுகளை வெளிப்படுத்திட்டுதான் இருந்தாரு. மக்கள் பெரிய எதிர்பார்ப்போட சட்டமன்றத்திலே முக்கிய எதிர்க்கட்சிங்கிற மதிப்பைக் கொடுத்தாங்க. ஆனா அவரால அதைக் காப்பாத்திக்க முடியாமப் போயிடுச்சு. கமல் பல பிரச்சினைகள்ல முற்போக்கான கருத்து  சொல்றவர்தான், ஆனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இயக்கமா அவரால கட்சியைக் கொண்டுவர முடியலை. ரஜினியை இதிலே சேர்க்க வேணாம். அவருதான் வர வேண்டிய நேரத்தில வருவேன்னு வசனம் பேசி அத்தனை வருசமா ரசிகர்களை எதிர்பார்க்க வைச்சிட்டு அப்புறம் கட்சி ஆரம்பிக்கப் போறதில்லைன்னு கையைத் தூக்கிட்டாரே…”

“அவங்கல்லாம் நீங்க சொல்ற மாதிரி மாற்றத்துக்கான பயணத்தைப் பின்னுக்கு இழுத்தவங்கதான்னு சொல்றீங்களா?”

“பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டதிலே அவங்களுக்கும் பங்கிருக்குதுன்னு சொல்றேன். கமல் கட்சி ஆரம்பிச்சப்ப இடதுசாரியுமில்லை வலதுசாரியுமில்லை ரெண்டுக்கும் மையமான இயக்கம்னு அறிவிச்சாரு. இடதுசாரி இல்லைன்னாலே வலதுசாரிதான், அதிலே என்ன மையம்னு அப்ப நான்  விமர்சிச்சது ஞாபகம் வருது. ஆனா அண்மைக் காலமா முக்கியமான பிரச்சினைகள்ல அவர் மக்கள் இயக்கங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறார். அதை வரவேற்கத்தானே செய்றாங்க. சூர்யா, அவரோட தம்பி கார்த்தி… இவங்க கூட புதிய கல்விக் கொள்கையை விமர்சிச்சாங்க, அந்த அளவுக்குக்கூட விஜய் எதுவும் சொல்லலையே…”

“நீங்க சொல்ற மாதிரி விஜய் அரசியல் பின்னணியோ அனுபவமோ இல்லாம கட்சியை ஆரம்பிச்சுட்டு, அப்புறம் சரியான நிலைப்பாடு எடுக்க சான்ஸ் இருக்குதுல்ல?”

“அந்த வாய்ப்பை அவரு முறையா பயன்படுத்திக்கிட்டா வரவேற்கலாம். அவரு கொடியை ஏத்தி கட்சியை அறிவிச்சப்புறம் பல விதமான விமர்சனம் வந்திருக்கு. அவரோட படங்கள்ல வந்த சில வசனங்கள பாஜக தலைவர்கள் கடுமையா தாக்கினாங்க. முற்போக்கு இயக்கங்கள் அவருக்கு ஆதரவாக் குரல் கொடுத்தாங்க. அதை அவர் கண்டுக்கிட்டதாக் கூட தெரியலை. ஆனா, தாக்கினவங்க மனசை சாந்தப்படுத்துற மாதிரி ஒரு படத்திலே சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை ஒரு மாலுக்குள்ளே நுழைஞ்சு ஒழிச்சுக்கட்டுறாப்புல கதையை அமைக்கிறாங்க… கட்சியோட பெயர்ல தமிழ்நாடுன்னு இல்லாம தமிழகம்னு வைச்சிருக்கிறதுல ஒரு சமரசத் தூது இருக்குதுன்னு பேசப்படுது. கட்சியோட பொதுச்செயலாளருக்கு பாஜக தலைவர்களோட தொடர்புப் பின்னணி இருக்குதுன்னும் சொல்லப்படுது. அப்படியெல்லாம் இல்லைன்னு திட்டவட்டமா மறுப்போ விளக்கமோ வரலையே…”

“தமிழ்நாட்டுல நேரடியா செல்வாக்கு செலுத்த முடியாதுங்கறதால, விஜய்க்கு இருக்கிற மாஸ் சப்போர்ட்டை பாஜக  பயன்படுத்திக்கிடும், பணத்தை அள்ளிக்கொடுக்கும்னு கூட சொல்றாங்க, அதையெல்லாம் நீங்க நம்புறீங்களா?”

“நம்ப வேண்டியதில்லைன்னு நம்பிக்கையோட இருக்க வைக்கிறது அவரு கையிலதான் இருக்கு. இவ்வளவு பெரிய சந்தேகங்கள் கிளப்பப்படுறப்ப மௌனமா இருக்கிறதை என்னன்னு சொல்றது? மக்களுக்கு இனிமே வரக்கூடிய பிரச்சினைகள்ல தன்னோட நிலைப்பாட்டை அறிவிப்பாருன்னு காத்துக்கிட்டிருக்கிற நிலைமைய என்னன்னு சொல்றது?”

“உங்க தெரு வந்திருச்சு. கடைசியா ஒரு கேள்வி கேட்கிறேன். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கு  ஏத்த கட்சியா வெற்றிகரமா  வளருமா வளராதா?”

“எப்பவுமே சொல்றதை இப்பவும் சொல்றேன். நான் சோதிடம் சொல்றதில்லை, அதிலே எனக்கு நம்பிக்கையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னொரு நல்ல கட்சியா வந்தா வரவேற்பேன். செல்வாக்கு அரசியலை வச்சு மக்களை ஏமாத்தி வேற பக்கம் இழுக்க முயற்சி செஞ்சா எதிர்ப்பேன். மாநாட்டுல என்னதான் சொல்றாருன்னு பார்ப்போம்.“


[‘மின்னம்பலம்’ இணைய ஏட்டின் 25-10-2024 இதழில் வந்துள்ள எனது கட்டுரை]