Monday, 1 December 2025

வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி

 


நாடக மேடை

நாடகத்தின் எதிர்காலம் பற்றிய அக்கறை உள்ளவர்களுக்கு ஒளிமயமான வார்த்தைகளை விடவும் மனநிறைவை அளிக்கக்கூடியது எது? இத்தகைய படைப்புகள் தொடருமானால் இந்தக் கலை கம்பீரமாக நடைபோடும் என்ற நம்பிக்கையை ஊன்றுகிற நிகழ்த்துகைதான் அதைச் செய்ய வல்லது. அப்படிப்பட்ட ஒருத்தியாக வந்திருப்பவள் தமுஎகச–வின் சென்னை கலைக்குழு உலாவ விட்டுள்ள ‘வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி’. பேச்சியும் பிள்ளைகளுமாக இந்த நவம்பரின் மறக்க முடியாததொரு மாலைப் பொழுதை ஆக்கிக் கொடுத்தார்கள்.

பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவார்ந்த, சுவையான ஒரு மாறுபட்ட சுற்றுலாவை அனுபவப் படுத்தும் எண்ணத்தோடு ஒரு காட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் ஆசிரியர்கள். அருகிவரும் வன விலங்குகளைக் காண்பதும், அவற்றைப் பற்றி அறிந்துகொள்வதுமே பயணத் திட்டம். அந்தப் பக்கம் போகக்கூடாது, இதைத் தொடக்கூடாது, அதைப் பறிக்கக்கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள் விதிக்கப்படுகின்றன. நாமொன்று நினைக்க அவர்கள் ஒன்றைச் செய்வதுதானே குழந்தைகளின் இயல்பு?

தொலைவில் ஒரு பாறையடியில் குட்டிப் புலி ஒன்று எட்டிப் பார்ப்பதைக் கவனித்துவிடும் சிறுமி கௌரி, ஒரு சிறு கல்லை எடுத்து வீச, குட்டி பதுங்கிவிட, நண்பனிடம் அந்த சாகசகத்தைச் சொல்கிறாள். நம்ப மறுக்கும் சதீஷ் அதே போல் சிறு கல்லைப் பாறை மேல் வீசுகிறபோது வனக் காவலரிடம் பிடிபடுகிறார்கள். அவர்கள் செய்தது எப்படிப்பட்ட குற்றம் தெரியுமா என்று கண்காணிப்பாளர் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிவிக்க முயல, அந்த இரவில் இருவரும் காணாமல் போகிறார்கள்.

பிரச்சினை வேறு வடிவம் எடுக்கிற நிலையில் ஆசிரியர்களும் வனத்துறையினரும் அடர் இருள் காட்டுக்குள் குழந்தைகளைத் தேடிப் புறப்படுகிறார்கள். தகவல் தெரிவிக்கும் ஆசிரியரிடம் நிர்வாகம், “பசங்களின் பாடி கிடைக்கிறப்ப, ஸ்கூல் யூனிஃபார்மைக் கழற்றிவிட்டு கலர் டிரெஸ் போட்டுவிடுங்க,” என்று கட்டளையிடுகிறது! காட்டுமிராண்டித்தனம் எனப்படுவது எங்கே இருக்கிறது என்று உணர்த்துகிற அந்த இடத்திலிருந்து நாடகம் தடம் மாறுகிறது – அதாவது அழுத்தமான வேறு தடத்திற்கு.

நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக கௌரி, சதீஷ் இருவரும் காட்டுக்கு உள்ளே வெகுதொலைவுக்கு வருகிறார்கள். ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்திருக்கும் புதிய உருவத்தை நெருங்குகிறார்கள். அவர்கள் எதற்காக அங்கே வந்தார்கள் என்று அறிந்துகொள்ளும் அந்த உருவம் தன்னைப் போர்த்திக்கொண்டுள்ள கனத்த மேலங்கியை அகற்ற, மார்பிலும் முதுகிலும் பாய்ந்து செருகியிருக்கும் அம்புகள்! இத்தனை அம்புகள் தைத்தும் உயிரோடு இருப்பதைக் கண்டு வியக்கும் குழந்தைகளிடம் தன்னை வனப்பேச்சி என அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். வனப்பேச்சி என்றால் காட்டின் அரசி. ஒரு காட்டுக்குள் இருந்தாலும் இந்தப் பேரண்டத்திற்கே உரிய பேரண்டச்சி என்றும் தன்னைச் சொல்வார்கள் என்கிறாள்.



தனக்கு “ராட்சசி” என்ற பெயர் இருப்பதையும் தெரிவிக்கிறபோது குழந்தைகள் பயந்து போகிறார்கள். ராட்சசி என்றால் குழந்தைகளைப் பிடித்துப் பிய்த்து வாயில் போட்டு விழுங்கிவிடுவாள் என்று கேட்டுவந்திருக்கிறார்களே! புன்னகையோடு, “இப்படித்தான் என்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். ரட்சை என்றால் காப்பு என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் ராட்சசி. அப்படியென்றால் காப்பவள் என்று பொருள்,” என்று வனப்பேச்சி பெயர் மூலம் பற்றி வகுப்பெடுக்கிறாள். “இனியேனும் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் கதைகளைச் சொல்லாதிருப்பீர்களாக,” என்று பெரியவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் அது.

அவள் வனத்தையும் வனவாழ் மக்களையும் பிற உயிர்களையும் தலைமுறை தலைமுறையாக ரட்சித்து வருகிறவள். அவளுடைய உடலில் அம்புகள் பாய்ந்திருப்பது எதனால்? எவரால்? ராட்சசி தன் கதையைக் குழந்தைகளுக்கு விவரிக்க விவரிக்க, வனங்களை ஆக்கிரமிக்க வந்தவர்கள் ஆதிக்குடிகளை அப்புறப்படுத்திய வஞ்சகங்கள் அரங்கேறுகின்றன. வஞ்சகங்களுக்கு இதிகாச நாயக சாகச முலாம்கள் பூசப்பட்ட அத்தியாயங்கள் கிழிகின்றன. அரச நெறியில் நின்று, முதுகுக்குப் பின்னால் மறைந்திருந்து தாக்கும் அறமீறலைச் செய்ய இளவரசன் ராமன் தயங்கியபோது, அவனுடைய வில்லிலிருந்து அம்பை குருநாதரே உருவியெடுத்துத் தாடகையின் முதுகில் தானே செலுத்துவதாக, மறுவாசிப்புப் படைப்பாக்குகிறார் நாடகத்திள் பனுவலர், நெறியாளுகையாளர் பிரளயன்.

வரலாறு நெடுகிலும், ஆதிக்குடிகளை எங்கேயாவது வெளியேற்றிவிட்டுக் கனிமங்களையும் வன வளங்களையும் கார்ப்பரேட் கனவான்கள் சூறையாடுவதற்காகத் தாடகைகளின் முதுகில் குத்தப்படும் இன்றைய அம்புகள் வரையில் அத்தியாயங்களை விரிக்கிறாள் வனப்பேச்சி. ஒரு நல்ல கதை தன்னைச் சொல்லிக்கொள்ளாது, தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் என்ற இலக்கியக் கோட்பாடு ஒன்று உண்டு. நாடக இலக்கியமாகப் படைத்திருக்கும் பிரளயனின் ஆக்கத்தை நடத்தியும் நடித்தும் காட்டுகிறார்கள் குழுவின் கலைஞர்கள்.



“மறைந்திருந்து தாக்குவதுதானே உங்கள் மரபு? இப்போதென்ன நீங்களே நேரடியாகத் தாக்க வருகிறீர்கள்?” –வரலாற்றுத் தடயங்களைக் கொண்ட இந்த வசனம் ரோகிணியின் நாமொழி உச்சரிப்பாலும் உடல்மொழிச் சித்தரிப்பாலும் உயிர்ப்புப் பெறுகிறது. தாடகையாகிய, ராட்சசியாகிய, வனப்பேச்சியாகிய பேரண்டச்சியாக ரோகிணி இப்படியொரு கதாபாத்திரத்திற்காகவே காத்திருந்தது போல உணர்வும் உழைப்பும் நிறைந்து தளும்பும் நடிப்பை வழங்குகிறார். அல்லது, ரோகிணிக்காக வனப்பேச்சிதான் காத்திருந்தாளா?

ஆசிரியர்களாக, பள்ளிக் குழந்தைகளாக, வன அலுவலர்களாக, பழங்குடிகளாக, இதிகாசப் பாத்திரங்களாக கவின் மலர், வெண்மணி, அமலா மோகன், சதீஷ், சாரதா, சரண்யா, ஷ்ருதி, ஜோஸஃபைன், ருக்கு, பிரியதர்ஷினி, அசோக் சிங், மணி சுந்தரம், விதூர் ராஜராஜன், சரண் சந்தோஷ், முகிலன், பிரவின், பிரேம், ராம், சுஜய், பிரேம்நாத், பாரி ஆகியோர் கதையோட்டத்தின் பதைப்புகளையும் செய்திகளையும் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்துகிறார்கள். முன்னொரு காலத்திய நாடகக்காரனாக எனக்கு, அந்த மேடையில் சும்மாவாவது இங்கும் அங்கும் நடக்கிற ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கலாமே என்ற சன்னமான ஏக்கம் எனக்கு ஏற்பட்டது!

சென்னை மியூசிக் அகடமி அரங்கின் அந்த அகன்ற மேடையில் ஒரு சின்ன இடத்தையும் விடாமல் கலைஞர்கள் தங்கள் நடன அசைவுகளால், நடமாட்டத்தால், நடிப்புப் போட்டியால் நிறைத்தார்கள், அதைப் பார்த்ததும் ஏற்பட்ட முதல் எண்ணம் – மேடை ஆளுகையில் தனித்துவமான தேர்ச்சியுடன் இவர்கள் எங்கேயோ வந்துவிட்டார்கள்.


நடிப்புப் பயிற்சி அளித்ததில் விதூர் ராஜராஜன், மெலடி டோர்சஸ், பழங்குடியினர் அசைவுகளில் ரேணுகா சித்திக், படைப்பாக்க அசைவுகளில் கிருஷ்ணா தேவநந்தன், ஒப்பனையில் சிவா, உடைகள் தேர்வில் சாய், மேடைப் பொருள்களில் அறிவழகன், ஒலியமைப்பில் ஆலம் ஷா, ஒளியமைப்பில் ஷைமன் செலாட் என ஒவ்வொருவரின் ஒத்திசைவும் குறிப்பிடப்பட வேண்டியது. மகிழினி மணிமாறன், மணிமாறன், கவின் மலர், அமலா மோகன் பாடல்கள் அந்த ஒத்திசைவின் குரலாக இணைகின்றன. மணிமாறன், நிஷோக் தாளங்கள் உடன் இழைகின்றன. ஷாஜஹான் விசைப்பலகை மீட்டல்கள் பின்னணியாக இசைகின்றன.

நாட்டின் கலாச்சார மரபு மீட்பு என்ற போர்வையில், பழைய பாகுபாட்டுக் கட்டுக்கதைகளுக்கு முட்டுக்கொடுக்கும் புதிய தந்திரங்களுக்கு ஒரு வலுவான கலைக்கள எதிர்வினைதான் ‘வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி’. கதைக் கருவால் காட்சிகள் பொலிவடைகின்றனவா, காட்சியமைப்புகளால் கதைக் கரு உயிர்பெறுகின்றனவா? இந்தக் கலையின்ப மயக்கத்தில் மூழ்கித் திளைக்க விரும்புவீர்களானால் உங்கள் வட்டாரத்திற்கு வனப்பேச்சியை வரவழைத்து சாத்தியமாக்கிக்கொள்ளுங்கள்.


[0]

-‘செம்மலர்’ டிச ம்பர் 2025 இதழில் இந்நாடகம் பற்றிய எனது வெளிப்பாடு.

No comments: