Monday, 8 December 2025

உலகளாவிய பண்பாட்டுக் களத்தில் என்ன நடக்கிறது?

 



தொழில் – வணிகம், கல்வி, மருத்துவம், அறிவியல் ஆகியவை சார்ந்து உலக அளவில் அரசியல் களத்தில், சமுதாய வாழ்வில் தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. ஒருபக்கம் தாக்கங்களை அங்கீகரித்து ஏற்பவர்கள். மறுபக்கம் மாற்றங்களை மறுத்து எதிர்ப்பவர்கள். இதிலிருந்து சமூக வாழ்க்கையும் கலை இலக்கியமும் சார்ந்த பண்பாட்டுத் தளம் தனித்திருக்க முடியுமா?

உலக அளவில் முன்னுக்கு வந்துள்ள நிகழ்வுப் போக்குகளுக்குள் ஒரு சிற்றுலா சென்று வந்ததில் சில விவாதங்களைக் கேட்க முடிகிறது.

ஏஐ ஒரு சவாலா, சாதகமா?

இன்று இந்த விவாதங்களில் இயற்கையாகவே முதலிடம் பிடித்திருப்பது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி நிலைதான். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிற துறைகளைப் போலவே கலை இலக்கிய மேடைகளில் சரசரவென்று ஏறிவிட்டது ஏஐ. பேனாவுக்கு மாற்றாக தட்டச்சு விசைப்பலகை, பெரிய அரங்கத்திற்குப் போட்டியாகக் கைப்பேசித் திரை என்ற கருவி மாற்றங்களோடு அது நிற்கவில்லை. இசைக் குழுக்கள், பழைய–புதிய பாடல்கள், கதை–கவிதை ஆக்கங்கள், ஓவியம்–சிற்பங்கள், நாடக–திரைப்படங்கள், காட்சியமைப்புகள், நடிப்புக் கலைஞர்களின் பருவத் தோற்றங்கள், நினைவில் வாழ்வோரின் திரை நடமாட்டங்கள், நிறச் சீரமைப்புகள் என ஏஐ கால்படாத இடமே இல்லை.

தேடுகிற தகவல்களைத் தருவது மட்டுமல்லாமல், திருத்தங்களுக்கு ஆலோசனை வழங்குகிற இடத்திற்கும் அது வந்துவிட்டது. ஒரு கதையின் கரு இது, தொடக்கம் இப்படி இருக்கட்டும், இவ்வாறு வளரட்டும், இங்கே முற்றட்டும், இத்தோடு முற்றுப் பெறட்டும் என்ற குறிப்புகளை உட்செலுத்தினால், சில நொடி நேரத்தில் அவரவரின் சித்தரிப்பு நடையிலேயே ஒரு கதையைச் செய்து கொடுத்துவிடும். அதற்கு மேல் படைப்பாளியின் பணி தன் கண்ணோட்டத்தையும், அழகியலையும் பொருத்தமாக இணைத்து நிறைவாக்குவதுதான்..

இப்படியே போனால், பல்வேறு தொழில்களின் பாட்டாளிகள் போல, கலை–இலக்கியத் துறையில் படைப்பாளிகள் வெளியே நிறுத்தப்பட்டு விடுவார்களா? அல்லது அவர்கள் ஏஐ திறனை உள்ளே வாங்கிக்கொண்டு மேம்பட்ட ஆக்கங்களைப் படைத்தளிப்பார்களா? இதனால் மெய்யான படைப்பாற்றல் ஒளிமங்கிவிடாதா? ஒருவரது நுட்பங்களை ஏஐ கருவி வசப்படுத்திக்கொள்ளும், அவருடைய படைப்பைப் போலவே உருவாக்கித் தரும் என்றால், போலிகள் வந்து ஆக்கிரமிக்காதா? நியாயமான கவலைகள்.

இல்லை, போலிகளைக் கண்டுபிடிப்பதற்கே கூட ஏஐ கருவிகளைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் பகிரப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்படும் போலியான ஆவணங்களைக் கண்டுபிடிப்பதற்கென்றே ஏஐ செயலிகள் வந்திருப்பது பற்றி ஒரு பேராசிரியர் தெரிவித்தார்.

கலை உலகில், குறிப்பாகத் திரைக்கதையாக்கத்தில் ஏஐ நுழைப்பை எதிர்த்து ஹாலிவுட் எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெருவில் இறங்கினார்கள். 148 நாட்கள் நீடித்த அந்தப் போராட்டம், ஏஐ பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகளோடு, அதுவரையில் இல்லாத வகையில் எழுத்தாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற ஒப்பந்தம் ஒன்று தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்போடு ஏற்பட்டது.

கலப்பும் திணிப்பும்

உலகமயமாக்கல் கொள்கைகள், நடைமுறைகளின் தாக்கத்தில் உள்நாட்டளவிலும் உலக அளவிலும் கலை இலக்கியப் பகிர்வுகள் நடப்பது போலவே, பண்பாடுகளின் கலப்பு குறித்த விவாதமும் முன்னுக்கு வந்திருக்கிறது. புதிய கலப்பு அடையாளங்கள், பண்பாட்டுத் தழுவல்கள், மக்களின் ஏற்பு மனநிலைகள் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியலும் வணிக உறவுகளும் சார்ந்ததாக ஒரு பண்பாட்டின் கூறுகளை மற்றொன்றின் மீது ஏற்றுவதால் ஏற்படக்கூடிய அழிப்புகள், மக்களின் தன்விருப்ப ஏற்பில்லாத கட்டாயத் திணிப்புகளை மறுக்கும் நியாயமான அடையாளப் பாதுகாப்புக் கேடயங்கள், இதே சூழலிலிருந்து உருவாகும் புதிய அடையாள அரசியல் இயக்கங்கள் ஆகியவையும் பேசுபொருளாகியிருக்கின்றன.

இந்தக் கலந்துரையாடல்கள் கலை இலக்கிய மேடைகளில் நிகழ்த்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) அரங்குகளிலும் நிகழ்கின்றன. 2022 செப்டம்பர் 28 முதல் 30 வரை மெக்சிகோ நகரத்தில் “பண்பாட்டுக் கொள்கைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உலக மாநாடு” ஒன்றை யுனெஸ்கோ நடத்தியது. “மோண்டியாகல்ட்” எனப்படும் இந்த மாநாடு 1982இல் முதல்முறையாக நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் இரண்டாவது மாநாடு நடைபெற்றது.

பொது நன்மை

அதில், “உலகளாவிய ஒரு பொது நன்மையாக பண்பாடு” என்ற கோட்பாடு ஏற்கப்பட்டது. பண்பாடு உலகத்திற்கே பொதுவான நன்மை, ஆனால் அது ஒற்றைத் தன்மையானது அல்ல, அதன் பன்மைத்துவம் உயர்த்திப் பிடிக்க வேண்டியது என்பதே அதன் அடிப்படை நோக்கம். தமுஎகச பண்பாட்டுப் பன்மைத்துவ உரிமை மாநாடு நடத்தியது நினைவுக்கு வருகிறதல்லவா?

மொழியையும் உணவையும் உடையையும் உள்ளடக்கிய ஒற்றைக் கலாச்சார அடாவடிக்கு எதிராக இந்தியாவில், குறிப்பாகத் தென்னகத்தில், மேலும் குறிப்பாகத் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

புவியின் பல வட்டாரங்களிலும் பண்பாட்டுத் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்கப் போராட்டங்கள் முளைத்துள்ளன. “மேன்மைக்” கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும், மொழி வழியாக அடிமைப்படுத்தும் திணிப்புகளுக்கும் எதிரான கிளர்ச்சிகள் விவாத மேடைகளிலும் பிரதிபலிக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கான முனைப்புகளில், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகளுக்கு எதிரான செயல்களில் பண்பாட்டுப் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உரிமையாக உறுதிப்படுத்துவதன் தேவைகள் வலியுறுத்தப்படுகின்றன.

மக்களின் பேச்சாக

இன்றைய அறிவியல் வளர்ச்சிகளோடு இந்தத் தேவைகளை இணைப்பதற்கான உரையாடல்களும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வட்டாரப் பண்பாட்டு உள்ளடக்கங்களைத் தரவுகளாக இணையத் தளங்களில் பதிவேற்றிச் செழுமைப்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்கள் வழங்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் வசப்படுத்துவது, தகவலறிவின் இடைவெளிகளைச் சுருக்கிக்கொண்டே போவது, மொழிகள் உள்ளிட்ட பன்முகப் பண்பாடுகளை எண்ம உலகில் மேம்படுத்துவதன் மூலமாகவும் உரிமைகளைப் பாதுகாப்பது…

அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்களிடையேயான கருத்துப் பகிர்வுகளாகவும் சொற்போர்களாகவும் நடந்துகொண்டிருந்த இந்த விவாதங்கள் இன்று குறிப்பிடத்தக்க அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. மக்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து இவற்றைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கிடும் அமைப்புகள், தனிமனிதர்களின் தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள ஓர் அடையாள வெற்றி என்றும் இதைக் கூறலாம். மக்களை உசுப்பிவிடுகிறார்கள், கலகத்தை மூட்டுகிறார்கள் எனவாக ஆதிக்கவாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் மாட்டிவிடும் பட்டைகளை மீறி இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

இது படிப்படியாக, சமுதாய அசைவுகளை ஏற்படுத்துவது, அரசுகளைச் செயல்பட வைப்பது, அதை நோக்கிய இயக்கங்களை முடுக்கிவிடுவது என்ற அரசியல் விளைவுகளுக்கும் இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையை களமெங்கும் விரவியிருக்கும் போராட்டத் தடங்கள் அளிக்கின்றன.

[0]

தமிழ்நாடு முறபோககு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் பூத்துள்ள சிறப்பு மலரில் ஓர் இதழாக எனது கட்டுரை

No comments: