Sunday, 7 December 2025

`இனி, உழைக்காமலே சாப்பிடலாம்... சம்பாதிக்காமலே ஊர் சுற்றலாம்!' - எலான் மஸ்க் ஜோதிடம் பலிக்குமா?

 


உழைக்காமலே உட்கார்ந்து சோறு சாப்பிடலாம், உழைத்துப் பணம் சம்பாதிக்காமலே ஊர் சுற்றலாம்… இப்படியொரு எதிர்காலம் வருமானால் யாருக்குத்தான் பிடிக்காது. உண்மையாகவே அப்படியொரு காலம் வருகிறது, பக்கத்தில் வந்துவிட்டது என்று குடுகுடுப்பை அடித்திருக்கிறார் எலான் மஸ்க். தோராயமாக 33 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரரான எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்.

அவர் ‘பீப்பிள் பை டபிள்யூ.டி.எஃப். (People by WTF) என்ற இணையவழி ஒலிபரப்பு மேடை (பாட்காஸ்ட்) நேர்காணலில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தக நிறுவனமான ‘ஸெரோதா’ குழுமத்தின் நிறுவனர் நிகில் காமத் இந்த ஒலிபரப்பு மேடையை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 30 அன்று மஸ்க்கிடம் கேள்விகள் கேட்டவரும் இவர்தான்.

ஒரு கேள்விக்குப் பதிலளித்த மஸ்க், ‘மனிதர்கள் இனி வேலை செய்யத் தேவையில்லை’ என்ற கருத்தைக் கூறினார். மேலும், “அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), எந்திர மனிதவியல் (ரோபோட்டிக்ஸ்) வளர்ச்சி காரணமாக, வேலை ஒரு விருப்பத் தேர்வாக மட்டுமே இருக்கும், கட்டாயமானதாக இருக்காது.

தன்விருப்ப உழைப்பு வீட்டில் காய்கறி வளர்ப்பது போன்ற செயலாக இருக்கும். வேலை ஒரு பொழுதுபோக்காகிவிடும்/ ஏஐ மூலம் உற்பத்தி நடக்கும். அந்த உற்பத்தி மிகவும் அதிகரிக்கிறபோது, பணம் தேவையற்றதாகி, படிப்படியாகப் பொருத்தமற்றதாகிவிடும்” என்றார் மஸ்க். அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளிலேயே இந்த மாற்றங்கள் நிகழும் என்று ஆர்வப் பரபரப்பை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.


இந்தக் கருத்து இந்தியச் சூழலில் கூடுதல் கவனம் பெறுகிறது. அந்த நேர்காணலின் இலக்கு குறிப்பாக பாட்காஸ்ட் நேயர்களான இந்தியர்கள்தான். அடுத்து, ஏஐ ரோபோக்கள் நுழைக்கப்படுகிறபோது எண்ணற்ற தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சம் பரவியிருக்கிறது.


                                        நாராயண மூர்த்தி

14, 18 மணி நேர வேலை!

கூர்மையான மூன்றாவது காரணமும் இருக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா உச்சத்திற்கு வர வேண்டுமானால் பணியாளர்கள் வாரத்தில் 70 மணி நேரம் (வாரம் ஐந்து நாள் வேலை என்ற கணக்கில் ஒரு நாளில் 14 மணி நேரம்) உழைக்கத் தயாராக வேண்டும் என்று இன்ஃபோசிஸ் குழுமத்தின் தலைவர் என்.ஆர்.நாராயண மூர்த்தி கூறினார். லார்சன் அன் டூப்ரோ (எல்&டி) குழுமத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன். வாரத்தில் 90 மணி நேரம் (ஒரு நாளில் 18 மணி நேரம்) உழைக்க முன்வர வேண்டும் என்று பேசினார்.

இந்தப் பேச்சுகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. பின்னர், எல்&டி மனிதவளத் துறைத் தலைவர் அளித்த விளக்கத்தில், அலுவலக ஊழியர்களிடையே பேசிய நிறுவனத் தலைவர் நகைச்சுவைக்காகவே அவ்வாறு சொன்னதாகக் கூறினார் என்று விளக்கமளித்தார். தொழிலாளர்களின் உழைப்பு நகைச்சுவைத் துணுக்காகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.


சுவையான கற்பனை!


இந்தப் பின்னணியில்தான், வேலையே செய்யாமல் அனுபவிக்கலாம் என்று மஸ்க் சொன்னது விவாதக் களத்திற்கு வந்திருக்கிறது. உண்மையாகவே, வேலை செய்யாமல் விருந்து சாத்தியமா? உழைப்புக்கும் பணத்திற்கும் தேவையின்றிப் போய்விடுமா? அவரவரும் தத்தமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வேலை செய்வார்கள், அடிப்படைத் தேவைகளுக்காக உழைக்க வேண்டியிருக்காது என்ற சோதிடம் நம்பக்கூடியதா?


மஸ்க்கின் இக்கருத்து ஒரு தொலைநோக்குக் கனவாக, சுவையான கற்பனையாக உற்சாகமூட்டுவதாக அமையுமேயன்றி, குறுகிய காலத்தில் மெய் நடப்பாவதற்கு வாய்ப்பே இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். குறைந்தது அடுத்த 70 ஆண்டுகளில் அதற்கான அறிகுறியே இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். வல்லுநர்களை விடுங்கள், நடைப்பயிற்சிக்காகப் பூங்காவுக்கு வருகிறவர்களுடன் உரையாடுகையில் மஸ்க்கின் கருத்து பற்றிய பேச்சு வந்தபோது, “உழைக்காம சாப்பிடுறது உடம்புல ஒட்டாது,” என்றார்கள்.


                                        டிரம்ப், மஸ்க்

இது பற்றி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது (டிசம்பர் 2). “பணம் ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. அது, நீ விரும்புவது உன்னிடம் வந்து சேரும் என்ற மஸ்க் வாக்கு பலிப்பதைத் தடுக்கிறது. ஆசைகள் எல்லாம் குதிரைகளாக மாறுமானால், அவற்றை எங்கே மேய்ச்சலுக்கு விடுவது? அவற்றின் சாணத்தை யார் அப்புறப்படுத்துவது,” என்று அந்தத் தலையங்கம் கேட்கிறது. “ஆசைகள் குதிரைகளாக மாறினால் பிறகு பிச்சைக்காரர்கள்தான் சவாரி செய்வார்கள்” என்ற ஆங்கிலப் பழமொழியை இப்படி நாசூக்காக மாற்றியிருக்கிறார்கள். இயற்கை வளங்களேயானாலும் வரம்புக்கு உட்பட்டவைதான் என்கிறபோது, இத்தகைய ஆசைகள் எப்படி நிறைவேறும் என்பதைத்தான் இப்படிக் கேட்டிருக்கிறார்கள்.

உழைப்பால் உருவான இனம் உழைப்பே இல்லாத சமுதாயம் சாத்தியமா? இயற்கையான பொருள்களைப் பறித்தும் வெட்டியும் தோண்டியும் எடுத்துப் பயன்படுத்திய உழைப்புச் செயல் தொடங்கியதால்தான், முதுகெலும்புள்ள ஒரு பாலூட்டி இனங்களில் ஒன்றாக இருந்தது, அறிவார்ந்த மனித இனமாகப் பரிணமித்தது. உழைப்பின் புதுப்புது வடிவங்களில்தான் சமுதாயம் நாகரிகமடைந்தது. உழைப்புச் செயல் ஓய்ந்துவிட்டால் என்னாகும்? பூமியில் டைனோசர்களுக்கு நேர்ந்தது மனிதர்களுக்கும் நேர்ந்துவிடும்.


வருவாய்க்கான வழி மட்டுமல்ல!

விருப்பத்தோடு செடி வளர்க்கும் வேலையைச் செய்தால் போதுமென்ற நிலை இப்போது வருவதாகவே வைத்துக்கொள்வோம். தேவையான பொருள்கள் ஏராளமாக உற்பத்தியாவதாகவும் வைத்துக்கொள்வோம். அவற்றைச் சமச்சீராக அனைவரிடமும் கொண்டுசேர்த்தாக வேண்டும். அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோக அமைப்பு இருந்தாக வேண்டும். பணம் கைமாறாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. எவரிடமும் பணம் இல்லாத நிலையில் வளங்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை சிலரிடமே குவியும். இப்போதே அவ்வாறு சிலரிடம் வளங்கள் குவிந்திருப்பதுதான், எல்லா ஏற்றத் தாழ்வுகளுக்கும் மூலகாரணம்.


பணம் கைவிடப்பட்டு வளங்கள் ஒரு சிலரிடம் குவியுமானால், அது புதிய சர்வாதிகாரத்துக்குத்தான் அரியாசனம் போட்டுத் தரும். எதுவும் கொடுக்காமல் தானாக எதுவும் வீடு தேடி வந்துவிடாது. ஒரு காலத்தில் அரிசியைக் கொடுத்து அங்கியை வாங்குவது என்ற பண்டமாற்று முறை இருந்தது. தோராயமாக 2,600 ஆண்டுகளுக்கு முன் உலோக நாணயங்கள் வந்தன, பின்னொரு 600 ஆண்டுகள் கழித்து காகிதப் பணம் வந்தது. நாம் எந்த மதிப்புக்குப் பணம் கொடுக்கிறோமோ, அந்த மதிப்புக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவாதம் இருப்பதால்தான் அது செல்லுபடியாகிறது.


 அந்தப் பணத்தைப் பெறுவதற்காகத்தான் மக்கள் வேலை செய்கிறார்கள். முதலாளிகளும் அந்தப் பணத்தைப் பெறுவதற்காகத்தானே உற்பத்திச் சரக்குகளைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள்? முந்தாநாள் பண்டமாற்று இருந்தது. நேற்று பணம் வந்தது; இன்று கண்ணால் காண முடியாத மின்னிலக்க ரொக்கம் வந்திருக்கிறது; நாளை வேறொன்று வரலாம்; எது போய் எது வந்தாலும், ஏதோவொரு வடிவத்தில் பணத்தின் இருப்பு தொடர்ந்திருக்கும். அதைப் பெறுவதற்கான உழைப்பும் தொடர்ந்திருக்கும். பொருளாகவோ பணமாகவோ எதையேனும் கொடுக்காமல் எதையும் பெறக்கூடிய எதிர்காலம் நிகழ்காலத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் காணவில்லை.

வேலை ஒரு வருவாய் வழி மட்டுமல்ல, அது மற்ற மனிதர்களுடனான சமூகத் தொடர்பு ஊடகம். வேலை நீக்கப்பட்டால் அந்தத் தொடர்பு அறுந்து தனிமைப்படுவார்கள். அப்போது மனித மனம் உழைக்காமலே கிடைப்பதை நுகர்ந்து களித்திருப்பதை விரும்புமா, அல்லது உழைத்து ஊரோடு உறவாடி வாழ்ந்திருப்பதை நாடுமா?

செயற்கை நுண்ணறிவில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வளங்களுக்கு மனித உழைப்பும் தொடர்பும் தேவை. இவை முற்றிலுமாகத் தானியங்கி மயமாவது அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் சிக்க வைத்துவிடும்.

 

8.30 கோடி வேலைகள் ஒழிக்கப்படும்!


பிறகு ஏன் எலான் மஸ்க் உழைப்பு தேவைப்படாத எதிர்காலம் வருமென நம்புகிறார்? உண்மையில் அவர் அப்படி நம்மைத்தான் நம்ப வைக்க முயல்கிறார். எதற்காக? 

ஏஐ முதலான அறிவியல் கொடைகளை அடங்காத லாப வேட்கைக்காகக் கைப்பற்றுகிற பெருநிறுவனங்களால் உலகெங்கும் மிரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தானியங்கிப் புகுத்தலால் 2023-ல் தொடங்கிய வேலையிழப்புகள், 2027-ல் ஒரு உச்சத்தைத் தொடவிருக்கின்றன.

இந்த ஐந்தாண்டுகளில் 8.30 கோடி வேலைகள் ஒழிக்கப்படும். இதே ஐந்தாண்டுக் காலத்தில், ஏஐ சார்ந்து 6.90 கோடி புதிய வேலைகள் உருவாகும்தான். ஆனால், 1.40 கோடி வேலைகள் போனது போனதுதான். மேலும், தரவுகளைப் பதிவு செய்கிற கணக்கர், எழுத்தர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கும். இதனை உலக பொருளாதார மன்றம் (WEF) தெரிவிக்கிறது.


                                        வேலை

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO) தனது அறிக்கையில் (2023), வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் ஏஐ, ரோபோ ஆதிக்கத்தால் நிர்வாகம், அலுவலகம் சார்ந்த வேலையிழப்புகள் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கிறது. அமெரிக்கா, கனடா. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முழுவதுமாகத் தானியங்கி மயமாக்கப்பட்டுவிட்டன.

ஆகவே, அங்கெல்லாம் இவ்வகை வேலைகளில் பெருமளவுக்கு இழப்பு ஏற்படும். வளரும் நாடுகளில் இன்னமும் அந்த அளவுக்குத் தானியங்கி மயமாக்கப்படவில்லை, ஆகவே, வேலையிழப்பும் குறைவாகவே இருக்கும் என்கிறது ஐஎல்ஓ. அதிகமாகப் பறிபோகும் பணிகளில் பெரும்பாலானவை பெண்கள் ஈடுபடும் வேலைகளாக இருக்கின்றன. அதற்கடுத்ததாக இளைஞர்களின் வேலைகள் என்று ஐஎல்ஓ சுட்டிக்காட்டுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கார்ல் பெனெடிக்ட் ஃப்ரே, மைக்கேல் ஆஸ்போர்ன் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 2013-ல் தங்களின் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அமெரிக்காவின் வேலைகளில் சுமார் 47% அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் தானியங்கியலால் நீக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அந்த இருபதாண்டுக் காலத்தில் முதல் பத்தாண்டுகள் ஏற்கெனவே கடந்துவிட்டன. இவர்களது இந்த அறிக்கைதான் ஏஐ கருவிகளும் ரோபோ எந்திரங்களும் புகுத்தப்படுவது குறித்த விவாதங்களுக்குத் தொடக்கப்புள்ளி வைத்தது எனலாம்.

காலியாகும் சிறுகுறு தொழில்கள்!

வேலையிழப்பு என்றால் தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் மட்டுமல்ல. மகா நிறுவனங்கள் பணபலத்தோடு அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உழைப்பாளிகளை வெளியேற்றி லாபத்தை வேட்டையாடுகிறபோது, அதில் சிறுதொழில், குறுந்தொழில் முனைவோரும் சிக்கிக்கொள்கிறார்கள்.


ஊருக்குள் கடனாளியாகி மூடப்படும் பல நடுத்தர, சிறு, குறு தொழிற்கூடங்கள் இந்த வேட்டைக்கு இரையானவைதான். இத்தகைய நிலைமைகள் எண்ணற்றோரின் சொந்த அனுபவமாகிறபோது எந்த அளவுக்குக் கொந்தளிப்புகள் ஏற்படும் என்று எவரும் முன்னுணரலாம். அதில் தண்ணீர் ஊற்றி அணைக்கிற உத்திதான் மஸ்க்கின் ஆரூடம். உழைப்பை உதாசீனப்படுத்தும் நிகழ்ச்சிப்போக்கை அவர், உழைப்பே தேவைப்படாத வளர்ச்சிப்போக்காகக் காட்ட முயல்கிறார். மார்க்ஸ்சும் மஸ்க்கும் இப்படிப்பட்ட கூற்றுகளை விமர்சிக்கிறவர்கள் இந்த லாப வேட்டை வட்டாரத்தைக் கண்டுகொள்வதில்லை.


ஏற்கெனவே பார்த்த தலையங்கம், மஸ்க்கின் கருத்தை, ஒருபோதும் நனவாக மாறாத கனவென்று தள்ளுபடி செய்கிறது. அத்தோடு நிற்கவில்லை, ஒருபடி மேலே போய் அல்லது கீழே இறங்கி, மஸ்க்கின் கனவை, சமுதாய மாற்றத்திற்கான அறிவியல்பூர்வமான செயலாக்கத் தத்துவத்தை வழங்கிய கார்ல் மார்க்ஸ் லட்சியத்தோடு ஒப்பிடுகிறது. “எலானின் வேலைக்குப் பிந்தைய கனவுலகம் அவரை மார்க்ஸ் கூட்டாளியாக்குகிறது. அவரைப் போலவே இவரும் தன் கனவு நனவாவதைப் பார்க்கப் போவதில்லை,” என்று தலையங்கத்தின் துணைத்தலைப்பு சொல்கிறது. உள்ளே, “மஸ்க் தனது கனவின் பாட்டன் மார்க்ஸ் என்றும், அன்பான மாமன் கீன்ஸ் என்றும் தெரிந்துகொள்ளட்டும். அவர்களது முகாமில் தன்னை வைத்துப் பார்ப்பதை அவர் விரும்ப மாட்டார்,” என்று இருக்கிறது.

தலையங்கத்தின் தலைப்பே ‘கார்ல் மஸ்க்’ என்று சுரண்டல் எதிர்ப்புப் போராளிக்கு நிகராக சுரண்டல் கோட்டை அதிபதியை வைக்கிறது. போன நூற்றாண்டின் முக்கியமான பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ். சுதந்திரமான பொருளாதாரக் களத்தில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற முதலாளிய வாதத்தை நிராகரித்தவர்.

நெருக்கடிகளின்போது அரசாங்கம் தலையிட்டு செலவினங்களை அதிகரித்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், தொழில்–வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டவர். முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டல் அமைப்பைப் பாதுகாத்துக்கொண்டே, காயத்திற்கு ஒத்தடம் கொடுக்கிற கோட்பாடுதான் அவருடையது. ஆயினும் உடனடி நிலைமைகளில் அந்த ஒத்தடமும் தேவைப்படத்தானே செய்கிறது? அவருடைய கண்ணோட்டத்தையும் கனவென்று தள்ளுகிறது மேற்படி தலையங்கம்.

மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

பொன்னுலகம் கனவல்ல இழப்பதற்கு அடிமைச் சங்கிலியைத் தவிர வேறேதும் இல்லாததையும், அடைவதற்கு ஒரு பொன்னுலகம் இருப்பதையும் காட்டி, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட அறைகூவல் விடுத்தவர் காரல் மார்க்ஸ். 19-ம் நூற்றாண்டில் தனது கடும் உழைப்பாலும் தெளிந்த பார்வையாலும் ‘மூலதனம்’ நூலை உருவாக்கி உலகுக்கு வழங்கியவர். அதில் அவர் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். புதிய நுட்பங்கள் வரலாறு சார்ந்தவை, முற்போக்கான வளர்ச்சியாக வருபவை என்று அங்கீகரிக்கிறார்.


நவீன எந்திரங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகின்றன, அதே வேளையில், தொழிலாளர்கள் அறியாமலே அவர்களுடைய உழைப்பு சக்தியை உரிய அளவுக்கு மேல் உறிஞ்சுவதற்கு வழி செய்கின்றன என்று வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். உழைப்புச் சுரண்டலிலிருந்து கிடைக்கும் உபரி மதிப்புதான் முதலாளியின் உண்மையான லாபம் என்று, அதுவரையில் வேறு எந்தப் பொருளாதார மேதையும் காணத் தவறிய ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்.

சுரண்டலற்ற பொதுவுடைமைச் சமுதாயத்தின் மலர்ச்சியில், உணவு உடை மருந்து குடியிருப்பு என, உயிரோடு இருப்பதற்குரிய கட்டாயத் தேவைகளை அடைவதற்காக உழைத்தாக வேண்டுமென்ற என்ற இன்றைய நிலவரம் மறைந்துவிடும்; கல்வி, கலை, குடும்பம், பயணம் என வாழ்க்கையைச் சுவைப்பதற்காக உழைக்கிற பண்பாடு உருவாகிவிடும் என்ற திட்டவட்டமான மாற்றத்தையும் முன்னுரைக்கிறார். அப்படியிருக்க, அவர் ஏதோ உழைக்காமலே உண்ணலாம் என்ற கனவை விதைத்தது போல் அந்தத் தலையங்க ஆசிரியர் சித்தரிப்பதை என்னவென்பது?


 இந்தியாவைப் பற்றித் தப்புத்தப்பாக எழுதியிருக்கிறார் என்று மார்க்ஸ் பற்றிய தப்பான சித்திரத்தைத் தீட்டுவது ஒருபகுதியினருக்கான அரசியல் பொழுதுபோக்காக இருக்கிறது. அந்த “டிரெண்ட்” இந்தத் தலையங்கத்திலும் தொடர்கிறது போலும். ஆனாலும் இது நல்லதுக்குத்தான் – மார்க்ஸைத் தேடவும் தெரிந்துகொள்ளவும் தூண்டுகிறார்களே!

ஏஐ, ரோபோ, தானியங்கி என அளவுக்கு மேல் போனால், மக்கள் வேலையும் பணமும் இல்லாதவர்களாகத் தள்ளப்பட்டால் என்ன நடக்கும்? உழைப்பாளிகள் பொங்கியெழுவார்கள். அது ஒருபுறம் நிகழ்ந்திருக்க, மறுபுறம் வேறொன்றும் நடக்கும். உழைக்கும் மக்கள்தான் அடிப்படையான சந்தைத் திரள் என்கிற நிலையில், வேலையிழப்பால் வருமானத்தை இழக்கிறபோது, அவர்களால் எதையும் வாங்க இயலாமல் போகும். அப்போது முதலாளிகள் தங்கள் உற்பத்திகளை யாரிடம் விற்பார்கள்? அவர்களே தின்று, அவர்களே உடுத்தி, அவர்களே வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பார்களா?


இந்த நிகழ்வுப் போக்கில் முதலாளித்துவமே முட்டுச்சந்தில் நிற்கும்! உழைப்பே தேவைப்படாமல் போய்விடும் என்பவர்கள் முதல், உழைப்புச் சுரண்டலில்லா சமுதாய மலர்ச்சியை நிறைவேறாக் கனவு என்கிறவர்கள் வரையில் இதைப் புரிந்துகொண்டாக வேண்டும். பொது அறிவுக்காக மட்டுமல்ல, அவர்களுடைய நலன்களுக்காகவுமே கூட!

[0]

விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பில (டிசம்பர் 6) எனது கட்டுரை

 


 

No comments: