Sunday, 12 August 2007


பெண்களுக்கு தனியிட ஒதுக்கீடு


-எத்தனை நாள் இந்த ஏற்பாடு?


அ. குமரேசன்



நகரப் பேருந்தில் வழக்கமாகக் கேட்கிற முணகல்தான். "ஜென்ட்ஸ் சீட்ல லேடீஸ் உட்கார்ந்துட்டுப் போறாங்க, அதைக் கேட்க மாட்டேங்கிறாங்க, ஆனா லேடீஸ் சீட்ல நாம உட்கார்ந்தா எழுந்திரிக்கச் சொல்றாங்க - என்ன நியாயம்பா இது?" இப்படிப் புலம்புகிறவர் என்னைப் பார்த்துப் புலம்பியிருந் தால், "அய்யா, இதெல்லாம் ஆம்பளைங்க சீட்டுன்னு யார் சொன்னது? இதெல்லாம் பொதுவான சீட்டுகள்தான். அந்த வரிசையில இருக்கிற தெல்லாம் பெண்களுக்குன்னு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு. இந்தப் பக்கம் யார் வேணும்னாலும் உட்காரலாம். அந்தப் பக்கம் பெண்கள் மட்டும்தான் உட்காரணும்," என்று விளக்கம் அளிப்பேன்.


வேடிக்கை என்னவென்றால் ஆகப் பெரும்பாலான ஆண் பயணிகளுக்கு மட்டுமல்ல, பேருந்தின் நடத்து நருக்கு மட்டுமல்ல, இப்படிப்பட்ட முணகலுக்குக் காரணமான பெண்களுக் கும் கூட இந்த விதி தெரியாது. அரசாங்கமோ போக்குவரத்துத்துறையோ அவர்களுக்கு இந்த உண்மையைத் தெரிய வைப்பது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.


இவ்வளவு ஏன்? உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நிகழ்ச்சியின் போது, ஒரு நிருபரே, ஆண்களுக்கான தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவது எப்படி எனக் கேட்க, அசந்துபோன தேர்தல் ஆணையர், "அன்பரே, ஆண் களுக்கு என்று தனியாக தொகுதிகள் கிடையாது, அவையெல்லாம் யாரும் போட்டியிடக் கூடிய பொதுத் தொகுதிகள், தெரிந்து கொள்ளுங்கள்," என்று விளக்கம் அளித்தார். நிருபர் முதல் முறையாக அந்த விளக்கத்தைக் கேட்டவராக வியப்படைந்தார்.


ஜனநாயகத் தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை உறுதிப் படுத்துவதோடு சம்பந்தப்ப்ட்டது.


பேருந்துகளிலும் இதர பல பொது இடங்களிலும் இட ஒதுக்கீடு இடி மன்மதர்களிடமிருந்து பெண்ணையும் பெண்ளின் சுயமரியாதையையும் பாதுகாப்பதற்கானது.உலகம் முழுவதுமே பெண்களுக்குத் தனி ஏற் பாடுகள் என்பது அதிகரித்து வருகிறது. அமெரிக் காவில், பிரிட்டனில், இத்தாலியில், ஜப்பானில் என எங்கும் தனி ஏற்பாடுகள் தவிர்க்கவியலாததாகி வருவதாக அண்மையில் படித்த ஒரு கட்டுரை யிலிருந்து தெரிய வருகிறது. 'கார்டியன்' என்ற அமெரிக்க ஏட்டிற்காக எழுத்தாளர் ஜெஸிகா வேலண்ட்டி எழுதிய அந்தக் கட்டுரை 'தி ஹிண்டு' ஆக. 6 இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.


"நான் 13 வயது சிறுமியாக இருந்த போது நியூயார்க் நகரின் சாலைகளைக் கடப்பதற்கு சுரங்கப்பாதை களின் வழியாகச் சென்ற நேரங்களில் என் அப்பா வின் வயதையொத்த ஆண்கள் ஏன் என்னை வெறித்துப் பார்த்தார்கள், எதற்காக வேண்டு மென்றே என்மீது இடித்துவிட்டுப் போனார்கள் என்ப தெல்லாம் அப்போது புரியவில்லை. இன்று 20ம் வயது களின் பிற்பகுதியில் இருக்கும் நான், ரயிலில் உரசல் களுக்கும் இடிகளுக்கும் ஆளாகாத ஒரு பெண் ணைக்கூட நான் இன்னும் சந்திக்கவில்லை," என் கிறார் ஜெஸிகா. உலகத்துக்கே நாகரிகம், பண்பாட்டை ஏற்றுமதி செய்யும் அமெரிக்காவில் இந்த நிலைமை!


இடிக் கலாச்சாரம் பற்றியே ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட் டுள்ளது. அதன்படி, நியூயார்க் நகரின் சுரங்கப் பாதைகளில் ஒவ்வொரு 3 பெண்களுக்கும் இரண்டு பேராவது ஆண்களின் இடி தர்மத்துக்கு உள்ளாகி றார்கள். ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட கணக் கெடுப்பின்படி, 20 முதல் 40 வயது வரையுள்ள பெண் களில் 64 சதவீதம் பேர் ரயில் பயணங்களிலோ அல்லது போக்குவரத்தைக் கடப்பதற்கான பாதை களிலோ பாலியல் வக்கிர உரசல்களுக்கு உள்ளாவ தாகத் தெரிவித்திருக்கிறார்கள். சுரங்கப் பாதைகளில் இடிப்பதைக் குறிப்பிட ஜப்பானிய மொழியில் "சிக்கான்" என்ற புதிய சொல்லே புழக்கத்துக்கு வந்துவிட்ட தாம்! வக்கிரம் பழையது, சொல் புதிது!


இதற்கு ஜப்பான் அரசு கண்டுபிடித்த தீர்வு, பெண்கள் மட்டுமே பயணம் செய்ய என தனி ரயில்! ஜப்பானில் மட்டுமல்லாமல், மாஸ்கோ, கெய்ரோ, ரியோ டி ஜெனைரோ போன்ற பல இடங்களிலும் இப்படி பெண்களுக்கென சிறப்பு ரயில்கள், சிறப்பு ரயில் பெட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கிறார் ஜெஸிகா. இத்தாலி நாட்டில் பெண்களுக்கென்று ஒரு கடற்கரைப்பகுதியே ஒதுக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் ஒரு நட்சத்திர ஓட்டல் பெண்களுக்கென ஒரு தனித் தளம் கட்டப்போவதாக அறிவித் துள்ளது.நம் ஊரில்தான் மகளிர் மட்டும் பேருந்து, பெண்களுக்குத் தனி வரிசை, மகளிர் கல்லூரி, பெண்கள் பள்ளி என்று பிரிக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்திருந்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஏற்பாடு இருப்பது தெரியவருகிறது. அப்பாடா லோகத்தில் நாம் தனியாக இல்லை என்று மகிழ்ச்சியடைகிற தகவலாக இதை எடுத்துக் கொள்ள இயலவில்லை. மாறாக, பெண்களுக்கு எதிரான பாலியல் இம்சைகள் உலகம் பூராவும் பரவியிருக்கிறது என்ற உண்மை மனதில் வலியைத்தான் ஏற்படுத்துகிறது.


ஒரு பக்கம் இழிவான அந்த இம்சை களிலிருந்து பெண்களுக்கு இந்த ஏற்பாடு கள் ஒரு சிறு விடுதலையைப் பெற்றுத்தரு கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே சமயத்தில் இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்க முடியுமா? இது பெண்ணின் சுயமரி யாதையை உண்மையாகவே பாதுகாக் கிறதா? அல்லது பாலியல் வக்கிரத்தாக்கு தல்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு முறியடிப்பதற்கு மாறாகப் பதுங்க வைக் கிறதா? பொதுக் களத்திலிருந்து பெண் களைப் பிரித்துத் தனிமைப்படுத்துகிறதா?விரிவாக விவாதிக்க வேண்டிய பொருள் இது.


இன்றைய சூழலில், பெண் களை உரசுவதும் ஒடுக்குவதும் ஆண்மை யின் லட்சணமாக வக்கரித்துப் போயிருக் கும் சமுதாய நிலையில் இந்தத் தனி ஏற் பாடுகள் தவிர்க்க இயலாததாகத் தொடர வேண்டியிருக்கிறது. அதிலும் பெண் ணிழிவு என்பது அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பண்பாடாகவே உள்ள இந்தியாவில், சமத்துவ உணர்வுகள் மேலோங்கிய பண் பாடாக நிலை பெறும் நாள் வரும் வரையில் இந்த ஒதுக்கீடுகள் ஒரு உரிமைத் தேவை யாகவும் இருக்கின்றன. உண்மையான பாதுகாப்பு, உடைகளை மீறி உடலை ஊடுறுவிப் பார்க்க முயலும் விழிகள் பற்றிய உறுத்தலின்றி பெண் வெகு இயல்பாகப் பொது வெளியில் நட மாட முடியும் என்ற சமுதாய மாற்றம்தான். அந்த மாற்றத்தைத்தான், மத ரீதியான கட்டுப்பாடுகளை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் உட்பட, எல்லாப் பெண் களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். உழைக் கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு) போன்ற அமைப்புகள் தங்களது கோரிக்கைகளில் ஒன்றாக "பணியிடங்களில் நட்புச் சூழல் உருவாக்கப்பட வேண்டும்" என்று முன்வைத்திருப்பது முதன்மையான அம்சம்.


அந்த முழுச் சுதந்திரச் சூழலை உருவாக்குவதற்கான முனைப்புகளும் ஆங்காங்கே நடக்கின்றன. நண் பனின் திருமணத்திற்குக் கணவனோடு வந்து வாழ்த்துகிற பெண், தெருவோர டீக்கடை முன் நின்று கொண்டு "டேய், உன் கணக்கில் எனக்கொரு காபி சொல்லேண்டா," என்று கட்டளையிடுகிற பெண், "பேசாம பின் சீட்ல உட்கார்ந்துட்டு வா மவனே, வண்டியை நான் டிரைவ் பண்றேன்," என்று கூறி டூ-வீலர் ஓட்டும் பெண், ரயிலில் ஒரு ஆணின் அருகாமை இருக்கை காலியாகு மானால் கூச்சமின்றி உட்காரும் பெண்... இவர்களெல்லாம் அந்த முனைப்பாளிகளாகவே என் கண்ணுக்குத் தெரிகிறார்கள். உலகம் முச்சூடும் அப்படித் தெரிகிற நாள் பற்றிய நம்பிக்கையை விதைக்கிறார்கள்.

No comments: