Thursday, 30 August 2007

விவாதம்

எந்த ஓட்டத்திற்கு இந்த ஒன் டூ த்ரீ?
ரயில் பயணத்தில் ஒரு விவாதம்
ன்னப்பா, எல்லாம் நம்ம பேர்லதான் நடக்குது. ஆனா என்ன நடக்குதுன்னு மட்டும் நமக்குத் தெரிய மாட்டேங்குது!” -படித்துக் கொண்டிருந்த நாளேட்டை மடித்து வைத்தபடி கேட்டார் நண்பரும் சக ரயில் பயணியுமான சதாசிவம்.
“இப்படி சும்மா பொழுது போறதுக்காக பேப்பர் படிச்சுக்கிட்டு, நேரத்தை ஓட்டுறதுக்காக மட்டும் பேசிக்கிட்டிருக்கிற வரைக்கும் இதெல்லாம் தெரிஞ்சுக்க முடியாதுதான்,” என்று கூறினார் கலையரசி.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தது, ஆட்சி கவிழ்கிறது என்ற தலைப்பில் தரப்பட்டிருந்த செய்தியைப் பற்றித்தான். ”மன்மோகன் சிங்குக்கு கம்யூனிஸ்ட்டுகள் கெடு,” “ஆதரவை விலக்கிக் கொள்வதானால் அப்படியே செய்யட்டும் - பிரதமர் அதிரடி,” ...என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் நாளேடுகளிலும் வாரப்பத்திரிகைகளிலும் இடம்பெற்றிருந்தன. “இவ்வளவு செய்தி போட்டிருக்காங்களே, யாராவது பிரச்சனை என்னன்னு தெளிவா போட்டிருக்காங்களா,“ என்று அடுத்த அம்பை எய்தார் கலை.
அமெரிக்காவுடன் இந்தியாவின் அணுசக்தி உடன்பாடு, அதற்கு இடது சாரிக் கட்சிகளின் எதிர்ப்பு, ஆட்சியாளர்களின் விளக்கங்கள், ஆட்சி கவிழுமா என்று நாவில் எச்சிலூறக் காத்திருக்கும் பாஜக கூடாரம்... இந்தச் செய்திகளைத்தான் அன்றைய அந்தப் பயண நேரக் கலந்துரையாடலில் அலசத் தொடங்கியிருந்தனர்.
பணிச்சூழல் காரணமாக அன்றாடம் ரயில் பயணம் வாய்க்கப் பெற்றவர்கள் பல விதங்களில் தொலைவையும் நேரத்தையும் கடப்பார்கள். அவரவர் ஊரின் ரயில் நிலையம் தாண்டியதுமே (உட்கார இடம் கிடைத்தால்) தலைசாய்ந்து உறங்கிவிடுவது, பக்திப் புத்தகங்கள் அல்லது துப்பறியும் நாவல்களில் மூழ்குவது, சும்மா வெளியே பார்த்துக் கொண்டே வருவது, யாரோடும் பேசாமல் பத்திரிகைகளில் மொபைல் போன் விளையாட்டில் முகம் புதைப்பது, சூடான செய்திகள் குறித்து அரட்டைகளில் இறங்குவது... இப்படிப் பலவகையான நேரக்கடத்தல்கள்.
“சிபிஎம்-காரங்களும் மத்த இடதுசாரிக்கட்சிகளும் இந்த அணுசக்தி உடன்பாட்டை எதுக்கு இவ்வளவு தீவிரமா எதிர்க்கிறாங்க?...,” எனக்கேட்டார் பிலிப்ஸ்.
“அமெரிக்கான்னாலே இவங்களுக்கு அலர்ஜிப்பா. உலகமே அமெரிக்காகூட ஒத்துப்போகுது, இவங்கமட்டும் முறிச்சிக்கிட்டு நிப்பாங்க,” இது நான்காமவர்.
“கொலை, கொள்ளை, அடிதடி, ஆள்கடத்தல்னு அழிச்சாட்டியம் பண்ணுன ஒரு பெரிய கிரிமினல் குற்றவாளி ஜெயில்லயிருந்து ரிலீசாகி வந்துட்டாலும், அதுக்குப் பிறகு எந்தவொரு கிரிமினல் சம்பவம் நடந்தாலும் போலீஸ் அவனையும் சம்பந்தப்படுத்தித்தான் பார்க்கும். பல நேரங்கள்ல அது சரியாகவும் இருக்கும். அது மாதிரிதான் அமெரிக்கா. உலகத்திலேயே முதல் முறையா அணுகுண்டு போட்டு ஹிரோஷிமா, நாகசாகி மக்களைக் கொன்னது அமெரிக்காதான். தன்னோட சுரண்டல்களுக்காக மத்த நாடுகளோட உடன்பாடு செய்துக்கிறதும், அப்புறம் அந்த நாடுகளைக் கபளீகரம் செய்றதும் அமெரிக்க அரசாங்கத்தோட பாரம்பர்யம். நம்ம நாட்டு அரசாங்கம் யார் பேச்சையும் கேட்காமல் அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்துக்குதுன்னா அதைத் தட்டிக் கேட்க மாட்டாங்களா என்ன,” என்றார் கலையரசி.
“அமெரிக்காவிலேயிருந்து மொபைல் போன் கம்பெனிகள் வந்திருக்கு. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில நிறைய இந்தியர்கள் இருக்காங்க. வர்த்தக உறவு, சுற்றுலா, கல்வி, அது இதுன்னு நிறைய உடன்பாடுகள் இருக்கு. அதையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கலையே...,” என்றார் அதுவரை மௌனம் காத்த சன்னலோரப் பயணி மாறன்.
“சரி சார், அப்படியென்ன இந்த உடன்பாட்டுல நமக்கு பாதகமா இருக்கு? பிரதமர் கூட நமக்கு அணுமின்சாரம் அவசியம்னு பேசியிருக்காரே?” -இப்படிக் கேட்டவர் மைதீன்.
“அணு சக்தி வேணாம்னு சொல்லலை. அதுக்கு அமெரிக்காவோடதான் ஒப்பந்தம் செய்துக்கணுமா? வேற சில நாடுகளோட ஒப்பந்தம் செய்துக்க முடியும். அமெரிக்காவோட செய்துக்கிட்ட இந்த 123 உடன்பாடு பல வகைகள்ல நம்மைக் கட்டுப்படுத்துது.... நம்மைக் கட்டுப்படுத்தக்கூடிய லகான், நாம என்ன செய்றோம்னு கண்காணிக்கிற அதிகாரம் மறைமுகமா அமெரிக்கா கையிலதான் இருக்கும். நாம அணுகுண்டு செய்றதா சொல்லிக்கிட்டு திடுதிப்புனு ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய முடியும்.” -கலை.
“அந்த மாதிரியெல்லாம் இல்லைன்னு சொல்றாங்களே. பிரதமர் நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறாரே...?”
“அது நாடாளுமன்றத்திலே பொய் சொல்ற மாதிரிதான்.”
“மாறன் சரியா சொன்னார். அமெரிக்காவுல ரெண்டு வருசத்துக்கு முன்னால ஹைடு சட்டம்னு ஒண்ணைக் கொண்டுவந்தாங்க. இந்தியாவோடு அணுசக்தி உடன்பாடு வரப்போகுதுன்னதும் அப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்தாங்க.”
“அக்கா, முதல்ல ஹைடு சட்டம்னா என்னான்னு விளக்குங்க. ஹைடு-ன்னா இங்கிலீஷ்ல மறைவுன்னுதானே அர்த்தம்....? ”
“ஹென்றி ஹைடு-ன்னு ஒருத்தர் அமெரிக்க நாடாளுமன்றத்திலே தாக்கல் செஞ்ச மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாயிடுச்சி. அதுக்கு அந்தாளு பெயரையே வெச்சிருக்காங்க. நேரடியா ஒப்பந்தத்துல இல்லன்னாலும் மறைமுகமா, ஆனா கறாரா, அந்தச் சட்டம் ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்துது. மறைமுகமா கட்டுப்படுத்தறதால ஹைடு-ங்கிற பெயர் தற்செயலா பொருத்தமாவும் ஆயிடுச்சு!”
“கலை சொன்னமாதிரி, அந்த ஹைடு சட்டம் என்ன சொல்லுதுன்னா, இந்தியா அமைதி நோக்கத்துக்காகத்தான் அணு சக்தியைப் பயன்படுத்துதான்னு தொடர்ந்து கண்காணிக்கணும், மறுபடியும் அணுகுண்டு சோதனை கீதனை நடத்தினா ஆட்டமேட்டிக்கா ஒப்பந்தம் ரத்தாகும்னு சொல்லுது.”
“அடப்பாவிங்களா! நம்ம நாடு அணுகுண்டு செய்யலாமா கூடாதாங்கிறது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனா மத்த நாடுக அணுகுண்டு செய்றப்ப, ஒரு பாதுகாப்புக்காக நாமளும் அதை டெஸ்ட் பண்ணிப்பார்த்தாக்கூட ஒப்பந்தத்தை ரத்துச் செய்வாங்கலாமா! வீட்டுக்கு ஃபிரிட்ஜ் வாங்குறப்ப, அதுல கறிக்குழம்பு வெச்சா ஃபிரிட்ஜையே தூக்கிட்டுப் போயிடுவோம்னு கடைக்காரரு சொல்ற மாதிரில்ல இருக்கு!...,” என்று சதாசிவம் சொல்ல ரயில் பெட்டியின் அந்த இருக்கைப் பகுதி முழுக்க சிரிப்பலை பரவியது. இதற்கிடையே இவர்களோடு பழக்கமில்லாத இதர பயணிகளும் உரையாடலைக் கவனிக்கவும் பங்கேற்கவும் தொடங்கினர்.
“பாருங்க, நம்ம நாட்டுல என்னடான்னா அரசாங்கம் பார்லிமென்டுக்கே கூட தெரியாம ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டுட்டு வரமுடியுது. அதுக்கப்புறமும் பார்லிமென்ட்டோட ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. அதுக்கான சட்டமே இங்கே இல்லை. ஆனா அமெரிக்காவுல இப்படி இன்னொரு நாட்டோட செய்துக் கிட்ட ஒப்பந்தத்தையே நடுரோட்டுல விடுறதுக்குன்னு சட்டம் இருக்கு,” என்று கூடுதலாகச் சேர்ந்துகொண்ட ஒரு பயணி கூறினார்.
“ஆனா, திடுதிப்புன்னு ரத்தாகாது, மத்த நாடுகள்லயிருந்து இந்தியா அணு மின்சாரம் தயாரிக்கிறதுக்கான யுரேனியம் எரிபொருள் வாங்குறதுக்கு அமெரிக்கா உதவி செய்யும்னு ஒப்பந்தத்துல இருக்காமே?”
“அதாவது, அப்படியொரு நிலைமை ஏற்பட்டா, யுரேனியம் சப்ளை செய்யக்கூடிய மத்த நாடுகளோட இந்தியா பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா உதவி செய்யுமாம்!...,” என்றார் மாறன்.
“அதாவது அந்த நாடுகளோட ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு மந்திரி இவங்களோட பேரு, ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்து உதவி செய்வாங்க போல,” என்று சதாசிவம் சொல்ல மறுபடி சிரிப்பு பிய்த்துக் கொண்டு போனது.
“அப்புறம் பார்த்திங்கன்னா, ஏதோ நம்ம நாடு தங்கு தடையில்லாம மின்சார வசதி பெறணுமேங்கிற அக்கறையில ஒண்ணும் ஜார்ஜ் புஷ் இந்த ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட வைக்கலை. பெரிய தாதாக்கள்லாம் யாரையாவது அடிச்சிட்டு வர்றதுக்கோ, ஆளை அள்ளிக்கிட்டு வர்றதுக்கோ அடியாள் வைச்சிருப்பாங்கள்ல? அது போல அமெரிக்காவோட அடியாள் மாதிரி இந்தியா செயல்படணும்னு புஷ் எதிர்பார்க்கிறார். அப்படியெல்லாம் ஈனப் பிழைப்பு பிழைக்க மாட்டோம்னு சுயமரியாதையோடு சொல்றதுக்கு பதிலா நம்மாளுக தலையாட்டிட்டாங்க,” என்றார் மாறன்.
“என்னண்ணே பெரிய குண்டா போடுறீங்க?”
“அவரு சொல்றது நிஜம்தான். ஏற்கெனவே ...... வருசம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒண்ணு கையெழுத்தாயிடுச்சு. அந்த ஒப்பந்தத்தில மட்டும் இந்தியா கையெழுத்துப் போடாம இருந்திருக்கும்னு வைங்க, அமெரிக்கா இந்த 123 அணுசக்தி ஒப்பந்தம் பத்திப் பேசுறதுக்காகக் கூட வந்திருக்காது,” என்றார் கலை.
“இப்ப நம்ம நாட்டுக் கடலுக்கு அமெரிக்க ராணுவக்கப்பல் வரமுடியுது, கொஞ்சநாள் முந்தி பயங்கர அணு ஆயுதங்கள் இருக்கிற நிமிட்ஸ் கப்பலை நம்ம சென்னைத் துறைமுகத்திலே நிறுத்தி ‘ரெஸ்ட்’ எடுக்கிறதுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி கொடுத்துச்சு. ஈராக் நாட்டுல ஏராளமான குழந்தைக உட்பட லட்சம் பேருக்கு மேல குண்டு போட்டுக் கொன்ன கொலைகாரக் கப்பல் அது. இப்ப அமெரிக்காவோட பொருளாதார நாட்டாமைக்கு சவால் விடுற தேசமா வளர்ந்துட்டு வர்ற சீனா, அமெரிக்காவைச் சார்ந்திருக்காம அணுமின்சாரம் உற்பத்தி செய்ய முயல்கிற ஈரான்... அப்புறம் கியூபா, வெனிசுலா... பாலஸ்தீனம்... இப்படிப் பல நாடுகளுக்கு ‘செக்’ வைக்கணும்னு அமெரிக்கா நினைக்குது. அதுக்கு உடன்பட்டு ஒத்துழைக்கிறோம்கிறதுதான் அந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுல இந்தியா கையெழுத்துப் போட்டதோட உள்ளர்த்தம்,” என்று ஒரு சிறிய உரையாற்றுவது போல் சொல்லி முடித்த மாறன் முகத்தில் ஒரு உண்மையான ஆவேசம் வியர்வை முத்துக்களாய் ஒளிர்ந்தது. வழக்கமாக ஏதாவது நையாண்டியாய்ப் பேசும் சதாசிவம் கூட மாறனின் உணர்வைப் புரிந்துகொண்டவராய் அமைதி காத்தார்.
“அந்த ஒப்பந்த அடிப்படையிலேதான் பலவிதமான ஆயுதங்களை இந்தியாவுக்கு சப்ளை செய்ய அமெரிக்காவோட பல ஆயுதக் கம்பெனிகள் காண்ட்ராக்ட் போடுறாங்க. அணு மின்சாரத்துக்கான யுரேனியம், உலைகள், ஜெனரேட்டர்கள், கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்கள் சப்ளை மூலமா அமெரிக்க கம்பெனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் கோடி கோடியாய் வருமானம்,” என்று அந்த அமைதியைக் கலைத்தார் கலை.
“ஓ... அப்படியொரு ஒப்பந்தம் இருக்கிறதாலதான் நம்ம வங்காள விரிகுடாக் கடல்ல அமெரிக்கா, ஆ°திரேலியா, ஜப்பானோட இந்தியாவும் சேர்ந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சியில ஈடுபடப் போறாங்களோ? அதனாலதான் கம்யூனிஸ்ட்காரங்க அந்த ஜாயின்ட் எக்சர்சைஸ் வேணாம்னு எதுக்குறாங்களோ?” -என்றார் பிலிப்ஸ்.
“இப்படி சுத்தியிருக்கிற நாடுகளுக்கு சந்தேகம் வர்ற மாதிரி அமெரிக்கா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டிருந்தா நம்ம நாட்டை யார் நம்புவாங்க? நண்பர்களே இல்லாம தனியா நிக்க வேண்டிய நிலைமைதான் ஏற்படும்,” எனக் கூறிய மைதீனின் குரலில் சினிமா ஹீரோத்தனம் இல்லாத தேசப்பற்று ஒலித்தது.
“ஈராக் மாதிரி இன்னொரு நாட்டை - அது நமக்கு குழாய் வழியா பெட்ரோலியம் காஸ் சப்ளை செய்யப் போற ஈரானாகக்கூட இருக்கலாம் - அடுத்தபடியா நிர்மூலமாக்குறதுக்கு யுஎஸ் திட்டம் போடும். அதுக்கு நாம ஒத்துழைக்க மறுத்தா, ஏதாச்சும் ஒரு ஓட்டைச்சாக்கு சொல்லிக்கிட்டு இந்த 123 ஒப்பந்தத்தை யுஎஸ் ரத்துச்செய்யும். அவங்களை நம்பி ஆரம்பிக்கிற அணுமின்சாரத் திட்டங்கள் என்ன ஆகும்? அதுக்காக நம்ம அரசாங்கம் செலவு செய்யப்போற கோடிக்கணக்கான ரூபாய் பணம் என்ன ஆகும்? 123 ஒப்பந்தத்துல யுரேனியம் எரிபொருள் ‘ரீ-பிராசஸ்’ உரிமை பத்தி எதுவும் இல்லை. அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எப்ப வேணும்னாலும் டெர்மினேட் செய்யும், கதிர்வீச்சோட இருக்கிற பயன்படுத்தப்பட்ட ஃபியூயல் மெட்டீரியல்ஸை நம்மாலேயும் மறுசுழற்சி பண்ண முடியாதுன்னா அது நம்ம மண்ணோட சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்புக்கும் பெரிய டேஞ்சராச்சே!” -இவர்களோடு தானாக வந்து சேர்ந்து கொண்ட பயணி இப்படிக் கேட்க உரையாடல் குழுவினர் மீண்டும் மௌனமானார்கள்.
“ஜெயலலிதா, மன்மோகன் சிங்கைத் தனிப்பட்ட முறையில் தாக்கி அறிக்கை விட்டிருக்காங்களே?”
“அது பிரச்சனையைத் திசைதிருப்பி அமெரிக்காவுக்கு செய்ற தொண்டு.”
“பிஜேபி-க்காரங்க எதிர்க்கிறாங்களே அது?”
“ஒப்பந்த முயற்சியை ஆரிம்பிச்சவங்களே அவங்கதான். இப்ப எதிர்க்கிறது நாற்காலிக்காக.”
“ஆக, நமக்குப் பொருளாதாரமாப் பார்த்தாலும் லாபமில்லை, சொல்லப் போனா ஒப்பந்தம் ரத்தாயிட்டா பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்தான். நம்ம பாதுகாப்புக்கும் பெரிய ஆபத்து. ஒப்பந்தம் ரத்தாகாம இருக்கணும்னா உலகத்துல அமெரிக்க அரசாங்கம் என்ன செஞ்சாலும் மனசாட்சியை அடகுவைச்சிட்டு, மானத்தை விட்டுட்டு வாயைப் பொத்திக்கிட்டிருக்கணும். ரொம்பக் கேவலமால்ல இருக்கு,” என்று சதாசிவம் சொன்னபோது எல்லோரும் இறங்க வேண்டிய நிலையம் வந்து சேர்ந்தது. இதைப் பற்றியெல்லாம் ஆழமாகப் பேசியிராதவர்களைப் பேசவைத்துவிட்ட சிறு மனநிறைவோடு கலையும் மாறனும் தங்களது பைகளை எடுத்துக் கொண்டு தங்கள் பாதையில் புறப்பட்டனர். அவர்களைப் புதிய மரியாதையோடு பார்த்தபடி எழுந்தார் “அமெரிக்கான்னாலே இவங்களுக்கு அலர்ஜி” என்று தொடக்கத்தில் கூறிய நான்காமவர்.
“ஒன்...டூ...த்ரீ-ன்னு ஓட்டப்பந்தயத் துவக்கத்தில சொல்வாங்க. இந்தியாவை, அமெரிக்கா போடுற கோடு மேல ஓட வைக்கிறதுக்கு இந்த ஒன் டூ த்ரீ ஒப்பந்தம் போட்டிருக்காங்க போலயிருக்கு,” என்று அவர் சொன்னதுதான் அன்றைய அந்தப் பயணத்தின் இலக்கு.

No comments: