Sunday 18 November 2007

விவாதமின்றி ஒரு இலக்கிய விருது விழா!

“மொழி என்பது அடிப்படையிலேயே தொடர்பு சாதனம்தான். அது மக்கiளை இணைக்க வேண்டுமேயல்லாமல் பிரிக்கக் கூடாது.” - எழுத்தாளர் சிவசங்கரி சொன்ன அருமையான கருத்து இது. சென்னையில் நவ.9 அன்று நடந்த ‘நல்லி - திசை எட்டும்’ மொழிபெயர்ப்பு விருது வழங்கு விழாவில் வாழ்த்திப் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டுசென்ற ஐந்து பேர், பிற மொழிப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த ஐந்து பேர் என பத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு ரூ.10,000 வீதம் பணமும், பேனா முனையும் பாரதி முகமும் இணைந்த நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. படைப்பாளிகளே கூடப் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத சூழலில் மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வாறு கவுரவிக்கப்பட்டது நிச்சயமாக மாறுபட்ட நிகழ்ச்சிதான். சிவசங்கரி கூறியது போல், இந்தியாவிலேயே ஒரு அரிதான நிகழ்வுதான்.

பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் கொண்டுவருவதற்கென்றே ஒரு காலாண்டிதழ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதுதான் ‘திசை எட்டும்.’ மொழிபெயர்ப்புப்பணிக்காக சாகித்ய அகடமி விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவரான குறிஞ்சி வேலன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஏடு அது. பட்டாடைகளுக்கான ‘நல்லி’ நிறுவனமும் ‘திசை எட்டும்’ ஏடும் இணைந்து இந்த விருதுகளை வழங்குகின்றன.

“இந்த விருதுகள் துவங்கி நான்காண்டுகள் ஆகின்றன. முதலில் ஒருவருக்குத்தான் விருது வழங்கப்பட்டது. இப்போது பத்துப் பேருக்கு வழங்க நல்லி குப்புசாமி செட்டியார் முன்வந்திருக்கிறார்,” எனத் தெரிவித்தார் குறிஞ்சி வேலன்

குப்புசாமி செட்டியார் பேசுகையில், “விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் மக்கள் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற பொறுப்பு நம்மிடம் இருக்கிறது,” என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழகக் காவல் துறைத் தலைவர் பொ. இராஜேந்திரன் கொஞ்சம் நகைச்சுவையாகப் பேசிவிட்டுப் போனார். ஆர். நடராஜன் தமிழில் எழுதி, ஸ்டான்லி மலையாளத்தில் மொழிபெயர்த்த ‘வன நாயகம்’ நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மூல ஆசிரியர்களும், வெளியீட்டாளர்களும் கவுரவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வேறு சில மாறுபட்ட அனுபவங்களும் கிடைத்தன. பங்கேற்ற அனைவருக்கும் அருமையான சாப்பாடு வழங்கப்பட்டது! ‘உறவுப் பாலம்’ இலக்கியமும் இலக்கியவாதிகளும் சம்பந்தப்பட்ட இவ்விழாவில், சென்னையில் வழக்கமாக இலக்கிய நிகழ்ச்சிகள் என்றால் கண்டிப்பாகக் காணக்கூடிய படைப்பாளிகளையோ, வாசகர்களையோ காண முடியவில்லை. இலக்கிய விவாதங்களையும் கேட்க முடியவில்லை. மாறாக, சபாக்களில் கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகளுக்கு வரும் கூட்டமாகவே பெரும்பாலும் காணப்பட்டது. விருது நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் பாடகர் சுதா ரகுநாதன் குழுவினரின் கச்சேரி நடைபெற்றது ஒரு காரணமாக இருக்குமோ?

தேர்வு பெற்ற நூல்கள் பற்றி ஒரு வரிக் குறிப்பு மட்டுமே சொல்லப்பட, புரவலர் புகழ்பாடுதல் சற்று அதிகமாக இருந்தது. அன்றைக்கு நல்லியாரின் பிறந்த நாளாகவும் அமைந்துவிட, நியூ-உட்லேண்ட்ஸ் ஓட்டல் நிர்வாகம் வழங்கிய பெரிய கேக் ஒன்றை அவர் வெட்ட, புகழ்ச்சி மேலும் தூக்கலாகியது. இனி ஆண்டுதோறும் செட்டியாரின் பிறந்த நாளை மொழிபெயர்ப்பு இலக்கிய நாளாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் சிவசங்கரி.

இப்படிப் பணம் படைத்த புரவலர்களைச் சார்ந்தே புலவர் கூட்டம் இருக்க வேண்டும் என்பதே தலையெழுத்தா என்ற கேள்வியும், இன்றைய சூழலில் இந்த வகையிலாவது இலக்கிய வாதிகளுக்கு கவுரவமும் நிதியும் கிடைக்கிறதே என்ற எண்ணமும் சேர்ந்து எழுந்தன.


விருது பெற்றவர்கள்:

தமிழிலிருந்து: டி.டி.இராமகிருஷ்ணன் (மலையாளத்தில், ஷோபா சக்தியின் `ம்’), மந்திரிப்ரகட சேஷாபாய் ( தெலுங்கில், சிவசங்கரியின் `நான் நானாக’), நவநீத் மத்ராசி (குஜராத்தியில், கு.சின்னப்ப பாரதியின் `சங்கம்’), வெ.பத்மாவதி (இந்தியில், `தமிழ்ச் சிறுகதைகள் நூறு’), பி.ராஜ்ஜா (ஆங்கிலத்தில், சுப்ரபாரதி மணியனின் `சாயத்திரை’). பிறமொழிகளிலிருந்து தமிழில்: ச.சரவணன் (ஆங்கிலம், டயன்அக்கர்மெனின் `காதல் வரலாறு’), நிர்மால்யா (மலையாளம், கோவிலனின் `தட்டகம்’), இறையடியான் (கன்னடம், `வியாசரராயபல்லாள போராட்டம்’), சாந்தாதத் (தெலுங்கு, மாலதி செந்தூரின் `இதய விழிகள்’), புவனாநடராஜன் (வங்காளி, ஆஷாபூர்ணா தேவியின் `முதல் சபதம்’).

2 comments:

சந்திப்பு said...

நல்லதொரு நிகழ்வு நடைபெற்றதை நிச்சயம் வரவேற்றே ஆகவேண்டும். இதுபோன்ற சிறப்பான வித்தியாசமான நிகழ்வுகள் இருந்தால் கொஞ்சம் பரிமாறிக் கொள்ளலாமே. முற்போக்கு இயக்கங்கள் பலம் பொருந்தியதாக பன்முனைகளில் வளருவதன் மூலமே புரவலர்களிடம் இருந்து விடுதலை கிடைக்கும். அதுவரை புரவலரர்களை தாங்கி நிற்பது தவறான செயலாக தெரியவில்லை. பணம் படைத்தவர்கள் பலருக்கும் மனம் படைப்பதில்லையே. அந்த வகையில் தமிழ் இலக்கிய சேவை நல்லியாரை நிச்சயம் பாராட்ட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அப்புறம் அந்த திசi எட்டும் இதழ் இணையத்தில் கிடைக்கிறதா? எங்கு கிடைக்கிறது என்ற தகவலையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். இனிய உதயம் மாத நாவலும் அதுபோன்றதொரு சேவையைத்தான் வழங்கி வருகிறது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

Anonymous said...

To day many writers giving huge money to translators and getting their NOVELS translated.And systematically sending their translated novel to "competions" and getting prizes.I can show many examples."All" sorts of gimmicks are being done by the "todays' writer.very few hard working ,true writers/translators are not getting proper recognition to day.For example "FREEDOM AT MID NIGHT" WAS in best manner translated by mr.Mylai Balu- who is a journist also-didnot get his due reward or award for his work.Because such simple and calm people dont know how to "ByPass' the route to awards--R.VIMALAVIDYA