Friday, 5 March 2010

இயக்கமே வெல்லும்


‘வெளி’ தேடி புறப்பட்டவர்கள்

“உ.ரா. வரதராசன் மரணம் குறித்த சமூக அக்கறையுள்ள குடிமக்கள், பெண்ணியவாதிகள் விடுக்கும் அறிக்கை” என்ற தகவலுடன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது இதுவரை பல்வேறு ஊடகங்களும், சில தனி மனிதர்களும் பொழிந்த குற்றச்சாட்டுகளையே ஒரே தொகுப்பாகக் கூறியிருந்தார்கள். (இந்த அறிக்கையைத்தான் தினமணி 4-3-2010 இதழில் எஸ்.வி. ராஜதுரை தனது சொற்களில் கட்டுரையாக்கியிருக்கிறார்.) மார்க்சிஸ்ட் கட்சி “தங்களுடைய செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்கிற அளவிற்கு, கட்சிதான் அவரது மறைவுக்குக் காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற அவர்கள் “நாங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் நண்பர்கள்தான்,” என்று வேறு சொல்லிக்கொண்டது வேடிக்கைதான்.

‘பெண்கள் சந்திப்பு’ என்ற அமைப்பின் சார்பில் புதனன்று (மார்ச் 3) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அந்த செய்தியாளர் சந்திப்புக்கு செய்யப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் சார்பில் பேசிய எழுத்தாளர் வ. கீதா, நாடக இயக்குநர் பேராசிரியர் மங்கை, பத்திரிகையாளர் ரேவதி ஆகியோர் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றும், பாலியல் பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் சொல்லிக்கொண்டே போனார்கள். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த செய்தியாளர்கள் “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்களுடைய குற்றச்சாட்டு என்ன? உங்களுடைய கோரிக்கை என்ன,” கேட்க வேண்டியதாயிற்று.

இக்கேள்விகளுக்கான பதில்களாக அவர்கள் சொன்னவற்றின் சாராம்சம் தோழர் உ.ரா.வ. மீதான புகார் குறித்து கட்சிக்குள் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்பதுதான். பாலியல் புகார்கள் தொடர்பான விசாரணைக்கு உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதாகவும் கூறினார்கள். அதற்கு என்ன ஆதாரம் என்று நிருபர்கள் கேட்டபோது மறுபடியும், சில ஏடுகளில் வெளியானவற்றையே மேற்கோள் காட்டினார்கள்.

கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே என்று கேட்டபோது, அந்த அறிக்கை முழுமையாக இல்லை என்று பதுங்கினார்கள். சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறிய அவர்கள், “சம்பந்தப்பட்டவர்களிடம் நீங்கள் இது குறித்துப் பேசினீர்களா,” என்று கேட்டபோது “இல்லை,” என்றார்கள்! கட்சித் தலைவர்களிடமாவது பேச முயன்றீர்களா என்று கேட்டபோது அதற்கும் இல்லை என்ற பதிலையே சொன்னார்கள்!

யாருடனும் பேசாமல், ஏற்கெனவே வெளியான கடிதத்தின் வாசகங்களை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு இயக்கத்தின் மீது பெரிய குற்றச்சாட்டுகளை வீசுவது முறைதானா என்ற கேள்வியும் செய்தியாளர்களிடமிருந்து வந்தது.
பெண்ணியம் குறித்த விவாதத்திற்கான “வெளி” மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இல்லை, பாலியல் பிரச்சனைகள் தொடர்பான சரியான “புரிதல்” கட்சிக்குள் இல்லை என்பதாகவும் சொன்னார்கள். பெண்ணியம், பாலியல் பிரச்சனைகள், பாலியல் அரசியல் ஆகியவை குறித்த ஒரு ஆரோக்கியமான விவாதம் சமதாய வெளியில் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறினார்கள்.

அப்படிப்பட்ட பொது விவாதம் நடத்துவதுதான் நோக்கமா அல்லது மார்க்சிஸ்ட் கட்சியின் மீது குற்றம் சாட்டுவது நோக்கமா என்ற கேள்விக்கு இரண்டுமே தங்களுடைய நோக்கம்தான் என்றார்கள். அப்படியானால் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்: “தெரியாது.”
தெரியாத ஒன்றைப் பற்றி எதற்காக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று கேள்வி வந்தபோது, இப்பிரச்சனைகள் தொடர்பாகப் பொது விவாதத்திற்கு வேண்டுகோள் விடுப்பதே நோக்கம் என்றார்கள். பெண்ணியம், பாலியல் புரிதல்கள் தொடர்பாக ஆரோக்கியமான பொது வெளி விவாதங்கள் நடத்துவது நோக்கம் என்றால், நேரடியாக அதை உங்கள் அமைப்பின் சார்பில் கருத்தரங்கமாக நடத்தியிருக்கலாம், நீங்களே அந்த விவாதத்தை தொடங்கி வைத்திருக்கலாம், அந்தக் கருத்தரங்கில் இதைப்பற்றியும் பேசலாம், அதைவிட்டு விட்டு தோழர் உ.ரா.வ. மரணத்தைப் பயன்படுத்திக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மீது தாக்குதல் தொடுக்கிறவர்களோடு நீங்களும் சேர்ந்து கொண்டது ஏன் என்ற கேள்விக்கு, ஊடகங்களின் அவரது கடிதம் வந்ததால்தான் என்பதாக ஏதேதோ சொன்னார்கள்.

எளிய மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்கள், “நீங்கள் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள், மார்க்சிஸ்ட் கட்சி ஒரு மறு விசாரணை நடத்த வேண்டும் என்கிறீர்களா, சட்டப்பூர்வமாகவே அக்கட்சி நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்கிறீர்களா,” என்று நேரடியாகக் கேட்டனர்.

“அதெல்லாம் எங்களுடைய நோக்கம் அல்ல. நாங்கள் மார்க்சிஸ்ட் கட்சியை மோதலுக்கு அழைக்கவில்லை. ஒரு விவாதத்திற்கு வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம்,” என்றார்கள்.

“எதைப்பற்றி விவாதம் நடத்த அழைக்கிறீர்கள்?”

“பெண்ணியம் பற்றி. பாலியல் அரசியல் பற்றி.”

இதுதான் அவர்களது கடைசி பதில். பெண்ணியம் என்றால் என்ன? பாலின சமத்துவம், பெண்ணின் சம உரிமைகள், பெண்ணுக்கான சம இடங்கள், பெண்ணின் சுயத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் என்பதாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சி புரிந்து கொள்கிறது. இன்று பெண்ணுரிமை தொடர்பான சட்டங்கள், பொது இடங்களில் பெண் நீதிக்கான நடவடிக்கைகள் என்றெல்லாம் ஓரளவிற்காவது வந்திருக்கிறது என்றால் அதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தலையாய பங்கு இருக்கிறது என்பதை மனசாட்சி உள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

பாலியல் அரசியல் என்று எதைச் சொல்ல வருகிறார்கள்? கட்டற்ற பாலியல் உறவுக்கான சுதந்திரத்தை சொல்கிறார்களா, பாலியல் புகார்கள் குறித்து கண்டுகொள்ளக் கூடாது என்கிறார்களா -அவர்களுக்கே வெளிச்சம். எதைப்பற்றியும் அவர்களுக்கென ஒரு பார்வை கொள்வதற்கும், அதைப் பொது வெளியில் விவாதத்திற்கு வைப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.

இதைச் சொல்கிறபோது 3-3-2010 ‘ஜூனியர் விகடன்’ இதழில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுதியுள்ள ‘கல்யாணம் குடும்பம் கம்யூனிஸ்ட்’ என்ற கட்டுரை கண்ணில் படுகிறது. சோசலிச நாடுகளில் பாலியல் உறவுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்யாவில் அலெக்சாந்த்ரா கொலந்தாய் என்ற பெண்மணி, “பொதுவுடைமை சமூகத்தில் பாலியல் விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்வதென்பது ஒரு டம்ளரில் இருக்கும் நீரைக் குடிப்பது போல சாதாரணமான விஷயமாக இருக்கும்,” என்ற வாசகம் புகழ்பெற்றிருந்ததாக எழுதியுள்ளார். அந்த விவாதத்தின்போது லெனின் என்ன சொன்னார் என்பதைப் பதிவு செய்வது இங்கே பொருத்தமாக இருக்கும்:

“பிரபலமாகிவிட்ட இந்த கோப்பைத் தண்ணீர் தத்துவத்தை நான் எவ்வகையிலும் மார்க்சியத் தத்துவமாகக் கருதவில்லை என்பது மட்டுமல்ல, இதை சமூக விரோதத் தத்துவமாகவே கருதுகிறேன். பாலுறவுகளில் காணக்கிடப்பது இயற்கையின் பாத்திரம் மட்டுமல்ல. பண்பாடு காரணமாய்த் தோன்றும் ஓர் உடன் கலப்பும் உள்ளது. சாதாரண பாலுணர்ச்சி வேட்கை தனிப்பட்ட ஒருவர் மீதான பாலுணர்ச்சி வயப்பட்ட காதலாக மலர்ந்து பண்பாட்டு நயம் பெற்றதன் முக்கியத்துவத்தை எங்கல்ஸ் ‘குடும்பத்தின் தோற்றம்’ என்ற தனது நூலில் எடுத்துச் சொல்லியுள்ளார். தண்ணீர் குடிப்பது தனிப்பட்ட ஒருவரது விவகாரம். காதலில் இருவர் பங்கு கொள்கிறார்கள். மூன்றாவது ஜீவன் ஒன்றும் உதிக்கிறது. ஆகவே இது சமுதாய நலன் சம்பந்தப்பட்டதாகிவிடுகிறது,” என்று லெனின் குறிப்பிட்டிருக்கிறார்.

உ.ரா.வ. பிரச்சனையில் சம்பந்தப்பட்ட யாரையும் சந்திப்பதற்கு முயலாமலே கட்சியை விமர்சிக்கப் புறப்பட்ட ‘பெண்கள் சந்திப்பு’ அமைப்பினர் இப்படிப்பட்ட வாதத்தைத்தான் கிளப்புகிறார்கள் என்று கொச்சைப்படுத்துவதற்கில்லை. ஆனால் அறிவுத் தளத்தில் விவாதம் நடத்துவதே நோக்கம் என்பதாகக் கூறிக் கொண்டு இவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது தனிப்பட்ட முறையில் அவதூறு செய்தததும் உண்மைக்கு மாறான சில தகவல்களை தங்களது அறிக்கையில் பதிவு செய்திருப்பதும் இந்த இயக்கத்தைத் தனிப்படுத்த வேண்டும் என்கிற அரசியல் குதர்க்கத்தையே வெளிப்படுகிறது. ஒன்று உறுதி: இதிலேயும் இயக்கமே வெல்லும்.

-அ. குமரேசன்

1 comment:

நட்புடன் ரமேஷ் said...

நல்ல பதிவு..
சமூக பொதுவெளியில் நடக்கும் எந்த சம்பவங்களும் விவாதங்களுக்கு உரியதுதான் ஆனால், விவாதங்களை எந்த ஆதராங்களின் அடிப்படையில் நடத்துகிறோம் என்பது மிக முக்கியமானது. இதை சம்பந்தபட்ட நண்பர்கள் புரிந்துக்கொள்வது நலம். இந்தியாவில் இந்த விவாதங்களை ஜனனாயக பூர்வமாக ஒரு அரசியல் கட்சியுடன் நடத்தமுடியும் எனில் அது மார்க்சிஸ்ட் கட்சியாகதான் இருக்கமுடியும் என்பதையும் அந்த நண்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்