Thursday 22 April 2010

உலக புத்தக தினம்அலமாரியில் அடுக்கப்பட்ட உயிர்த்துடிப்பு


னித வரலாற்றில் மூன்று நிகழ்வுகள் மிக முக்கியமானவை. ஒன்று ஒலிக்குறிப்புகளின் ஒருங்கிணைப்பில் சொற்களாகவும் வாக்கியங்களாகவும் உருவெடுத்த மொழியின் பரிணாமம். இரண்டு, அதே ஒலிக்குறிப்புகள் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் உருவெடுத்த எழுத்தின் பிறப்பு. மூன்று, அந்த எழுத்துக்களின் பதிவாக வந்த புத்தகத்தின் வருகை. இந்த மூன்றிற்கும் அடியிழையாக ஓடுவது கதை சொல்வதிலும் கதை கேட்பதிலும் மனிதர்களுக்கு உள்ள ஈடுபாடு.

கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால் நம் கடந்த காலங்கள் தெரியாமலே போயிருக்கும், வருங்காலத்திற்கான கனவுகளுக்கு விதை ஊன்றப்படாமலே போயிருக்கும். இன்றைய நிகழ்காலத்தையும் உருவாக்கிக்கொடுத்த அந்தக் கதை சொல்லும் மரபுக்கும், வரலாற்றுப் பதிவுகளுக்கும், கலை, அறிவியல், அரசியல் அனைத்திற்குமே செலுத்துவாகனமாக வந்ததுதான் புத்தகம்.

புத்தகங்கள் நம்மை இயல்பாகவே படிப்பாளிகளாகவும் மாற்றுகின்றன. நிலத்தின் எல்லைகளோ, காலத்தின் வரம்புகளோ இல்லாமல் புத்தகங்கள் தருகிற ஆதாயங்களுக்கு அளவே இல்லை. வெவ்வேறு வரலாறுகளுக்கும், வெவ்வேறு பண்பாடுகளுக்கும் நம்மை இட்டுச் செல்லக்கூடியவை புத்தகங்களே. நம் தொன்மைகளோடு நம்மை அடையாளப்படுத்திக் காட்டுபவை புத்தகங்களே. இலக்கிய இன்பங்களை வழங்கி வாழ்க்கை நுட்பங்களையும் புத்தகங்கள்தான் நமக்குக் கற்றுத் தருகின்றன. தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் எதையும் காட்சிப்படுத்தி கண்முன் நிறுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. ஆயினும் புத்தகங்களின் வரிகளினூடே கிடைக்கிற உணர்வு அனுபவம் ஈடு இணையற்றது. ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

உலகத்திற்கு விளக்கம் அளிப்பதற்காக அல்லாமல், உலகத்தை மாற்றியமைப்பதற்காக கார்ல் மார்க் வழங்கிய மூலதனம் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளுக்கும் அவர் படித்த புத்தகங்கள்தான் ஆதாரமாய் அமைந்தன.. இங்கே சிங்காரவேலரும், பெரியாரும் தங்கள் இயக்கங்களை முனைப்புடம் மேற்கொள்ள வழிகோலியதும் அவர்கள் படித்த புத்தகங்கள்தான். புத்தகங்களின் சிறப்பு பற்றி இதற்கு மேல் சொல்லவேண்டுமா என்ன?

புத்தகங்கள் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல; மாறாக அவை அலமாரிகளில் உயிரோடு இருக்கும் மனித மனங்கள், என்று கூறினார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர்ட் ஹையாட். காகிதத் தொகுப்பில் குடியிருக்கும் மனங்களைக் கொண்டாடுகிற நாள்தான் ஏப்ரல் 23. உலக இலக்கியத் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. நாடக மேதை சேக்பியர் பிறந்தநாளும் இறந்தநாளும் இதுதான். அவர் மறைந்த அதே 1616ம் ஆண்டில் அதே ஏப்ரல் 23ல், பெயின் நாட்டு நாவலாசிரியர் கவிஞர் மிகுல் டீ செர்வான்டீ காலமானார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாரி ட்ரூவான், ஹால்டர் லாக்னெ, விளாதிமீர் நோபோகோவ், ஜோசப் பிளா, மெஜியா வாலேஜோ போன்ற சில படைப்பாளிகள் நினைவுகூரப்படுவதும் இதே நாளில்தான்.

இலக்கியத்தளத்தில் சமுதாய முன்னேற்றத்திற்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் வழியமைத்த இவர்களுக்கும், இவர்களைப் போன்றே உலகளாவிய நட்புப்பாலம் அமைக்க உதவிய இதர படைப்பாளிகளுக்கும் உலகந்தழுவிய அளவில் மரியாதை செலுத்த முடிவு செய்யப்பட்டது. புத்தக வாசிப்பு என்பதை விட வேறு மரியாதை என்ன இருக்க முடியும்? புத்தக வாசிப்பின் இனிய அனுபவத்தையும் ஆழ்ந்த தாக்கத்தையும் பற்றிய விழிப்புணர்வையும் ரசனையையும் மக்களிடையே - குறிப்பாக இளைஞர்களிடையே - வளர்ப்பதற்காகவும் இந்த நாளை புத்தக நாளாகக் கொண்டாடுவது என்று, 1995ல் பாரி நகரில் கூடிய ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பின் (யுனெகோ) மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. உலக புத்தக தினமாகவும் புத்தகங்களுக்கான காப்புரிமை தினமாகவும் இந்த நாள் அப்போதிருந்து அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளுக்கு இன்னொரு சுவையான பின்னணியும் உண்டு. பெயின் நாட்டின் கேட்டாலோனியா பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற கிறித்துவத் துறவியை நினைவுகூரும் நாளாகிய ஏப்ரல் 23 அன்று, புத்தகக் கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு ரோஜாப்பூ பரிசாகத் தருகிற பழக்கம் இருந்தது. குறிப்பாக காதலர்களுக்கிடையே இவ்வாறு ரோஜாவும் புத்தகமும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அதிலிருந்தே புத்தக தினத்துக்கான யோசனை உதித்திருக்கிறது.

யுனெகோ அலுவலகம் உள்ள அனைத்து நாடுகளிலும் பல்வேறு வடிவங்களில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தகக் காட்சிகள், புதிய புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள் என்று இந்த நாளில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இங்கிலாந்தில் 1998ல் இந்த நாள் தொடங்கப்பட்டபோது, பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 1 பவுண்ட் மதிப்புக்கான அடையாள வில்லை ஒன்று வழங்கப்பட்டது. குழந்தைகள் அந்த வில்லைகளை எந்தப் புத்தகக் கடையில் கொண்டுபோய்க் கொடுத்தாலும், அந்த விலை மதிப்புக்கான புத்தகம் வழங்கப்படும். கதைப் புத்தகங்கள், புதிர்விளையாட்டுப் புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் என இதற்கென்றே தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. இப்போதும் பல்வேறு வடிவங்களில் இத்தகைய முயற்சிகள் தொடர்கின்றன.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, எந்தவொரு தகவலையும் எவரும் பெற முடியும் என்ற சுதந்திரமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தகங்களின் உள்ளடக்கங்களும் அதே போல் வாசகர்களுக்குக் கிடைக்கின்றன. அதே நேரத்தில் புத்தகங்களை எழுதுவோர், தயாரித்து வெளியிடுவோர் ஆகியோரது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு சவாலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், காப்புரிமையை மதித்தல் என்பதோடு இணைந்த, அனைவருக்கும் புத்தகங்கள் எளிதில் கிடைக்கச் செய்தல் என்ற காலத்திற்கேற்ற கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. காப்புரிமையை மதித்தல், சடுமதாய-கல்வி-பண்பாட்டுத் தளங்களில் புத்தகங்களின் நியாயமான இடத்தை உறுதிப்படுத்துதல் ஆகிய உலகளாவிய முயற்சியில் பங்கேற்குமாறு அனைத்து நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் யுனெகோ தலைமை இயக்குநர் இரீனா பொக்கோவா.

இந்த வேண்டுகோளை இந்திய அரசும் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு புத்தகக் காதலர்களுக்கு நிறைய இருக்கிறது. ஆனால், இந்தி மொழி புத்தகங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் பாதி கூட மற்ற மொழிகளில் புத்தகங்கள் வெளியீட்டிற்கு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. கணினிக்கான மொழி ஆக்கத்தில் கூட, இந்தி அல்லாத பிற மொழிகளுக்கு மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை.

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் படைப்புகள் அவரது 150 வது ஆண்டு நெருங்குவதையொட்டி சீன மொழியில் கூட வெளியாகின்றன. ஆனால் இந்திய மொழிகளில் அவற்றைக் கொண்டுவர எந்த முயற்சியும் நடக்கவில்லை. தேசிய புத்தக நிறுவனம், பழைய புத்தகங்களையே மறுபதிப்புச் செய்துகொண்டிருக்கிறதேயன்றி, அண்மை ஆண்டுகளில் புதிய புத்தகங்களை மிகக் குறைவாகவே வெளியிட்டுள்ளது. அதிலும் குழந்தைகளுக்கான புதிய புத்தகங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை என்கிற அளவுக்கு அதன் செயல்பாடு உள்ளது என்று பதிப்புத் துறை சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒப்பீட்டளவில் தமிழகத்தில் சில நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உண்மைதான். அதே நேரத்தில், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து மக்களுக்கும் எளிய விலையில் புத்தகங்கள் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் எதுவும் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. சென்னையில் கன்னிமாரா நூலகத்தில் நிலையான புத்தகக் காட்சி - விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற ஏற்பாட்டை அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் செய்வதில் என்ன தயக்கம்? கிராமப்புற நூலகங்கள் என்று கட்டப்பட்டிருந்தாலும், அவை ஆகப்பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பரிசாக தமிழக கிராம நூலகங்களின் கதவுகள் திறந்துவிடப்படட்டும்.

அரசின் பரிசாக மட்டுமல்ல, நண்பர்கள், தோழர்கள், உறவினர்களுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிற பண்பாடு ஓங்கி வளர வேண்டும். அதற்கான விருப்பத்தையும் முனைப்பையும் உலகப் புத்தக தின விழா ஏற்படுத்தட்டும். ஏனெனில், புத்தகம் என்பது வெறும் அச்சடித்த தாள்களின் கோர்ப்பு அல்ல, அது அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் உயிர்த்துடிப்பு.

2 comments:

saichrisna said...

Sir

All of your thoughts are true. Eventhough the Govt have issued orders to avoid garlends and shawls in govt functions and give books it is not followed. Atleast after reading this article I hope there will be a change in the attitue of the public.

venu's pathivukal said...

அன்புத் தோழருக்கு

புத்தக தினப் பதிவிற்கு எனது அன்பு வாழ்த்துக்கள்!
வாசிப்பு குறைந்து விட்டது என்று வருந்துவதை விட
அடுத்தடுத்த தலைமுறையினரை நூல் வாசிப்பு நோக்கி உந்தித் தள்ளவும், ஊக்கப் படுத்தவும், உறுபயன் விளக்கிச் சொல்லவும் வேண்டும் ....

கேட்டலோனியா பற்றிக் குறிப்பிட்டிருப்பது நல்ல விஷயம். ஏப்ரல் 23 அன்று , நான்கு லட்சம் புத்தகங்களும் 40 லட்சம் ரோஜாக்களும் கை மாறுமாம் காதலரிடையே ...ஓர் ஆண்டின் விற்பனையில் பாதி நூல்கள் அந்த ஒரு தினத்தில் விற்றுத் தீர்ந்துவிடுமாம் . புத்தகக் காதலர் தினமல்லவா இது ......

எஸ் வி வேணுகோபாலன்