Thursday, 16 September 2010

சாதி எனும் சதி (கம்யூனிசம் என்றால் - 9)


உலகத்திலேயே பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று மனிதர்களைப் பாகுபடுத்துகிற சாதி என்ற சமூக அமைப்பு இருப்பது இந்தியாவில்தான். வரலாற்றில் இந்தியாவோடு இணைந்து நடைபோட்டு வந்திருக்கிற இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளிலும் சாதிப் பிரிவினைகள் உள்ளன. இந்தியாவிலிருந்து சென்றவர்கள் குடியேறி வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் சாதி இருக்கிறது.

எல்லா நாடுகளிலேயுமே ஏதோவொரு வடிவத்தில் இனப் பாகுபாடுகள் இருக்கின்றன. உலகத்தையே திருத்துவதற்கு அவதாரம் எடுத்திருப்பதாகக்கூறும் அமெரிக்காவில் கூட வெள்ளையின மக்களால் கறுப்பின மக்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் எந்த நாட்டிலும் இந்தப் பாகுபாடுகள் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்று சொல்லப்படுவதில்லை. தங்களது மதங்களின் வேதங்கள் சொல்கிறபடி ஒரு பிரிவினர் உயர்ந்தவர்கள் என்றும் இன்னொரு பிரிவினர் தாழ்ந்தவர்கள் என்றும் கற்பிக்கப்படுவதில்லை.
ஆனால் இந்தியாவில்தான், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிலேயே, ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களிலேயே - அதாவது ஒரே கடவுளைக் கும்பிடுகிறவர்களிடையே கூட - இவர்கள் மேலானவர்கள், இவர்கள் நடுத்தரமானவர்கள், இவர்கள் கீழானவர்கள் என்று கூறுகிற மறைநூல் இருக்கிறது. அதற்கு மனு தர்மம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

மற்ற பிரிவினர்களெல்லாம் ஏதோவொரு வகையில் மதிப்பான தொழில்களைச் செய்துகொண்டிருக்க, சாதி அடுக்கில் அடியில் இருக்கிற பிரிவினர் ஊரையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்வது, நிலத்தில் இறங்கி விதைப்பது, அறுவடை செய்வது, செருப்புத் தைப்பது போன்ற வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்று இந்தப் பெருமைமிகு பாரதத்தில்தான் விதி செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட உன்னதமான தொழில்களைச் செய்தாலும் அவர்கள் இழிந்த பிறவிகள், தீண்டப்படாதவர்கள், அவர்களைத் தொட்டால் அல்லது அவர்கள் மற்றவர்களைத் தொட்டால் தீட்டாகிவிடும் (சுத்தம் கெட்டுவிடும்) என்று இங்கேதான் நெறிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீண்டத்தகாத மக்களை விடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களையும் கடினமான உடல் உழைப்புக்காகப் பிறந்தவர்கள்தான் என்று அவர்களுக்கும் மேற்பட்டவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

இப்படி ஏற்றத்தாழ்வுகளோடு, ஒரு பிரிவினர் வசதிகளை அனுபவிக்க, இன்னொரு பிரிவினர் அதிகாரம் செலுத்த, மற்றொரு பிரிவினர் இந்த இரு பிரிவினருக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று எழுதியதே இறைவன்தான் என்று அந்த மறைநூல் கூறுகிறது. ஒருவர் உயர் சாதியில் பிறப்பது, இன்னொருவர் தாழ்ந்த சாதியில் பிறப்பது என்பதெல்லாம் அவரவர் முற்பிறவியில் செய்த புண்ணியங்களையும் பாவங்களையும் பொறுத்து பகவானால் தீர்மானிக்கப்பட்டது என்றும் போதிக்கிறது.

சாதி என்பது யார் யார் எந்தெந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட வேலைப்பிரிவினை ஏற்பாடுதான் என்றும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். சாதி வேறுபாடு இருக்க வேண்டும், ஆனால் சாதிகளுக்கிடையே பாகுபாடு இருக்கக்கூடாது, அது உயர்ந்த சாதி இது தாழ்ந்த சாதி என்ற ஏற்றத்தாழ்வுதான் இருக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சாதியையே ஒழித்துக்கட்டியாக வேண்டும், அப்போதுதான் பாகுபாட்டையும் ஒழிக்க முடியும் என்று இன்னொரு பிரிவினர் வாதாடுகிறார்கள். போராடுகிறார்கள்.

இந்த சாதி என்ற இழுக்கு எப்படி உருவானது?
யாரால் உருவாக்கப்பட்டது?
தொடர்ந்து பேசுவோம்.

No comments: